நூறாசிரியம்/கொள்கை முழக்கிய குரிசில்

விக்கிமூலம் இலிருந்து
61. கொள்கை முழக்கிய குரிசில்

இவளே,
பாரிய கூந்தல் புழுதி துவையத்
தலைதரை கிடத்தியும் எழுந்துமார் பெற்றியும்
செவ்விழி உகுநீர் நனைவாய் அரற்றியும்
எரியுண் மூங்கில் இணைகொடி யாகி
இனித்துணை யறியா இவனிள மனையே! 5
இவரே,
தந்தை கொள்கை தாமறி கல்லா
அன்னை அழுங்கல் ஆற்றுதல் அறியாது
எதிர்ந்த சூழலுக் கதிர்ந்த நெஞ்சொடு
விசித்தழா நின்ற இவன்மூ மகாரே! 10
இவனே,
வடவர் திணித்த வளரா மடமொழி
கடியத் துணிந்து காட்சியின் காட்ட
உடலந் தீக்கொள உயிர்தீந் தமிழ்க்கெனக்
கொள்கை முழக்கிய குரிசில் 15
விருகாம் பாக்கத்து அரங்க நாதனே!

பொழிப்புரை

(இவள் யார் என்குவீராயின்) இவளே, பரந்த கூந்தல் புழுதியில் தோயவும், தலையைத் தரையில் கிடத்தியும், பின் எழுந்து மார்பில் அடித்தும், சிவந்த விழிகளிலிருந்து உகுக்கின்ற கண்ணில் நனைகின்ற வாயால், அரற்றி அழுதும், எரியால் உண்ணப்படுகின்ற மூங்கிலைப் போல், நெய்யை ஊற்றிக் கொண்டு தீயால் பற்றியெறிந்து உண்ணப்படுகின்ற இவள் கணவன்மேல் இணைந்து பற்றியிருந்த கொடியாகி, இனிமேல் ஒரு துணையும் அறியாத இவனுடைய இளமை பொருந்திய மனைவி; இவனருகில் நிற்கின்ற) இவர்கள், தந்தையினது கொள்கை நெறியைத் தாங்கள் அறிய முடியாதவர்களாகத் தங்கள் அன்னையினது அழுகையையும், ஆற்றுகின்ற தன்மையும் அறியாமல், ஏற்பட்ட இச்சூழலுக்கு அதிர்ந்துபோன நெஞ்சுடன், விசித்தழுது நிற்கின்ற இவனுடைய மூன்று மக்கள் (இதோ, எரியால் உண்ணப்பட்டுப் பிணமாய் கிடக்கின்ற) இவன், வடவர் திணித்த வளராத மழுங்கல் மொழியாகிய இந்தி மொழியைக் கடிந்து தடுப்பதற்குத் துணிந்து நின்று, அவ்வுணர்வைக் காட்சியின் அளவில் காட்டுதற்கு உடலில் தீக்கொளுவிக் கொண்டு, தன் உயிர் தீந்தமிழுக்கெனக் கொள்கையை முழக்கிய சிறந்த வீர மகனாகிய, விருகாம்பாக்கம் என்னும் ஊரினனான அரங்கநாதன், ஆவான்.

விரிப்பு:

இப் பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும், முந்தைய பாடல் காலத்து நடந்த வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.

இந்தியெதிர்ப்புக்காக, தீக்குளியல் செய்த விருகாம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதனைப் பாடியது.

பாரிய - பரந்த,

புழுதி துவைய - புழுதி தோயும்படி தரையில் புரள,

தலைதரை கிடத்தியும் - தலையைத் தரையில் மோதி முட்டி அழுதல்,

மார்பு எற்றுதல் - மார்பில் கைகளால் அடித்துக்கொண்டு அழுதல்,

செவ்விழி உகுநீர்நனை வாய் அரற்றி - அழுது சிவந்த விழிகளிலிருந்து உகுக்கின்ற கண்ணிரால் நனைந்த வாயால் புலம்பி அழுது.

எரியுண் மூங்கில் இணைகொடி யாகி - எரியால் உண்ணப்பட்டு எரிந்து கொண்டிருக்கின்ற மூங்கில் மேல் இணைந்து சுற்றிய கொடி எவ்வாறு அதுவும் கருகிக் குலைந்து போகுமோ, அவ்வாறு குலைந்து நிற்கின்ற கொடி போன்றவள் ஆகி.

இனித் துனை யறியா - இனிமேல், வாழ்வுத் துனை யறியாத,

தந்தை கொள்கை - தங்கள் தந்தையின் கொள்கையாகிய இந்தியெதிர்ப்பை,

தாமறிகள் லாது - தாங்கள் அறியாமல்,

அழுங்கல் ஆற்றுதல் - அழுகையைத் தேற்றி அடக்குதல்,

எதிர்ந்த சூழல் - இக்கால் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலை.

அதிர்ந்த நெஞ்சொடு - அதிர்ச்சி யடைந்த உள்ளத்தொடு,

விசித்தழா நின்ற - தேம்பியழுது நிற்கின்ற, இவன் மூமகார் - இவனுடைய மூன்று மக்கள்.

வடவர் திணித்த வளராமடமொழி - வடநாட்டு ஆட்சியினர் தென்னாட்டு மக்கள் மேல் திணித்திருக்கும், வளர்ச்சியுறாத மூடமொழி அறிவாற்றல் இல்லாத மொழியாகிய இந்திமொழி,

கடியத் துணிந்து - (இந்தி மொழித் திணிப்பைக்) கண்டித்துத் தடுத்து நிற்கத் துணிவு கொண்டு,

காட்சியின் காட்ட - தன் உணர்வைக் காட்சியளவாகச் செயலில் காட்டுதற்கு

உடலம் தீக் கொள- உடலில் கன்னெய் (பெட்ரோல்) ஊற்றிக் கொண்டு தீப்பற்றும்படி செய்து,

உயிர் தீந்தமிழுக்கு என-- தன் உயிர் தமிழுக்காகவே இருந்தது; இக்கால் அதற்குத் தீங்கு வந்ததால் அதற்காக அது மாய்ந்தது என எண்ணும்படி

குரிசில் - சிறந்த வீர மகன்; ஆண் மகன் தலைவன்.

விருகாம்பாக்கத்து அரங்கநாதன்-சென்னையில் உள்ள விருகாம்பாக்கம் என்னும் ஊரில் தோன்றிய அரங்கநாதன் என்னும் பெயரினன்.

தன் இளம் மனைவியையும், மூன்று மக்களையும் பொருட்டென நினையாது, இந்தித் திணிப்பால் தமிழ்மொழிக்கு நேர்ந்த தீங்கையே பெரிதென நினைந்து, அத் தீந்தமிழ்மேல் தான் கொண்ட பற்றினைக் காட்டுதற்கும், இந்தித் திணிப்புக்குத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துதற்கும், “உடலைத் தீயினுக்கும், உயிரைத் தம்ழ்க்கும் தந்தேன்” என எழுதி வைத்துவிட்டு, தன்மேல் கன்னெய்யை ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, மாய்ந்து போன, விருகாம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் என்னும் வீரனைச் சுற்றியிருந்தார் கேட்கப் பாடியதாகும், இப் பாடல்.

இப் பாடல் முன்னது திணையும், கன்னெய்யாடல் என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.