நூறாசிரியம்/தொம்பர் கைக்கழி

விக்கிமூலம் இலிருந்து

18 தொம்பர் கைக்கழி


நகையும் வாரா தழுகையும் விளையாது
பகையும் கொள்ளா துறவும் பாராது
திகைப்பல் யானே முகில்திரி விசும்பிற்
கயிறாடு தொம்பர் கைக்கழி யன்ன
உயிராடு காதற் கூன்று கோலனைத்
துறக்கக் கூறினள் அன்னை;
இறக்கக் கூறின மென்றறி யாமே!

பொழிப்பு:

நகைப்பும் தோன்றாது; அழுகையும் விளையாது; நெஞ்சம் பகையும் கொள்ளாது; உறவையும் எண்ணாது, திகைப்புறுவேன் யான்! முகில் திரிகின்ற விசும்பின்கண் கயிற்றின்மேல் நின்று ஆடும் தொம்பரின் கையகத்துள்ள கழியைப்போல் உடல்மேல் நின்று ஆடிக் கொண்டிருக்கும் இவ்வுயிருக்குப் பற்றுக் கோடாய் விளங்கும் கோல் போன்றவனைக் கை நெகிழ்த்துவிடு எனக் கூறினாள் என் அன்னை; அது வழி என்னை இறந்துவிடு எனக் கூறினோம் என அறியாளாக,

விரிப்பு:

இப் பாடல் அகத் துறையைச் சார்ந்தது.

‘ஊசலாடும் என் உயிர்க்குப் பற்றுக் கோடாய் நிற்கும் என் காதற் குரியவனைத் துறந்துவிடக் கூறிய அன்னை, அது வழி என்னை இறந்து விடக் கூறுவதறியாமல் கூறினாளாக அவள் அறியாமை கருதி நகைக்கவும் தோன்றாது; உண்மையாகவே என்னை இறக்கக் கூறாமையால் அழுகையும் விளையாது; அவள் அன்பு கருதி என் நெஞ்சம் பகைமையும் கொள்ளாது; அவளென் அன்னை என்ற உறவையும் எண்ணிப்பாராது, எனவே திகைப்புறுவேன் யான்!” எனத் தலைவி தன் தோழியிடத்துக் கூறி யழுங்கிய தாகும் இப்பாட்டு.

நகையும் வாராது : பற்றுக் கோடாய தொன்றைப் பற்றற்க என அறியாமையால் கூறியது நகை விளைப்ப தென்னினும், தன் மேல் வைத்த அன்பின் முதிர்வால் அன்னை அவ்வாறு கூறினாளாகலின் அது நகையை விளைவிக்கவில்லை என்றவாறு. இனி, தன் கேள்வனைத் துறக்கக் கூறிய கூற்று, தான் இறக்கக் கூறியதே என்று அறியாமற் போனது நகைப்புக்குரிய தெனினும், தன் அவலங் கருதுமிடத்து நகையும் வருவியாத, ஒன்று என்றுங் கொள்க.

அழுகையும் விளையாது: தான் இறத்தற் கேதுவாகிய தன்மையின் தலைவனைத் துறக்க எனக் கூறியது அழுகையை வருவிப்ப தென்னினும், அஃது அறியாமையாற் கூறியதாகலின், துன்பத்தையும் விளைவியாது என்றாள் என்க.

பகையுங் கொள்ளாது: பகையைப் போலும் தான் இறந்து படுவதாகியதோர் உத்தியைக் கூறினளேனும், அது தன் நலங் கருதிக் கூறிய கூற்றே ஆகலான் பகை கொள்ளுதற் கிடந்தர வில்லை என்றாள்.

உறவும் பாராது : இனி, தன் நலங்கருதி அன்பால் கூறிய கூற்றாகி உறவுமுறைக்கு உறுதி பயப்பதேனும், தன் உயிர் கெடுமாறு கூறியதாகலின் உறவு நோக்கியும் அது கொள்ளப்படுவ தன்று என்றாள் என்க.

திகைப்பல் யானே: இவ்வாறு ஒரு புறம் நகைப்பிற்கும் மறுபுறம் அழுகைக்கும், ஒரு புடை பகைக்கும் மறு புடை உறவுக்கும் உரியதாகிய அன்னையினது கூற்றின் மெய்ப்பொருள் தேராது திகைக்கின்றேன் யான் என்றவாறு.

திகைதல்-திசைதல்-மயங்குதல்-வேறுபாடு உணராது தடுமாறல்.

முகில்திரி விசும்பிற் கயிறாடு தொம்பர் கைக்கழி யன்ன:

முகில் திரிகின்ற வானத்திடைக் கயிற்றின் ஆடும் தொம்பர் தம்மை நிலை நிறுத்த வைத்துக் கொள்ளும் கைக்கோல் போல்,

கயிற்றில் ஆடும் தொம்பர் கைக்கழியை துறக்குமிடத்து, அஃது உயிர்க்கூறு விளைத்தல் போல். உயிர்க்குப் பற்றுக்கோலாய் விளங்கும் தன் தலைவனைத் துறப்பதும் தன் உயிர்க்கு ஊறு விளைவிக்குமாகலின், அஃது தன்னை இறப்பக் கூறியதே ஆகும் என வேண்டி உயிராடு காதற்கு ஊன்று கோலன் என்றாள்.

விசும்பிற் கயிற்றின் மேல் ஆடும் தொம்பருக்கு, மெல்லியதாய் நிலத்தின் மேற் பாவாது உறுவாரிடைத் தொடர்பற்றுத் தனிமையில் விளங்குகின்ற உடல் என்னும் கயிற்றின் மேல் நின்றாடும் உயிரையும், தொம்பர் பற்றும் கைக்கழிக்குத் தன் உயிர் பற்றிக் கொள்ளும் தலைவனையும் உவமை கூறினாள் என்க.

இனி, தன் தலைவனைத் துறந்துவிடக் கூறுவது, கயிற்றின் மேல் நின்றாடும் தொம்பனை நோக்கி அவன் பற்றியுள்ள கைக்கழியினைத் துறந்து விடு என்று கூறுவதற் கொப்பாகும் என்றாள் என்க. அஃது அவன் இறந்து விடற்கு ஏதுவாவது போலவே, தன் காதலனைத் துறப்பதும் தன் இறப்பிற்கு ஏதுவாகும் என்றும், உணர்த்தினாள் என்க.

உடலைக் கொடிக்கு உவமையாகக் கொள்வதற் கொப்ப ஈண்டுக் கயிற்றுக்கு உவமை கூறப்பெற்றது. தன் விருப்பிற்கேற்பப் பின்னிக்கொள்ளும் கொடி போலன்றித் தன்னுடல், இழுத்துக் கட்டப்பெற்ற கயிறு போல் கட்டுப்பட்டுக் கிடப்பதும், அதுபோல் கட்டுப்பெறாத தன் உயிர் தன் தலைவனைப் பற்றுக்கோடாகக் கொண்டு காதல் ஆட்டு நிகழ்த்துவதும் உவமையால் உணர்த்தப் பெற்றன என்க.

ஊன்றுகோலன்: ஊன்று கோலாகி நிற்கும் காதலன், உயிர்க்கு ஊன்று கோல் போன்றவன்.

தொம்பர்.தொம்பக் கூத்து ஆடுவார்.

தொம்பம்: கழைக்கூத்து வகையினொன்று. கழைக் கூத்து கம்பக் கூத்து என்றும் வழங்கும். மேனாட்டினர் இக் கால் ஆடும் BAR ஆட்டமும் கழையாட்ட வகையினொன்றே. கழையைக் கிடையாகவும் நட்டும் வைத்து அதன் மேல் நின்றாடும் ஆட்டம். கழைக்கு மாறகக் கயிறும் கட்டப் பெற்று ஆடுதலும் உண்டு.

இது குறிஞ்சியென் திணையும், தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல் என் துறையுமாம்.