உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 தகடூர் யாத்திரை

ஒலியைக் கேட்பின், அது போர்ப்பறை ஒலியென்று மகிழ்ந்து எழுகின்ற ஏம் தலைவனும் உளன்.”

 படைமறவர் மட்டுமல்லர்;அவர்க்குத் தலைவனாக விளங்கும் பேராண்மை மிக்க அஞ்சியும் உள்ளனன் என்று கூறும்போது, அவரது பெருமிதச் செறிவு நமக்குப் புலப்படுகின்றது.
 இங்ஙனம் அறவுரை பல கூறியும், பகைவர் தம்முடைய நிலைக்கண் உறுதியுடன் திகழ, அதுகண்ட ஒளவையாரும், அவர்களது தீயூழினை நினைந்து வருந்தியவராகத் திரும்பி விடுகின்றனர். அஞ்சியை வந்து அடைந்தபோது, அவன், அவரது முகக்குறிப்பினாலே நிகழ்ந்திருப்பதை உணர்ந்து கொண்டவனாக, 'அம்மையே! தங்கள் அறவுரைக்கு அவர்கள் செவிசாய்க்க வில்லை போலும்! இனி என்ன செய்வது?' என்று வினவுகின்றான்.
 அதிகமானின் கேள்வியிடத்து உட்பொருளாக அமைந்திருந்த ஐயத்தை ஒளவையார் புரிந்து கொண்டனர். பகைவர்கள் அறவுரைக்குச் செவிசாய்த்தல் இலர் என்னும் போது, அவர்கள் படைப்பெருக்கத்தை உடையவராக இருத்தல் வேண்டுமன்றோ? இந்த நினைவுதான் அதிகமானின் கேள்விக்குக் காரணம் ஆகும்.
 “அதிகமானே!
 "மறத்தையுடையது புலி; அது சீறி எழுந்ததென்றால், அதற்கு எதிர்நின்று வெல்லற்குரிய மான்கூட்டம் யாதாயினும் இவ்வுலகில் உளதாகுமோ?
 "ஞாயிறானது கொதித்து எழுந்ததாயின், மயங்கிய வானிடத்தும் எட்டுத் திசைகளிடத்தும் செறிந்திருக்கும் இருள் என்பதும் உளதாகுமோ?
 "புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும், கற் பிளக்கவும் நடக்கவல்ல மிக்க மனச்செருக்கினை உடையதான கடாவிற்குப் போதற்கரிய துறையும் யாதேனும் உண்டோ?”
 "இல்லையன்றே! அங்ஙனமே, எழு மரம் கடுக்கும், தாள்தோய் தடக்கை, வழுவில் வன்கை, மழவர் பெரும!"
 “நீ களத்தின்கட் புகுந்தாயானால், பெரிய இந் நிலத்தின் கண் நினது மண்ணைக்கொண்டு ஆர்க்கும் வீரரும் உளரோ?” என்கின்றனர்.