உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/ஈகமன்றோ ஈகம்

விக்கிமூலம் இலிருந்து
66 ஈக மன்றோ ஈகம்


மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட

ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும்

5

மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்

ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை -
தன்னையும் இழந்து தமரையும் இழந்த

அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி

10

‘தானு'வென் பெயரினள் தன்னினம் அழித்த

வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே!

பொழிப்பு :

தன்னுடைய மானத்தையும் உயிரையும் வாழ்க்கையையும் காத்துக் கொள்ளக் கருதி, வானத்தையும் நிலத்தையும் நீரையும் கடந்து (வெளிநாடு ஏகியும், (அவ்வாறு ஏகவியலாதவர்கள் அங்கேயே உள்ள காடுகளில் புகுந்து (ஒளிந்து)ம் போராட்டக் களத்தில் (சிக்கிச்) சிதைந்தும் உயிரிழந்தும், அவரவரும், அவரவர் குடும்ப உறுப்பினர்களும், அவர்களின் இனமக்களும் இடர்கள் படுகின்ற, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்டிர்களும், மாண்டு போவதும், (ஊர் ஊராக, நாடு நாடாக ஏதிலிகளாகத்) திரிவதும் ஆகிய நிலைகளைக் கொண்டுள்ள ஈழத்தில் உள்ள தமிழர்களின் நடுவே பிறந்து தோன்றி, வயிரம் போன்ற (உறுதியான) நெஞ்சுடைய, கன்னிப் பருவத்தின் இளமை மொட்டுப் போன்றவளும், தன்னையும் (கற்பளவில்) இழந்தும்,தன் குடும்பத்தினரையும் உறவினரையும் சாவளவில் இழந்தும் விட்ட - தாய்மைக் குலத்தில் தோன்றிய அறவுணர்வு கூர்தலுற்று மறவுணர்வாய் நின்ற மறத்தியும்-ஆகிய தானு'என்னும் பெயரை உடையவள். தன் இனமாகிய தமிழினத்தை அழித்து வரும் வீணான ஆட்சியைச் செய்தவனாகிய இராசீவுக்கு எதிராக, வெகுண்டெழுந்த (வெப்பம் மிகுந்த பழிவாங்கத்தக்க) கடுஞ்சினம் தன் நெஞ்சத்திலும், உயிரிலும் (கலந்து) நிலைத்துவிட்ட மாறாத எண்ணத்தொடு, தான் ஒருத்தியே தனித்து நின்றாளாகி, ஊர்மக்களுக்கு நடுவில் அவனைச் சிதைத் தழித்துத் தன்னையும் இழந்து நின்ற ஈகமன்றோ (மற்ற எல்லா நிலையிலும் பிறர் செய்த ஈகங்களை விடச் சிறந்த) ஈகமாகும்! இவ்வகையில் அவள் பெற்ற அழிவிலாத புகழ்க்கு இவ்வுலகமே ஈடு ஆகுமோ? (ஆகாது என்க.)

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. தமிழீழத்தில் நிகழ்ந்து வருகின்ற விடுதலைப் போராட்டக் காலத்து இடையில் நிகழ்ந்த, இந்தியாவின் தலைமையமைச்சராகவிருந்த இராசீவ் என்ற இந்திராவின் மகனும், சவகர்லால் நேருவின் பெயரனும், இலங்கைத் தமிழர்களினின்று தோன்றி, இராசீவ் இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை என்ற தமிழின அழிவுப் படையால் தாக்குண்ட தானு என்ற ஒர் இளம் பெண் தன் உடலிற் பிணித்த வெடிகுண்டுடன் நெருங்கி மோதி அழிக்கவும் அழியவும் பட்ட அளவிடற்கரிய ஈகச் சாவைப் போற்றிப் புகழ்ந்து கூறியதாகும் இப்பாடல்.

தானு என்னும் பெயரினள், தன்னினம் அழித்த வீணனாகிய இராசீவுக்கு எதிராக வெகுண்டு எழுந்து, இலங்கையினின்று தமிழகம் போந்து, தனி ஒருத்தியாக, ஊர்மக்கள் நடுவில் நின்று வெடிகுண்டு பிணித்த உடம்புடன் அவனை மோதியழித்தலால், தானும் தன் இன்னிளவுயிர் நீத்துக் கொண்ட ஈகமறம், வேறெந்த ஈகத்தினும் தனிச்சிறப்பும் பெருமையும் கொண்டது ஆகலின் அது அழிவிலாப் புகழ் பெற்றது என்க.

இப்பாட்டு நான்கு வேறான செயற்படி நிலைகளைக் கொண்டது. ஆனாலும் நான்கு செயல்களும் படிப்படியே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது.

முதலது, தமிழீழத்தில் இனத்தாக்கம் நேர்ந்து, சிங்கள இனத்தாலும், இராசீவ் இந்தியாவினின்று அமைதிப்படை என்னும் பெயரால் அனுப்பி வைத்த அழிம்புப் படையாலும் தாக்கமுற்ற தமிழீழத் தமிழர், அது பொறாது, தங்களின் மானத்தையும் உயிரையும் வாழ்வையும் காத்துக்கொள்ள வேண்டி, வானூர்தி வழி வானையும், இயங்கிகள் வழி நிலத்தையும், கப்பல் வழிக்கடலையும் கடந்து வெளிநாடுகளுக்கு ஏகியதும்,

இரண்டது, அவ்வாறு வெளிநாடு ஏகுவதற்கியலாத தமிழ மக்கள், அங்குள்ள கானகங்களில் புகுந்து ஒளிந்து வாழ்தலும், இளவோராக உள்ள பல்லாயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் விடுதலைப் போராளிகளுடன் போராட்டக் களத்தில் விரும்பியோ விரும்பாமலோ, போரில் ஈடுபட்டு, உடல்கள் சிதைதலும் உயிர்கள் சிதைதலும் ஆகி இடர் படுதலும்,

மூன்றது, அவ்வாறு இடர்ப்பாடுற்ற குடும்பங்கள் ஒன்றினைச் சேர்ந்த தானு’ என்னும் ஒரு கழி இளம்பெண், அங்குள்ள படையினரால் கற்பிழந்தும், அவர் குடும்பத்தினர் அழிந்து பட்டதும்,

நான்கது, அவ்விடர்ப்பட்ட தானு, அறவுணர்வு தழுவிய மறவுணர்வு கொண்டு, தானும் தன் குடும்பும் இனமும் தாக்குண்ட கொடுமை பொறாதவளாகி, வெகுண்டு அவற்றுக்கெல்லாம் காரணனாகிய இராசீவ் என்னும் வீணனை அழித்தொழிக்கும் உள்ளத்தினும் உயிரினும் நிலைத்த பழிவாங்கும் கடுஞ்சினத்துடன் இந்தியா வந்து, தமிழகத்தில் சுற்றுச் செலவு மேற்கொண்டிருந்த இராசீவை, தன் உடலில் வெடிகுண்டு பொதிந்திருக்க நெருங்கி மோதி, மக்களெல்லாம் கூடியிருந்த கூட்டத்தின் நடுவில், அழித்தும் அழிவுண்டும் மாய்ந்ததும் -

- ஆகிய நான்கு செயல்களையும் உள்ளடக்கிக் கூறியதாகும் இப்பாடல்.

இந் நான்கு செயல்களும் ஒன்றின் ஒன்று அவலம் மிகுந்தது. இறுதிச் செயலாகிய தானுவின் தன்னழிவு மறம், கொடியன் ஒருவனை அழித்ததோடு தொடர்பு கொண்டதாகலின் ஈகவுணர்வால் பொருந்திய புகழ் கொண்டது. அதனால் உலகை ஈடு கொள்ளாப் பெருமை சான்றது.

இதில், தானு வென்னும் வீரத் தமிழ்ப்பெண், காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை என்றும், அன்னைக்குக் குலத்து ஒர் அறங்கூர் மறத்தி என்றும், புகழப்பெறுவது, அவளின் இளம் பருவத்தையும், முது செயலையும் இணைத்துப் பார்த்துப் பெருமை சாற்றுவது.

ஒரு தனி நின்றே ஊர்நடு சிதைத்த ஈகம்'என்னும் தொடருள் வரும், ஒரு தனி என்பது, அவள் தனித்து நின்ற செம்மாப்பையும், ஊர் நடு சிதைத்த’ என்பது, யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அன்றி எல்லார்க்கும் முன்னழித்த செந்துணிவையும், ஈகம்’ என்பது, அவள் உலக வெறுக்கையையும் கூறி, அவள் மனவுணர்வையும், இனவுணர்வையும், கொள்கை நிலையையும், இளமைப் பருவத்தையும் ஒருங்கே புலப்படுத்தி வீரத்தையும் அவலத்தையும் இணைத்துக் கூறியது என்க!

மானமும் உயிரும் வாழ்வும் கருதி - தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே, அங்குள்ள தமிழ்ப் பொது மக்களுக்குப் பலவகையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன: ஏற்பட்டு வருகின்றன.

அத் தாக்கங்களால் தொடர்ந்து உயிரழிவுகள் நேர்ந்து வருகின்றன. அவர்களின் வாழ்க்கை நலன்களும் சீரழிக்கப்படுகின்றன. குடியிருப்புகள் தீ வைத்துக் கொளுத்தப்படுகின்றன். சொத்துகள் கொள்ளை யடிக்கப்படு கின்றன. பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதில் சிறுமியர், இளம் பெண்கள், திருமணம் ஆன மங்கையர், கருவுற்ற தாய்மார்கள், முதுஇளம் பெண்டிர்கள் என்னும் வேறுபாடுகள் இல்லை : பாலியல் தாக்கங்களுக்குப் பின்னர் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இவற்றைத் தடுக்க முயற்சி செய்யும் ஆடவர்கள் வெட்டிக் கொல்லப்படுகின்றனர். இளைஞர்கள் அனைவருமே போராளிகள் அல்லது போராளிகளாக மாறக்கூடியவர்கள் என்னும் கருத்தில் படைத்துறைத் தங்கில்(முகாம்)களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு அங்குள்ள தமிழர்களுக்கு மான அழிவும் உயிரழிவும் வாழ்வுச் சிதைவும் ஏற்படுவதால், அவற்றினின்று தங்களைக் காத்துக் கொள்ளக் கருதி, அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டியவர்களாக ஆகுகின்றனர்.

வானமும் நிலமும் நீரும் கடந்து - எனவே, தமிழர்கள் வானூர்தி வழியாக வான் எல்லையைக் கடந்தும், இயங்கிகள் பேருந்துகள் வழியாகவும், நடந்தும் தாக்கம் ஏற்படுகின்ற நிலப் பகுதியினின்று வேற்றிடங்களுக்குப் பெயர்ந்தும், கப்பல் வழியாகக் கடல் எல்லையைக் கடந்தும் அயல் நாடுகளுக்குச் செல்கின்றனர்.

கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து-அவ்வாறு செல்ல இயலாதவர்கள், நகரங்களில் நேரும் தாக்கங்களுக்கு அஞ்சித் தங்களைக் காத்துக் கொள்ளக் காடுகளில் ஒடி ஒளிந்து கொள்கின்றனர். அவர்களில் இளைஞர்களாகவும் ஆடவர்களாகவும் உள்ளவர்கள் போராளிகளுடன் சேர்ந்து, போராட்டக் களங்களிலும் சென்று சிதைபடுகின்றனர். நெரிந்து - நெருக்குண்டு - சிதைபட்டு உறுப்புகள் இழந்து உயிரிழந்து.

தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட- இவ்வகையில் அங்குள்ள தமிழர்களில் ஒவ்வொருவரும், அவர் அவர் குடும்பங்களும் இனமும் பலவகையிலும் இடர்ப்பாடுகள் எய்த

ஆயிரம் - ஈழத்தமிழர் - பல ஆயிரக்கணக்கில் இளைஞர்களும் பெண்டிரும், இவ்வாறு உலகம் முழுவதும் போய் ஏதிலியர்களாக நாடு நாடாகத் திரிந்து வருவதும், பல நிலைகளில் மாய்ந்து போவதும் ஆகிய நிலைகளில் உள்ள ஈழத் தமிழர்கள்.

இடையினில் தோன்றி - அவர்களில் தானும் ஒருத்தியாகத் தோன்றி.

காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை - வயிரம் போல் உறுதியான நெஞ்சுடைய, கன்னிப் பருவத்தின் மலர வேண்டிய, இளமை சான்ற மொட்டுப் போன்றவள்.

தன்னையும் இழந்து - இராசீவ் அனுப்பிய படைத்துறையினரால் தன் பெருமையை இழந்து - சீர்குலைவுவற்று.

தமரையும் இழந்த- தன் பெற்றோரையும் உற்றாரையும் அக்காவல் படையினரால் இழந்த, தமர்தம்மவர் பெற்றோரும் உற்றாரும். தானுவின் குடும்பத்தவர்கள் இந்திய அமைதிப் படையினரால் அழிக் கப்பட்டனர். தானுவும் அவர்களால் கொடுமையாகக் கற்பழிக்கப்பட்டவள். இந்தக் கொடுஞ் செயல்கள் தாம் அவளைப் பழிவாங்கும் உணர்வுக்குத் தள்ளின. எனின் அது மிகையாகாது.

அமைதிப் படையினர் இவ்வாறு தனக்கும் தன் குடும்பத்தினர்க்கும் மட்டுமல்லாமல் பல நூறு குடும்பங்களுக்கும் தீங்கு செய்தது, தானுவால் பொறுத்துக்கொள்ள முடியாத வல்லுணர்வை அவளுக்குத் தந்திருக்க வேண்டும்.

தன் உற்றார் உறவினர் உயிர் அழிவிற்கும், தன்னுடைய மான அழிவிற்கும், அமைதிப் படையினர் காரணமானவர்களாக இருந்தாலும், அவர்களைப் பழிவாங்குவது தனக்கு இயலாது எனக் கண்டாள், தானு. எனவே, அவர்களைத் தமிழீழத்திற்கு அனுப்பி வைத்து, இந்நிலையை உருவாக்கிய இந்தியத் தலைமையமைச்சர் இராசீவே முழுவதும் பழிவாங்கத்தக்கவர் என, தானு உறுதி கொண்டிருக்க வேண்டும்.

தனக்கு மட்டும் நேர்ந்த துன்பமாக இதைக் கருதாமல், தன்னைப் போல் உள்ள பலர்க்குமே நேர்ந்த துன்பமாக அவள் கருதியது அவளின் தாய்மை உணர்வை நினைவு கூர்வதற்கு உதவியது; எனவே, அவள் அன்னைக் குலத்தைச் சேர்ந்தவள் என்று நினைவு கூரவேண்டுவதாயிற்று.

அன்னைக் குலத்து ஒர் அறங்கூர் மறத்தி - பிறர் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் சிறப்புப் பெற்ற) தாய்மைக் குலத்துத் தோன்றிய, அறவுணர்வுகூர்தலுற்றுப் படிநிலை வளர்ச்சி பெற்று மறவுணர்வாக முதிர்ந்து நின்ற ஒரு மறத்தியாகிய தானு.

அறம்- மாந்தவுணர்வின் முதிர்ச்சியுற்ற பண்பாடு. மறம்.துணிவின் முதிர்ச்சி. இந்த இரண்டு உணர்வுகளும் மாந்த உயிரியக்கத்தின் ஆக்கத்திற்காகப் பயன் தருவன ஆகையால், இயற்கை உணர்வுகளாம். மறம் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

முரண்பாட்டுணர்வாக முகிழ்த்து, எதிர்ப்புணர்வாக வளர்ந்து, வீரவுணர்வாக மறுமலர்ச்சியுற்று, மறவுணர்வாக முதிர்வடைவது, மறத்தின் படிநிலை வளர்ச்சி. முதலிரு உணர்வுகளும் ஐயறிவுத் திணைகளுக்கும், இறுதியிரண்டு மட்டுமே ஆறறிவு மாந்தர்களுக்கும் உரியனவாக இருக்கின்றன.

வீரம், அறவுணர்வுடன் இணைந்து இயங்கும் பொழுது மறமாக விளங்கித் தோன்றுகிறது. இனி, அறவுணர்வே படிநிலை வளர்ச்சியுற்று மறமாக மாறுவதுண்டு. அக்கால் அவ்வுணர்வு செயற்கரிய வீரச் செயல்களைச் செய்யும். போர்க்களத்தில் வீரர்கள் ஒருவர்கொருவர் பொருந்திக் கொள்வது வீரவுணர்வாகவே கொள்ளப் பெறும் அறங் கலந்த வீரமே மறம் என்பதைத் திருவள்ளுவரும் ஒப்புவர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. -76

அன்பும் பண்பு வினையுமே அறம் ஆகையால், மறவுணர்வுக்கும் அன்பு அடிப்படையாக உள்ளது.

தானு, தன்இன மக்கள்மேல் வைத்த அன்பு தொண்டுணர்வாக (அறவுணர்வாக) மலர்தலுற்றுத் துணிவுற்று, வீரமாகி, மறவுணர்வாகக் காழ்த்து, தன் இனத்துக்குத் தீங்குசெய்த இராசீவை ஒழித்துக் க்ட்டுமளவிற்குச் செயலுருவம் கொண்டது என்க.

அறவுணர்வு கூர்தலுற்று (பரிணாமம் உற்று) மறவுணர்வாகக் காழ்த்து நின்றதால், தானு அறங்கூர் மறத்தி எனப்பெற்றாள்.

அவள் இராசீவைக் குண்டால் தகர்த்தது கொடுமை என்று தமிழின எதிரிகள் கூறுவது வரலாறு தெரியா வெறுங்கூற்றாகும். அஃது ஒர் அறமான செயலே அவன் செய்த கொலை அறவுணர்வு பொங்கியெழுந்து மறமாகி நின்று, செயல் கொண்டதன் விளைவாகும். அது தவறோ தண்டனைக்குரிய குற்றமோ அன்று. அவள் பின்னர்ச் செய்யப்போகும் இராசீவ் அழிவுக்கு முன்னர்க் கூறிய அமைவாக நிற்பது அறங்கூர் மறத்தி சொற்றொடராகும்.

தானு வென் பெயரினள் -தானு என்னும் பெயரை உடையவள். தானு என்னும் சமற்கிருதச் சொல்லுக்குக் காற்று, வெற்றியுடையவர் என்பன பொருளாம்.

தன்னினம் அழித்த வீணன் - தானுவின் இனமாகிய ஈழத்தமிழினத்தை அழித்திடச் செய்த வீணான செயலைச் செய்தவன் என்பது ஒரு பொருள்; இன்னொரு பொருள், வீழப்போகிறவன் (வீழ்நன்-வீணன்), ஒ. நோ. வாழ்நன்- வாணன்), என்பது இச்சொல் தானுவால் வீழ்ந்து அழிந்தவன் என்னும் பொருளையும் முற்காட்டித் தந்தது என்க. இராசீவின் பெயரைக் குறிப்பிட விரும்பாமல் வீணன் என்றது, அவரது கொடிய தன்மையினால் என்க.

விணனுக் கெதிரா வெகுண்ட் வெஞ்சினம் - அந்த இராசீவ் என்னும் வீனனுக்கு எதிராக தானு வெகுண்டு எழுச்சி கொண்ட கடுஞ்சினம்; வெகுளுதல் இயல்பான சினம்; வெஞ்சினம் வெம்மையான சினம்; அழிவை உண்டாக்குவது ஆகலின் வெப்பம் சுட்டப்பெற்றது.

நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு - (உடலுறுப்பாகிய) நெஞ்சாங்குலையும், மூல உறுப்பாகிய உயிரியக்கத்திலும் நிலைப்புட்டு விட்ட அழிக்க முடியாத நினைவுடன் என்னை? நெஞ்சின் நினைவாக நிற்கும் ஓர் உணர்வு, ஒரு கால் மறந்து போதற்குரிய தாகலின், நெஞ்சில் பற்றிய வெஞ்சினம், பழிதீர்க்கும் வஞ்சினமாகி, உயிருணர்விலும் பற்றி நிலைகொண்டு விட்டது என்க. நெஞ்சில் வெஞ்சினமாகி நிலைகொண்ட வஞ்சினம் , செயற்பட்டுப் பழிதீர்க்கப்படுமுன், ஒருகால் தானுவின் உடல்வேறு வகையில் அழிவுற்று, அத்துடன் அந்நினைவைத் தாங்கிய நெஞ்சாங்குலையும் அழிந்துபடின், அவ்வஞ்சினம் செயல்படாமலே அழிந்து விடக்கூடுமன்றோ? அதன்பின் அவள் கொண்ட வெஞ்சினத்தால் பயனேதும் இல்லையாகின்றதன்றோ? அவ்வாறு இறப்பு ஒருகால் நேர்ந்துவிடின் உடலும், அதன் வழி நெஞ்சாங்குலையும், அதன் வழி அதனுள்ளிருக்கும் இராசீவ் என்னும் கொடியவனை அழிக்க வேண்டும்’ என்ற நினைவும் அழிந்து விட்டாலும் அப்பழிவாங்கும் வஞ்சின உணர்வு உயிரிலும் போய் நிலைத்திருப்பதால், அவ்வுயிர் மீண்டும் பிறவியுற்று, அந்நினைவு அழியாமல், அஃது எடுக்கின்ற மறு உடலுடன், இவ்வுலகத்து இயங்கி, அதே இராசீவைப் பழிவாங்கும் என்பதால் அந்நினைவு உயிரிலும் நிலைத்தது என்று கூறவேண்டியிருந்தது என்க. -

ஒரு தனி நின்றே - தானு (துணையாள்கள் யாருமில்லாமல்) தான் ஒருத்தியாகவே (முயன்று) நின்று.

ஒரு சிறுசெயலுக்கும், பெரும்பாலார்க்கு ஒரு துணை தேவையாக உள்ளது. துணையோ டல்லது நெடுவழி பேர்கேல்’ என்று சான்றோரும் கூறினர். ஆனாலும், ஒரு படையாகப் போய்த் தாக்கி அழிக்க வேண்டிய வலிமை வாய்ந்த அரசராக நின்ற ஒருவரைத் தான் ஒருத்தியாகவே நின்று அழித்த துணிவையும் வீரத்தையும் வியந்து பாராட்டிக் கூறியது என்க.

ஊர்நடு சிதைத்த (வேறு எங்காவது சந்திலோ பொந்திலோ, அறையிலோ, சிறையிலோ அல்லாமல்) ஊர்மக்களும் காவலரும் கூடியிருந்த பெருங்கூட்டத்தின் நட்ட நடுவில் எதிரியைச் சிதைத்த, சிதைத்தல்-உருவே தெரியாமல் சிதையச் செய்தல்.

தானு, தன் இனத்திற்கு அழிவைத் தேடும் கொடியவன் இராசீவை ஒழித்திட வெஞ்சினம் கொண்டு, இலங்கையிலினின்று இந்தியா வந்து, தமிழகத்திற்கு வந்த அவரை, தனித்த ஒருத்தியாக முன் நின்று ஊர் மக்களும், காவலர்களும் நிரம்பியிருந்த பெருங் கூட்டத்திற்கு நடுவில், தன் உடலில் வெடிகுண்டைப் பிணித்துக் கொண்டு, அவரை அணுகிக் குண்டை வெடிக்கச் செய்து, இராசீவை அழித்ததோடின்றித் தன்னையும் அழித்துக்கொண்டாள்; இது வெறும் வெறியுணர்வால் வரும் செயலன்று மிகப்பெரும் ஈகவுணர்வால்தான் இவ்வாறு செய்தற்கியலும், தானும் அழியப் போகிறோம் என்று ஒர் இன்றியமையாத செயலில் ஈடுபடும் செயல், குறைத்து மதிப்பிடற்குரிய செயலன்று, அது செயற்கரிய ஈகச் செயலே.

போர்க்கள்த்தில் தன் நாட்டுக்காக உயிர் துறக்கும் ஒருவர், உயிர் துறப்பது உறுதி என்று எண்ணிக் கொண்டு போவதில்லை. ஆனாலும் அது வீரமென்றும் ஈகமென்றும் போற்றப் பெறுகின்றது. ஆனால் தானுவோ தான் செய்யப் போகின்ற செயலால் தன் உயிர் போவது உறுதி என்று நன்றாகத் தெரிந்தே அச்செயற்கரும் செயலைச் செய்தவள் ஆகின்றாள். எனவே, உலகத்தில் இத்தகைய ஈகம் பெரிதும் புகழுக்குரியதாகும்.

ஈகம் அன்றோ ஈகம் - இத்தகைய ஈகம் (தியாகம்) அன்றோ ஈகம் இச்செயல்தான் தன் இனமக்களைக் காக்கதன் உயிரை ஈதல், பிறிதெல்லாம் உயிரை இழத்தல், இழத்தல் ஈகமாகாது. அதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதில் விரும்பியே உயிரிழத்தலால் இவ்வகை ஈகம் பிற வகை ஈகங்கள் அனைத்திலும் பெரிதாகும் என்று உணர்தல் வேண்டும்.

ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே- இவ்வாறான அருஞ் செயல் செய்து, ஈகத்தின் வடிவமாக இருந்து, தானு என்னும் இலங்கைத் தமிழ்ப்பெண் பெற்ற அழிவில்லாத புகழ்க்கு இவ்வுலகே ஈடாகாது என்க.

உலகம் ஈடாகாது என்பது, உலகின் புகழ்த் தன்மையை நோக்கி என்க.

உலகம் பெரும் புகழுடையது; நிலைத்த புகழுடையது. ஏனெனில் உலகில் உள்ள பொருள்கள்; உயிர்கள் அனைத்தும் அழிந்த பின்னர்தான் உலகம் அழிதரும்எல்லாம் அழிந்தும் தான். இருக்கின்ற பெருமை புகழ்இவ்வுலகத்திற் குண்டு என்பார் திருவள்ளுவப் பேராசான் (336). அதனால் அனைத்துப் புகழினும் உலகே நிலைத்த புகழுடையது.இறுதி உயிர் அல்லது மாந்தன் அழியும் வரை உலகின் புகழ் நிலைத்திருக்கும்.

ஆனால், தானுவின் ஈகம், உலகின் நிலைத்த புகழினும் நிலைத்த புகழுடையது. அஃதாவது உலகம் உள்ளளவும் தானுவின் புகழ் நின்று இலங்கும் என்பது உறுதியால் அவள் புகழ்க்கு அவ்வுலகின் புகழும் ஈடாகாது எனப் பெற்றது என்க.

இனி, நேற்றிருந்த ஒருவர் இன்றில்லை என்னும் பெருமையை இவ்வுலகம் உடையது அன்றோ. அக்கூற்றுக்கு ஏற்ப, நெருநல் இருந்த இராசீவ் போல் பெருமை பெற்ற ஒருவர், மறுநாள் இல்லாமற்போன தனிப் பெருமையை இவ்வுலகம் பெறுமானால் அப்பெருமையை உலகிற்கு உண்டாகிக் கொடுத்தவள் தானு அன்றோ? தமிழினத்தை அழித்தவனை அழித்துத்தானு பெற்ற புகழ் உலகின் உள்ள தமிழரெல்லாரும் ஒப்பத் தகுந்த பெருமை வாய்ந்தது என்க.

அரசியல் உலகில், பலவகையான சூழ்ச்சிகள் செய்தும், மக்கள் பணத்தைத் தவறாகக் கொள்ளையிட்ட பெரும் பொருளைச் செலவிட்டும், சாதி மேலாண்மையாலும், மத மேலாண்மையாலும் இந்திய ஆட்சியின் உயர் பதவியில் அமர்ந்து, தமக்கு வேறான மாறான தமிழினத்தை அடியோடு ஒழிக்கக் கருதிப் பல அழிவுகளையும் அழிம்புகளையும் செய்து கொண்டிருந்த இராசீவ் என்னும் அறக்கொடியவர் ஒருவரை, அவரால் ஏவிவிடப் பெற்ற அமைதிப் படையினரால், தன்னினமும், தன் குடும்பமும், தானும், அழிவும் இழிவும் பட்ட கொடுந் துன்பத்தால் வீறு கொண்டு, பழிவாங்கும் அறஞ்சார்ந்த மறவுணர்வெழுச்சியுடன், தமிழகம் போந்து, தானே ஒருத்தியாய் நின்று தன்னுடலில் கடுமையான வெடிகுண்டு ஒன்றைப் பிணித்துக் கொண்டு, தற்கொலைப் படையுறுப்பாகித் திருப்பெரும்புதூரில் 1991 மே மாதம் 21-இல் நடந்த தேர்தல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த அவரை நெருங்கிக் குண்டை வெடிப்பித்து, அவரையும் சிதைவுறச் செய்து, தானும் உயிரழிந்து போன, பெருந்தமிழ் மறத்தி, இன மீட்புக் கருதித் தன் வாழ்வையே இழந்து கொண்ட வீராங்கனைதானு என்னும் தமிழீழத்தைச் சார்ந்த இளம் பெண்ணின் ஒப்பிடற் கரிய ஈகதியாகத்தைப் புகழ்ந்து பாடியதாகும் இப்பாடல்.

இது, மூதின்முல்லை என் திணையும் அறங்கூர் மறம் என்துறையுமாம். துறை புதியது.