வேமனர்/கட்டுக்கதைகளின் மடியில்

விக்கிமூலம் இலிருந்து

2. கட்டுக்கதைகளின் மடியில்

"பழைய கட்டுக்கதைகளின் மடியில் உறங்குகிறேன்"

- கீட்ஸ்.

ன் காலத்திலேயே கட்டுக்கதையினுள் அடங்கிய வேமனர் இப்போது கட்டுக்கதைகளின் திரள்களில் அடங்கியுள்ளார். மலையளவுள்ள திரள்களில் அடங்கியுள்ளார் என்று கூடக் கூறலாம். அவர் பல்வேறு வகைகளில் இணையற்றவராகத் திகழ்ந்தார். நடத்தையில், ஆடை அணிவதில் அல்லது முற்றிலும் ஆடையற்றியிருத்தலில், இயல்பான மனப்பாங்கில், தனிக்கோட்பாட்டில், இன்னும் பல வகைகளில் அவருடைய தனித்தன்மை தெளிவாகக் காணப்பட்டது என்று சொல்லலாம். பலர் அவரை ஒரு மகாத்மா என்றும், இன்னும் பலர் அவரை ஒரு வாய்வீச்சுக்காரன் என்றும், பைத்தியக்காரன் என்றும் சொல்லும் அளவுக்கு உண்மையிலேயே அவரது தனித்தன்மை தெளிவாகப் புலனாயிற்று. அத்தகைய ஒரு மனிதர் எக்காலத்திலிருப்பினும் எந்த இடத்திலிருப்பினும் கட்டுக் கதைகள் அவரைச் சுற்றி வேகமாகவும் அதிகமாகவும் திரள்கின்றன. மக்கள் திரளுக்குரிய செய்திப் போக்குவரத்துத் தொடர்பு மிகக்குறைவாகவுள்ள காலத்தில் எதையும் எளிதாக நம்பும் ஒரு சமூகத்தில் வேமனர் வாழ்ந்தார். ஆகவே, அவர் ஒவ்வொரு கட்டுக்கதையின் நடுப்பகுதியாகத் திகழ்ந்தார். அக்கட்டுக்கதைகள் மிகவும் முட்டாள்தனமாகவும், நம்பத்தகாதனவாகவும், இயல்புக்கு மாறானவையாகவும், அருவருப்பாகவும் இருந்தன என்று கூறலாம்.

வேமனரைக் குருவாகவும், கடவுளாகவும் கருதும் சீடர்கட்குக் கட்டுக்கதைகளின் கதாநாயகராகத் திகழும் வேமனர் உண்மையான வேமனராகவே காணப்பெற்றார். இமயமலை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக விளங்கினர்; தெய்வ நிலையிலும் குறைவற்றவராகத் திகழ்ந்தார். வரலாற்று வேமனரைக் காண்பதற்குக் கட்டுக்கதைகளின்புறத்தே அவரைக்கொண்டுவந்து காண்பதற்கு முயன்றால், அச்சீடர்கள் அம்முயற்சியை முறையற்ற அவச் செயலாகவும் கிட்டத்தட்ட தெய்வப் பழிப்பாகவும் கருதுகின்றனர். அவருடைய சீடர்களைத் தவிர இலட்சக்கணக்கான பிறரும் சிறிதும் மாறாத அதே கருத்தினையே கொண்டுள்ளனர். காரணம், தெலுங்கில் திறனாய்வுடன்கூடிய ஒரு வாழ்க்கை-வரலாற்று நூலுக்கு எதிராகக் கட்டுக்கதைகளில் தொடங்கிக் கட்டுக்கதைகளிலே முடியும். மிக விரிவாகப் புழங்கும் பத்துக்கு மேற்பட்ட வாழ்க்கை-வரலாற்று நூல்கள் நிலவுகின்றன. சி. இராமகிருஷ்ண ராவ் அவர்கள் வேமனரைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஒரே ஒரு வாழ்க்கை வரலாறும் கட்டுக்கதைகளின் கோவையாகவே அமைந்துள்ளது. வேமனரின் வாழ்க்கை-வரலாற்று ஆசிரியர்களுள் மிகத்தொன்மை வாய்ந்தவர் மசூலிப்பட்டினத்தைச் சார்ந்த ஆர். பூர்ணயாச்சார்லு என்பவர். மாவட்டக் காவலர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்த இவர் குறைந்த கல்வி கற்றவர்; பண வசதியிலும் குறைந்தவர். ஆனால் வேமனரிடம் கொண்டிருந்த பக்தியோ அளவற்றது. பிரௌன் என்பார் மேற்கொண்ட பணியைத் தொடர்ந்து ஆற்றும் பேரவாவால் தூண்டப்பெற்று, வேமனரின் பனையோலேக் கையெழுத்துப் படிகளுக்காக நாடு முழுவதும் அலேந்துதிரிந்தார்; வாய்மொழியாகப் புழக்கத்திலிருந்த நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிக்கொண்டார்; கவிஞரின் வரலாற்றுச் செய்திகளாகத் தான் நம்பியவற்றையெல்லாம் எழுதித் தொகுத்துக்கொண்டார். பல்லாண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக 1913-இல் அக்காலத்தில் மிகப்பெரியதென்று கருதப்பெற்ற வேமனரின் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அத்தொகுப்பில் 4,035 பாடல்கள் அடங்கியிருந்தன. பல கற்பனையான வருணனைகளைக்கொண்ட வேமனரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி வெளியிட்டார். அவர் பெருமிதமாகக் கருதிய இந்த வருணனைகள் (வியாசரின் தனிப் பற்றுக்குரிய உவமையில் கூறினால்) வேமனரை "மனிதர்களுள் ஒர் ஏறுபோல்" காட்டின.

வேமனரின் ஏனைய வாழ்க்கை-வரலாறுகளைப்போலவே பூர்ணயாச்சார்லு அவர்கள் எழுதிய "வேமனயோகீந்திர சரித்திரமு" என்ற வாழ்க்கை வரலாறும், நம்முடைய பகுத்தறிவு மனத்தை உறங்கவிட்டுக் கற்பனைக் கதைகளின் அந்தி ஒளிவீசும் உலகில் சென்று உலவினல், கவர்ச்சியால் மயங்கும் அளவுக்கு உற்சாகத்தை ஊட்டும் படியாக அமைந்துள்ளதைக் காண்போம். கலப்பற்ற அந்தக் களிப்பில் ஆழங்கால் படுவதற்காகவே, நாம் இப்பொழுது அந்த உலகில் புகுந்து வேமனரின் சீடர்களும் பக்தர்களும் காணும் வேமனரைக் காண்போம். ஆனால் நாம் தேடிச்செல்லும் நடுநாயகரை நேருக்கு நேர் காண்பதற்கு முன்னர், காலத்தாலும் இடத்தாலும் அகன்று காணப்பெறும் உண்மையெனக் கருதமுடியாதபடி விசித்திரமாகத் திகழும் அந்த மாய உலகில் புகுந்து நெடுந்தொலைவுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவிவிருத்துதல் வேண்டும்.

நினைப்பிற்கெட்டாத நெடுங்காலத்திற்கு முன்னர் ஒருவர் புண்ணியப் பயணத்தை மேற்கொண்டார். அவருடைய பெயர் வேமர் என்பது. அவர் ஒரு வைசியர், தெலுங்கில் அவரைக் "கோமட்டி" என்று வழங்குவர். அவர் நோக்கிச்சென்ற திருத்தலம் சீசைலமேயாகும். அத்தலம் கர்நூல் மாவட்டத்திலுள்ள ஒரு குன்று; அஃது இன்றும் ஒர் அடர்ந்த கானகமாகத் திகழ்கின்றது. அது கிருஷ்ணா நதியின் வளைந்து வளைந்து செல்லும் கரைகளை நோக்கிச் சரிவாக அமைந்துள்ளது. அதன் உச்சியில் ஒரு பழங்காலச் சிவன் கோயில் அமைந்துள்ளது. அத்திருக்கோயிலில் அருளுடைய மல்லிகார்ச்சுனர் வடிவில் அப்பெருமானக் காணலாம். சிவ வழிபாட்டிற்கென ஒதுக்கப்பெற்ற சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீசைலத்தில் கூடுகின்றனர். அவர்கள் பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் உறங்காது விழித்தவண்ணம் விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். அவர்கள் கிருஷ்ணாநதியின் நீலநிற நீரோட்டத்தில் தீர்த்தமாடி, தங்கள் நெற்றியிலும் புயங்களிலும் வெண்ணிறு பூசி, சங்குகளை ஊதியும் பேரிகைகளையும் கைத்தாளங்களையும் முழக்கியும், ஆடியும் பாடியும் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பதின்மூன்றாவது நூற்றாண்டின் இறுதியில் அவ்விதம் வழிபாடு நடத்திய திருத்தலப் பயணி கோமட்டி வேமர் என்பவராகும்.

சிவராத்திரியின் மறுநாள் கோமட்டி வேமரைத் தவிர எல்லாத் திருத்தலப் பயணிகளும் தம்வீடு திரும்பிவிட்டனர். திருக்கோயிலிலும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் அவர் கபடமாக அடிக்கடிச் சென்று வருதல் கோயில் அர்ச்சகர்களின்பால் ஐயத்தை எழுப்பியது. அவர்கள் அவரைக் கோயிலைவிட்டு வெளியேறும்படிக் கட்டளையிட்டனர். "அடியேனை ஏன் விரட்டுகின்றீர்கள்?" என்று கோமட்டி வேமர் அவர்களைக் கெஞ்சும்பாவனையில் வினவினர். "அடியேன் உண்மையான சிவபக்தன். இறைவனுடைய திருவருளைப்பெறும் வரையில் அடியேன் அவருக்கு வழிபாடு நடத்த விரும்புகின்றேன்" என்றார். அர்ச்சகர்களும் மனமிளகி அவர் தங்குவதற்கு இசைவு தந்தனர். ஆயினும் திருக்கோயிலின் வடபால் உள்ள அடர்ந்த காட்டினுள் துழைய வேண்டாமெனக் கட்டளையிட்டனர். "அங்குப்பாம்புகள் அதிகமாக உள்ள; கானகத்தினூடே பொல்லாத பிராணிகள் அலைந்து திரிகின்றன" என்று அவர்கள் அவரை எச்சரித்தனர். எச்சரிக்கையாக அமைந்த அவர்கள் கட்டளை கோமட்டி வேமருக்கு ஒரு சொற்குறிப்பாக அமைந்தது: அனுமதிக்கப்படாத அந்த நிலப் பகுதியில் நுழைவதற்கு முதல் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டார் அவர். தான் திரும்பும் வழி தவறிவிடக்கூடுமெனக் கருதி, ஒரு சிறிய பை நிறையக் கடுகுவிதைகளைக் கொண்டு சென்றார். அடர்ந்த புதர்க் காட்டினூடே புகுந்து செல்லுங்கால் வளைந்து வளைந்து பாம்பு போல் செல்லும் வழியெல்லாம் கடுகுவிதைகளை இறைத்துக் கொண்டே சென்றார். பல்வேறு தற்செயல் இடர்களுடன் நீண்ட விடாமுயற்சியுடன் தேடியபிறகு புருடவேதி என்ற ஒரு குளத்தைக் கண்டார். சீசைலத்திற்குத் தான் மேற்கொண்ட திருத்தலப் பயணத்தின் ஒரே தனிநோக்கம் உண்மையிலேயே இக்கண்டுபிடிப்பாகவே இருந்தது. தன் கண்டுபிடிப்பை உறுதிசெய்வதற்காக அவர் ஒர் இரும்புக்கோலை அந்தக் குளத்திலுள்ள பொன் மாற்றுச் சித்து பயக்கும் நீர்மத்தில் தோய்த்தார் என்ன வியப்பு! அந்த இரும்புக்கோல் பொற்கோலாக மாறியது. கரைபுரண்டோடும் களிப்புடன் இரண்டு மட்குடம் நிறைந்து வழியுமாறு அந்த மந்திர நீர்மத்தை நிரப்பிக்கொண்டு கடுகுநெறியின் வழியாகவே விரைந்து திரும்பினர்.

கோமட்டி வேமர் கோயிலையும் அதன் அர்ச்சகர்களையும் தவிர்ப்பான்வேண்டி அப்பாலுள்ள ஒரு சுற்று வழியை மேற் கொண்டுஎல்லைப்புறப்பகுதிவழியாக 'அநுமகிரி'(அநுமக்கொண்ட) என்ற ஒரு சிற்றூரை அடைந்தார். அவர் அவ்வூரை அடைந்த நேரம் பகலவன் மறைந்த ஒரு மணி நேரத்திற்குப் பின்பாகும். அப்பொழுதுதான் அடர்ந்த இருட்படலம் உலகினைச் சூழ்ந்து கொண்டிருந்தது. அன்றிரவு தொண்டி அலியா ரெட்டி என்ற உழவரிடம் பாதுகாப்பிடத்தை நாடினர். (சில பதிப்புகளில் அந்த உழவர் தொண்டி அல்லா- ரெட்டி என்றும் குறிக்கப்பெறுகின்றார்). உழவர் தன் கால்நடைக் கொட்டிலைக் காட்ட, கோமட்டி வேமர் தான் கொணர்ந்த இரண்டு மட்குடங்களையும் சில உழுபடைகளின் பின்னல் மறைத்து வைத்துவிட்டு உணவு பெறுவதற்காகத் தன் சாதி மக்களைத் தேடிச் சென்றார். கோமட்டி வேமர் வெளியில் சென்றிருந்தபொழுது அலியா ரெட்டி என்பவர் தன் மாடுகட்குத் தீனி போடுவதற்காக மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். ஏதோ ஒரு பொருள் பொன்போல் பளபளப்பாக ஒளிர்வதைக் கண்டு பெருவியப்படைந்தார். அதன் அருகில் சென்றதும் தற்செயலாகப் புருடவேதியுடன் நேராக மோதியதன் விளைவாக கலப்பைக் கொழுக்களில் ஒன்று பொன்கொழுவாக மாறியிருப்பதைக் கண்ணுற்றார். அலியா ரெட்டியின் சிந்தனை விரைந்து செயற்படவே, அவர் அந்த இரண்டு குடங்களையும் தன் இல்லத்திற்கு மாற்றினர். கொட்டிலிலுள்ள கால்நடைகளை வெளியே செல்லவிட்டு, கொட்டிலின் கூரைக்குத் தீக்கொளுவினார். கூரை கொழுந்து விட்டெரிந்து வானத்தைச் செந்நிறமாக்கவே, கோமட்டி வேமர் வேகமான பாய்ச்சலுடன் திரும்பினார். தன்னுடைய மதிப்புமிகுந்த இரண்டு குடங்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் வெறிகொண்ட நிலையில் உக்கிரமான தீச்சுவாலையில் குதித்தார்; தீயில் மாண்டார்.

அலியாரெட்டி விழிப்பும் திறமையும் உடையவராதலின், திடீரென்று ஒரு செல்வந்தராகக் காட்சி அளிக்க விரும்பவில்லை. பகுத்துணர்சினந்தையராய் அவர் புருடவேதியைக் கால இடைவெளி விட்டுப் பயன்படுத்தினார். நாளடைவில் பல வீடுகளையும், பல பண்ணைகளையும், பல மந்தைக் கால்நடைகளையும் சேர்த்தார். ஆனால், அவருடைய செல்வச் செழிப்புடன் துக்கங்களும் அவரிடம் குவிந்தன. கோமட்டி வேமர் பழி வாங்கும் பேயாக மாறித் தொடர்ந்து அஞ்சத்தக்க பேரிழப்புக்களை அவர் அடையுமாறு செய்தார். அவருடைய மக்கள் ஒருவர் மாற்றி ஒருவராக நோயுற்று இறந்தனர். அலியாரெட்டியோ பயங்கரமான ஆறாத் துயரில் ஆழ்ந்தார். புரோலயா என்ற ஒரேஒரு மகன்தான் எஞ்சியிருந்தான். அவனும் இறந்துவிடின் குடும்பச் சொத்தினை மரபுரிமையாகப் பெறுவதற்கோ அல்லது அக்குடும்பத்தின் தென்புலத்தாருக்கு எள்ளும் நீரும் இறைத்துக் கடன்கழிக்கவோ ஒருவரும் இலர். தம்முடைய அச்சத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவோ அல்லது அதன் மூலகாரணத்தை வெளியிடவோ முடியாத நிலையில் அவருடைய கடுந்துயரத்தின் பளுதாங்க முடியாத நிலையிலிருந்தது.

மிக அண்மையில் தன்னுடைய ஊழித் தீர்ப்பின் வெடிப் பொலியைத் தான் கேட்கக்கூடும் என்று அஞ்சிய நிலையில் அலியா ரெட்டி ஓரிரவு உறங்கச் சென்றார். அவருக்கோ அமைதியான உறக்கம் பிடிக்கவில்லை. அந்த உறக்கத்தில் அவர் கனவொன்று கண்டார். அந்தக் கனவில் கோமட்டி வேமர் அச்சுறுத்தும் நிலையில் தோன்றினார். அலியா ரெட்டி அவருடைய கால்மலர்களில் திடீரென்று வீழ்ந்து, கண்ணீர் ஆறாகப் பெருகும் நிலையில் அவருடைய மன்னிப்பை இறைஞ்சினர். "நான் உங்கள் மனக்குறையை ஆற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள், தயவு செய்து சொல்லுங்கள்" என்று முறையிட்டார். கோமட்டி வேமர் இறுதியில் ஒருவாறு இரக்கப்பட்டுத் தம்முடைய மன்னிப்புக்கு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். முதலாவதாக, அலியாரெட்டி கோமட்டி வேமரின் தங்கச்சிலையொன்று நிறுவி அதனை நாடோறும் தன்னுடைய குலத்தெய்வமாக வழிபடல்வேண்டும்; இரண்டாவதாக, அன்றும் எதிர்காலத்திலும் அவர் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்பாலாரும் கோமட்டி வேமர் என்ற பெயரினைத் தாங்கியிருத்தல் வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளையும் யாதொரு குறையுமின்றிக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தால் அலியாரெட்டியின் குடும்பம் பெருகி வளனுடன் திகழும்; விரைவில் அஃது ஒர் அரசாக வளர்ந்து தலைசிறந்த முறையில் ஆட்சிபுரியும். அலியா ரெட்டி இந்த இரண்டு நிபந்தனைகட்கும் கட்டுப்படுவதற்கு உடனே இசைந்தார். அடுத்த நாளே வேமரின் உருவச்சிலையைப் பொன்னால் அமைப்பதற்குப் பொற்கொல்லர்களை நியமித்தார். சின்னாட்குப் பின்னர் ஒரு நன்னாளில் பகட்டான பெருவிழா எடுத்து அந்தச் சிலையைத் தம்முடைய குடும்பத் திருவிடத்தில் பிரதிட்டை செய்தார்; அப்பொழுது தப்பிப் பிழைத்திருந்த புரோலயாரெட்டி என்ற தன்னுடைய மகனின் பெயரை புரோலயா வேமா ரெட்டி என்ற பெயராக மாற்றினர்.

அந்தநாள்தொட்டுக் கோமட்டிவேமரின் ஆவி உருவம் அலியா ரெட்டிக்குத் தொல்லை தருவதை நிறுத்திக்கொண்டது. அதற்குப் பிறகு இரண்டு குமாரர்களை அவர் அடைந்தார். அவர்கட்கும் முறையே அனவோத்த வேமர் ரெட்டி என்றும் அனவேமாரெட்டி என்றும் பெயர்களை இட்டார். மீண்டும் அவருக்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை கிட்டியது. மகிழ்ச்சியற்ற நினைவுகளுடன்கூடிய பழைய சுற்றுப்புறங்களைத் தவிர்க்கலாம் என்ற நோக்கத்துடன் தான் புதியதோர் இடத்தில் குடிபுகுவது நன்று எனக் கருதினார். தன்னுடைய குடும்பத்துடனும் விலைமதிக்க முடியாத புருடவேதியடங்கியகுடங்களுடனும் கி.பி.1323-இல் குண்டுர் மாவட்டத்திலுள்ள 'கொண்ட வீடு' என்ற சிறியதொரு நகருக்குக் குடியேறினார்.

கொண்டவீடு சென்று அங்கு அமர்ந்தபிறகு ஓரிரண்டு ஆண்டுகளில் அலியாரெட்டி விண்ணுலகெய்தினார். காலதேவன் அவரை ஆட்கொண்டதற்கு முன்னரே புரோலய வேமர் என்ற அவருடைய திருக்குமாரரைக் கருவிலே திருவுடைய அரசனாகக் கண்டு மகிழ்ந்தார். புருடவேதியையும் அதனால் பெற்ற பொன்னையும் தாராளமாகப் பயன்படுத்திப் புரோலயவேமர் கொண்ட வீட்டினைச் சுற்றி அரண்களை அமைத்தார்; படைகளைத் திரட்டினார்; அண்டைநிலப் பகுதிகளை வென்றார், காகதீயப் பேரரசு சிதறியதால் ஏற்பட்ட வன்மையற்ற நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தானே கி.பி.1328-இல் சுயேச்சையுள்ள முடியரசராகப் பறையறைவித்துக்கொண்டார்.

பன்னிரெண்டாண்டுகட்குப் பிறகு புரோலய வேமர் விண்ணாடு புக்கார்; அவருடைய தம்பி அனவோத்த வேமா ரெட்டி அரியாசனத்திலமர்ந்தார். அஞ்சாநெஞ்சினையும் விடாமுயற்சியையும் கொண்ட இவர் பல போர்களை நிகழ்த்தி ஆட்சிப்பரப்பை இரு மடங்காக்கிக் கொண்டார். ஆனால் அவர் அடிக்கடி மேற்கொண்ட போர் நடவடிக்கைகளால் அரசுக் கருவூலம் செலவழிந்துவிட்டது. இந்த இடர்ப்பாடான நிலையில் மந்திர நீர்மமாகிய புருடவேதியும் தீர்ந்து விட்டதால் தம் அண்ணனைப்போல் அதனைப் பயன்படுத்தவும் வழி இல்லை என்ற போதிலும் அவருக்கு எதிர்பாராத நற்பேறு ஏற்படச் செய்தது.

மாயமந்திரக் கலைகளில் வல்லுநரான யோகி ஒருவர் தனிமையான ஓரிடத்தில் பலியொன்றினைத் தொடங்கினர். அது வெற்றியுடன் நிறைவேறுவதற்குப் பலியாளாக ஒருமனிதர் தேவைப்பட்டார். ஆகவே, அவர் ஏராளமான செல்வம் தருவதாக வாக்களித்து ஓர் ஏழை ஆட்டிடையனை மயக்கி ஏமாற்றி அவனைப் பலிக்குழி உள்ள இடத்திற்கு இட்டுச்சென்று அவனைச் சீறியெழும் தீச்சுவாலையினுள் தள்ளுவதற்கு முனைந்தார். இருவரிடையேயும், நிகழ்ந்த பூசலில் ஆட்டிடையன் தப்பிப்போக யோகி தவறி அக்கினி குண்டத்தில் வீழ்ந்து சாம்பலானர். அடுத்தநாள் அதிகாலையில் விடுப்பார்வத்தால் தூண்டப்பெற்ற ஆட்டிடையன் தன் மயிரிழையில் உயிர் தப்பிய இடத்திற்குத் திரும்பிவந்தான், பலிக்குழியில் ஆள் உயரத்தில் இரண்டு பொற்சிலைகள் இருப்பதைக் கண்டான். அவனால் அதனை நம்பக்கூட முடியவில்லை. இரவு வரும்வரையிலும் அவன் பொறுமையின்றிக் காத்திருந்தான். இருள்சூழ்ந்து அமைதி நிலவியதும் தன் துணைவியையும் மக்களையும் அவ்விடத்திற்கு இட்டுச்சென்று இரண்டு சிலைகளையும் தன் குடிசைக்கு நகர்த்திச்சென்றான். அந்தச் சிலைகளினின்றும் சிறுசிறு துண்டுளைநறுக்கி விற்றுத் தன் ஆட்டு மந்தையைப் பெருக்கியும் பிற வழிகளிலும் தன்னைச்செல்வந்தனுக்கிக்கொண்டான். முன்பில்லாத திடீரென்று காணப்பெற்ற ஆட்டிடையனின் செல்வ வளத்தின் அறிகுறிகளைப் பற்றிய செய்தி அனவோத்த வேமரின் செவிகளுக்கு எட்டவே, அவர் தம் ஆட்களை அனுப்பி ஆட்டிடையரின் குடிசையைச் சோதிக்கச்செய்தார். அவர்கள் பொற்சிலைகளைக் கண்டு அவற்றைக் கைப்பற்றினர். அதிலிருந்து அனவோத்த வேமரின் பணத்தட்டுப்பாடு பற்றிய கவலைகட்கும் ஒருமுடிவு ஏற்பட்டது.

மிகுபுகழ் வாய்ந்த முப்பது ஆண்டு ஆட்சிக்குப்பிறகு அனவோத்த வேமரும் கி.பி. 1370-இல் விண்ணாடு புக்கார். அவருடைய மகன் குமரகிரி வேமர் அந்தச் சமயத்தில் இருபத்தொரு வயது நிறையாத சிறுவராக இருந்தார். ஆகவே, அரசரின் தம்பி அனவேமர் என்பவர் பன்னிரெண்டு ஆண்டுகள் அரசாட்சி புரிந்தார். அதற்குப்பிறகு குமரகிரி வேமர் அரியணை ஏறினர். அவருடைய சிறப்பான புகழ் எல்லாம் அவர் கவிஞர் வேமனர் என்பவரின் திருத் தந்தையார் என்பதே. மல்லம்மா என்ற அரசிமூலம் பெற்ற மூன்று ஆண் மக்களுள் வேமனரே மூன்றாவது கடைசி மகன். ஏனையோர் அனவோத்த வேமர் II அல்லது பெதகோமட்டி வேமரும் இராச்சவேமரும் ஆவர். ஒருவருக்குப்பின் ஒருவராக வேமனரின் இரண்டு அண்ணன்மார்களும் ஆட்சிப் பீடத்திலமர்ந்தனர். முன்னவர் கி.பி. 1396-இலும் பின்னவர் கி.பி. 1424-இலும் அரியணை ஏறினர். இராச்சவேமனர் தம்முடைய படைத்தலைவர் ஒருவரால் கொலை செய்யப்பெற்றதால் அரச மரபுக்கும் ஒருமுடிவு ஏற்பட்டது. கோமட்டி வேமரின் ஆவி முன்னறிந்து தெரிவித்தபடியே அலியா ரெட்டியின் குடும்பம் கி.பி. 1328லிருந்து கி.பி.1428வரை, சரியாக நூறு ஆண்டுகள், ஆட்சி செய்தது.

கடைக்குட்டியாக இருந்தபடியாலும், மூன்று குமாரர்களுள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தபடியாலும் வேமனர் பிள்ளைப்பருவத்தில் அளவற்ற அன்பு காட்டும் பெற்றோர்கள் அதிக இடங்கொடுத்து செல்லத்துடன் வளர்க்கப்பெற்றார். இந்த அளவற்ற உரிமையும் செல்லமும் அவரை முற்றிலும் கெடுத்தன. சிறுவனாக இருந்தபோது வேமனர் தான்னோன்றியாகவும் அடம் பிடிப்பவராகவும் காணப்பெற்றார். காளைப்பருவத்தில் அவருடைய முக்கிய தொழில் கன்னியர் வேட்டையாடுவதே, கன்னியர் இன்பத்தில் முரட்டுத்துணிச்சலுடன் ஆழங்கால் பட்டார். திருமணம் அவருடைய காமவெறியை மட்டுப்படுத்தும் என்று நம்பிய அவர்தம் பெற்றோர்கள் அவரைத் திருமணம்புரிந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனல் அவர் ஏதாவது ஒரு சிறு சாக்குப்போக்குச் சொல்லிப் பெற்றோர்கள் குறிப்பாகத் தெரிவிக்கும் ஒவ்வொரு சரியான மணத்துணைவியையும் மறுத்துவிட்டார். தன் பெற்றோர்களின் வயோதிக பருவத்தில் அவர் அவர்கட்குப் பல்வேறு மனத் துன்பங்களைத் தந்தார்; அவர்கள் இறந்த பிறகு அவர்மீது அவர்கள் கொண்டிருந்த சிறிதளவு கட்டுப்பாடும் அகன்றது. அவருடைய இரண்டு அண்ணன்மார்களும் அவரைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலவில்லை. இராச்சவேமரின் துணைவியாகிய நரசமாம்பா என்ற அரசியாரிடம்மட்டிலும் அவர் சிறிதளவு மதிப்பு வைத்திருந்தார். அந்த அம்மையாரின் செல்வாக்கு தான் ஊர்சுற்றும் காமுகரைத் தத்துவக் கவிஞராக மாற்றியது.

இந்த மாற்றத்திற்குச் சற்று முன்னதாக வேமனர் ஒரு பரத்தை வீட்டில் வசித்து வந்தார். அவள் அவருடைய சத்தையும் சொத்தையும் இறுதிவரை உறிஞ்சிவிட்டாள். என்றபோதிலும் அவர் அவளுடையவஞ்சகங்களால் ஏமாற்றப்பட்டவராகவே இருந்தார்; அவளை மகிழ்விப்பதற்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால் ஒருநாள் வேமனர் தன் அண்ணியார் அரசி நரசமாம்பாவின் அணிகலன்களை யெல்லாம் கொண்டுவரின் தான் அவற்றைக் கொண்டு அணி செய்துகொள்ளலாம் என்று அவள் கேட்டபொழுது அவர் தீய இடர்ப்பாடான சிக்கலில் அகப்பட்டுக்கொண்டார். அந்தப் பரத்தைக்கு 'முடியாது’ என்று சொல்லும் துணிவு வேமனருக்கு இல்லை; இந்த மானக்கேடான வேண்டுகோளுடன் நரசாமாம்பாவை அணுகவும் அவரால் இயலவில்லை. ஆதலால் அவர் அரண்மனையில் இரண்டு நாட்களாக உண்ணவும் பருகவும்மறுத்து வெறுப்புக் காரணமாக பாராமுகமாயிருந்தார். பிடிவாதமான தூண்டுதல்கட்குப்பிறகு அரசி நரசமாம்பா அவருடைய பெருந்துயரின் காரணத்தை அறிந்து, தன்னுடைய மூக்குத்தியைத்தவிர எல்லா அரச அணிகலன்களையும் அவரிடம் கொடுத்தார். உடனே வேமனர் அந்த அணிகலன்களையெல்லாம் அப்பரத்தையிடம் கொண்டு சென்றார், பரத்தையோ அவ்வணிகலன்களிடையே விட்டுப்போன உருப்படி இன்னதென்பதை விரைவில்அறிந்துகொண்டு அதையும் இரந்து பெற்றுவருமாறு அவரைத் திரும்பவும் அனுப்பினாள். சில நிபந்தனைகளின்பேரில் நரசமாம்பா அதனை அவரிடம் கொடுத்தார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதனைப் பரத்தையிடம் நேராக அளித்தல்கூடாது; ஆனால் அதனை அவளுடைய பள்ளியறையின் வாயிற்படியான கீழ்ச்சட்டத்தில் வைத்து.அதனை அவள் பின்புறமாக வளைந்தவண்ணம் தனது உதடுகளால் கவ்வி எடுக்குமாறு செய்தல் வேண்டும். அங்ஙனம் அவள் கரணம் போட்டெடுக்கும் அருஞ்செயல்களை மேற்கொள்வதற்குமுன்னர் அவள் தன்னை நிர்வாணமாக்கிக்கொள்ளவேண்டும்; அந்நிலையில் வேமனர் விடாமல் அவளைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். அப்பரத்தை மரபினைச் சேர்ந்த பெரும்பாலான மகளிர் நாட்டியப் பாடத்தின் ஒரு பகுதியாகிய இந்த அருஞ்செயலைத் தாம் நாட்டியங்கற்கும் பொழுது கற்றுக்கொண்டிருக்கக்கூடுமாதலால், அப்பரத்தை இதனை எளிதாக ஆற்றுதல்முடியும். ஆனல் நிர்வாண நிலையில் அவளுடைய முறுக்கிய தசையின் காட்சி வேமனரிடம் ஒரு புரட்சிமனப்பான்மையைத் தோற்றுவித்தது; அந்தக் கணத்திலிருந்து என்றும் எல்லா இணைவிழைச்சுத் தொடர்புகளையும் துறந்துவிடும் உறுதியான சூளினை எடுத்துக்கொண்டார்.

வேமனர் அடைந்த அதிர்ச்சி மிக உறைப்பானது. அதனல் அவர் மந்தமான சோர்வுடன் கூடிய உணர்வின்மை நிலையில் ஆழ்ந்துவிட்டார். அதிலிருந்து அவரைக் கிளர்ந்தெழச் செய்வதற்காக, அரசி நரசமாம்பா அரசின் அணிகலன் செய்வோரின் பட்டறையை மேற்பார்வையிடும் பணியில் அமருமாறு பணித்தார். தன் அண்ணியாரிடம் கொண்ட மதிப்பின் காரணமாக வேமனர் விருப்பத்துடன் புதிய கடமைகளை மேற்கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அபிராமன் என்ற பெயருடைய பொற்கொல்லன் காலந்தாழ்ந்து வருவதைக்கண்டார். வேமனரின் விடாப்பிடியான எச்சரிக்கைகள் யாவும் அவனிடம் பயன்பெறவில்லை. இங்ஙணம் அவன் கட்டுப்பாட்டினை மீறும் காரணத்தை வேமனர் வினவ, தன்னுடைய சமய சம்பந்தமான கடமைகள் முக்கியமாக இருப்பதாகவும் தான் காலந்தாழ்ந்து வருவதை எல்லாக் காலத்திற்கும் மன்னிக்கமுடியாவிடினும் இன்னும் சில நாட்களாவது மன்னிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். இந்த உறுதியான, ஆயினும் இணக்கவணக்கமான, சாதாரண ஒரு வேலைக்காரனின் கீழ்ப்படிவதற்கான மறுப்பு வேமனரின் விடுப்பார்வத்தைத் தூண்டியது. இதனால் அவர் அதன் காரணத்தை அடியிலிருந்து காண வேண்டுமென்று உறுதிகொண்டார். அடுத்தநாள் காலையில் அவர், அபிராமனை நிழல்போல் பின்தொடர்ந்து சென்று, அவன் பொறுக்கியெடுத்த கனிவகைகளுடனும் காய்ச்சின பாலைக் கொண்டகலத்துடனும் ஒரு குகையில் நுழைவதைக் கண்ணுற்றார். ஒரு மரத்தின் பின்னல் மறைந்து நின்றுகொண்டு அபிராமன் தன்னுடைய படையற் பொருள்களை ஒரு யோகியின் திருவடிகளில் சமர்ப்பிப்பதைக் கண்டார். நீண்ட நேரம் கழித்து அந்த யோகி-இலம்பிகா சிவ யோகி என்பது அவரது திருநாமம்-தம்முடைய திருக்கண்களைத் திறந்து பின்வருமாறு சொன்னர்: "அன்பனே, உன் பக்தியைக் கண்டு நான் அகமகிழ்ந்தேன். நாளை காலையில் நான் இவ்விடத்தை விட்டுப் புறப்படுகின்றேன். அதிகாலை தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கு வந்து சேர்க, ஆன்மீகத் தீட்சையை உனக்கு வழங்குகின்றேன். மேலும் உன்னிடம் மனித எல்லைக்கு மீறிய ஆற்றல்களையும் தோற்றுமாறு செய்கின்றேன்". இதனைச் செவி மடுத்தவுடன் வேமனர் அரண்மனைக்குத் திரும்பினர். அடுத்த நாள் காலையில் அபிராமனின்றித் தானே அந்த யோகியின் அதுக்கிரகத்தைப் பெறுபவனுக இருக்க வேண்டுமென்று உறுதிகொண்டார்.

அரண்மனைக்குத் திரும்பியதும் வேமனர் அரசி நரசமாம் பாவைத்தேடிச்சென்று அவரை அடைந்தார். அபிராமன் அரசு பட்டறையைவிட்டு அகலாது அன்றிரவு முழுவதும் தங்க வேண்டு மென்றும், அரசிக்கு அவசரத் தேவையாக இருக்கும் அணிகலன் ஒன்றினைச் செய்துமுடிக்கும் வரையில் அவன் பட்டறையை விட்டுப் போகலாகாது என்றும் ஆணை பிறப்பிக்குமாறு அரசரை ஒப்புக்கொள்ளச்செய்ய வேண்டுமென்றும், தம்முடைய உள்நோக்கத்தைப் பற்றி ஆராயக்கூடாது என்றும் அரசியைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அங்ங்ணமே ஆணை பிறப்பிக்கப்பெற்று அபிராமன் அந்த யோகியின் முன்னர் செல்லுவதினின்றும் தடுக்கப் பெற்றன். அபிராமனுக்குப் பதிலாக வேமனர் அந்தநாட் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் யோகியை அடைந்ததும் இலம்பிகா சிவயோகி இங்ஙனம் சொன்னர்: "நல்லது, அந்த எளியவன் தன் வாழ்க்கையின் வாய்ப்பினை இழந்துவிட்டான். அன்பார்ந்த இளைஞனே, நீ நற்பேறு பெற்றனை. என் முன்னே வந்து உபதேசம் பெறுவாயாக."

ஒரு நொடிப்பொழுதில் ஒரு பழுத்த யோகியாக மாற்றமடைந்து வேமனர் குகையை விட்டு வெளிப்போந்து நேராக அபிராமனைச் சென்றடைந்தார். அவனுக்கு முன்னால் கீழேவிழுந்து அடிபணிந்து வணங்கி அவனுடைய மன்னிப்பைக் கோரினார். கழிவிரக்கத்துடன் கன்னங்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிய வண்ணம், வேமனர் இவ்வாறு கூறினர்: "அடியேன் உனக்குச் செய்த பெருந்தீங்கிற்கு ஈடாக, உன்னுடைய பெயர் என்றும் மறையாவண்ணம் செய்துவிடுகின்றேன்." இந்த வாக்கு நிறைவேற்றும் பாங்கில் வேமனர் தம்முடைய பாடல்களின் பல்லவியாக அபிராமனின் பெயரை அமைத்தார்.

பெரிய யோகி நிலையில் வேமனர் இயற்கைமீறிய ஆற்றல்களை வெளிக்காட்டினர். அவர் காட்டு முலாம் பழங்களைப் பயிர் செய்தார்; அவர் அன்புடன் தன் சீடர்கட்கு வழங்கிய ஒவ்வொரு பழமும் பொன் விதைகளைக் கொண்டிருந்தது; ஆனால் அவர் தோட்டத்தினின்றும் களவாடப் பெற்ற ஒவ்வொரு பழத்திலும் புழுக்கள் நிறைந்திருக்கின்றன. சில சமயங்களில் அவர் தமக்கு விருந்தளிப்பவர்களின் இல்லங்களினுள் மலசலங்கழித்தார். அவரை அவர்கள் அருவருப்புடன் வெளியேற்றினால், அந்த மலத்தின் நாற்றம் எப்பொழுதுமே அந்த இடத்தைவிட்டு அகலாதிருந்தது: இதற்கு மாறாக அவர்கள் அந்த ஞானி குழந்தைத் தன்மையுள்ள தம் செயலால் தம்மைச் சிறப்பித்தார் என்று கருதினல் அந்த மலம் பொன்னக மாறியது! பக்தியுடன் அவரை வரவேற்றால் அவருடைய சிறுநீரும் அங்ஙனமே திரவநிலைப் பொன்கை மாறியது.

பகுத்தறிவுள்ள நம் மனம் தூங்கிய நிலையிலும் மலம் சிறுநீர் இவற்றின் வாடையைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. கட்டாயத்தினால் நாம் இந்த இடத்தில் இயற்கை மீறின கட்டுக்கதை உலகினின்றும் வெளியேற வேண்டியதுதான்.