நூறாசிரியம்/இருந்தனை தமிழொடு

விக்கிமூலம் இலிருந்து
60 இருந்தனை தமிழொடு


புனையினும் பூட்டு கழலறப் போகும்
மிசையினும் மேனி திரங்கலும் ஆகும்
ஒம்பினும் வன்மை காலத்து ஒழியும்
சாம்பினும் அழலுணச் சாம்பர் கழியும்
ஒக்கல் புறத்தழ விக்கல் மேலுற்று 5
முக்கலும் முனகலும் அடர்ந்துநா புலர்ந்து
திக்கலும் திணறலும் ஆகி உரைதப்பிக்
கக்கலும் கழிச்சலும் ஆலக் கண்ணவிந்து
நன்னடை நெற்றி நகர்ந்தும் கிடந்தும்
திண்மமும் மாறி நீர்மமும் கொள்ளாப் 10
புறங்கடை வாயிற் புகட்டிய தொழுக
வெள்விழி யேறி அறிவு வெளிறி
மெலமெல ஆவி கழிவுறு மேனாள்
இருந்து போகிய இடம்பார்த் தழுஉம்
பெருந்திரள் மாக்கள் பெறுவது மிலையெனும் 15
இழிதகைக் கஞ்சியோ மகனே
தழல்குளித் திருந்தனை தமிழொடு சிறந்தே!

பொழிப்பு:

பலவாறு (பூட்டியும் அணிந்தும் உடுத்தும் பூசியும்) புனைவு (அழகு) செய்து வந்தாலும், எலும்புகளால் பூட்டப் பெற்றுத் தசைகளால் பொதியப் பெற்றுத் தோலால் வேயப்பெற்ற இவ்வுடலானது, தன் கட்டமைப்புக் கழன்று இறுதியில் ஒன்றுமில்லாமற்போகும். (பலவாறு, பலவகையான பண்டங்களை) உண்டு காத்து வந்தாலும், இம் மேனியானது, காய்ந்து சுருங்கிப் போகும்; இதன் நலன்களைப் பலவாறு பேணிப்புரந்து நின்றாலும், இவ்வுடல் வலிமையானது, குறித்த காலத்தில் இல்லாது போய்விடும்; அவ்வாறு வலிமை ஒழிந்து, ஒடுங்கிப் போன உடலை எரி உண்டு தீர்த்துச் சாம்பலாகச் செய்யினும், அதுவும் ஒன்றுமில்லாமல் மண்ணில் கழிந்துபோகும் உறவினர்கள் புறமாக இருந்து அழவும், இறுதி விக்கலானது மேலேறி நின்று, மூச்சு முட்டவும், ஒலி முனகலும் மிகுந்து, நாவானது உலர்ந்து போய், உரை திக்கலும் திணறுவதும் ஆகி, பேச இயலாமல் உரை தப்பிப்போய், உண்டது வாய் வழியாகவும், செரித்தது கருவாய் வழியாகவும் ஒலியுடன் வெளியேவர, கண்கள் ஒளி அவிந்துபோக முன்னர் இருந்த நல்லநடையானது தடுமாறிநகர்ந்தும், படுகிடையாய்க் கிடந்தும், பருவுணவு. உண்ட நிலை மாறி, நீர்ம உணவும் கொள்ள வியலாமல், இன்னொருவர் புகட்டிய நீர்ம உணவும் புறக்கடை வழியாக ஒழுக, வெள்ளை விழி மேலே ஏறவும், அறிவானது மங்கிப் போகவும், மெல்ல மெல்ல ஆவியானது கழிகின்ற மேலை வரும் நாளில், தாம் இறுதியாகப் படுத்திருந்து உயிர் போகிய இடத்தைப் பார்த்து அழுகின்ற, பெருந்திரளான மக்கள் தம் வாழ்நாளிலும், தாம் பெறப்போகின்றது இந்நிகழ்ச்சி தவிர வேறொன்றுமில்லை எனும், இழிவு மிகுந்த இவ் வாழ்வின் முடிவுக்கு அஞ்சியோ, மகனே, தீயில் குளித்துத் தமிழ்மொழியுடன் என்றும் சிறப்புற சாகா நிலையில் இருக்கின்றாய், நீயே!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

இதுவும் முந்தயை பாடல் காலத்து நடந்து வியப்புக்குரிய ஒரு செயலைப் பாராட்டியதாகும்.

தீக்குளியல் செய்த தேவனுர்ச் செம்மல் சிவலிங்கத்தை உடல் நிலையாமை முன்னிருத்திப் பாடியது. -

புனையினும் அணிகளைப் பொருந்தப் பூட்டியும் மேலுற அணிந்தும், உடுக்கை உடுத்தும், மண நெய்யுந் துளும் பல பூசியும் உடலைப் புனைவு (அழகு செய்யினும்.

பூட்டு எலும்புகளாலும், தசைகளாலும், நார் நரம்புகளாலும் தோலாலும் பூட்டப்பெற்ற இவ்வுடல் சேர்க்கையானது.

கழலற அறக் கழன்று கட்டமைப்புக் கழன்று.

மிசையினும் பலவகையான பண்டங்களை உண்ணினும்.

மேணிதிரங்கல் - உடலானது காலத்தால் காய்ந்து கருங்குதல்.

ஒம்பினும் . இதன் நலன்களைப் பலவாறு பேணிப் புரந்தாலும், வன்மை வலிமை;

காலத்து ஒழியும்- காலத்தால் இல்லாமற் போகும்.

சாம்பினும் - ஒடுங்கிப்போயினும்

அழலுன - அழல் உண்ண சாம்பர்சாம்பல்

ஒக்கல் - உறவினர். பொருந்தியிருப்பவர்.

முக்கல் - காற்று வெளியேற வலிந்து முயலுதல். முனகல் - சிறிது சிறிதாகக் காற்று வெளியேறும் ஒலி.

அடர்ந்து நா புலர்ந்து -நா வறண்டு உலர்ந்து போய்.

உரை தப்பி - உரை மாறுதல் - தவறுதல்.

கக்கலும் கழிசலும் ஆல- உண்டது மேல் வாய் வழியாகவும் செரித்தது கீழ்வாய் வழியாகவும் ஒலியெழுப்பி வெளியே வர.

கண்ணவிந்து - கண் ஒளி இழந்து.

நெற்றி- தடுமாறி.

நகர்ந்தும் கிடந்தும்- இயன்றவழி நகர்ந்தும், இயலாவழிக் கிடந்தும்.

திண்மமும் மாறி நீர்மமும் கொள்ள - பருப்பொருள் உணவும் தவிர்ந்து,நீர்ம உணவும் கொள்ளமுடியாமல்,


புறங்கடை வாயில்- வாயின் புறத்துள்ள கடைவாயில்

புகட்டியது ஒழுக - பிறரால் நீர்ம உணவாகப் புகட்டப் பெற்றது, உள்ளே போக இயலாமல் ஒழுகும்படி

வெள்விழியேறி - கண்களின் வெள்ளை விழி மேலேறி நிற்க,

அறிவு வெளிறி- அறிவுணர்வானது அறவே இல்லை என்று ஆகும் படி இல்லாமற் போக

வெள்ளை விழி மேலேறிக் குத்திட்டு நிற்பதும், அறிவு அறவே இல்லாமற் போவதும், இறப்பின் இறுதி நிகழ்ச்சிகள்.

மெலமெல ஆவி கழிவுறு மேனாள் - மெல்ல மெல்ல ஆவி கழிந்து போகின்ற அடுத்து வரும் இறுதி நாள்.

இருந்து போகிய இடம்- இறுதியாகச் சாப்படுக்கையில் படுத்திருந்து உயிர்விடும் இடம்.

பாத்து அழும்-இந்த இடத்தில்தானே அவர் படுத்திருந்து உயிர்விட்டார் என்று உறவினர் பார்த்து அழுகின்ற இடம்.

பெருந்திரள் மாக்கள் பெறுவதும் இலையெனும்- மிக்க அளவில் திரண்ட மக்கள், தாங்கள் தங்கள் வாழ்வில் இறுதியாகப் பெறப்போவதும் இம் முடிவைவிட்டு வேறொன்று இல்லை என்னும்.

இழிதகைக்கு இழிவான தன்மைக்கு,

அஞ்சியோ இதுபோலும் இழிவான வாழ்க்கைக்கு யானும் ஒருப்படுவதோ என்று அஞ்சியோ,

தழல் குளித்து - நெருப்பில் குளிப்பது போல் மூழ்கி. தமிழொடு சிறந்து இருந்தனை -என்றும் உள்ள தமிழ்மொழியுடன் பிறர்போல் அழிவுறாது சிறப்புற என்றும் நீ இருந்தாய் கொல்.

‘எல்லாரும் வழக்கமாக வாழ்ந்து, ஒரு சிறப்பும் பெறாமல் இயல்பாக மறைந்தொழியும் வாழ்க்கை போல் நாமும் வாழ்ந்து மடிய வேண்டுமோ? என்று ஏற்படும் இழிவுக்கு அஞ்சியவனாகத் தமிழ்மொழிக்கெனப் போராடித் தீக்குளித்து மாய்ந்தனன் கொல்லோ, தேவனுர்ச் செம்மல் சிவலிங்கம்? 'அவன் புகழ் தமிழ் உள்ளளவும் சிறந்து நிற்கும்’ என்பதாகும் இப்பாடல்.

இதில் ஒரு மாந்தன் பலவாறான சிறப்புகளொடு வாழ்ந்தாலும், பலவகையினும் துய்ப்புச் செய்து இன்பம் பெற்றாலும் இறுதியில் அவன் வாழ்க்கை, எவ்வகைச் சிறப்பும் இன்றி எல்லாருக்கும் ஏற்ற இயல்பான முடிவே பெறுகிறது. எனவே இயல்பாக மாய்ந்தொழியும் வாழ்க்கைக்கு ஒரு சிறப்புத் தேடுவது, அதனை ஒரு கொள்கையோடு முடித்துக் கொள்வதே ஆகும் என்னும் உயர் நோக்கத்தை வலியுறுத்தி இந்தி மொழித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்மொழிக்கெனத் தன் உயிரைத் தீக்குளித்து மாய்த்துக் கொண்ட சிவலிங்கத்தை முன்னிருத்திப் பாடியது இப்பாடல்.

உயிர் நிலையாமையும், உடல் அழிவும் நன்கு புலப்படுத்திக் கூறப்பெற்ற இப் பாடலில், இறப்புக் காலத்து நேரும் சாவுக் குறிகள் விளங்கக் காட்டப் பெற்றுள்ளன.

விக்கல் மேலுறுதலும், மூச்சு முட்டுதலும், நா வறண்டு போதலும், உரை திக்குவதும், பேசுதற்குத் திணறித் தொல்லைப் படுதலும், உண்டது கக்கலும், உள்ளே செரித்துப் போனது தன்னுணர்வின்றியே நீர்மலமாய்க் கழிவதும், அவற்றின் ஒலியாரவாரமும், கண்கள் ஒளி குன்றுவதும், தப்பித்தவறி எழுந்தால் நடை தடுமாறுவதும், எனவே நகர்வதும் இயலாதவிடத்துக் கிடப்பதும், பருவுணவு கொள்ளவியாலாமையும், கொண்ட நீர்ம உணவும் உள்ளே செல்லாமல் புறக்கடை வாய்வழி வெளியே ஒழுகுவதும், வெள்ளை விழி மேலேறுதலும், அறிவு மறைவதும், ஆவி மெதுமெதுவாய்க் கழிவதும் ஆகிய சாவின் படிப்படியாக நிகழும் இறுதி நிகழ்ச்சிகள் நன்கு புலப்படுத்தப் பெறுகின்றன.

இவையன்றியும், இயல்பாக, எல்லார்க்கும் வந்து நேரும் வாழ்விலும் சாவிலும் என்ன சிறப்புள்ளது? உயிரை ஒரு கொள்கைக்காக இழப்பதில்தான் சிறப்பு உள்ளது என்னும், உயர் நோக்கம் இடம் நோக்கிச் சுட்டப்பெற்றது என்க.

இப்பாடல் முன்னது திணையும்,தழற்குளியல் என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.