பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

தமிழ்த் தாத்தா

காப்பிய நூல்களோடு சங்க நூல் ஆராய்ச்சியும் எங்கும் நடைபெறலாயிற்று. அதன் பயனாகத் தமிழ் மாநாடுகளும், உலக விழாக்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சங்க நூல்களின் பெருமையை மற்ற நாட்டிலுள்ளவர்களும் தெரிந்துகொள்ளும்படி அவற்றின் மொழிபெயர்ப்பைச் சிறந்த அறிஞர்கள் செய்து வெளியிட்டார்கள்.

இவ்வாறு, தமிழகத்தில் ஒரு புதிய யுகத்தை உண்டாக்கிய பேராளர் டாக்டர் ஐயர். அவர் இறைவன் திருவருளால் 87 ஆண்டுகள் வாழ்ந்தார்; தமிழுக்கு வளம் சேர்த்தார். தம்முடைய இளமைக் காலத்தில் அவர் காணாத காட்சியை அவர் தம் முதுமையில் கண்டார். பாரி என்றும், அதிகமான் என்றும் வெறும் பெயர்களைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையை மாற்றி, அவர்களால் தமிழ் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாயிற்று என்பதைப் பள்ளிக்கூட மாணவர்களும் தெரிந்துகொள்ளும் நிலை உண்டாயிற்று. காப்பிய இன்பத்தை நுகர்ந்த தமிழ்ப் புலவர்கள் சங்க இலக்கியங்களைப் பாராட்டினார்கள். தமிழ் மிகப் பழமையானது, மிகச் சிறந்த பண்பாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்பதைப் புலவர்கள் எல்லாம் ஆராய்ந்தறிந்து சொன்னார்கள்.

 

இளமைக் கல்வி

இவ்வாறு தமிழுக்கு ஒரு புது மலர்ச்சியை உண்டாக்கிய டாக்டர் ஐயரைத் தந்த பெருமை உத்தமதானபுரத்தைச் சார்ந்தது. ஓர் அரசர் அந்த ஊரை 48 அந்தணர்களுக்கு உத்தமதான மாகக் கொடுத்தார். இந்தப் பெரும் புலவரைத் தமிழ் உலகத்திற்கு அளித்துள்ள தன்மையினால் அப்பெயர் பின்னும் பொருளுடையதாக ஆயிற்று. ஐயர் அந்தணர் வகுப்பில் அஷ்டசகஸ்ரம் என்ற பிரிவைச் சார்ந்தவர். அவருடைய பாட்டனார் வேங்கடாசலையர் என்பவர். வேங்கட நாராயணையர் என்பவருடைய மூத்த குமாரர். வேங்கடாசலையருக்கு வேங்கட சுப்பையர், சீனிவாசையர் என இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வேங்கட சுப்பையரின் குமாரர் தாம் டாக்டர் ஐயர்.

19-2-1855-ஆம் நாளன்று இந்தப் புலவர் பெருமான் திரு அவதாரம் செய்தார். அந்த ஆண்டுக்கு ஆனந்த வருஷம் என்று பெயர். அந்த ஆண்டு, தமிழுக்கு ஆனந்தம் தரும் இந்தப் பெரிய வரை உதவித் தன் பெயருக்குரிய புதுப் பொருளை உடையதாயிற்று.

இளம் பருவத்தில் பாட்டனாரிடத்தில் இவர் அரிச்சுவடி படித்தார். அதன் பிறகு துதி நூல்களை எல்லாம் கற்றுக்கொண்டார்.