உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/பெருநகை விளக்குமால்!

விக்கிமூலம் இலிருந்து

19 பெருநகை விளைக்குமால்!


மழையினும் இருளினும் மருளா யாமே
ஊரலர் உரைத்ததும் ஒழிகென் றொழித்துப்
புணர்ச்சி வேண்டிக் குறியிடஞ் சென்றாங்(கு)
அச்சந் தவிர்த்த பிழையு மொன்றே!
இளமை மடவோர்க் கேமம் வேண்டி 5
அறவோர் கொளுத்திய அறவுரை கொளாது
கொண்ட கொள்கையுங் களவின் மாறி
நயப்பு வேண்டி அவனுழைச் சென்றாங்கு
மடமை வீழ்த்திய பிழையும் இரண்டே!
காட்சி கவ்வியும் கைதொடத் தந்தும் 10
மீட்சி யின்றி யணைய வடங்கியும்
வரையா வொருவற்கு வயவுமே லிட்டு
நாண முகுத்த பிழையும் மூன்றே!
இளமுகை வெண்பல் துவர்வாய் கனியிதழ்
கிளர்முலை துணங்கிடை தடங்குறங் கென்றவன் 15
காமுற்று மொழிந்த காலையும் ஏமுற்றுப்
பயிர்ப்பற வொடுங்கிய பிழையும் நான்கே!
என்றிவை வழி
நம்மருஞ் செல்வம் அவனத்தத் தந்தே!
இம்மருங்கு பின்யா மழுங்கல் 20
வெம்முது பெருநகை விளைக்குமா லெமக்கே!


பொழிப்பு:

மழை பொழி தரும் பொழுது இருள் மண்டிய இராக் காலத்தும் நாம் மருட்சியின்றி, ஊரார் அவனொடு கொண்ட தொடர்பு பற்றித் துற்றிக் கூறிய இழிவுரைகளை ஒழிகென்று புறந்தள்ளி, அவன்பாற் பழகுதலை விரும்பி, குறிக்கப்பெற்ற இடத்தே சென்ற வகையில் நமக்கியல்பாகிய அச்சத்தை நீக்கிய பிழை ஒன்றாகும். இளமைப் பருவத்தாற் பேதைமை நிரம்பிய கன்னியர்க்குத் தம்மைக் காத்துக் கொள்ளும் பொருட்டு, உலகியலற முணர்ந்த பெரியோர் கற்பித்துக்கூறிய ஒழுக்க வுரைகளைச் செவியிற்

கொள்ளாது நாம் கடைப்பிடித்த உறுதிப்பாட்டையும் அவனொடு பழகிய களவுக் காலத்தே கைவிட்டுக் காதலை வேண்டி அவன் இருப்பிடம் சென்ற வகையில் நம் அறியாமை போன்ற அடக்கத்தைக் கை ஞெகிழ விட்ட பிழை இரண்டாகும். அவனைக் காணுதற்குக் காந்துதலோடு அவாவியும், கண்டபின் நம் கைகளைத் தொட்ட அளவிலேயே அவற்றை அவன்பால் தந்தும், மீட்டுக் கொள்ளல் இன்றி அவன் நம்மை அனைத்த விடத்து அவனுள் அடங்கியும், நம்மை மணந்து நில்லாத ஒருவனுக்காக வேட்கை மிகுதியால் வெட்கத்தை உகுத்துவிட்ட பிழை மூன்றாம். தோன்றிய அரும்புபோலும் வெள்ளிய பற்கள் என்றும், பவழம் போலும் சிவந்த வாயென்றும்,கனி போலும் குழைவுற்ற இதழ்கள் என்றும், கிளர்ச்சியுற்ற முலைகளென்றும், மெல்லியதாய் அசையும் இடையென்றும், பருத்த தொடை யென்றும் அவன் மருவல் நோய் முற்றி மெல்லெனக் கூறிய பொழுதும் அவன் மொழியான் இன்புற மயங்கி உடற் கியல்பாகிய கூசுதலுணர்வை ஒடுக்கிக் கொண்ட பிழை நான்காம் என்றிந் நான்கு வழியிலும் பெறற்கரிய தாகிய நம் பெண்மைச் செவ்வியை அவன் நுகர்ந்து பொலிவழிக்கும்படி அவனிடம் நாமே வலியத் தந்து, இப்பிந்திய பொழுதில் தனித்து வருந்துதல், கொடுமை முற்றிய பெருத்த நகைப்பை எமக்குத் தோற்றுவிக்குமாக.

விரிப்பு:

இப்பாடல் அகத் துறையைச் சார்ந்தது.

தலைவனொடு மணவாது ஒழுகிய தலைவி ஊரார் உரைத்த கெளவை மொழிக் காற்றாது வருந்த, தோழி தலைவியின் வருத்தத்திற்கு அவள் அறியாமையே கரணியமென்று உலகியல் அறங்கூறிப் புறத்தே நிற்கும். தலைவன் செவிப்பட இடித்துக் கூறியதாகும் இப்பாட்டு. அவள் பேதைமையால் ஆற்றிய வரையா வொழுக்கம், “வெம்முது பெருநகை விளைக்குமாறு" ஈண்டுப் படர்ந்தது என்பது தோழியின் கருத்து பெருநகை எள்ளற் பொருட்டு விளைந்ததென்க.

தலைவியின் இற்றை வருத்தத்திற்கு நான்கு பிழைகள் பொருட்டுகளாயின. அவை: ஊரார் கூறும் அலர் மொழிகளுக்கும் மழைக்கும் இருளுக்கும் அஞ்சாது அவனொடு கூடுதல் வேண்டிக் குறித்தவிடம் நோக்கிச் சென்றது;

தன் போலும் பருவப்பெண்டிர் உலகியல் அளவில் ஈடுபடும் முறைமை குறித்து அறவோர் கூறிய அறிவுரைகளை எண்ணாது, தானே அறிந்தாள் போல் செருக்குற நடத்தல் வழித் தனக்காய அடக்கத்தை விட்டது;

பருவ உணர்வால் தன்னை மணந்து கொள்ளாத ஒருவன் தன்னைத் தீண்டுதற்கிடமளித்துத் தனக்கியல்பாகிய நாணத்தைக் கைவிட்டது;

காதன் மயக்கத்தால் அவன் தன்னை ஏமாற்றும் நோக்கொடு வண்ணித்த புகழுரைகளைக் கேட்டுக் கூசாது நின்று அவன் வழிப்பட்டது.

-“என்றிந் நான்கு பிழைகளுக்கும் தானே கரணியமாகி நின்று, தன் பொற்பழிந்த பின்றை இக்கால் கிடந்து வருந்துதலால் பயன் என்னை, நகைப்பிற்கிடமானது இவ்வருத்தம்” என்று தோழி, தலைவியின் அறியமையைக் கடிந்தாள் என்க. இம் மொழிகளைத் தனித்து வருந்தும் அவள் மட்டும் கேட்குமாறு உரைத்தல் சால்பில்லை என வுணர்ந்த தோழி, தலைவன் வந்து புறத்தே நிற்றலை அறிந்து அவனும் கேட்குமாறு உரைத்தாள் என்க.

மழையினும் இருளினும் மருளா: மழைக்கும் இருளுக்கும் அஞ்சாது, அற்றைத் தன்னை நனைக்கும் மழை நீருக்கும், வெளிப்பட அருமையாய இருளுக்கும் அஞ்சாதாயினை. இற்றை ஊரார் உரைக்கும் பழிச் சொல்லாகிய மழைக்கும் வெளிப்பட அருமையாகிய இருள் போன்ற காவலுக்கும் அஞ்சுதல் ஆயினை எனும் கருத்துப்பட மொழிந்தாள் என்க.

'ஊரலர்.....ஒழித்து: ஊர் கூறும் பழமொழிகளை அன்று நீ ஒழித்தாய்; இன்று உன் செயல் உன்னையே ஒழிக்கலாயிற்று என்னும் குறிப்புத் தோன்ற வுரைத்தாள்.

புணர்ச்சி வேண்டி :கூடுதல் விரும்பி.

குறியிடம் கூடுதல்: பொருட்டுத் தலைவனால் குறிக்கப்பெற்ற இடம்.

அச்சம் தவிர்த்தல்: பழிக்கும், தவறான ஒழுக்கத்திற்கும் வேண்டுவதாகிய அச்சம் தவிர்க்க வேண்டாத ஒன்றைத் தவிர்த்தாய்; இக்கால் அது நின்பால் தவிர்க்க வேண்டாதாக வந்து பற்றியது என்றாள் என்க. அச்சம்-அஞ்சுவ தஞ்சும் அறிவுடைமை.

இளமை மடவோர்: இளமைப் பருவத்து இயல்பாகிய பேதைமை நிரம்பியோர்.

ஏமம் வேண்டி: காவல் வேண்டி.

கொளுத்திய: அறிவுறுத்திய.

கொள்கை: கைக்கொள்ள வேண்டிய கோட்பாடு.

'களவின் மாறி: களவுக் காலத்தே கைவிட்டு.

நயப்பு: காதலிப்பு, விழைபாடு, விருப்பம்.

மடமை வீழ்த்தல்: பெண்களுக்கு இயல்பாய தாகிய மடப்பத்தைக் கைவிடுதல், மடப்பம் கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை யெனும் அரும்பண்பு.

“அன்று நீ கொள்ள வேண்டிய மடப்பத்தைக் கொள்ளாது வீழ்த்தினை இன்று அது நின்னை வீழ்த்திற்று காண்” என்றவாறு,

காட்சி கவ்வுதல்: காணுவதற்கான அவா வுணர்வு.

“அன்று நீ காட்சிக் கங்காந்தனை இன்று நீ காட்சியின்றிக் குன்றினை"- என்றவாறு.

கைதொடத் தந்து: அவன் அன்று தொடுகையில் நீ நாணிப் பின்வாங்காது நாணுதலின்றி அவன் தொடுதலை நீயும் விரும்பினை இன்று உன்னைத் தீண்டுவாறுமின்றி இழித்துப் புறந் தள்ளப்பட்டாய் அன்று நாணமிழந்தனை இன்று நாண முற்றனை என்றவாறு.

மீட்சியின்றி: மீட்டுக்கொள்ள லின்றி.

அணைய வடங்கி:' அனைத்தற்கு அடங்கி யுடன்பட்டு.

வரையா ஒருவன்: மணத்தால் உரிமையாக்கப்படாத ஒருவன்.

வரைதல்: அளவுப் படல்- எல்லை யிடல் -உறுதி யிடல். ஆடவரும் பெண்டிரும் வரைதுறையின்றி விலங்கும் பறவையும்போற் கலத்தல் ஆறறிவு சான்ற மாந்தர்க்கு விலக்கப்பட்டதோர் ஒழுக்கமாகலின் அவர் ஈடுபாட்டிற்கு எல்லை வகுக்கப்பட்டது. இவனை இவளும். இவளை இவனும் என்று அளவுரைக்கப் பெறுவதே-எல்லை கட்டுவதே-உறுதிப்படுத்துவதே வரைதல் எனப்படும். வரைதல்-மணத்தல்.

வயவு: காதல் நோய்.

நானம் உகுத்தல்: பெண்டிர்க் கியல்பாகிய நாணம்.

'உயிரினும் சிறந்தன்று நானே’ என்றுரைக்கப்பட்டது.

இளமுகை: எழுச்சியுறும் அரும்பு.

துவர் சிவப்பு: சிவந்த பவழம்.

குறங்கு தொடை: உடல் பிளவுறும் பகுதி யாதலின் குறங்கெனப் பெயரியது, கவைத் தொடக்கம்.

தடங்குறங்கு: பெரிய தொடை

ஏமுற்று: மயக்குதலுற்று.

பயிர்ப்பு: பெண்களுக்கியல்பாகிய ஓர் அருவருப்பான கூசுதல் உணர்வு.

அறவொடுங்கிய: முழுதும் இலை யெனும்படி ஒடுங்குதலுற்ற.

மணவாத ஒருவன் தன் உறுப்புகளைப் புகழ்ந்துரைக்கையில் கூசுதலின்றி அருவருவப்படையாது அன்று கேட்டுக் கொண்டிருந்தனை! இன்று நீ உலகின் முன் கூசுதலை யுடையையாய் அருவருப்படையப் பெற்றனை.

என்றிவை வழி: என்றிந் நான்கு வழியிலும்.

அவன் பால் செல்லுமுன் பழிசேருவதுபற்றிய அச்சத்தையும் இளமைத் துடிப்பால் மடப்பத்தையும், அவன்பால் பழகுமுன் நாணத்தையும் அவனொடு பழகுகையில் பயிர்ப்பாகிய கூசுதலையும் தவிர்த்த இந் நான்கு பிழைகளையும் முறையே செய்திராமல் இருப்பின், இக்கால் பொலிவிழந்து நீ வருந்தல் வேண்டியிராது என்றனள் என்க. இவை நான்கும் பெண் ஒருத்திக்கு இருக்க வேண்டிய அருமையுடைத் தான செல்வம் ஆகலின் அவற்றைத் துறந்தார் பெறுவது துன்பமே என்றாள் என்க.

நத்துதல் : விரும்பி நுகர்தல்.

நின் பெண்மை நலத்தை நீயே விரும்பி அவன் நுகருமாறு தந்தனை. இந் நிலை இரங்குதற் குரியதன்று நகைத்தற் குரியதாம். வெறும் நகையன்று பெரும் நகையாகும் என்றது காண்க. இனி, இத்தகைய பிழைபாடுகள் பெண்டிர்க்கு வழிவழி வந்தும் இன்னும் அவர்பால் அவ் வொழுக்கக் கடப்பாடுகள் இல்லாம லிருத்தல் முதுபெரும் நகை விளைவித்தது என்றாள். இனி, இந் நகை மகிழ்ச்சியான் வருவதன்றி, சினத்தானும் அவருவருப்பானும் வருதலால் வெம்முது பெருநகை என்று மொழிந்தனள் என்க.

வெம்முது பெருநகை: வெப்பஞ் சான்று முதுமையுற்ற பெருத்த நகை.

பெண்டிர் யாவரும் தமக்கியல்பாகிய அச்சத்தையும், மடப்பத்தையும், நாணத்தையும், பயிர்ப்பையும் தமக்குற்ற அருஞ் செல்வமாகக் கருதல் வேண்டும் என்றும், இளமைப் பருவமுற்ற பெண்டிரோ அவற்றைத் தம் பெருமைக்குரிய பண்புகளாகவும் உயிராகவும் கைக் கொள்ளுதல் வேண்டும் என்றும், அவ்வாறு கடைப்பிடியா விடத்து வருகின்ற இழிவும் இழுக்கும் தம்மைப் பெரிதும் துயர்ப்படுத்தும் என்றும், அத் துயர் பிறரை இரங்கச் செய்யாது எள்ளி நகைக்க இடந் தரும் என்றும், இவையே இளமை மடவோர்க்கு ஏமம் வேண்டி, அறவோர் கொளுத்திய அறவுரை என்றும் இப்பாட்டான் விளக்கப் பெற்றது.

இது குறிஞ்சி யென் திணையும், வரையா வொழுக்கத்து ஊரவர் கண்டழுங்குங் தலைமகட்குத் தலைவன் செவிப்படுப்பத்தோழி அறிவுறீயது என் துறையுமாகும்.