வேமனர்/அவர் ஒரு மனிதர்
4. "அவர் ஒரு மனிதர்"
“அவரொருகற் பண்புடையார்; தகவுறுமச் சான்றோர்
ஆற்றுபணி யனைத்திலுமிவ் வேற்றமறிங் திடலாம்
அவரைப்போல் மாண்புடைய மனிதர்களை யுலகத்
தன்புடனே தேடுகின்றேன்; காணவில்லை, அம்மா!”
--செகப்பிரியர்
ஓர் ஒழுங்கான வாழ்க்கை வரலாற்று ஆசிரியருக்கு இன்றியமையாதவையாக இருக்கும் பிறந்தநாள், பிறந்த இடம், தந்தையார் பெயர், அன்னையார் பெயர் போன்ற செய்திகளில் தெளிவாக வழிகண்டுவிட்டால் வேமனரின் பாடல்களில் காணப்பெறும் அகச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சீராக அமைத்துவிடமுடியும். அவர் வாழ்க்கையைப்பற்றிக் கூறும் கவிஞர். அவர் வாழ்க்கையை நேரடியாகக் கண்டவர். அவர் வாழ்க்கையைப் பற்றி வேடிக்கையாகப் பேசினார்; கேலி செய்தார்; வாழ்க்கையைக் கண்டு இகழ்ச்சியாகச் சிரித்தார்; அதனோடும் அதனைப் பற்றியும் எள்ளி நகையாடினர். அவர் வாழ்க்கையைக் கண்டு பெருமூச்சுவிட்டார்; அதில் துன்பப்பட்டார்; அதனைக் கண்டு அழவும் செய்தார். அவர் வாழ்க்கையுடன் போரிட்டார்; அதில் சில சமயம் வெற்றியடைந்தார்; சில சமயம் தோல்வியும் உற்றார், ஆனால், எல்லாக் காலங்களிலும் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியடையவும் செய்தார். அவருக்கு வாழ்க்கை ஒரு சத்திய சோதனையாகவும் ஒரு புதிய கண்டுபிடிப்பின் நெடும் பயணமாகவும் இருந்தது. வேமனர் வாழ்க்கையில் மிக ஆவலாகவும் மிக விரிவாகவும் இடைவிடாமல் ஊசலாடியதால், அவர் வாழ்க்கையையும் தம்முடைய வாழ்க்கையையும் பொதுவான வாழ்க்கையையும் கவிதையில் அமைத்துக் காட்டினர். ஓரிடத்தில் மாதிரியாக அமைந்துள்ள சொற்றொடரிலும், பிறிதோரிடத்தில் புலப்படச்செய்யும் கருத்திலும், வேறோரிடத்தில் தனிப்பட்ட இயல்புடனுள்ள ஒப்புமையிலும் கணநேரத் தோற்றமாக அவருடைய வாழ்க்கையைக் காணலாம். அதனை நாம் அவருடைய அன்புக்குரிய தப்பெண்ணங்களிலும் வெளிப்படையாக உள்ள உயர்வெண்ணங்களிலும் பார்க்கலாம். அவருடைய விருப்புகளிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும், கடுந்துயிரிலிருந்தும் அதனை ஒன்றாக இணைத்துக்காணலாம். நம்முடைய கண்களை அகட்டியும், மனத்தை விழிப்பாகவும் வைத்துக்கொண்டு வரிகளுக்கிடையிலும் கருத்தினைக் காணும் நோக்குடன் இருத்தல் வேண்டும். இதனை மட்டிலும் நாம் மேற்கொண்டால் தம்மை உணர்த்திக் காட்டும் பெருங்கவிஞர்களுள் இவரும் ஒருவர் என்பதைக் கண்டறியலாம். தம்முடைய பாடல்களின் வாயிலாகத் தம்மைக் காட்டும் பொழுது வேமனர் ஓர் அரச குடும்பத்தின்வழி வந்தவரல்லர் என்பது புலனாகும். அவருடைய வாழ்க்கையின் பின்னணியில் தெளிவற்றுத் தோன்றுவது அரண்மனை அன்று என்பதையும் ஆனால் அது ஒரு பண்ணையேயாகும் என்பதையும் அறியலாம். அதுவும் ஒரு பெரிய பண்ணை அன்று என்பதையும், ஆனால் ஒரு குடும்பத்தை நேர்மையான வாழ்க்கை நலத்துடன் வைக்கக்கூடிய அளவுக்குப் பெரிது என்பதையும் தெளியலாம். சற்றே ஒரு சிறிது கவனக்குறைவான பள்ளி வாழ்விற்குப் பிறகு வேமனர் பண்ணை அலுவல்களில் தம் தந்தையாருக்குத் துணைபுரியத் தொடங்குகின்றார். ஒவ்வொரு நாள் காலையிலும் தம்முடைய பசுக்களையும் எருமைகளையும் புல்வெளிக்கு ஓட்டிச் செல்வார்; மாலையில் அவற்றைத் திருப்பி ஓட்டிவருவார். ஏர்பிடிப்பதிலும், விதைப்பதிலும், களை நீக்குவதிலும் அவர் கைகொடுத்து உதவுவார். உயர்நிலையில் உட்காரும் இடத்தில் கையில் கவணுடன் நின்றுகொண்டு முற்றிவரும் கதிர்களைச் சூழும் பறவைகளை வெரட்டுவார். அறுவடையிலும் சூடடிப்பதிலும் மணிகளைத்தூற்றிப் பிரிப்பதிலும் அவர் உதவுவார். பருவ விளைபொருள்களை வீட்டிற்கு ஏற்றிவரும் மாட்டு வண்டியில் வண்டியோட்டி அமரும் இடத்தில் பெருமிதத்துடன் அமர்ந்துகொள்வார். தனக்கிடப்பெறும் பணி எதுவாக இருப்பினும் அதனை மகிழ்ச்சியுடன் செய்வார். பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது பாடுவார். நாட்டுப் பாடல்களில் மேம்பட்டுத் திகழ்வார். திறந்த வெளி நாடகத்தையோ பாவைக்கூத்தையோ பார்ப்பதையும் ஊர்த்திருக்கோயிலில் நடைபெறும் இராமாயண -மகாபாரத சொற்பொழிவுகளைக் கேட்பதையும் எப்பொழுதும் அவர் தவறவிடுவதே இல்லை. அந்த இரண்டு பெருங்காப்பியங்கள் முழுவதும் அவருக்கு மனப்பாடமாய் இருந்தது.
அனைத்தையும்விட தம்முடைய வயது எல்லையை எட்டும் துடுக்கும் மிடுக்குமுடைய இளைஞர்களின் குழுவே வேமனருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சில சமயங்களில் அவர்களுடைய விளையாட்டுகள் அமைத்தல், ஊர்க்குளத்தில் நீச்சமடித்தல், அண்மையிலுள்ள குன்றுகட்கும் பள்ளத்தாக்குகட்கும் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தல் போன்ற செயல்களால் தம்முடைய பண்ணை அலுவல்களைச் சோரவிடவும் செய்வார். உயர் வருணத்தார்களின் பகட்டான போலித்தனச் செயல்களை வெறுத்து எல்லோருடனும் எளிதாகக் கலந்து பழகுவார். பறவைகள் விலங்குகள் இவற்றின்மீது பற்று மீதூர்ந்து நிற்கிறார். பறவைகளில் காக்கையும் கூகையும் (ஆந்தை) விலங்குகளில் நாயும் பன்றியும் கழுதையும் அவருக்குப் பிடிக்காதவை. பேச்சில் கள்ளமற்றும் முடிவெடுப்பதில் சட்டென்றும் செயலில் துணிவு கொண்டும் வெளிச்செயல்களில் கருத்துடையவராகத் திகழ்வார். தன்னைப் பிறர் அவமதித்தலையோ கீழ்த்தரமான சமூகக் கொடுமைகளையோ அவர் பொறுத்துக் கொள்வதில்லை. ஊரில் எளியவரைக் கொடுமை செய்யும் முரடர்களுடன் அடிக்கடி மோதுவார். ஏதாவது ஒரு செயல் நோக்கத்தை மேற்கொண்டால் அது முடியும்வரை போரிட்டுத் தீர்ப்பார். அவர்தம் உயர் எழுச்சிகள் அவர்தம் தந்தையாரால் மூர்க்கத்தனம் எனத் தவறாகக் கறுதப்பெற்றன.
வேமனர் தம் பெற்றோர்களிடம் அன்பையும் நன்மதிப்பையும் காட்டினார். அவர்தம் அன்னையாரின் அன்புக்குரிய செல்லக் குமாரர் ஆவர். அவரும் தன் செல்வன் தாராளமாகப் பாலும் தயிரும் திரட்டியெடுத்த வெண்ணெயும் கலந்த உணவை விரும்புகின்றான் என்பதை அறிந்துகொண்டு அவற்றைப் போதுமான அளவு வழங்குவார். அவர்தம் தந்தையார் மைந்தனின் முரட்டுத்தனத்தைப்பற்றிக் குறைகூறுங்கால் அவர்தம் அன்னையார் அவருக்காக ஏதாவது சாக்கு போக்குகளைக் கூறி அக்குறையைத் தவிர்ப்பார். தனிமையில், இத்தகைய எல்லாவகைத் தொல்லைகளையும் விளைவித்தல் கூடாது என்று மகனை வற்புறுத்தி வேண்டுவார். முன்குமரப்பருவம் தாண்டும் வரையிலும் வேமனரின் வாழ்க்கை கவலையற்றும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அதன் பிறகு திடீரென்று அன்னை இறப்பதால் அவருக்குப் பெருந்துயர் வந்தெய்துகின்றது. இருட்படலம் அவரைச் சூழ்கின்றது; தனிமையையும் கைவிடப் பெற்ற நிலைமையையும் அவர் உணர்கின்றார்.
ஆழமானதும் கூரியதுமான துக்கத்தினின்றும் வேமனர் மீள்வதற்கு முன்னர், அவர் தந்தையார் இரண்டாவது திருமணம் செய்துகொள்கின்றார். இது வேமனருக்குத் தாங்கொளுத் துயரை விளைவிக்கின்றது. தன் தந்தையார் 'மனைவியிலி'யாக இருத்தல் வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் 'ஏன் இந்த நாணயமற்ற அவசரம்?' எனச் சிந்திக்கின்றார் என் அன்னையார்மீது அவர் உண்மையான அன்பு கொண்டிருக்கவில்லையா? தான் ஒரு சிறு பருவப் பெண்ணை மணந்துகொள்ளலாம் என்று அவள் சாவதற்காகக் காத்திருந்தாரா? இத்தகைய எண்ணங்கள் கடுமையானவை என்றும் கொடியவை என்றும் கருதி அவற்றை அகற்றவே முயல்கின்றார், ஆனால் அவை அவரைத் தொடரவே செய்கின்றன; ஆகவே அவர் இழிந்த மனப்போக்கில் படிப்படியாகக் கீழிறங்குகின்றார்.
வேமனரை எழுச்சியற்றவராகவும் அடிக்கடி மனம்மாறுகின்றவராகவும், ஓய்வுபெறுகின்றவர்போலவும் காணும் அவருடைய சிற்றன்னை தம்மீது வெறுப்புக் கொண்டிருக்கின்றாரோ எனக் கருதுகின்றார். புதிய மணப்பெண்ணாக மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்கும் அவர், துயரம் நிறைந்த அவருடைய முகத்தைக்கண்டு அச்சந்தருகின்ற அளவுக்கு எரிச்சலூட்டும் தன்மையுடையவராகின்றார். அவர்தம் எரிச்சலூட்டும் தன்மை விரைவில் ஆத்திரமாகவும் சினமாகவும் வளர்கின்றது. அவருடைய தந்தைக்குத் தெரியாமல் அவர் வேமனரைக் கொடுமையாக நடத்தத் தொடங்குகின்றார்; நாளடைவில் வெளிப்படையாகவும் இடைவிடாமலும் கொடுமையாக நடத்துகின்றார். அவர் என்ன சொன்னாலும் அல்லது எதைச் செய்தாலும் அவரிடம் குற்றத்தையே கண்டு ஓயாது திட்டுகின்றார். அவருக்கு முதல் நாள் இரவில் எஞ்சிய உணவையே இடுகின்றார். அகழெலிப்புற்றுபோன்ற மிகச்சிறிய தவறுகளையெல்லாம் மலைபோன்று பெரிதாக்குகின்றார்; அவருக்கு விரோதமாகவே அவர் தந்தையாரிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்கின்றார். அவர் தந்தையாரால் நையப் புடைக்கப் பெறுங்கால் அவருடைய துன்பங்கண்டு தனக்குள் மகிழ்கின்றார். அவருடைய முதல் குழந்தை பிறந்தபிறகு, வேமனரின் நிலைமை மிகவும் மோசமாகின்றது. பெருமிதத்தன்மையும் உணர்ச்சியுமுடைய அவர் எதிர்த்து நின்றிருக்கலாம்; ஆனால் அவர் தம் அன்னைபால் கொண்ட அன்பும் மதிப்புணர்ச்சியும் தம்முடைய தந்தையின் வாழ்க்கையில் தம் அன்னை கொண்டிருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு பெண் தம்மீது சுமத்தும் இகழ்ச்சியுரைகளையும் வசைச் சொற்களையும் அமைதியுடன் தாங்கிக்கொள்ளவேண்டும் என்றே உணரச் செய்துவிடுகின்றன.
வேமனர் இப்பொழுது பின்-குமரப் பருவத்தை எட்டுகின்றார். தம் இல்லத்தில் அவர் அடையும் மகிழ்ச்சியற்ற நிலை அவரை ஒரு பரத்தையின் இல்லத்தை நாடச்செய்து விடுகின்றது. அவர் எதையும் அரைகுறையாகச் செய்பவரல்லராதலின், நாடறிந்த கயவராகி, இருபதுக்கு மேற்பட்ட வேசியருடன் துயில்கின்றார். அதன் பிறகு அவர் அவர்களுள் ஒருத்தியால் மயக்கப் பெறுகின்றார். அவளோ இளமையும் கவர்ச்சியும் உடையவள், கலைத்திறம் மிக்கவள். அவள் பாட்டிசைக்கின்றாள்; தோடி ராகத்தில் மேம்பாடடைந்தவள். வீணையிலும் வல்லவள். முரட்டுத் தன்மையும் அருவருப்பான தோற்றத்தையும் உடைய வேமனர்பால் கழிவிரக்கத்தை வளர்த்துக்கொள்கின்றாள். அவருடைய மூர்க்கத்தன்மையைக் குறைக்கவும் அவரை நாகரிகப்படுத்தவும் முயல்கின்றாள். செல்வந்தரல்லாத ஒரே ஓர் இளைஞனிடம் அதிகமாகச் சிக்கிக்கொண்டமை பரத்தையின் அன்னையைத் தொந்தரவடையச் செய்கின்றது. தாம் பெறும் மகிழ்ச்சிக்காக கட்டணங்கள் செலுத்தினர் என்பதற்கு ஐயமில்லை; ஆனால் அவர் செலுத்திய கட்டணங்கள் ஓர் ஒழுங்குமுறையில் இல்லை; நிறைவுடையனவாகவும் இல்லை. முற்றிலும் செலுத்தத் தவறும் ஒரு காலமும் வந்து சேர்கின்றது. உடனே தாய்க்கிழவி (பரத்தையின் தாய்) அவருடைய வருகைகட்குத் தடை உத்தரவு போடுகின்றாள். வேமனர் பதுங்கிச்செல்ல முயல்கின்றார். ஆனால் கூரிய பார்வையுடைய அந்தக் கிழப்பூனை அவரைத் துரத்தி அடிக்கின்றது. வேமனர் மனம் உடைந்து சோர்வுறுகின்றார். அருவருப்புத் தோற்றமுடைய அந்தக் கிழவியைக் கொன்று தீர்த்துவிட வேண்டுமென்றும் சிந்திக்கின்றார் வேமனர். இந்நிலையில் அந்த இளம் பரத்தை வேறோரு கள்ளக்காதலனுடன் தொடர்புகொண்டு விடுகின்றாள். வேமனரின் ஏமாற்றமும் வெறுப்பும் ஒருவகையில் முழுமை எய்திவிடுகின்றன.
திருந்திய மனநிலையில் தன் மைந்தனைக் காணும் வேமனரின் தந்தையார் அவரை மணவாழ்க்கையில் கட்டாயப்படுத்தி நுழைத்துவிடுகின்றார். இல்லற வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் நாட்டுப்புற வாழ்க்கைச் சித்திரமாக அமைகின்றன. ஒரு குழந்தை பிறக்கின்றது; மீண்டும் ஒரு குழந்தைக்குத் தந்தையாகின்றார் வேமனர். மகிழ்ச்சியான மனநிறைவுடன் கூடிய வாழ்க்கையைப் பற்றிக் கனவு காண்கின்றார் கவிஞர். ஆனால் முரட்டுத்தனமான அந்தக் கனவினின்றும் எழுப்பப்பெறுகின்றார். வேமனருடைய துணைவிக்கும் அவருடைய சிற்றன்னைக்கும் இடையே இடைவிடாத குடும்பச் சச்சரவுகள் தோன்றுகின்றன. ஒரு நாளாவது-ஏன்? ஒரு மணிநேரம்கூட, ஏதாவது அருவருப்பான காட்சியின்றிக் கழிவதில்லை. கூட்டுக் குடும்பவாழ்க்கை இனி இயலாதெனக் கருதிய வேமனர் தனிக்குடித்தனத்தைத் தொடங்குகின்றார், அந்த ஏற்பாட்டிலும் தொந்தரவுகட்கு ஒரு முடிவு ஏற்படவில்லை; அவை பெருகத்தான் செய்கின்றன. தம்முடைய துணைவி சோம்பியிருப்பவளாகவும் பொருள்களை வீணடிப்பவளாகவும் இருந்து குடும்பப் பொறுப்பைக் கண்காணிக்கும் திறமையின்றி இருப்பதைக் காண்கின்றார். மட்டின்றி உணவினை விரும்பும் அவருடைய சுவைக்கேற்றவாறு அவளுடைய சமையல் வெறுக்கத்தக்கதாக உள்ளது. உணவு படைப்பதும் வெறுக்கத்தக்கதாக அமைகின்றது. எப்பொழுதுமே அவள் அவரை வைது தொந்தரவு செய்கின்றாள்; அவரைத் தொந்தரவு செய்யும் நிமித்தம் குழந்தைகளே நையப்புடைக்கின்றாள். நற்பழக்கமற்ற அக்குழந்தைகள் அவருடைய மகிழ்வற்ற நிலையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றனர்.
கூட்டுக் குடும்பத்தினின்றும் பிரிந்துசென்ற பிறகு வேமனர் தம் பங்கிற்குப் பிரிந்த பண்ணையை விடாமுயற்சியுடன் பேணி வளர்க்கின்றார். அதில் நல்ல பண வருவாயை நல்கும் பயிர்களான கரும்பு, எண்ணெய் விதைகள் போன்றவற்றை விளைவிக்கின்றார், அதன் பிறகு வீட்டில் வளர்ந்துவரும் மகிழ்வற்ற நிலைமையின் காரணமாக அவர் பண்ணையைப் புறக்கணிக்கின்றார், அதனால் அதன் விளைச்சல் குறைந்துகொண்டே போகின்றது. குடும்பத்தில் மேலும் பல குழந்தைகள் சேர்ந்தமையால் அதன் வரவு செலவுத் திட்டம் ஏறிக்கொண்டே போகின்றது. கடன் வாங்கிய பணத்தைக் கொண்டு ஒருவாறு காலத்தைத் தள்ளுகின்றார். அதன் பிறகு ஓர் ஆண்டு கரும்புப் பயிர் பெருவாரி நோயால் சீரழிக்கப் பெறுகின்றது; அதன்மீது போட்ட முதலீடு முழுவதும் முழு இழப்பாகின்றது. கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பித் தரவேண்டுமென்று கூப்பாடுபோடுகின்றனர். வீட்டின் மீதும் பண்ணையின்மீதும் உள்ள ஈட்டினை முடித்துக்கொண்டு விடுவதாக அச்சுறுத்துகின்றனர்.
இடர்நிறைந்த இந்நிலையில் வேமனர் பொன்மாற்றுச் சித்தின் மீது ஆசைகாட்டப்பெற்றுக் கவரப்பெறுகின்றார். தாழ்ந்த உலோகங்களைப் பொன்னக மாற்றும் இரகசியத்தை அறிந்திருப்பதாகக் கூறும் மாந்தரைத் தேடி அலைகின்றார், ஏமாற்றுகின்றவர்கள் மாறி மாறி அவரை ஏமாற்றுகின்றனர். இறுதியாக, மானிடன் என்ற பொருளை பொன்னைவிட மிக விலையுயர்ந்த பொருளாக (அஃதாவது நல்ல கருத்து நிறைந்த வாழ்க்கையாக) மாற்றுவதைக் காட்டும் ஞானசிரியர் ஒருவரைக் கண்டறிகின்றார்.
இது வேமனரின் வாழ்க்கையின் விசித்திரமான புத்தாக்கம் என்று படுகின்றதா? வேறுவிதமாகக் கூறினால், பகுத்தறிவுக்குப் பொருந்தி நம்பக்கூடியதாக இருந்தபோதிலும் இதுவும் ஒரு புதிய கட்டுக் கதையாகத் தோன்றுகின்றதா? ஆம் என்று சொல்லலாம்; இல்லை எனவும் கூறலாம். இந்தக் கதையின் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்ச்சியினின்றும் வேமனரின் கவிதையில் ஓர் அடிப்படையைக் காணமுடிகின்றது. அவருடைய பயிர்த்தொழிலின் நெருங்கிய பழக்கம்பற்றியும், அவருடைய உணவுச் சுவைகள் பற்றியும், அவர் அன்பு காட்டும் சில பறவைகள் பிராணிகள் பற்றியும், அவர் வெறுக்கும் பிறவற்றைப்பற்றியும், இசைக்கலையில் அவர் சொக்கியிருக்கும் தன்மைபற்றியும், குறிப்பாகத் தோடி ராகத்தில் அவருக்கு நாட்டம் அதிகம் உண்டு என்பதுபற்றியும், இன்னோரன்ன சிறுசிறு செய்திகள் பற்றியும் சான்றுகள் தெளிவாக உள்ளன: அவை ஏராளமாகவும் உள்ளன. அவர் இளமையாயிருக்கும்போதே அன்னை இறந்தமை, சிற்றன்னையால் அவர் அடைந்த கொடுமை, பரத்தையின்பால் அவர் அறிவு மயங்கிக் கிடந்தமை, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை, பணத்தட்டுப்பாட்டால் நேரிட்ட தொல்லைகள், இரசவாதத்தில் அவர் நாட்டம் கொண்டமை போன்ற சில பெரு நிகழ்ச்சிகள் மட்டிலும் காரணம் காட்டாது விடப்பெற்றுள்ளன. இனி ஒவ்வொன்றாக அவற்றை விளக்குவோம்.
வேமனரது கோட்பாட்டில் அன்னையின்பால் காட்டவேண்டிய அன்பும் உயர் மதிப்பும் முக்கியமான குறிப்பாகும். "அன்னையை நன்கு அறிபவர் இறைவனை அறிபவராவார்" என்கின்றார் அவர். சாதாரணமாக இது ஒரு பொதுவான வாசகமாகக் கொள்ளப் பெறலாம். ஆனால் ஒரு தெளிவான சுய அனுபவம் இவண் குறிப்பிடப்பெறும் பாடலொன்றில் அமைந்துள்ளது: "உங்கள் அன்னை உயிரோடிருக்கும்பொழுது நீங்கள் அன்புக்கு உரியவராக அதிகம் போற்றப்பெறுகின்றீர்கள்; அவர் மறைந்தபிறகு உங்களைப்பற்றி யாரும் கவலைகொள்வதில்லை; காலம் இணக்கமாக இருக்கும் பொழுது நீங்கள் நல்லனவற்றையெல்லாம் அடைதல்வேண்டும்" என்றவற்றில் இதனைக் காணலாம். அன்னையார் இறந்த பிறகு இங்கனம் வேமனர் கேவலமாகவும் கொடுமையாகவும் புறக்கணிக்கப் பெறாதிருப்பின் அவர் இத்தகைய பாடலொன்றை எழுதியிருந்திருப்பாரா? தன்னுடைய அன்னையார் உயிரோடிருக்குங்கால் தான் ஒரு சிறந்த தகுதியுள்ள மகன் என்பதை மெய்ப்பிக்கவில்லை என்பதற்கு அறிகுறியாக இதில் ஒரு பெருமூச்சு, துன்பம் மிகுந்த புலம்பல், நம் காதில் விழவில்லையா?
இதற்குச் சமமாகப் சிறப்புப்பொருள் தரும் மற்றொரு பாடலின் கருத்து இது: "என்றும் சிற்றன்னை உங்களிடம் ஒரு குறையையே காண்கின்றாள். உங்களுடைய அன்னை உங்கள்பால் காட்டும் பொறுமையை எப்பொழுதுமே அவள் காட்டாள். நுண் நோக்குகளை வளர்த்துக்கொள்ளவேண்டுமாயின் நீங்கள் மனித இயல்பினை ஆழ்ந்து காணல் வேண்டும்". தாயற்ற பிள்ளையாக இருந்து சிற்றன்னையின் கொடுமையை நீண்டகாலமாகப் பொறுக்க முடியாது அநுபவித்த ஒருவரைத் தவிர, பிறரால் இத்தகைய பாடல் எழுதியிருந்திருக்க முடியாது.
இனி, பரத்தையின் கிளைக்கதைபற்றிய குறிப்புகள் மிகவும் வெளிப்படையாகவும் நேர்முறையிலும் காணப்பெறுகின்றன. "ஒரு பரத்தை உங்களிடம் அன்பு காட்டலாம்; அவள் உங்களைப் பாராட்டவும் செய்யலாம்; ஆனால் அச்செயல் அவள் தன்னுடைய அன்னையாரிடமிருந்து வெளிப்படும் பழியுரைகளை அணுகவிடாமல் தடுத்தமையாகாது. பரத்தையொருத்தியின் அன்னை சாவதற்கு முன்னர் ஒருவர் அவளிடம் சிக்கிக்கொள்ளுதல் எவ்வளவு துயர் மிகுந்த நிலையாகும்?" என்பது ஒரு பாடலின் கருத்தாகும். உறுதியாகவே பரத்தையின் கிளைக்கதையின் முற்பகுதிக்கு இது காரணமாக அமைகின்றது எனலாம்; இதன் பிற்பகுதியின் அடிப்படை அடியிற் காணும் பாடலில் காணப் பெறுகின்றது: "கள்ளக் காதலன் ஒருவன் அன்பு குறைந்து வெறுப்பால் தன் வைப்பாட்டியை விட்டு விலகின் பிறகு, அவளது அழிவுபற்றி அவன் ஏன் தொந்தரவுபடவேண்டும்? இலையிலிருந்த உணவை உண்ட பிறகு அதனைத் தெருவில் வீசி எறிகின்றாய். அது சாக்கடையில் விழுந்தால் அதனால் உனக்கு ஆவது என்ன? வேமனர் தன்னுடைய பெருமிதம் புண்பட்ட காரணமாகத் தானகவே, பரத்தை அல்லாமல், தம்முடைய உறவிற்கு முடிவுகட்டினதை இந்தப் பாடல் குறிப்பிடுவதாகக் கருதுவது அறிவுக்குப் பொருந்த வில்லையா?
பணத்தட்டுப்பாட்டால் நேரிடும் தொல்லைகளைப் பற்றிய தெளிவான சான்று அவர் கடன்படுவதைக் கடிந்து கூறுவதாகும். "கடனின்றி வாழும் ஒருவனே மக்களுள் மிக்க செல்வந்தனவான்’ என்று அவர் கூறுகின்றார் ஒரு பாடலில்.
இங்ங்ணமே அவருடைய குடும்ப வாழ்க்கை மிகமிக மகிழ்ச்சியற்றதாக இருந்தது என்று உய்த்துணர்வதற்கு அவரது பாடல்களில் பல குறிப்புகளைக் காண்கின்றோம். அது மகிழ்ச்சியற்றதாக அமைவதற்கு அவர் அதற்கு ஒரு நேர்மையான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பது மட்டிலும் ஒரு காரணம் அன்று. அவரது தொடக்க கால வாழ்க்கையிலும், இறைவனைத் தேடி அலைபவன் தந்தையையும் அன்னையையும், துணைவியையும் குழந்தைகளையும், உண்மையில் எல்லோரையும் எல்லாவற்றையும் கைவிட்டொழிக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்த காலம்வரையிலும், வேமனர் மணவாழ்க்கையை உயர்வாகவே கருதினார். "ஒருவனுக்கு அன்பு நிறைந்த துணைவியும் குழந்தைகளும் இருந்தால் அவன் இறைவனின் இருப்பிடத்தின்மீது பேரவாக்கொள்வது ஏன்?" என்று ஒரு பாடலில் கேட்கின்றார். தனது பிற்கால வாழ்க்கையில் ஒருவர் அடங்காப்பிடாரிகளையும் வம்புச் சண்டையிடுகின்ற பெண்களையும் தகுதியற்ற பிள்ளைகளையும் பற்றி வசை புராணம் பாடுவாரேயானால் மகிழ்வற்ற மணமேயன்றி வேறு எது அவரிடம் அத்தகைய கசப்பினை உண்டாக்கியிருக்கும்? அடிக்கடி மக்கள் நாவில் தாண்டவமாடும் பாடலொன்றில் குற்றங்கண்டு தொந்தரவு கொடுக்கும் மனைவியைக் கிள்ளும் செருப்புடனும், பெண்டிர் அணியும் குல்லாயினுள்ளிருக்கும் குளவியுடனும், கண்ணில்விழுந்த மணல்துகளுடனும், தசையில் ஏறியுள்ள முள்ளுடனும் ஒப்பிடுகின்றார்.
இனி வேமனரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தமைப்பில்[1] காரணம் காட்டி விளக்கவேண்டியது இரசவாதத்தில் அவருக்கிருந்த அக்கறையைப் பற்றியாகும். நூற்றுக்கணக்கான பாடல்கள் இந்த உண்மைக்குச் சான்று பகர்கின்றன. அவருடைய சீடர்களில் சிலர் இன்றும் இரசவாத வாய்பாடுகளைப் பொறுமையாகத் தேடியெடுப்பதில் முயன்று கொண்டுள்ளனர்; சில பாடல்களின் மறைபொருளான அடிகளில் அவை புதைந்து கிடப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
வேமனருக்கு வாழ்க்கை மென்மையான வழியாக அமையவில்லை; அது பல்வேறு மேடுபள்ளங்களையும் அபாயகரமான முடக்குகளையும் கொண்ட கரடுமுரடான சாலையாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த வழியில் அடிவைத்து நடக்கவே செய்தார்; விழுந்தார். ஆனால் ஒவ்வொரு தடவையிலும் தாமாகவே எழுந்து தம் முன்னோக்கிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார். துன்பங்களிலும் கடுந்துயர்களிலும் கண்ணீர் சிந்துவதிலும் ஒவ்வொருவரும் பெறும் பங்கைவிட இவருக்கு அதிகமான பங்கு இருக்கவே செய்தது. அவையாவும் அவரைத் திண்மையுடையவராக்கி விரிந்த நோக்குடனும் பலர் புகழ்ந்து கூறும் கருத்துடனும் துணிவானதும் மரபொழுங்கிற்கு மீறிய தத்துவத்துடனும் கூடிய தனித் தன்மைவாய்ந்த மனிதராகப் பண்படுத்தின.
அவருடைய தத்துவத்தின் குவிமையம் மனிதனைப்பற்றியதாகவே இருந்தது. "இந்தியாவின் இதயம்” என்ற தனது சிறிய நூலில் டாக்டர் எல். டி. பார்னெட் சரியாகக் கூறியதுபோல் வேமனர் "மனிதனைப் பற்றியல்லாத பிறவற்றில் கருத்தில்லாதவராகவே காணப்பெறுகின்றார்". வேமனரைப்பற்றியும் அவரது மனிதப்பற்றுச் சிந்தனைபற்றியும் பார்னட்டின் பாராட்டு கீழ்க் கண்டவாறு கூறும் அளவுக்கு மனவெழுச்சியுடையதாக இருந்தது.
- மனித இனத்தைப் பற்றிக்கூறும் ஆசிரியர்களும் ஒழுக்க உரையாற்றுவோர்களும் இதயங்களைச் சோதிப்போரால் (இறைவனால்) ஒரு தராசில் வைத்து எடை காணப்பெற்றால், தெலிங்கானாவைச் சேர்ந்த பணிவான இந்தச் சிறு வேளாளரைவிட மிகு புகழும் வீறும் உடைய ஆன்மாக்கள் யாவரும் குறைந்த மதிப்புடையவராகவே காணப்பெறுவர்.
- ↑ இந்தப் புத்தமைப்பின் ஒரு பகுதியை எழுதுவதற்கு திரு இரால்லபள்ளி அனந்த கிருட்டிண சர்மாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.