உள்ளடக்கத்துக்குச் செல்

நூறாசிரியம்/துய்யா வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

77 துய்யா வாழ்க்கை


மருப்புநீண்டு முறுக்கமேறி
இருப்பகன்று மடியிறங்கி
நடைதாழ்ந்து மடைவிரும்பினும்
மையா யாண்டுங் காரா வாகா
துய்யா வாழ்க்கை தோயாநின்று 5
கூறையின்றிக் கீரைமிசைந்து
மெய்மெலிந்தே ஒச்சின்றிக்
கையற்றுத் துணைசோரினும்
மெய்யே நின்ற மேலோர்
பொய்யும் நினையார் புரையார் யாண்டே! 10


பொழிப்பு:

கொம்பு நீளவளர்ந்து திருகுற்று, பின்பக்கம் அகலமுடையதாகி பான்மடி தாழ்ந்து, நடைதளர்ந்து, புல்லுணவை விரும்பினாலும் ஆமா எக்காலத்தும் எருமையாதல் இல்லை. நுகராத வாழ்க்கையிற் பொருந்தி நல்லாடை இல்லாமலும் கீரையையே உணவாக உட்கொண்டும் யாக்கை மெலிந்து வீசிநடக்கும் வீறின்றி, செயலறவுற்று, துணையாய் இருந்தோரும் நெகிழ்ந்தவிடத்தும் மெய்ந்நெறியின்கண் உறைத்து நின்ற சான்றோர் பொய்யை நினைக்கவும் மாட்டார், எக்காலத்தும் போலிச் செயல்களை மேற்கொள்ளவும் மாட்டார்.

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள்சார்ந்தது.

சான்றோர் பெருமக்கள் எத்துணை எளிய வாழ்க்கைக்கும் இன்னலுக்கும் ஆட்பட் நேர்ந்தாலும் பொய்யும் போலியும் கைக்கொள்ளமாட்டார் என்று விளக்குவது இப்பாட்டு

ஆமாயாண்டும் காராவாகாது. அது போலச் சான்றோர் யாண்டும் நிலைமாறார் என்னும் உவமை இப்பாடற் கருத்தை விளக்கி நிற்கின்றது. இஃது.எடுத்துக்காட்டுவுமையாதல் நோக்கி யறிக

மருப்பு நீண்டு.முறுக்க ஏறி : கொம்பு நீளவளர்ந்து திருகுற்று.

மாட்டுக்குத் தலையின் கண் எடுப்பாக விளங்குவது கொம்பாகவின் அதனை முற்கூறினார். செறிந்த வள்ர்ச்சியால் திருகப்பெறுதலின் முறுக்கமேறி என்றார். கிளிக் கொம்பு, சாட்டைக் கொம்பு, வீணைக்கொம்பு, பறட்டைக் கொம்பு முதலியனவாக மாட்டின் கொம்பு உலக வழக்கில் பல்வேறு குறியீடுகளைப் பெறுதலானும் அதன் சிறப்பு அறியப்படும்.

இருப்பு அகன்று -மடைவிரும்பினும் : இடை அகலமுற்றும், பான்மடி இறங்கியும், நடை தளர்ந்தும், புல்லாகிய உணவை விரும்பினாலும்,

இருப்பு :பின்புறம்.

மடி -பால்சுரக்கும் காம்புகளைக் கொண்டது.

மடை- உணவு மாட்டுக்குரிய உணவாகிய தீனி சிறப்பாகப் புல்லேயாம். மேய்ச்சலை விரும்பினும் எனக் கொள்க!

மையா யாண்டும் காரா வாகா: காட்டு ஆக்கள் எக்காலத்தும் எருமைகளாகமாட்டா.

மையா -காட்டுஆவு. காரா- எருமை.

துய்ய வாழ்க்கை தோயா நின்று- நுகர்தல் இல்லாத வாழ்க்கையின் கண் பொருந்தி நின்று.

உலகியல் இன்பங்களை நுகராத வாழ்க்கையைத் துய்யா வாழ்க்கை என்றார்.

தோயா நின்று- தோய்ந்து நின்று.

கூறை இன்றி- உடுத்திக் கொள்ளுதற்கு நல்ல ஆடையில்லாமல்,

கூறை - துணி

கீரை மிசைந்து- கீரையை உணவாக உட்கொண்டு.

கீரையைத் துணைக்கறியாக உட்கொள்ளுதலின்றி முழு உணவாக உட்கொண்டு என்றவாறு.

மெய்மெலிந்தே- யாக்கை மெலிந்து

என்பெழுந்து இயங்கும் யாக்கையர்- என்றாங்கு மேனி மெலிந்து,

ஒச்சு இன்றி- கைவீசி நடக்கும் வீறின்றி.

ஒச்சுதல்-வீசுதல்,

ஒச்சு என்பதற்குத் தலைநிமிர்பு எனப் பொருள் கொண்டுதலை தாழ் உடற் கூனி எனக் கூறலுமாம்.

கையற்று-செயலறவுபட்டு.

கை -செயல்.

துணை கோரினும் - துணைவராயினார் தம் நிலையில் நெகிழ்ச்சி யுற்றாலும.

மெய்யே நின்ற மேலோ-மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுதலில் உறைத்து நின்ற சான்றோர் பெருமக்கள்.

பொய்யும் நினையார்புரையார்யாண்டே-யாண்டும் பொய்யை நினைக்கவும் மாட்டார்; போலியாக நடக்கவும் மாட்டார். யாண்டும் எக்காலத்தும், எவ்விடத்தும் பொய்மையை நினையார் என்றமையாற் மனத்துய்மை சுட்டப் பெற்றது. மனத்தாலும் நினையார் ஆகலின் நாவால் பேசார் என்பது தானே போதரும்.

புரை உள்ளீடின்மை - புரையார் என்றமையின் போலியான பொருளற்ற செயலைச் செய்யார் என்றவாறாயிற்று.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.

இது வஞ்சித்தளை பொதுளிய நேரிசை ஆசிரியப்பா