உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/தீச்சுடர் எழுத்து

விக்கிமூலம் இலிருந்து

12 தீச்சுடர் எழுத்து


எவர்கொல் துணையே! கவர்புற் றனையே!
குவடுபட நடந்த சுவடும் மாறாது;
வான்பட் டதிருங் குரலுந் தேயாது;
வல்லுயிர் செகுக்க மாற்றலர் வெரூஉம்
கொல்லயில் விழியின் இமையுங் குவியாது; 5
முன்னைப் பெருமையின் முங்குபே ருணர்வால்
அன்னைத் தமிழ்க்கே அலங்கல் சார்த்தித்
தீச்சுடர் எழுத்தால் பாச்சுடர் கொளுத்தி,
ஒச்சிய தடங்கை வீச்சும் ஓயாது;
உயிருணர் ஆரப் பொழிந்துயர் வாழ்க்கைப் 10
பயிர்செழிப் பூரப் பாடினை கொல்லோ!
இனியே
துவரிதழ்த் தாமரை கவர்துளி மாந்தி
உவப்புற முரலும் கருவண் டொப்ப
இயற்கை துங்கும் புலவரும் இல்லர்! 15
மயற்கை அகற்றும் மறவரும் இல்லர்!
மருட்சி அகற்றிடு புரட்சியும் இல்லை!
இருள்துயில் கொண்ட தமிழகம் எழவே
அருள்மொழி நெஞ்சத் தறமும் மடிந்தது!
தயிர்கடை மத்தம் ஆகித் தமிழர் 20
உயிர்கடைந் தெடுக்கும் நின்பெரும் பிரிவால்
உள்ளமும் அறிவும் ஓய்ந்த
கள்ளமில் உணர்வின் கனியுநர் தமக்கே!


பொழிப்பு:

குன்றம் பொடிந்து படும்படி பெருமிதத்தோடு நீ நடந்து சென்ற காலடிகளும் இன்னும் மறையவில்லை; வானில் தெறித்து அதிரும்படி முழங்கிய நின் குரலொலியும் இன்னும் தேய்ந்து போகவில்லை ; வலிந்த உயிர் அழிந்து போகும்படி பகைவர் அஞ்சுகின்றதும் உடலைக் கொல்லுகின்றதும் வேல் போல் கூரியதுமான நின் விழியின் இமைகள் இன்னும குவிந்து போகவில்லை; முன் நாளைய பெருமையுள் முழுகி எழுந்த பேருணர்வினால் தமிழன்னைக்குப் புகழ்மாலை சூட்டியும், தீயின் ஒளி நாக்குகள் போலும் எழுத்துக்களினால் பாட்டில் சுடர் கொளுத்தியும், அரசோச்சி நின்ற நின் பெரிய கைகளின் வீச்சும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உயிர்களின் உணர்வு மிகும்படிப் பாடல்களை மழையெனப் பொழிந்து உயரிய வாழ்க்கை என்னும் பயிர் செழித்துப் புடை நிரம்பும்படி நீ பாடியிருந்தனையே!

இனியே, சிவந்த இதழ்கள் நிறைந்த தாமரையின் தேன் துளிகளைக் கவர்ந்து அருந்திய உவப்பின் மேலீட்டால் முரலுதல் செய்யும் கரிய வண்டைப் போல், இயற்கையூடு ஒன்றிப்படியும் புலவர் எனப்படுவோரும் இனி இலராக,மக்களின் அறிவு மயக்கம் அகற்றுகின்ற மறவர் எனப்படுவோரும் இனி இலராக; இருள் மண்டி உறக்கம் கொண்டிருந்த தமிழ் நிலம் விழித்து எழும்படி, அருள் மழை பொழியும் அறம் பூண்ட நெஞ்சும் மடிந்துற்றதாக தயிரை அலப்பிக் கடைகின்ற மத்துப் போலும், தமிழரின் உயிரைக் கடைந் தெடுக்கின்ற நின்னுடைய பெரும் பிரிவினால் உள்ளமும் அறிவும் ஓய்தல் நின்ற கள்ளமற்ற உணர்வினார் கனிந்துநிற்போர் தமக்கு,

எவர் இனித் துணையாவரோ? இறப்பெனும் கள்வனால் கவர்ந்து கொள்ளப் பெற்றனையே!

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.

பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம் மறைந்த ஞான்றை உள்ளக் கவற்சி மீதுரப் பாடிய கையறு நிலைப் பாடல் இது.

பாவேந்தரின் பெருமிதமான போக்கும், தமிழுக்கென ஓங்கிநின்ற குரலும்; தமிழ்ப் பகைவர் அஞ்சிப் புறம்நடுங்கும் நோக்கும், பேரரசன் எனப் பெருமிதங் கொண்டு ஓச்சிய கைவீச்சும், அவர் வாழ்ந்த வாழ்க்கையின் பெரும் பயனும் இன்னும் தமிழர்களின் நெஞ்சங்களில் காட்சியாகி நிற்கும் நிலையினைக் காட்டி அவர் பெரும் பிரிவால் தமிழர் இழந்த இழப்பையும், அவலத்தையும் தொகுத்துக் கூறியதாகும் இப்பாடல்.

எவர்கொல் துணையே... - என்னும் முதலடியினை இறுதியடிக்கு முடிவாகக் கொள்க.

எவர் துனை - என்றமையால் இனித் துணை எவருமிலர் என்றபடி

கவர்பு உற்றனை - கவர்ந்து கொள்ளப் பெற்றனை. பிறர் விரும்பும் ஒருவரை அவர் விருப்பத்திற்கு மாறாகப் பிரித்ததான், கவர்தல் எனக் கூற வேண்டுவதாயிற்று.

குவடுபட நடந்த சுவடு- குன்றம் பொடிந்து போமாறு நடந்த நடையான் அமைந்த சுவடு நடைக்குப் பெருமிதங் காட்ட வேண்டிக் குன்றம் பொடியும் நடை எனலாயிற்று. ஒருவரின் வாழ்க்கைப் போக்கின் பெருமிதப் போக்கினை உணர்த்துவது ஒருவரின் நடையே ஆகலின் நடை முதற்கண் கூறப் பெற்றது. நடையெனினும் போக்கு எனினும் ஒன்றேயாகி, அவர் வாழ்ந்த பெருமிதமான வாழ்க்கைப் போக்கினைக் கூறிற்று இவ்வடி

இனி, நடைக்கடுத்து, ஒருவரின் பெருமிதம் அவர் குரலான் வெளிப்படலால் அவர் குரலின் செம்மாப்புக் கூற வேண்டுவதாயிற்று.

வான்பட்டு அதிருங்குரல்-வானின்கண் பட்டுத் தெறிக்கும் குரல். அதிர்தல் ஒலித்தெறிக்குதல். ஒருபுடை நின்று எழுப்பிய அவர் குரல் எண்டிசையும் பரந்து பட்டுச் சென்றது கூறப்பட்டது.

மெல்லுயிரைச் சிதைத்தல் எளிதாகலான் வல்லுயிரைச் செகுத்த விழி எனப் பெருமிதந்தோன்றக் கூறப் பெற்றது. உயிரைச் செகுத்தலும், மனத்தை வெருவித்தலும், உடலைக் கொல்லுதலும் செய்யும் அயில்விழி என்று கூறப்பெற்றது.

அயில்- வேல், உயிரை அயிலுதலால் வேல் அயில் எனப் பட்டது. அயிலுதல் உண்ணுதல்.

அவர் நடந்த மிடுக்கான நடையின் சுவடு தோயாமையும், அதிர்ந்த குரலின் செம்மாப்பு இன்னும் அடங்காமையும், பகைவர் அஞ்சும்படிச் செய்து அவர் உயிர் செகுக்கும்படி நோக்கிய பெருமிதம் சான்றவிழி இன்னும் மூடாமையும், அவர் ஒச்சிய தடங்க்ைகளின் வீச்சு இன்னும் ஒயாமையும் இன்றும் நம்மிடையே இருப்பார் போன்றதோர் உணர்வை எழுப்புகின்றன என்க.

இமை குவிதல் - விழி மூடுதல்.

அவரின் திறந்த விழிகளையே கண்டு அவரின் மூடிய விழிகளைக் கண்டிலோம் ஆகையால் அவர் பார்வையே இன்னும் நம் நெஞ்சில் உளதாகின்றது.

முங்குதல் - முழுகுதல்.

அன்னைத் தமிழ் - பிறமொழிகளுக்கு அன்னையாகி நின்ற தமிழ்.

தீச்சுடர் எழுத்து தீயின் ஒளி நாக்குகள் போன்று சூடு கொளுத்தும எழுத்து.

பாச்சுடர் கொளுத்தி - பாவின் சுடரை மக்கள் நெஞ்சில் ஏற்றி

ஓச்சுதல் - உயர அலைத்தல்:

உயிர் உணர்வு ஊரப் பொழிந்து- மாந்தரின் உள்ளுணர்வு மிகும்படி மழைபோற் பொழிந்து.

உயர் வாழ்க்கை - பாடினை உயர்வு சான்ற மாந்த வாழ்க்கை என்னும் பயிர் செழிப்புற்று நிரம்பும்படி பாடினாய் கொல்

கொல் - அசை ஒ! இரக்க வுணர்வு தோற்ற வந்தது.

இனியே - நின் மறைவுக்குப் பின்னதாக இனி.

துவர்இதழ் - சிவந்த இதழ்.

தாமரை- தாமரை மலர். தாமம் - கதிரவன்; அரை தண்டு; மலர் - பூ கதிரவன் கண்டு மலரும் தண்டுப் பூ என்னும் பொருளுடைய தூய தமிழ்ச் சொல். தாமரைப்பூ வென்ற முழுச் சொல் பின் தாமரை என்ற அளவிலேயே பூவைக் குறித்தது.

முரலுதல் - வண்டின் இமிழும் இயற்கை துங்கும் புலவர் இயற்கையோடு பொருந்தி நிற்கும் புலவர். புலவர் - அறிவுடையவர். புலம் அறிவு.

பாவலர் - பா எழுத வல்லவர்.

பாவலரினும் புலவர் சிறப்புடையவர். பா எழுதல் ஒரு கலைப் பயிற்சி. ஒவியம், கற்றளி (சிற்பம்) போலும் பா எழுதுதலும் ஒரு கலையே. புலமை அப்படிப்பட்டதன்று. இயற்கை அறிவு மிகுந்தது பொறிகளாலும், புலன்களாலும் உணரப்பெற்ற உணர்வும், அவை வழி மெய்யுணர்வும் மிகப் பெறுதல் புலமை, இனி, பா எழுதுவோனுக்குப் புலமை நிரம்பி யிருத்தல் வேண்டும் என்பதும், அஞ் ஞான்றே அவன் எழுதும் பா செப்பமும், நுட்பமும், திட்பமும் பொருந்தி விளங்கும் என்பதும் பண்டைத் தமிழ் மரபு. இனி, புலமை பெற்றவர் எல்லாரும் பா வழியினானே தங்கள் அறிவுக் கருத்தினைப் புலப்படுத்தினார் ஆகலின் புலவோர் பாவலரும் ஆனார் என்க.

மயற்கை - அறிவு மயக்கம் அறியாமை.

மறவர் - துணிவு, ஆண்மை மிக்கவர்.

மருட்சி யகற்றிடு புரட்சி - மக்கள் மதி திகைந்த நிலையினை அகற்றிக் கீழ் மேலாகச் செய்யும் நிலை. தமிழும், தமிழரும் கீழ்மையுற்றிருந்த காலை அதனையும் அவரையும் மேன்மையுறுமாறு செய்த நிலை.

இருள் துயில் - இருள் போலும் மண்டிய துயில்.

அருள்பொழி நெஞ்சத்து அறம்- அருள் நோக்கான் பொழிவுற்ற நெஞ்சத்தின் அறக்கொள்கை

தயிர்கடை - பிரிவு - தயிர் மத்தால் அலப்புறல் போல், தமிழர் பாவேந்தர் பிரிவால் அலப்புற்றனர் என்க. தயிர் அலப்புற வெண்ணெய் திரளுதல்போல், பாவேந்தர் பிரிவால் அலப்புறும் தமிழர் நெஞ்சத்து விடுதலை திரளுதல் என்பதைக் குறிப்பால் உணர்த்தியபடி

உள்ளமும் அறிவும் ஒய்ந்த கள்ளமில் உணர்வு- உள்ளத்தாலும் அறிவாலும் நிலை நின்று இயங்கும் கள்ளமற்ற நடுநிலையான உணர்வுடையோர்.

கள்ளமில் உணர்வின் கணிபுநர் தமக்கு எவர் கொல் துணையே என்று கூட்டுக

- பாவேந்தர் தமிழரிடைப் பிறந்து மொழியாலும், இனத்தாலும் அவர் மறுமலர்ச்சி யுறும்படி ஓர் உணர்வுப் புரட்சியைத் தோற்றுவித்து மறைந்த நிலையில், இனி அவலமுற்ற தமிழினத்திற்கு உற்ற துணை எவரோ? எனக் கவன்று பாடியது. புரட்சி தோன்றிய நிலையில் மறைவுறின் அது முடிவுறுதல் யாங்வனோ? எவர் துணைக் கொண்டோ? என அரற்றியது மாகும்.

இது பொதுவியல் என் திணையும் கையறுநிலை என் துறையுமாகும்.