உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/திமிர்தல் தவிர்ந்தன

விக்கிமூலம் இலிருந்து

17 திமிர்தல் தவிர்ந்தன


திமிர்தல் தவிர்ந்தன தோழி நிமிர்பின்றி!
துமிந்து மின்னோடி முகிலுங் கருமுற்றி
மழை பொழிந்து மண்பனிப்பத்
தழைபரப்பி உழைவருந்தி
மோத்தை புறங்கவிழக் கடமை மறியீன்று 5
ஊத்தை நாக்கொடு நக்கி உளமூறி
உண்ணிய வம்மினெம் மக்கா ளென்ன
வுட்கிடை யுணர்த்த, உள்ளுவந் தோடி
முன்னிளங் காலுறப் பின்கால் எவ்வி
முட்டச் சுரக்கும் முகிழ்முலைக் கென்றன் 10
கட்டிக் கிடக்கும் கவின்முலை தாழ்ந்தே!


பொழிப்பு:

மதர்ப்பு தவிர்தலாயின தோழி, நிமிர்தலின்றி! துறலைச் செய்து மின்னல் ஓடி, முகில்கள் கரு முதிர்ந்து மழையைப் பொழிவித்து நிலத்தைக் குளிர்விப்ப, தழைகளைப் பரப்பிப் புறத்திருந்து வருத்தமுறும்படி ஆட்டுக்கடா முகந் திருப்பிக் கவிழ்ந்து கொள்ள, பெண் ஆடு குட்டிகளை ஈன்று தந்து, கருவுயிர்ப்பு நீரை நாக் கொண்டு நக்கித் துய்மை செய்து, உளத்தே தாய்மை யுணர்வு ஊறியதாய்"பால் உண்ணுதற்கு வாரீர் எம் மக்காள்!” என்னத் தன் உள்ளக் கிடக்கையை உணர்த்துதல் செய்ய, அக்குட்டிகள் உளமகிழ்ந்து அதனருகில் ஒடி, இளமையான முன்னங் கால்களை நிலத்தே படிதலுற ஊன்றி, பின்கால்களால் எவ்வுதல் செய்து, தம் புனிற்றிளந் தலைகளான் செய்கின்ற, அம் முட்டுதலுக்குச் சுரக்கின்ற அப்பெண் யாட்டின் முகிழ்த்த முலைகளின் தகைமைக்கு வறிதே கச்சையான் கட்டப் பெற்றுக் கிடக்கும் கவின் தோய்ந்த என் முலைகள் தாழ்வுற்றவாக,

விரிப்பு:

இப்பாடல் புறத் துறையைச் சார்ந்தது.

அழகும் இளமையும் வாய்ந்தாள் ஒருத்தி, தாய்மை யெய்தாத தன் உறுப்பு நலன் அழியக் கூறித், தனக்கு வந்து வாயாத பிள்ளைப் பேற்றுக்கு

ஏங்கி வருந்தி நகைத்துக் கூறியதாகும் இப் பாட்டு.

பிள்ளைப் பேற்று நலன் ஒன்றின் பொருட்டாகவே வாய்க்கப் பெற்றிருக்கும் அழகு சான்ற முலைகள், அப் பேறு வாயா விடத்து வறிதே கட்டுப்பெற்று மதர்த்துப் பொங்கி யெழுந்து அண்ணாந்து நிற்றல் எற்றுக்கோ எனத் தம் மதர்ப்பு தவிரவும் ஏமாப்பு தாழ்வுறவும் செய்தன. என்றவாறு.

பெண்மை முற்றித் தாய்மையாய்க் கணியாத விடத்து அத் தாய்மைக்கே உரிய சிறப்புறுப்பாகிய முலையின் கவின் மிக்க நிமிர்பு நாணுத்தரத் தக்கதாகும் என அத் தலைவி நெஞ்சழிந்தாள். ஆகவே அவள் நெஞ்சழிவுக்குத் தக்கவாறு அவ்வுறுப்புகளும் பொங்குதல் தவிர்தலும், நிமிர்தல் தாழ்தலும் செய்தன என்க.

கட்டுத லுற்றுக் கிடக்கும் முலையின் தன்மையினை இதுகாறும் நினையாளாய் நின்ற தலைவி தன் இற் புறத்தே குட்டிகளை ஈனுதலுற்று உளமுவந்து அவற்றைப் பாலுண்ண அழைத்த பெண்யாட்டையும், அதனருகே ஒடித் தம் தலைகளான் தாயின் மடியினை முட்டுவித்துப் பாலருந்தும் மறிகளையும் கண்டு, தன் பெண்மை நலம் தாய்மையாய்க் கனியாது காய்கின்ற துணர்ந்து, நெஞ்சு அழுங்க, அருகே நிற்கும் தோழியை விளித்துத் தன் ஆற்றாமை தோன்றக் கூறினாள் என்க.

திமிர்தல்: விம்முதல், புடைத்தல், பெருகுதல் எனப் பொருள்படும்.

இனி, திமிர்தல் என்னுஞ் சொற்குப் பூசுதல், அப்புதல் என்றும் பொருள் கொண்டு, மார்பகத்தே பூசப் பெறுவனவாகிய சந்தனக் குழை முதலிய விரைப் பொருள்கள் பூசுதலைப் பெறாது தவிர்க்கப் பெற்றன என்றும் கொள்ளலாம். எனினும் செயற்கைப் புனைவு சாரும் பின்னைப் பொருளினும் இயற்கை நலஞ் சார்ந்த முன்னைப் பொருளே சாலப் பொருந்துவதாம் என்னை? நாணுடைமை பற்றியாம் என்க.

தவிர்ந்தன- தவிர்தலாயின.

நிமிர்யின்றி- விறைப்பின்றி, ஏமாப்பின்றி, அண்ணாத்தலின்றி.

துமிதல்- தூறுதல், சிறு மழை பெய்தல், துளி-துமி.

மின்னோடி - மண் பனிப்ப : தொடக்கத்தே துறலாகிப் பின் வலித்து மழையாகப் பெய்ததால் நிலம் குளிர்ந்தது என்க.

முகில் கருமுற்றிப் பொழிதல்: முகில் மழைத்துளி நிரம்புதல் கரு முற்றுதல் போலாம் என்க. மழை பொழிதல் கரு உயிர்த்தலைப் போலாம் என்க. இனி, வினை அடிப்படையிலன்றி நிற வடிப்படையாலும் பொருள் கொண்டு, முகில் கருநிறம் நிரம்பிப் பொழிதலுற்றது என்றுங் கொள்ளலாம்.

மண் பனிப்ப: நிலம் குளிர்மை யெய்த

மோத்தை தழைபரப்பி உழைவருந்திப் புறங்கவிழ பெண் ஆடு குட்டி ஈனுவதற்கென, ஆண் ஆடு இலை தழைகளைக் கொணர்ந்து நிலத்தே பரப்பி, ஒரு புறத்தே இருந்து வருந்தி முகங்கவிழ்ந்து நின்றதாம் என்க.

பெண் ஆடு கருவுயிர்த்தலைத் தான் காணக் கூடாதென ஆண் சிறிது தொலைவில் நின்று தலை கவிழ்ந்து கொண்டது. பெண் கருவுயிர்க்குங் கால் படுந்துயர் ஆணுக்குந் துயரை வருவித்தது.அது தன் பிணையின் மேல் வைத்த அன்பால் என்க. மோத்தை ஆண் ஆடு,

கடமை : பெண் ஆடு,

மறி- குட்டி

ஈனல் - கருவுயிர்த்தல்,

ஊத்தை : கருவுயிர்ப்பு நீர் குட்டியைப் போர்த்துள்ள வழவழப்பான கரு நீர்.

ஊத்தை நாக்கொடு நக்கி உளமுறி: குட்டிகளின் மேலுள்ள கருவுயிர்ப்பு நீரைத் தன் நாவைக் கொண்டு நக்கித் தூய்மை செய்தது பெண். அவ்வாறு செய்யச் செய்ய அதன் உள்ளத்தே தாய்மை உணர்வு ஊறி நின்றது என்க.

உண்ணிய வம்மின் - உணர்த்த ஊத்தையைத் துய்மை செய்த பெண் ஆடு குட்டிகளைத் தன்னிடம் வந்து பாலருந்துமாறு தன் உள்ளத்தின் விழைவு தோன்ற விளித்தது என்க.

தாய் தம்மைப் பாலுண்ண அழைத்ததும் குட்டிகள் உள்ளம் உவந்து ஒடின என்றவாறு.

முன்னிளங்காலுறப்பின்கால் எவ்வி: முன்னங் கால்கள் நிலத்தே உறும்படி வைத்துப் பின் கால்களால் உந்தி எக்குதல் செய்து,

முட்ட: முட்டுதல் செய்ய, குட்டிகள் தாயிடம் பால் அருந்துங்கால் தம் இளந்தலையால் மடியை முட்டி முட்டி முலைத் தசையுள்.பால் மிகுந்து சுரக்கும்படி செய்வது இயற்கை

முட்டச்சுரக்கும் முகிழ் முலைக்கு : குட்டிகளின் இளந்தலை முட்டுதல் செய்தலால் சுரக்கின்ற முகிழ்த்து நிற்கும் முலையினுக்கு.

என் கட்டிக் கிடக்கும் கவின்முலை தாழ்ந்தே: வறிதே கட்டப்பட்டுக் கிடக்கின்ற அழகு பொருந்திய என் முலைகள் தாழ்ந்தனவாக

ஆட்டின் முலை பால் சுரந்து, கூம்பித் தோன்றுவதால் முகிழ் முலை எனலாயிற்று. அவ்வாறு குழவி வாய் வைத்தலும் அதனால் முலை சுரக்கப் பெறுதலும், மலர்ச்சி யுறுதலுமின்றி வறிதே கிடத்தலால் கவின் முலை எனலாயிற்று. பயனிலதான வெறும் அழகு சிறப்பிழந்த தாகையால் அஃது இழித்துக் கூறப்பெற்ற தென்க.

ஐயறிவே வாய்க்கப்பெற்ற விலங்கினங்கள் கூடத் தாய்மை எய்துதலும் அதனால் மகிழ்தலுமாக் இருக்கையில், ஆறறிவு பெற்றாளாகிய தான் தாய்மை நலம் எய்தாளாக மலட்டுத் தன்மை வாய்ந்திருப்பது தலைவிக்கு மிகு துயரை வருவித்ததாம் என்க.

எத்துணைதான் பெண்மை நலம் வாய்ந்தவளாக விருப்பினும் ஒருத்தி பிள்ளைப் பேறின்றி இளமையழிதல் மிகவும் வருந்துதற்குரியது. அவள் அழகும் இளமையும் சிறப்புப் பெறுவன அல்ல-என்றவாறு.

பொருந்தாக் காமத்துப் போதரும் பிற கருச் செய்திகள் யாவும் தலைவன் தலைவியரின் காதல் தொடர்புடையனவாக மட்டும் இருப்ப, இது தமிழிலக்கியத்துப் புதுக் கருத்தாக நிற்றலோடமையாது, தலைவன் தலைவிக் குற்ற இணைப்பு பொருத்தமற்றதாகி, இவளை மலடாகியது பற்றி, இதுவும் பொருந்தாக் காமத்துள்ளேயே அடக்கப் பெற்ற தென்க.

இப் பாட்டு பெருந்தினையும் இல்லவை நகுதலென் துறையுமாகும்.