வேமனர்/மந்தமான உறுதியற்ற விளக்குகள்
3. மந்தமான உறுதியற்ற விளக்குகள்
“இன்று இருள் மந்தமான உறுதியற்ற விளக்குகளால்
ஒளி கொடுக்கப்பெறுகின்றன”
-ஏ. ஜி. கார்டினர்
தம்முடைய வெறுமையை மறைப்பதற்காகவே கட்டுக் கதைகள் வரலாறு என்ற முகமூடியைத் தரித்துக்கொள்ளுகின்றன. ஆயினும் அந்த முகமூடி மிக மெல்லியதாக இருப்பதால் வெறுமை தெளிவாகவே புலனாகின்றது. வேமனரைப் பற்றிய கட்டுக்கதைகள் யாவும் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. அவை பெருமையாக ஆண்டுக் கணக்குகளைக் காட்டுகின்றன; அவை அரசு மரபுடன் தம்மை இணைத்துக்கொள்ளுகின்றன. எனினும், அவை ஒருகணநேரமாயினும் திறந்தெரிந்து ஆய்தலுக்கு முன்னர் நிற்கமுடிகின்றதில்லை.
'வேமர்' அல்லது 'வேமனர்' என்ற பெயர் இன்று வரையிலும் ரெட்டி வகுப்பினரிடையே நிலவும் சாதாரணப் பெயர் அல்ல. ஒரு நூற்றண்டுக்காலம் ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை அடுத்த பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த ரெட்டி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் யாவரும் 'வேமர்களே'. அங்ங்னமே, நம் கவிஞரும் அப்பெயரால் வழங்கி வரலாயினர். ஆதலின், இக்கவிஞரும் அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவராகவே இருத்தல் வேண்டும். அவர் அங்கனம் இராவிடினும், அந்தக் குடும்பத்துடன் தன்னை இணைத் துக்கொண்டதனாலேயே நேரடியாகவே அரச மதிப்பு நிலையை வழங்கி இருத்தல் வெண்டும். கவிஞருடைய பெயர் அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களின் பெயரைப்போலவே இருத்தல் நம்பக் கூடியதான தோற்றத்தையும் வரலாற்றுத் தன்மையையும் கொண்டு இணைப்பிற்குத் துணையாக உள்ளது. மேலும், சில ரெட்டி அரசர்கள் கவிஞர்களாகவும், புலவர்களாகவும் உரையாசிரியர்களாகவும் திகழ்ந்த செய்தி இந்த இணைப்பை உருக்குபோன்ற உறுதியான இணைப்புத் தோற்றத்தையும் அளித்துவிடுகின்றது.
ஆனால் 'கோமட்டி' என்ற பெயரடை எங்ஙணம் ரெட்டி அரசர்களில் ஒருவருடைய பெயரின் ஒரு பகுதியாக அமைந்தது? முன்னர்க் கூறியதுபோல் 'கோமட்டி’ என்ற சொல் வைசியர் என்ற சொல்லுக்குப் பரிணாமச்சொல்லாகும். அஃதாவது அது இந்துச்சாதிப் படிமரபில் மூன்றாவதாக இருப்பது. ரெட்டிகள் அடுத்து நிற்கும் 'சூத்திரர்’ என்ற படியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இங்ஙனம் இருக்கும்போது ரெட்டி ஒரு கோமட்டியாக இருக்கும் தோற்றத்திற்கேற்ப ஒவ்வாத் தன்மையை எங்ஙணம் விளக்குவது? மேலும், இன்னார் என்று ஆள் அறியப்பெறாத ஒரு ரெட்டி உழவர் குடும்பத்தினர் மிக விரைவாகத் திகைப்பூட்டும் செல்வத்தையும் ஆட்சியையும் எங்ஙனம் அடைந்தனர்? இந்த இரண்டு வினாக்களையும் கட்டுக் கதைகள் தாம் விரும்பியவாறு ஒரு கோமட்டி வேமரையும் அவருடைய இரண்டு கல புருடவேதியையும் கொண்டு நிறைவு செய்துவிட்டன.
வரலாற்று அடிப்படையிலும் இலக்கிய அடிப்படையிலும் மேற்கொள்ளப்பெற்ற ஆராய்ச்சி ரெட்டி அரசர்களின் குடும்பப் பெயர் தொண்டி அல்லவென்றும், ஆனால் அது தாசட்டி என்றும்; புரோலய வேமருக்கு முன்னர் அவர் தந்தையாரின் பெயர் வேமர் என்பதாகவும், புரோலய வேமரின் தலைநகர் கொண்டவீடு அல்லவென்றும், ஆனால் அது அட்டங்கி என்றும்; புரோலயாவுக்குப் பின்னர், பட்டத்திற்கு வந்தவர் அனவோத்த வேமர் என்பதும்; சிலகாலம் கழித்து அட்டங்கியிலிருந்து கொண்ட வீட்டிற்குத் தலைநகரை மாற்றியது புரோலய வேமரின் தம்பி அல்லர் என்பதும், ஆனால் அவர் அவருடைய திருக்குமாரர் என்பதும்; குமரகிரி வேமரை அடுத்து ஆட்சிபுரிந்த பெதகோமட்டி வேமர் என் பவர் அவருடைய குமாரர் அல்லர் என்பதும், அவர் அவருடைய சிற்றன்னையின் குமாரர் (cousin) என்பதும்; இறுதியாக அரச மரபின் இறுதி அரசராகிய இராச்சவேமர் என்பவர் பெத கோமட்டி வேமரின் தம்பி அல்லர் என்பதுமாகக் காட்டியுள்ளது. இது கட்டுக்கதைகள் கூறும் வரலாற்றிற்கு முற்றிலும் வேறுபட்டதாகும். "இந்த வரலாற்றுச் செய்திகள் யாவும் வேமனர் அரச மரபின் வழிவந்த இளவரசர் என்ற அறிவிப்பினை எங்ஙணம் தள்ளுபடி செய்கிறது" என்று ஒருவர் வினவலாம். அதற்குரிய விடை மிகவும் எளிதானது. கட்டுக்கதைகள் யாவும் வேமனரைக் குமரகிரி வேமர் என்பவரின் மூன்றாவது குமாரர் என்றும் அவரே கடைக்குட்டியுமாவர் என்றும் கூறுகின்றன. இந்த அரசருக்கு மூன்று குமாரர்கள் இலர்; ஆனால் அவருக்கு ஒரே குமாரர்தான்; அவரும் இளம்பிராயத்திலேயே இறந்துவிட்டார்.
கட்டுக்கதைகளின் அடிமட்டத்தையே தகர்த்தெறிவது மிகவும் எளிதானதே; இயலாதது அன்றாயினும், வேமனரின் வரலாற்றுக்குரிய நம்பகமான செய்திகளைத் திரட்டுவதென்பது மிகச்சிரமமான பணியாகும். சி. பி. பிரௌன் என்பவர் இந்த முயற்சியில் ஈடுபட்ட முதற் புலவராவார். மிகவும் அநுகூலமான சூழ்நிலைகளில் அவர் மிக அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும்-நம்முடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, ஒருவகையில் தன் ஆய்வுகளை மேற்கொண்ட காலத்தில் ஒன்றரை நூற்றாண்டுகள் வேமனருக்குப் பக்கமாக இருந்தார். அவரால் குறைவான அளவே பெற முடிந்தது. தான் தொகுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் குறிப்புகளுடன் கி. பி. 1829-இல் முதன் முதலாக வெளியிட்ட "வேமனரின் நீதி, சமய அங்கதப் பாடல்கள்" என்ற தலைப்பினைக் கொண்ட நூலின் நூன்முகத்தில் பிரௌன் இவ்வாறு கூறுகின்றார்:
- அவர் (வேமனர்) பிறப்பில் காப்பு அல்லது உழவர் பரம்பரையைச் சேர்ந்தவர். சிலர், சந்தனூல் (அல்லது கர்நூல்) நாட்டைச் சேர்ந்த அன வேம ரெட்டி என்ற தலைமை நிலையிலுள்ளவரின் குடும்பத்தைச் சார்ந்தவர் என்று உறுதியாகக் கூறுகின்றனர்; இந்தக் கவிஞரின் சகோதரர் கண்டிக்கோட்டை என்ற கோட்டையை ஆட்சி செய்தார் என்றும் அவர்கள் உரைக்கின்றனர். மற்றும் சிலர் சந்தநூலைச் சார்ந்த கிறிஷ்டிபாடு என்ற இடத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்; மேலும் சிலர் அவர் குண்டுரைச்சார்ந்த இன கொண்டாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் உரைக்கின்றனர்; ஆனால் நான் மட்டிலும் கடப்பை மாவட்டத்திலுள்ள சிட்வெல் என்ற இடத்தில் பிறந்தவர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆயினும், இந்த இடங்களிலெல்லாம் அவரைப்பற்றி உசாவி அறிவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன என்றபோதிலும் நான் எத்தகைய செய்தியையும் அறியக்கூடவில்லை. எனினும், சில பாடற் பகுதிகளில் காணப் பெறும் வட்டார வழக்கு (dialect) இந்த நகரங்கள் யாவும் அமைந்திருக்கக்கூடிய தெலிங்கானாவின் தென்-மேற்குப் பகுதிகளைச் சார்ந்தவராக இருக்கலாமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. நம் வரலாற்றுக் காலத்தில் அவர் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவராக இருக்கலாம். என நம்பப் பெறுகின்றது.
ஆனால் பிரௌன் தயாரித்து வெளியிடாத மொழிபெயர்ப்பு பாடல்களைக்கொண்ட பெரியதொகுதி ஒன்றில்[1], அவர் கருத்து இன்னும் மிகத் திட்டமாக உள்ளது. இதில் அவர் கண்டிக்கோட்டை என்ற இடத்திற்கருகில் வேமனர் பிறந்தார் என்பதைத் தான் நம்புவதாகச் சொல்லும் அளவுக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளுகின்றனர். மேலும் அவர் வேமனரின் பாடல்களின் சில அகச்சான்றுகளின் அடிப்படையில் வேமனர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதினார் என்றும், அவர் பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதிவரையில் வாழ்ந்தார் என்றும் முடிவுக்கு வரலாம் என்று நிலை நிறுத்துகின்றனர். இங்கு நாம் வேமனரின் காலத்தினைப்பற்றிய தம் உறுதியான கருத்தினைப் பிரௌன் ஓரளவு மாற்றிக்கொண்டார் என்பதைக் காணமுடிகின்றது.
ஆனால், மீண்டும் பிரெளன் தம் கருத்தில் தடுமாறி வேமனரைப் பதினைந்தாம் நூற்றாண்டினைச் சார்ந்தவர் எனக்கொள்ளு கின்றார், "வேமனரின் நீதி, சமய, அங்கதப் பாடல்கள்" என்ற தொகுப்பு நூலின் இரண்டாம் பதிப்பினைக் கி. பி. 1839-இல் வெளியிட்டார். அதன்படிகள் கிடைப்பதற்கரியனவாக உள்ளன: ஆந்திர மாநிலத்தில் தனியார் பொறுப்பிலும் அரசின் பொறுப்பிலுமுள்ள எந்த நூலகத்திலும் ஒருபடிகூடக் கிடைக்கவில்லை. ஆனால் மேஜர் மேக்டனுல்டு என்பவரின் மூலம் அதனைப்பற்றிய சில விவரங்களைச் சேகரிக்க முடிகின்றது. மேக்டனால்டு கூறுகின்றார்: "இந்தப் பதிப்பில் மொழிபெயர்ப்பும் குறிப்புகளும் நீக்கப்பெற்றுள்ளன; ஆனால் சமய, நீதி பற்றிய பகுதிகளில் அதிகமான பாடல்கள் சேர்க்கப்பெற்றுள்ளன. முதல் பதிப்பில் 693 பாடல்களே இருக்க, இரண்டாம் பதிப்பில் 1,163 பாடல்கள் உள்ளன. மேலும் மேக்டனால்டு கூறுவதாவது: "அவருடைய இரண்டாம் பதிப்பில் வேமனரின் பாடல்கள் நான்கு நூற்றாண்டுகட்கு முற்பட்டவை என்ற பொதுவான நம்பிக்கை நிலவுகின்றதாகவும், தெலுங்கிலுள்ள பசவபுராணத்தின் ஆசிரியரும் இவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர் என்று ஜங்கமர்கள் கூறுவது சரியாக இருப்பின், இஃது அவருடைய காலத்தை இன்னும் முன்னுக்குக் கொண்டு செல்லுகின்றதாகவும் பிரௌன் கூறுகின்றார். ஆகவே பிரௌனின் முதல் தற்காலிகக் கோட்பாட்டின்படி வேமனர் ஆங்கில எழுத்தாளராகிய பேக்கன், ஆங்கில நாடக ஆசிரியரான செகப்பிரியர் இவர்களின் கிட்டத்தட்ட ஒரே காலத்தவராகின்றார், அவருடைய இரண்டாம் கோட்பாட்டின்படி மற்றோரு ஆங்கில எழுத்தாளராகிய சாசரின் காலத்தவராகின்றார். இந்த இரண்டு தற்காலிகக் கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்ளாது, மேக்டனால்டு தான் தனியாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் அடிப்படையில், வேமனர் பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர் என்பதை நிலைநிறுத்துகின்றார்.கோவர் என்பாரும் வேமனரின் காலத்தைப் பற்றிய தன் சொந்தக் கொள்கைகளைக் கொண்டுள்ளார். அவர் கூறுகின்றார்:
- இஸ்லாம் சமயத்தைப்பற்றியும் முஸ்லிம் ஆட்சியைப் பற்றியும் குறிப்புகள் இல்லாமையும் பத்தாம் நூற்றாண்டிலும் அதற்கு அண்மையிலுமான காலத்திலிருந்த தமிழ்க் கவிஞர்கள் கையாண்ட பொருளையும் அவர்தம் நடையையும் கிட்டத்தட்ட ஒத்துள்ளமையும் வேமனர் வாழ்ந்த சரியான காலம் பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னதாக இருத்தல் முடியாது என்று குறிப்பாக அறிவிக்கச் செய்கின்றன.
பிரௌன் வெளியிட்ட வேமனரின் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பைக் கோவர் பார்த்திருந்தால் தான்கொண்ட கொள்கைக்குப் பிரௌனின் ஆதரவையும் உரிமையாகக் கொண்டிருந்திருப்பார். அங்ஙணம் இருந்தபோதிலும் அவர் "இஸ்லாமைப் பற்றியும் முஸ்லீம்களின் ஆட்சியைப் பற்றியும்" குறிப்பிடவில்லை என்று கூறுவது தவறாகும். உண்மையில் வேமனரின் பாடல்களில் குறைந்தபட்சம் முஸ்லீம்களைப் பற்றிய மூன்று மேற்கோள்கள் உள்ளன.
கோவரைப் போலன்றி கேம்பெல் என்பார் ஒருவகையில் தெளிவில்லாதிருப்பினும் மேக்டனாலுடன் பொதுவாக இணக்கமாகக் காணப்பெறுகின்றார். அவரும் வேமனரைக் கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சார்ந்தவராகவே கருதுகின்றார். அவர் கூறுகின்றார்: "வேமனர் கிட்டத்தட்ட 250 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்தார் என்று பொதுவாக நம்பப்பெறுகின்றது. அவர் வேமனரின் பிறப்பிடத்தைக் குறித்து மிக உறுதியுடன் உள்ளார். அவர் கூறுவதாவது:
கேம்பெல் வருந்தியுழைக்கும் ஓர் ஆராய்ச்சியாளர். வேமனர் தமது இறுதி நாட்களைக் காட்டாரப் பள்ளியில் கழித்து அங்கேயே இறந்ததாக மரபு வழியாக அறியக்கிடப்பதால், அவர் அந்தச் சிற்றூருக்குச் சென்றார். அங்கு வேமனரினுடையது என்று கூறப்பெற்ற ஒரு கல்லறையைக் கண்டார்; வேமனரின் நேர்வழி வந்தவர் என்று உரிமை கொண்டாடி அக்கல்லறையைப் பாதுகாத்துவரும் ஒருவரைக் கண்டு பேசினர். வேமனரின் "அச்சம்தரும் மரத்தாலான திருமேனி" யொன்றினைக் கொண்ட கோயிலொன்று அக்கல்லறையின் அருகில் இருப்பதைக் கண்ணுற்றார். "வேமனரே தங்கள் கடவுள்" என்றும், அவர் ஒருவரையே தாம் வழிபடுவதாகவும் உறுதியாகக் கூறிய மக்களைக் கண்டார். காட்டாரப் பள்ளியினின்று திரும்பினவுடன் தான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அழகிய உரைநடையில் அமைத்தார்.
காம்பெல்லின் கவனத்திற்குக் கொண்டு வராவிடினும் வேமனரைத் தம் முன்னோர் என்று உரிமை கொண்டாடும் காட்டாரப் பள்ளிக் குடும்பத்தின் வசம் 'வேமன சரித்திரமு' என்ற வரலாற்று நூல் ஒன்று உள்ளது. அது மிகவும் சேதமடைந்த நிலையிலுள்ள ஓலைச் சுவடிக் கையெழுத்துப்படியாகும். அதன் ஒரே ஒரு மற்றோரு படி காக்கிநாடாவிலுள்ள ஆந்திர சரசுவதி பரிஷத்தின் தொகுப்பிலுள்ளது. அதனைச் சோதித்துப் பார்க்கையில் இந்த 'வேமன சரித்திரமு' என்ற நூல் மிகப் பிற்காலத்தில், அதாவது கி. பி. 1845-இல், ஒன்று சேர்த்துவைக்கப்பெற்றிருந்தது. 'வேமன யோகிந்திர சரித்திரமு' என்ற நூலில் திரட்டிவைக்கப்பெற்றிருப்பதை விட முட்டாள்தனமானவையும் நம்பத்தகாதவையுமான பல கட்டுக் கதைகள் இந்த நூலில் நிறைந்து கிடக்கின்றன. மேலும் இதில் அடங்கியுள்ள சில வரலாற்றுச் செய்திகளும் துங்கவேமர் என்று வழங்கப்பெறும் மற்றொரு வேமரைப் பற்றியவையாகும். உண்மையிலேயே, துங்கவேமரால் புனையப்பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் அது தன்னகத்தே கொண்டுள்ளது.
வேறு மேற்கத்திய புலவர்கட்குப் பின்னர் எழுதும் கிரியர்ஸன் என்பார் வேமனர் பதினாராம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறுகின்றன்றார். மற்றையோருடையவற்றைப் போலவே, இவரது கூற்றும் செவியறி தகவல்களையே அடிப்படையாகக் கொண்டதாகும்.வேமனரைப்பற்றித் தம் ஆய்வு மனத்தைச் செலுத்திய முதல் தெலுங்கு ஆராய்ச்சிப் புலவர் கே. வி. இலக்குமணராவ் என்பவராகும். ஆந்திரத்தில் வரலாற்றுத் துறையிலும் இலக்கியத் துறையிலும் ஆராய்ச்சி முன்னவராக இருந்தவர் இவர்தான் என்று சொல்லலாம். இவர் காட்டிய நெறியைப் பின்பற்றி மற்றும் சிலரும் வேமனரைப்பற்றி அக்கறை கொண்டனர். இவர்களுள் வங்கூரி சுப்பாராவ், இரால்லபள்ளி அனந்தகிருஷ்ணசர்மா, சேஷாத்திரி ரமணகவுலு என்ற இரட்டைக் கவிஞர்கள், வேட்டுரி பிரபாகர சாஸ்திரி, பண்டாருதம்மய்யா, சங்கந்தி சேஷய்யா, வேதம் வேங்கடகிருஷ்ண சர்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எல்லோருமே தம்மால் இயன்றதை மிக நன்றாகச் செய்தனர். ஆனால் வேமனரின் வாழ்க்கை வரலாற்றினைச் சூழ்ந்துள்ள இருட்படலத்தைப் போக்குவதற்கு அவர்கள் ஏற்றிய விளக்குகள் "மந்தமாகவும் நம்பமுடியாதவையாகவும்" இருந்தன. அவர்கள் தமக்குள் வேமனரை ஆந்திரம் முழுவதிலும் பிறந்தவராகவும் பதினைந்தாவது முதல் பதினெட்டாவது நூற்றாண்டுகளில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இருந்தவராகவும் செய்தனர்!
இதுகாறும் வேமனரைப்பற்றிப் பகுத்தறிவுப் பாங்குடனும் அறிவியல் மனப்பான்மையுடனும் விரிவாக ஆராய்ச்சி செய்த தெலுங்குப் புலவர்கள் வங்கூரி சுப்பாராவ் இரால்லபள்ளி அனந்த கிருஷ்ணசர்மா ஆகிய இருவர் ஆவர். இவர்களுள் முன்னர்க் குறிப்பிட்டவர் ஆராய்ச்சியுடன் பொருந்திய வேமனரின் வாழ்க்கை வரலாற்றைக் கி. பி. 1922இல் வெளியிட்டார்; பின்னர்க் குறிப்பிட்டவர் "சர் இரகுபதி வேங்கட்டரத்தினம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளு"க்குரிய பொருளாக வேமனரைத் தேர்ந்தெடுத்துக் கி. பி. 1928இல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் ஆதரவின்கீழ் அப்பொழிவுகளை ஆற்றினர். வேமனரைப்பற்றி எல்லா எழுத்தாளர்களுள் இந்த இரண்டுபேர்கள்தாம் பல்வேறு செய்திகளில், குறிப்பாக வேமனரின் காலத்தைப்பற்றியவற்றில், அறிவுக் கூர்மையுடன் மோதிக் கொள்ளுகின்றனர்!
வங்கரியாரின் கருத்துப்படி வேமனர் பதினைந்தாவது நூற்றாண்டின் முற்பகுதியில் பிறந்தவர். அவர் சீநாதருக்கு இளையவர்களாக அவர் காலத்தில் வாழ்ந்தவர்களுள் ஒருவராவார். தம்முடைய முடிவுகளுக்கு இலக்குமணராவின் ஆதரவை உரிமையாகக் கொள்ளுகின்றனர் வங்கூரியார். வேறு இடைக்காலப் புலவர்கள் வேமனரைப்பற்றிக் காட்டியுள்ள சில மேற்கோள்களை இவர் அதிகமாகப் பயன்படுத்துகின்றார். இந்தச் சான்று அதிகமாக ஆதரவு அளிப்பதாக இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்தவாறு இந்த நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டின் இடையிலிருந்துதான் வேமனர் தெலுங்குப் புலவர் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பெற்றிருக்கின்றார்; தொடக்கக்காலத்தில் அவர் புறக்கணிக்கப் பெற்றார்; அல்லது அவர் ஒரு கவிஞரே அல்லர் என்று விலக்கப் பெற்றார். இந்த நிலைமையின் காரணமாக எந்த ஒரு பழங்காலக் கவிஞரோ, அல்லது மிகக் குறைவான நிலையில், துரகராமகவி. எடப்பாடி எர்ரப்பிரகடா போன்ற புலமைசான்ற கவிஞர்களுமோ எண்ணம் உருவாக்குமுறையில் வேமனரைப் பற்றி நன்மதிப்புடன் குறிப்பிடவில்லை. தம்முடைய பெயரில் 'வேமா' என்பதை ஒரு பகுதியாகக் கொண்டு கொண்டவீடு இராஜமகேந்திரபுரம் ஆகிய பகுதிகளை ஆண்ட ரெட்டி அரசர்கள் புலவர்களைப் போற்றும் புரவர்களாகத் திகழ்ந்தனர்; அவர்களுள் சிலர் தம்முடைய உரிமையால் புகழ் மிக்க புலவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினர். எந்த ஒரு இடைக்கால இலக்கியத்திலும் எந்த ஒரு பூர்வ கவித்துதியிலும் (முற்காலப் புலவர்களைப் போற்றும் துதிப்பாடல்கள்) ‘'வேமரைப்" பற்றிய குறிப்பு அநேகமாக இந்த அரசர் மரபைச் சார்ந்த புலவர்கள், கவிஞர்கள் ஆகிய ஒருவரைப்பற்றிய குறிப்பாகவே இருக்கும்.
வேமனரின் காலத்தைப் பின்னால் தள்ளுவதற்கு வங்கூரியார் பிடிவாதமான முயற்சியை மேற்கொள்ளுதலையும் இரால்ல பள்ளியாரிடம் அதனை முன்னுக்குத் தள்ளும் முனைப்பான போக்கினையும் காணலாம். இரால்லபள்ளியாரின் கருத்துப்படி வேமனர் பதினெட்டாவது நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராதல் வேண்டும். மறுக்க முடியாத சான்றின்மையால் பிடிவாதமாக இருப்பது துடுக்கான செயலாகும்; அவருடைய பிறப்பு பற்றியும் (1652) அவருடைய இறப்பு பற்றியுமான (பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகள்) தம்முடைய தொடக்கக் கால வெளியீடுகளில் பிரௌன் அவர்கள் கொண்ட காலக் குறிப்புகள் சரியானவையாக இருக்கலாம்.
வேமனரின் பிறப்பிடத்தைப் பற்றிய விஷயத்தில் வேமனரின் பாடல்களில் காணப்பெறும் அகச்சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வங்கூரியார் அவர் பிறப்பிடம் கொண்ட வீடு என்று சட்டென்று முடிவுகட்டுகின்றார்; ஆனால் இரால்லபள்ளியாரோ மாறுபட்ட சான்றினைக் காணும்வரை கொண்டவீட்டினைக் கவிஞரின் பிறப்பிடமாக ஒப்புக்கொள்ளலாம் என்று இணங்குகின்றார், விரிந்த நிலையில் மாறுபாடுகள் இல்லாத ஆயப்படும் பொருள் இஃது ஒன்றேயாகும். ஆனால் வேமனர் கொண்ட வீடு என்னும் இடத்தில் தமது தொடக்கக் கால வாழ்க்கையைக் கழித்தார் என்றும், ஆனல் அவர் மூகசிந்தப் பள்ளியில் பிறந்தார் என்றும் சிலர் கருதுகின்றனர். வேமனர் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அவர்தம் பெற்றேர்கள் கொண்டவீடு என்னும் இடத்திற்குக் குடியேறினர் என்பது அவர்கள் கொண்டுள்ள கருத்தாகும். இந்த வாதத்தை நீளவிடாமல் செய்யக் கருதும் இரால்ல பள்ளியார் வேமனர் எங்குப் பிறந்தாலும் அவர் தம்முடைய வாழ்நாளின் சிறந்த பகுதியை 'இராயர்சீமை' எனக் கருதப்பெறும் கடப்பை கர்நூல் என்ற மாவட்டங்களிலேயே கழித்தார் என்று கூறுகின்றார்.
அதிக வாதத்திற்கிடமான மற்றொரு முக்கியமான செய்தி அவருடைய சாதியைப் பற்றியதாகும். வேமனர் காப்பு மரபினர் என்கின்றார் இரால்லபள்ளியார். அதற்கு மாறாக வங்கூரியார் வேமனர் ரெட்டி வகுப்பைச் சார்ந்தவர் என்று உறுதிப்படுத்துகின்றார். இருவருமே வேமனரைப் சான்றாளராகக் கொள்ளுகின்றனர். வேமனர் இருவருக்குமே சம அளவில் கடமைப்பட்டவராகின்றார், ஒருதடவை தன்னைக் காப்பு என்பதாகக் கூறிக்கொள்ளுகின்றார், பிறிதொரு தடவையில் தம்மை ரெட்டி என்றே மொழிகின்றார். ஒரு சமயம் காப்பு ஆகவும் பிறிதொரு சமயம் ரெட்டியாகவும் இருப்பதால் வேமனர் ஐயப்பாட்டுக்கு இடமானவராக அமையவில்லை. அண்மைக்காலம் வரையிலும், உண்மையில் இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரையிலும், காப்பு', 'ரெட்டி’ என்ற சொற்களும் ஒன்றற்கொன்றுகப் பரிமாற்றம் செய்யக் கூடியனவாக இருந்தன. எடுத்துக்காட்டாக, எட்கார் தர்ஸ்டன் என்பாரால் எழுதப்பெற்றுக் கி. பி. 1919-இல் வெளியான "தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும்" என்ற நூலில் 'ரெட்டி', என்ற பிரிவிற்குத் தனியான பதிவு செய்த குறிப்பு இல்லை; 'காப்பு' என்ற சொல்லுக்குக் கீழே அந்நூல் ரெட்டிகளைப் பற்றிய மரபுப் பண்பு வரலாறு, பழக்கங்கள், வழக்கங்கள் ஆகியவைபற்றிய ஒரு நீண்ட கட்டுரையைக் கொண்டுள்ளது. அது 'காப்பு’, ‘ரெட்டி’ என்ற சொற்களை ஒரு பொருட் பன்மொழியாகப் (Synonym) பயன் படுத்துகின்றது. பிரௌன் தொகுத்த 'தெலுங்கு-ஆங்கில அகராதி' யில் காப்பு' என்ற சொல்லுக்குக் 'குத்தகை எடுத்தவர்', 'உழவர் பயிர்செய்வோர்’, ‘நாட்டுப்புறத்துக்குரியவர்', 'பட்டிக்காட்டார்', 'குடியாள்', “ஆள்', 'குடியிருப்போர்’ என்ற பொருள்கள் காட்டப்பெற்றுள்ளன. இந்த எல்லாப் பொருள்களுள்ளும் 'உழவர்' என்ற பொருளே பொதுவில் அதிகமாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளது. புழக்கத்தில் 'உழவர்' என்ற பொருளில் அதிகமாகப் பயன்படுத்தப்பெறும் 'ரய்த்து’ என்ற சொல் தெலுங்குச் சொல்லே அன்று; அது 'ரையத்' என்ற உருதுச்சொல் சிறிது எழுத்து மாற்றத்துடன் காணப்பெறுவதாகும். மிக அண்மைக்காலத்தில்தான் காப்பு என்ற சொல் தனியான ஒதுங்கிய பொருளில் இல்லாவிடினும், சாதியைக் குறிக்கும் சொற்பண்பில் முனைப்பாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஆகவே, நாம் வேமனரைக் காப்பு என்றும் சொல்லலாம்; ரெட்டி என்றும் குறிப்பிடலாம். என்றபோதிலும், தெளிவாகவும் விவரமாகவும் உள்ள கூற்று வற்புறுத்தப்பெற்றால் அவரை ஒரு 'ரெட்டி-காப்பு’ என்று சொல்லி வைக்கலாம். அதாவது வாழ்க்கைத் தொழிலில் உழவராக உள்ள ரெட்டி என்பது இதன் பொருளாகும்.
மேலும், வங்கூரியாரும் இரால்லப்பள்ளியாரும் வேமனர் இறந்த இடத்தைக் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். வேமனர் தம்முடைய இறுதி நாட்களைக் காட்டாரப்பள்ளி என்ற இடத்தில் கழித்து அங்கேயே மரித்தார் என்று வங்கூரியார் கருதுகின்றார். இதனை அவர் மிகத் தெளிவாகவும் விவரமாகவும் கூறாவிடினும் காட்டாரப்பள்ளியிலுள்ள கல்லறை உண்மையிலேயே வேமனருடையது எனக் கருதுவதாகத் தெரிகின்றது. இந்தச் செய்தியைக் குறித்து இரால்லபள்ளியார் தீராத ஐயங்களைக் கொண்டுள்ளார். கேம்பெல்லைப் போலவே, இவரும் ஒருமுறை காட்டாரப்பள்ளிக்குச் சென்றிருந்தார். வேமனரைப் பற்றித் தம்முடைய ஆந்திரப் பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளுக்குப் பொருள் திரட்ட நேர்ந்தபொழுது நாற்பதாண்டுகட்கு முன்னர் இச்செயல் நிகழ்ந்தது. அப்பொழுது காட்டாரப்பள்ளியில் அர்ச்சகராக இருந்தவர் கோயிலும் கல்லறையும் வேமன கவியுடன் போலியான தொடர்பு கொண்டுள்ளதை ஒப்புக் கொண்டதாக இரால்லபள்ளியார் கூறுகின்றார். ஆகவே, வேமனர் காட்டாரப்பள்ளியில் இறக்கவில்லை என்றும் அவர் இராயர்சீமையில் பிறிதோர் இடத்தில் இறந்திருக்கவேண்டும் என்றும் இரால்ல பள்ளியார் தம் கொள்கையை நிலைநிறுத்துகின்றார். குறிப்பான ஒப்புதலுடன், வேமனர் ஆதிசங்கரரைப் போலவே ஒரு குகையினுள் புகுந்து தமது உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார் என்று காலஞ்சென்ற வேடுரி பிரபாகர சாஸ்திரி தன்னிடம் கூறியதாகவுள்ள ஒரு மரபு வழக்கினைச் சுட்டுகின்றார் அவர். வேமனரின் சீடர்களுள் ஒரு பகுதியினர் இந்தக் குகை கடப்பை மாவட்டத்திலுள்ள பாமூர் என்ற சிற்றூரிலிருப்பதாகக் கூறுகின்றனர்.
இவையும் இவைபோன்ற பிற ஆய்படு பொருள்களும் இன்னும் தீவிரமாக வாதிடப் பெறுகின்றன. ஆராய்ச்சிப் புலவர்கள் சிறுசிறு குழுக்களாக இருந்து வாதிட்டுக் களைத்துப்போகும் வரையில் இந்த வாதத்திற்கு ஒருவித முடிவும் இருத்தல் முடியாது.
- ↑ இது 1967-இல் ஆந்திர மாநில சாகித்திய அகாடமயாரால் (ஐதராபாத்) வெளியிடப்பெற்றுள்ளது. இதில் 1215 பாடல்கள் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புடன் காணப் பெறுகின்றன.