உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 181


எவ்வகையில் என்பீரேல் பத்து பனிரண்டுவயது சிறுவர்கள் சிகரெட்டென்றும், பீடியென்றும், சுருட்டென்றும் வழங்கும் புகை வஸ்துக்களைப் பிடிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அப்புகைப்பிடிப்பதிலும், புகையை மூக்கில்விடுவதும், வாயில் விடுவதுமாகிய ஓர் புகைபிடிக்குஞ் செய்கையால் அனந்தஞ்சிறுவர்கள் ஊஷ்ணரோகங்களால் நைந்துப்போகின்றார்கள். அவற்றையும் நமது சானிட்டேரி கமிஷனரவர்கள் ஆலோசனைக்குக் கொண்டுவருவாரென்று நம்புகிறோம்.

- 3:12; செப்டம்பர் 1, 1909 -

ஈதன்றி தற்கால கடைகளில் விற்கும் சரக்குகளில் நல்ல அரிசிகளுடன் மட்ட அரிசிகளைக் கலப்பதும், நெய்களிற் பல வித நெய்களைக் கலப்பதுமாகிய செய்கைகளிலும் பற்பல வியாதிகள் தோன்றுதற்கிடமுண்டாகின்றது.

இத்தகையக் கலப்புள்ள நெய்களால் பலகாரஞ்செய்து விற்பனைச் செய்கின்றவர்களோ இரண்டுநாள் மூன்றுநாளைய பலகாரங்களை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைக் குடிகளுக்கு விற்றுவருகின்றார்கள். அவர்களதைக் கையில் வாங்கிப்பார்த்து இது பழயப் பலகாரமாச்சுதே இவற்றை மாற்றிக்கொண்டு வேறு கொடுங்கோள் என்பாராயின் நீங்கள் தொட்டுவிட்டதை யாங்கள் வாங்கமாட்டோமென்று துரத்திவிடுகின்றார்கள்.

ஏழைகளோ துட்டுகொடுத்து வாங்கியப் பலகாரமாச்சுதே என்று தின்றுவிடுவார்களாயின் உழைத்து சம்பாதிக்கக்கூடிய சுத்ததேகிகள் புழுத்தப் பலகாரங்களைத் தின்று பலவகை வியாதிதோன்றி பதிகுலைந்துபோகின்றார்கள்.

சில வாசித்தக் குடும்பங்களிலும் சாராயங்குடிக்கும் வழக்கங்களில் இரவும் பகலும் அன்ன ஆகாரமின்றி சாராயத்தையே குடித்துக்கொண்டு இரத்தங் கக்குகிறவர்கள் சிலரும், மார்பு வரட்சியுண்டாய் இருமல் கண்டு வாதைப்படுகிறவர்கள் சிலரும், குடியின் அதிகரிப்பால் வெட்டை மீறி நீரடைப்பு தோன்றி அதினால் வாதைப்படுகிறவர்கள் சிலரும், தங்களது தேகசக்திக்கும் பிரமாணத்திற்கும் மீறியக் குடியினாலும் அனந்தம்பேர் தேகத்தைப் பாழாக்கிக்கொள்ளுகின்றார்கள்.

இவ்வகையாய் சாராயத்தை வாங்கிவைத்துக்கொண்டு ஓயாது குடித்துக்கொண்டிருப்பவர்களை தற்கொலை செய்துக் கொள்ளுவோர்களுக்கு சமதையாகவே யோசிக்கவேண்டியதா யிருக்கின்றது.

ஆதலின் சுகக்கேடுகளுக்கு ஆதாரமாகும் செய்கைகளை விலக்கத்தக்க சட்டதிட்டங்களை வகுத்து சுகாதார மளிக்கும்படி வேண்டுகிறோம்.

- 3:13: செப்டம்பர் 8, 1909 -


76. லாகூரில் இந்து கான்பெரென்சாமே

இந்துவென்பது ஓர் மதத்தைக் குறிக்கும் பெயராயிருக்கின்றது. அத்தகையப் பெயரால் ஓர் கூட்டங் கூடுவதாயின் வைணவர், சைவர், வேதாந்திகளென்னும் மூன்று மதஸ்தர்களே சேருவார்கள் போலும்.

இந்துமதத்திற்கு சாதிப்பிரிவினைகள் ஆதாரமும், சாதி பிரிவினைகளுக்கு இந்துமதம் ஆதாரமுமாகயிருப்பதென்பது சகலருக்குத் தெரிந்தவிஷயம்.

தங்களுக்குத்தாங்களே சாதிமத சம்பந்தங்களை உணர்ந்து காங்கிரஸ் கூட்டத்திற்கு நாஷனல் காங்கிரசென்று கூடி அநுபவத்தில் இந்து காங்கிரசாகவே நடத்தி வருகின்றார்கள்.

அதாவது 1897 வருஷம் சாதிபேதமற்ற திராவிடர்கள் ஒன்றுகூடி தங்களுக்கு வேண்டியப் பத்துக் குறைகளை விளக்கிக் காங்கிரஸ் கமிட்டியாருக்கு ஓர் விண்ணப்பமனுப்பியிருக்கின்றார்கள்.

அவ்விண்ணப்பத்திலுள்ளக் குறைகளை இதுவரையிலும் காங்கிரஸ் கமிட்டியார் கவனித்தலே கிடையாது. அது கொண்டே இவர்களுக்கு நாஷனல் காங்கிரசென்னும் பெயர் ஏற்காதென்று துணிந்து கூறுகிறோம்.