நூறாசிரியம்/பாகற் பசுங்காய்

விக்கிமூலம் இலிருந்து

11 பாகற் பகங்காய்


அன்பெனப் புகழ்கோ அருளென மகிழ்கோ!
என்கொல் பாகர்க் கிடுகறி யென்னா
அறிந்திசின் போதந்த ஏவலற் கெம்மனைப்
பாகற் பசுங்காய்ப் புளிக்குழை யட்டுத்
தாய்தர மிசைந்த தகவுரைத் தெங்கோ
அதுநயந் தருந்தா ராகலின் அதுமற்றுப்
பிறகொளக் கூறுகோ வென்றலு மவன்மீண்டுப்
பெய்துகத் தந்த திவக்காண்; முழுத்தும்
பைம்பருக் கொழும்புடை பாகல்;
ஐதகைக் கென்யான் நோற்ற வாறே!


பொழிப்பு:

(இந் நிகழ்ச்சியை) அன்பென்று புறத்தே புகழ்வேனோ ? அருளென அகத்தே மகிழ்வேனா என்ன வேண்டுங்கொல்? சமைக்கப் பெறும் நாட் குழம்பிற்கு இடுகின்ற கறி என என்பால் அறிந்து போக வந்த ஏவலனிடம், எம்மனையின் கண் பசிய பாகற்காயினைப் புளிக்குற்றிக் குழையாகச் சமைத்து, என் தாய் தர யான் விரும்பியுண்ட தன்மையைக் கூறி, என் தலைவன் அக்குழம்பினை விரும்பி அருந்தாராகலின், அப் பாகற்காய் தவிர (அவர் விரும்பும்) பிற யாதாயினும் வாங்கித் தரக் கூறுவாயாக என்று யான் கூறினேனாக அவன் அது கேட்டுப்போய், மீண்டும் வந்து யான் மகிழுமாறு கொட்டித் தந்தவற்றை இதோ, ஈங்குக் காண்பாயாக, முழுவதும் பசிய பருக்களை யுடைய கொழுவிப் புடைத்த பாகற்காய்களை (என் நலமே கருதும் என்) தலைவரின் பெருந்தகைமைக்கு யான் நோற்ற வகை என்னே !

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. என்னை? அகத்துப்படும் தலைவனின் அன்பைப் புறத்துப் புலப்படக் கூறினாளாயின் புறம் என்க.

தலைவன்மாட்டுக் கண்ட சிறந்ததோர் அன்பு நிகழ்ச்சியைத் தோழிக்குக் கூறி, அவன் தன்பால் கொண்ட பரிவை அன்பென்று புகழ்தல் தகுமோ, அருளென்று மகிழ்தல் தகுமோ? என்று வியந்தும் அத்தகையான இல்லறத் தலைவனாக அடையப் பெறற்கு யான் நோற்ற தவத்தின் அளவுதான் என்னை? எனப் பெருமிதம் படவும் தலைவி கூறுவதாக அமைந்ததிப் பாடல்.

அன்பு - தன் நலம் கெடாமல் பிறர் நலம் பேணக் காட்டும் மனநெகிழ்ச்சி கொள்வார் கொளப்பெற்றார் இருவர்க்கும் நலமே பெருக்கும் மனவுணர்வு. இருவர் மனத்தட்டுகளையும், சமனுற நிறுத்தும் உணர்வுத்துலை (தராசு) கொண்டார் இருவருள் ஒருவரைக் களிப்பவும், பிறிதொருவரைக் கனப்பவும் செய்யாமல், ஒரே பொழுதில் இருவரையும் இன்பினும் துன்பினும் அழுத்தும் வல்லுணர்வு (அன்பு = அல்+பு= இரண்டல் தன்மை. பண்புப் பெயரீறு. அன்பு உலகத்து எல்லா உயிர்களிடத்துங் காணப்பெறுவதாகியதொரு நல்லுனர்வெனினும், இது புழு, பூச்சி போலும் அடி நிலை உயிர்களிடத்து மெய்யான் மிகுந்தும், உளத்தான் குறைந்தும் நின்று, ஒன்றையொன்று ஈர்த்துப் பிணைத்து ஒருணர்வாக்கும் தன்மைத்து என்க. உளத்தான் குன்றி மெய்யான் மிகுதலான், அவ்வுயிர்களிடம் மெய்யுறு புணர்வுக்கே இது பயன்படுவது என்க. எனவே அதற்கொப்பப் பால் வழித் தழுவி நிற்குமென்க. என்னை ? பருப்பொருள்களுள், நேரும் எதிருமாய மின்னாற்றல் கொண்டவை, ஒன்றையொன்று கவர்ந்திழுத்து உடன்படுதல் போல், அடிநிலை உயிர்களுள் ஆணும் பெண்ணுமாய மின்னோட்டம் கொண்டவை ஒன்றையொன்று கவர இது பயன்படும் என்க. இனி, அவற்றினும் உயர்ந்த பறவை, விலங்குபோலும் நடு நிலை உயிர்களுக்கு மெய்யானும் உளத்தானும் ஒப்பத் தோன்றலின், அவற்றிடம் ஒருகால் மனவுணர்வால் பிறிது நலம் பேணற்கும், மறுகால் உடலுணர்வால் ஊறின்பம் நிகழ்த்தற்கும் பயன்படும் என்றறிக இனி, முடிநிலை உயிர்களாகிய மாந்தரிடத்து இஃது உளத்தான் மிகுந்தும் மெய்யான் குறைந்தும் நிற்றலால், வாழ்க்கை பேரளவான் பரிமாறும் மனவுணர்வின் வெளிப்பட்டு நினைவின்பமும், சிற்றளவான் பரிமாறும் உடலுணர்வின் வெளிப்பட்டுப் புணர்வின்பமும் தோற்றுவிக்கும் தன்மைத்தாயது. உடலுணர்வு தேய்வுறுங்கால் இது முழுவதும் மனவுணர்வானே ஆட்பட்டு நிற்கும். உடல் பிரிவுறினும் மனப்பிரிவு அன்பாட்சியில் இல்லை என்க.

அருள் - அன்பின் முதிர்நிலை; தன் நலங் கேடுறினும் பிறர் நலம் பேணக்காட்டும் மன நெகிழ்ச்சி உளத்தின் அரிதாய தன்மை (அரு+உள். அருள்; அரு.அருமை, அரிய தன்மை). அன்பு எதிர்வினை கோளும்; அருள் எதிர்வினை கோளாது. எதிர்வினை என்பது காட்டுதற்குக் காட்டப்படுவதும், நீட்டுதற்கு நீட்டப்படுவதுமாய எதிர்விளைவு. இது பயன் அடிப்படையது. இது கடைக்கீழ்நிலை உயிர்கள்பாலும் தலைமேல்நிலை உயிர்களால் செலுத்தப் பெறுவது அருள் மேனிலை உயிர்களின் மீமிசை மாந்தக் குணம் துன்ப விளைவையும் இன்ப நேர்ச்சியையும் ஒன்றெனவே கருதும். தூய உளத்தில் தோன்றி வெளிப்படுவது அருள். பெரும்பாலும் புறத்தே புலப்படத் தோன்றாது அகத்தின் நல்லுணர்வான் கண்டறிவது. அருளாட்சி மிக்காருக்கு இவ்வுலகம் வேறுபாடுறத் தோன்றாது. உளத்தின் அருவாகிய தன்மை அருள். அருவாந்தன்மை எவ்வகை உருவானும் பற்றப்படாத நிலை, வெறுப்பு, விருப்பு, தாழ்வு, உயர்வு, இழிவு, சிறப்பு, முன், பின் முதலிய பூதநிலை மாற்றங்களான் உருவாகத் தோற்றி நிற்கும் உருத்தோற்றம் இலவாகும் உளநிலை அருள்; மெய்யறிவு பற்றி நிற்கும் அன்பு. அன்பு உருவான் பற்றப்படுவது. அருள், அருவான் பற்றப்படுவது. அரு+உள் - அருள் என்க.

அன்பெனப் புகழ்கோ, அருளென மகிழ்கோ- புறத்தே புலப்படத் தோன்றும் அன்பென்று புகழ்வேனா? அகத்தே புலப்படுத்தும் அருளென மனத்தான் நிறைவுறுவேனா? இல்லறப் பொதுவாயது அன்பு எனினும், அதுதான் மனத்தான் நுகரும் அளவானே நிறைந்திருந்து, இதுகால் புறத்தே புகழுக்குரியதாக நிறைந்து வழிதலாய தன்மையான் புகழுக்குரியதாகலின், புகழ்வேனா என்றும், அன்றித் தன்னுயிரை இரங்குதற் கேதுவாகிய உயிரென்று கருதித் தன்னிலையினும் மீத்துயர்ந்து தன் அக மகிழ்ச்சிக்கே முற்றும் உரியதாகலின் அருளெனக் கருதி மகிழ்வேனா என்றாள் என்க. அன்பு நிகழ்ச்சி பிறராலும் எண்ணிப் புகழ்தற்குரியது என்றும், அருள் தன்னளவானே எண்ணி மகிழ்தற்குரியது என்றும், குறிப்புணர்த்தினாள் என்றபடி.

என்கொல் பாகா்க்கு இடுகறி என்னா - நாட்குழம்பிற்கு இடப்படும் கறி என்கொல் வேண்டுவது என்று. பாகர் - குழம்பு.

அறிந்திசின் போதந்த ஏவலர்க்கு - கேட்டு அறிந்து போமாறு வந்த ஏவலனுக்கு.

எம்மனை -- தகவுரைத்து - எம் மனையின் கண்ணே பாகற்காயினைப் புளிக்குழைத்துச் சமைத்துத் தாய் தர யான் மிசைந்த தன்மையை உரைத்து: எனக்கது, மிகு விருப்பம் என்று ஏவலனுக்குப் புலப்படுத்தினாள் என்க. இசின் - அசை. எங்கோ - எம் தலைவன்.

அது நயந்து அருந்தார் ஆகவின்- அதனை விரும்பி உண்ணார் ஆகலின். தனக்காகும் பாகற்காயின் புளிக்குழம்பு, தன் கணவர் விரும்பியுண்ணுதற்காகாது என்று கூறினாள் என்றபடி

அது மற்று அது தவிர,

பிறகொளக் கூறுகோ - பிற யாதாயினும் அவர் விரும்பி உண்ணுதற் கானவற்றை வாங்கி யனுப்பக் கூறுவாய்.

என்றலும் - என்று யான் கூறலும்.

அவன் மீண்டு - அவன் கேட்டறிந்து தலைவனிடம் போய் இது கூறி, வாங்கியவாறு மீண்டும் வந்து.

பெய்து உகத்தந்தது இவக்கான் - பெய்து மகிழும்படி தந்தவற்றை இதோ காண் என்று தோழியிடம் காட்டினாள் என்றபடி

தனக்குப் பாகற் பசுங்காயின் புளிக்குழம்பு விருப்பம் என்று ஏவலனிடம் கூறினாளேனும், அது தன் தலைவர் விரும்பி யுண்ணார் ஆகலின், அது தவிரப் பிற அவர் விரும்பும் கறியினை வாங்கியனுப்பக்கூற, அவன் இவள் விருப்பம் கண்டு, அது தனக்கு விருப்பம் அன்றெனினும், அதனையே வாங்கி விடுத்த பேரன்பினைக் காண் என்று தோழியிடம் கூறினாள் என்க. இஃது அவன் தன் மேல் இயற்கையாகக் காட்டும் அன்பினும் மிகவுயர்ந்த உளச்செயல் ஆகுமென்றும், எனவே அஃது அருளின்பாற்படும் என்றும் கருதிக் கூறினாள் எனக் கொள்க.

தான் விரும்பி யுண்ணும் பாகற்காயின் புளிக்குழம்பு அவனாலும் விரும்பப்படுவதொன்றாக விருந்து, அதனை அவன் தன் பொருட்டு வாங்கி விடுப்பானாயின் அதனை அன்பென்று கருதிக் கொள்வதே இயல்பென்றும், , அஃதன்றித் தன் விருப்பம் அவன் விருப்பம் அன்று எனினும், தன் விருப்பத்தினையே செயல்படுத்தித் தன் விழைவு கருதிற்றிலன் என்பதால், அது தன்மேல் இரங்கிச் செய்த செயலாகலின் அஃது அருளேயென்றும் தெளிந்தனள் எனவும் கொள்க.

முழுத்தும் - முழுவதும்.

பைம்பருக் கொழும்புடை பாகல் - பசிய பருக்களையுடைய கொழுவிப் புடைத்த பாகற்காய். பாகற்காய் தனக்க மிகு விருப்பமான தொன்றாகலின் அதனை வண்ணித்துக் கூறினாள் என்றபடி.

பாகல் என்னாது பருத்த பாகல் என்றும், வெறும் பருத்தது என்னாது கொழுமையாகப் பருத்தது என்றும் கூறினாள் என்க. பசிய பருக்கள் மிகுந்த பாகல் என்பதால் அதன் பிஞ்சுமை கூறினாள் என்க. பாகல் முதிர்வுறின், அது செம்மஞ்சள் நிறம் படருமாகலின், அஃதன்றிப் பசிய இளங்காய் என்று விதந்து கூறினாள் என்றபடி.

ஐ - தலைவன்.

தகை - தகவுடைத்தாம் தன்மை. அருள் நிரம்பிப் பெருமை சான்ற தன்மையான் தகை என்றாள்.

ஐ தகை - தலைவனாகிய தகைவோன்.

என்யான் நோற்றவாறு - யான் இவனைப் பெற எத்தகு பெரு நோன்பு செய்திருத்தல் வேண்டும் என்றபடி

நோற்றல் - நோன்பு கடைபிடித்தல்.

நோன்பு -தவமிருத்தல் நோல் பகுதி.

நோலுதல் - துயர் பொறுத்தல், தவமிருத்தல், புலன் வேட்கை தள்ளி, தன் மனத்தில் தான் வேண்டுவது பெறக்கருதி அது மேல்தான் நீரும் உணவும் அகற்றி மனமுறுத்து நினைப்பக் கிடப்பது.

நல்ல கணவனைப் பெறல் வேண்டி முற்பருவத்தே பாவையர் இளமை நலம் தவிர்த்து மனத்துக்கண் மாசிலராகி எண்ணிய எண்ணியாங்கு எய்த ஆற்றியிருத்தல்.

தான் விரும்பி ஒன்று கூற, அது தன் விருப்பம் அன்றேனும் தன் விருப்பத்தினையே மேலெனக் கொண்டு, அதனையே செயற்படுத்தத் தன் தலைவன் விரும்பிய அச்செயலை, தலைவி அது தன்பால் கொண்ட அருள்நோக்கு என்று கண்டு, அத்தகைய அருஞ்செயலை அவன் தன் பொருட்டு இரங்கிச் செய்யுமாறும், அத்தகு செயல் புரிதற்கு ஆகிய பெருந்தகைமை பெற்ற அத்தலைவனைத் தான் கணவனாகப் பெற்றதற்கும் எத்துணையளவு நோன்பு பெற்றிருத்தல் வேண்டும் என்று கூறி வியந்தனள் என்க. என்னை? தான் செய்த தவத்தின் அளவு, அது பயன் கொடுக்கும் பொழுதிலன்றி அறியப் பெறாதாகையால், அதன் அளவும் பெருமையும் ஈண்டு அவனால் அறியப் பெற்றாளாகலின், தான் எத்துணையளவு நோன்பு நோற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதன் பயனாகத் தான் எத்துணையளவு தகைமை பெற்ற தலைவனை அடையப் பெற்றாள் என வியந்து கூறினாள் என்பதுமாம்.

இது புறப் பொதுவியல் என் திணையும், கற்பு முல்லை என் துறையுமாகும்.