உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/யாவர் காக்கும்

விக்கிமூலம் இலிருந்து
62. யாவர் காக்கும்


எம்மையுங் காவார்; தம்மையுங் காவார்;
கொம்மைப் பருவத்துச் சின்னாட் கூடவில்
நினக்கியான் பயந்தநின் மகாரையுங் காவார்;
முகில்படு முன்றில் முக்கொடி நிறுத்தி

அகல்நெடுங் கொற்றத்து அரசாண் டிருந்த

5

ஒருமா முதுமொழித் திருவையுங் காவார்;

வடவர் ஊன்றிய தமிழ்மா நன்னிலம்
கெடாஅது நிறுத்துஞ் சிறாரையுங் காவார்
செற்றலர் எதிரின் கிளையோடு பொருதும்

அற்றைநாள் தமிழரைப் போலா திழிந்த

10

இற்றைநாள் மாக்களை அறிந்தும் எமைவிடுத்து

யாவர் காக்குமென் றெண்ணித்
தீப்புகுந் தாவி துறந்தனை நீயே!

பொழிப்பு:

(உண்டியும் உறையுளுங் கொடுத்துக் காக்கவேண்டிய கடமை கொண்ட நீ போயின. பின்றை, இதோ தனித்து நிற்கும்) என்னையும் என் னோடு பொருந்தியவரையும் காத்து நிற்கார் : (அடிமையும் அறியாமையும் பட்டு நிற்கும்) தங்களையும் காத்துக் கொள்ளார்; இளமைப் பருவத்தின் பொழுதில், சில நாள்கள் நின்னைக் கூடியதன் பயனாக, நின்வழி, நான் பிறப்பித்த நின்னுடைய மக்களையும் காத்து நிற்றலைச் செய்யார், வானின் முகிலிடைத் தோயும்படி, அரசமனை முன்றிவில் மூவேந்தர் நாட்டிய மூன்று கொடிகள் நிறுத்தப்பெற்றிருந்த, அகலிய நீண்ட ஆட்சியமைத்து, அரசாண்டு கொண்டிருந்த, உலகின் ஒரே பெரிய முதுமொழியாகிய தமிழ்ச்செல்வியையும் இவர்கள் காக்கும் திறமுடையவர்கள் அல்லர் வடநாட்டினர் வந்து புகுந்து பெயராமல் நிற்கும் தமிழகம் ஆகிய பெரிய நல்ல நாட்டையும், படிப்படியாகச் சிதைந்து போதலினின்று அது கெடாமல் காத்தற்குப் போராடிக் கொண்டிருக்கும் (இந்திப் போராட்ட) இளைஞர்களையும் (அவர்களுக்கு வந்து நேரும் துன்பங்களினின்று) காத்து நிற்க முயற்சி செய்ய மாட்டார். பகைவர்கள் வந்து போருக்கு எதிர்ந்து நிற்பின், தம் இனத்தொடும் எழுந்து முன்நின்று போர் செய்யும் திறம் வாய்ந்த அன்றைய நாளில் இருந்த தமிழ் மறவர்களைப் போல் அல்லாமல், (மானத்தும் மறந்தும் தாழ்ந்து அடிமைப்பட்டுக் கிடக்கும்) இன்றைய நாள் (தமிழுணர்வு திரிந்த) பெருமை குன்றிய மக்களது (இனவுணர்வற்ற) தன்மையை நீ அறிந்திருந்தும் எங்களை (இவர்களிடையில்) தமியராக விட்டு விட்டு, வேறு எவர் வந்து காப்பார்கள் என்று எண்ணங்கொண்டு நீ, நெய்யால் ஊட்டப் பெற்ற தீயினுள் புகுந்து உன்னுடைய உயிரைத் துறந்தனையோ?(அறியக் கூடவில்லையே!)

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும், முன்னைய பாடலில் பாடப்பெற்ற, தீப்புகுந்து ஆவி துறந்த விருகம்பாக்கத்து அரங்கநாதனைத் தம் மூன்று மக்களொடும் சூழ்ந்து நின்ற மனைவி அரற்றிப் பாடியது.

எம்மை - என்றது, அவள் தன்னையும் தன்னைச் சார்ந்த பெற்றோர் முதலியரையும் சுட்டியது.

தம்மை - என்றது தமிழின மக்களை.

கொம்மைப் பருவம் - அழகும், நலமும், வலிமையும் சான்ற இளமைப் பருவம்.

சின்னாள் கூடல் - குறைந்த காலமே கூடியிருந்த இளமை வாழ்வைச் சுட்டியது. குறைந்த கால இளமை வாழ்வில்.

நினக்கு யான் பயந்த நின்மகார்- நின்னால் கருப்பெற்ற யான் ஈன்றளித்த நின் மூன்று குழந்தைகள்.

முகில்படு முன்றில் - வானில் தோய்ந்த முகிலிடையில் தடவி நின்ற அரசமனை முன் கோபுரத்தில்

முக்கொடி நிறுத்தி -சேர, சோழ, பாண்டியரின் வில், புலி, கயல் ஆகிய மூன்று கொடிகளையும் நிறுத்தி.

அகல் நெடுங் கொற்றத்து - அகன்று நீண்டிருந்த ஆட்சி எல்லையில்.

அரசாண்டிருந்த- ஆட்சி செய்து கொண்டிருந்த,

ஒருமா முதுமொழித் திரு- உலகின் ஒருபெரும் முதுமை மொழியாகிய தமிழ் என்னும் செல்வி. -

திருவையும் காவார் -. அத்தமிழ் ஆகிய செல்வியையும் காவாத பற்றும் ஆக்கவுணர்வும் அற்றவர்.

வடவர் ஊன்றிய தமிழ்மாநன்னிலம் -வடநாட்டு ஆரியர் முதலியர் வந்து நிலைப்பட்டுவிட்ட தமிழ் நாடாகிய நல்ல நிலம் கெடா அது நிறுத்தும் சிறார் - தமிழ்நாட்டை அகப்புற அழிவுகளால் சிதைந்து போய்விடாமல், அதன் பெருமையைக் காத்து நிற்கும் இந்திப் போராட்ட இளைஞர்.

இந்திப் போராட்டக் காலத்து இது நடந்தமையாலும், அப் போராட்டதுடன் தன் தானும் ஒருவனாய் நின்று, இவன் உயிர்துறந்தது நிகழ்ந்தமையாலும், ஈண்டுச் சிறார் என்றது இந்திப் போராட்ட இளைஞரைக் குறித்தது.

செற்றலர் எதிரின் கிளையொடு பொருதும் அற்றைநாள் தமிழர் - பகைவர்கள் தமிழ்நாட்டின் மேற் போர் தொடுப்பாராகில், தமிழருள் நிலத்தால் வேறுபட்டிருந்த அனைத்துக் கிளையினரும் ஒன்றாய் இணைந்து, பகையை எதிர்த்துப் போராடும் இனவுணர்வு வாய்ந்த முன்னாளைய தமிழர்

போலாது இழிந்த- (அவர்களைப்) போல் அல்லாமல் அறியாமையாலும் அடிமைத் தன்மையாலும் தாழ்ந்து இழிந்து நிற்கின்ற.

இற்றைநாள்மாக்கள்-இன்றைய நாளில் உள்ள, இனநலனும், மனநலனும் மானநலனும் திரிந்த மக்களைப் போன்ற மாக்கள் - விலங்குகள்.

அறிந்தும் - தம் மொழி இன, நாட்டு நலன்களையே காத்துக் கொள்ளாமல் அடிமையாகிவிட்ட இவர்களா போராட்ட வீரன் ஒருவனின் பெண்டு பிள்ளைகளைக் காக்கப் போகிறார்கள். ; மாட்டார்கள்’ - என்பதை நீ அறிந்து கொண்டிருந்தும்.

எமை விடுத்து - எங்களைத் தமியராக இவர்களிடையில் விட்டு விட்டு.

யாவர் காக்குமென் றெண்ணி - இவர்கள் இனத்துக் குரியவராகிய எங்களை, இவர்களையன்றி, வேறு எந்த இனத்தவர் வந்து காக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்த்து.

திப்புகுந்து ஆவி துறந்தனை நீயே - கன்னெய்யால் கொளுவப் பெற்ற தீயினுள் நின்னுடலை அழியச் செய்து, ஆவியைத் துறந்து கொண்டினை, நீயே!

தமிழை மட்டுமே காக்கப் போராடிய நீ உன்னையே நம்பியிருக்கும் எங்களைத் தங்களையே காத்துக் கொள்ள இயலாத இவ்வினத்தாரிடையில் தமித்திருக்க விட்டுவிட்டு, நின் ஆவியை எரிப்புகுந்து மாய்த்துக் கொண்டனையே சொல், இனிமேல் எங்களைக் காப்பவர் யாவர்?’ என்று தன் மன இறுக்கத்தை அவிழ்த்து அவன் மனைவி அரற்றி அழுதாள்’ என்பதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும் துறையும் ஆம் என்க.

திணையும் துறையும் புதியன.