பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தகடூர் யாத்திரை



2. கொங்கு நாட்டின் நிலை

தகடூர்ப் பெரும்போரைப் பற்றி அறிவதற்கு முன்பாக, அக்காலத்தைய கொங்குநாட்டினது அமைவைப் பற்றியும் ஓரளவிற்காவது நாம் அறிந்து கொள்ளல் வேண்டும். இன்றேல், அதன் அடிப்படையான சில முக்கிய செய்திகளை நாம் உணராது போக நேர்ந்து விடலாம்.

சேர நாடு, ஒரு காலத்தில் தெற்கே பொதியமலை முதலாக, வடக்கே தபதியாற்றங்கரை வரைக்கும் விரிந்து பரந்திருந்தது. மேலை மலைத்தொடருக்குக் கீழ்பால் இருந்த கொங்குநாட்டுப் பகுதியும் சேர நாட்டைச் சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. சேர நாட்டின் மேலைக் கடற்கரைப் பகுதியானது குட்டநாடு, குடநாடு என்னும் இருபெரும் பிரிவாகிச் சேரர் குடியினரால் ஆளப்பட்டும் வந்திருக்கிறது. குட்ட நாட்டிலிருந்து அரசியற்றிய சேர மன்னர்களைக் குட்டுவர்கள் எனவும், குடநாட்டிலிருந்து அரசியற்றியவர்களைக் குடக்கோக்கள் எனவும் சான்றோர்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

குடநாட்டிற்குத் தொண்டியும், குட்டநாட்டிற்கு வஞ்சியும் கோநகர்களாகச் சிறப்புற்றிருந்தன. ஒரு குடிப்பிறந்த அரச குமாரர்களுள் மூத்தவன் குட்டநாட்டையும், இளையவன் குடநாட்டையும் ஆண்டு வந்தனன் என்பதனையும் இலக்கியச் செய்திகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

காலப்போக்கிலே குட்டநாட்டின் வடபகுதியையும் குடநாட்டின் தென்பகுதியையும் ஒரு நாடாக வகுத்து, அதற்கு பொறைநாடெனப் பெயரிட்டு அதனை ஒருவனது ஆட்சிக்கீழ் அமைத்தனர்; இப்படியே கொச்சிநாட்டின் வடகீழ்ப் பகுதி பூழிநாடு எனப் பிரிந்தது; பொறை நாட்டின் கிழக்கிற் கொங்குநாட்டை அடுத்திருந்த பகுதி கடுங்கோ நாடு எனத் தனியரசாயிற்று.

இவ்வாறு, ஒரு காலத்தே சேரநாடு நான்கு பிரிவுகளாக அமைந்திருந்ததனைச் சங்கநூற்களுள், சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள மரபினைக் கொண்டு நாம் அறியலாம். குட்டுவன் எனவும், இரும்பொறை எனவும், கடுங்கோ எனவும், குடக்கோ எனவும் இந்த அரசர்களைத் தமிழ்ச் சான்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள், சேரவரசின் அந்தந்தப் பகுதிக்கண் இருந்து அரசியற்றிய அரசர்கள் ஆவர் என்று நாம் அறிதல் வேண்டும்.