பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வாழப் பிறந்தவன்

35

"அதற்குத்தான் நாங்கள் மாதா மாதம் சம்பளம் கொடுக்கிறோமே?”

"நல்லாச் சொன்னீங்க; சம்பளம் நாங்கள் வாழறதுக்கா....ஹும்...!” என்று சொல்லி, அவள் கடகடவென்று நகைத்தாள்.

அந்தச் சிரிப்பு தீனதயாளனின் உடம்பை என்னவோ செய்தது. அவன் விழித்தான்.

கேதாரி மேலும் சொன்னாள்:

"என்னமோ, உங்களுக்கு உழைக்க எங்களுக்கு உசிரு இருக்க வேணுமில்லே? அதுக்காக சம்பளம் கொடுக்கிறீங்க நாங்க வாழவா சம்பளம் கொடுக்கிறீங்க? அப்படிக் கொடுக்கிறதுன்னா நாங்கள் ஏன் இப்படித் திருடறோம்?”

"திருடி யாராவது மானத்தோடு வாழ முடியுமா?”

"எவனையாச்சும் இழுத்துக்கிட்டுப் போய் யாராச்சும் மானத்தோடு காலந்தள்ள முடியுமா?”

“சரியாப் போச்சு நாளையிலிருந்து அந்தத் தோப்புக்கு வேறு ஆளைத்தான் காவலாகப் போட வேண்டும் போலிருக்கிறதே!"

“வேறே ஆளைக் காவலாப் போட்டா மட்டும் போதுமா, சாமி! அவங்க மேலே உங்களுக்குக் கொஞ்சம் அன்பும் இருக்கட்டும். அப்போது தான் அவங்க உங்களுக்கு நாய் மாதிரி உழைச்சிக்கிட்டு இருப்பாங்க! நாங்ககூட முன்னெல்லாம் அப்படித்தானே உழைச்சிக்கிட்டு இருந்தோம்? இப்போ உங்க அப்பாவாலேதானே இந்த வழிக்கு வந்தோம்?”

இதைக் கேட்ட தீனதயாளனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, "பலே! நீ கெட்டிக்காரிதான் போ!" என்று ஒலைக்கட்டைத் தூக்கி மீண்டும் அவள் தலைமேல் வைத்தான்.

“எங்கே போவது?’ என்று கேட்டாள்.

"உன்னுடைய அப்பாவிடம். நான் அன்பு வைத்தால் நீ இந்த ஒலைக்கட்டுடன் எங்கே போவாயோ அங்கே போ!" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டான் தீனதயாளன்.

கேதாரியும் குறிப்பறிந்து ஒலைக்கட்டைக் கொண்டு போய் எஜமான் வீட்டில் சேர்த்துவிட்டு வந்தாள்.

* * *