பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

விந்தன் கதைகள்

 "சொன்னால் கோபித்துக் கொள்வீர்கள். நீங்கள் போகிற தொல்லையையாவது போகவிட்டால் தானே?"

"காவேரியைப் பற்றித் தானே சொல்கிறாய்? அவளை அனுப்பி வைப்பதற்குக் குறைந்த பட்சம் முப்பது ரூபாயாவது வேண்டுமே, அதற்கு என்ன செய்வது?"

“முப்பது ரூபாய் இல்லை என்று சொல்லிக் கொண்டு இதுவரை நீங்கள் அவர்களுக்காக அறுபது ரூபாய் செலவழித்திருப்பீர்கள் போலிருக்கிறதே!"

"ஒரு பெரிய உண்மையை எடுத்துச் சொல்கிறாய் மரகதம் நம்மைப் போன்றவர்களுடைய கஷ்டம் எப்படி வளருகிறது - தெரியுமா? இப்படித்தான் வளருகிறது!"

"செலவைக் கூடியவரை கட்டுப்படுத்திக் கொண்டு சிக்கனமாக வாழ முயன்றால் கஷ்டம் ஏன் வளருகிறது?"

"ஏது உன்னிடமும் அந்த மலிவான சரக்கு, நிறைய இருக்கிறது போலிருக்கிறதே!"

"எந்த மலிவான சரக்கு?"

"பிறருக்குப் புத்திமதி சொல்வது!"

மரதகம் சிரித்தாள்.

"இதைக் கேள், மரகதம்! உன்னைப் போலத்தான் என்னுடைய நண்பர்களெல்லாம் கூடச் சொல்கிறார்கள். அவர்களுடைய புத்திமதியின் படி நாம் சிக்கனமாக வாழ வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? முதலில் இந்த வீட்டைக் காலி செய்து விட்டுக் குடியிருக்க ஒரு 'கிளிக்கூண்டு' வாங்கிக் கொள்ள வேண்டும்; நீயும் நானும் பழைய மலையாளத்து ஸ்தீரி - புருஷர்களைப் போல ஆளுக்கொருமுண்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்; காலையில் வெறும் காப்பி குடிக்கிறோமல்லவா? அதை நிறுத்தி விட்டு கொட்டாவி விட்டுக் கொண்டே வேலைக்குக் கிளம்பவேண்டும். அப்புறம் இரண்டு வேளை சாப்பாட்டை ஒருவேளையாக குறைத்துக் கொள்ள வேண்டும்......."

"வேடிக்கைதான்! சிக்கனம் என்றால் இதுவாசிக்கனம்..."

"பின் என்ன செய்வது? கூரை வீட்டை இடித்து விட்டு மாடி வீடு கட்டலாம் என்று இருந்தோமே, அதை நிறுத்தி விடுவதா? 'ஆஸ்டின்' காரை விற்று விட்டு 'போர்டு' கார் வாங்கலாம் என்று இருந்தோமே, அந்த யோசனையைக் கைவிட்டு விடுவதா? உச்சி வேளையில்