உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 107


கமிஷன் நியமனத்தில் தெரிந்தெடுக்கும் கலாசாலைக்கு 500-பேரை நியமிப்பதானால் சாதிபேதமில்லா பூர்வபௌத்தர்களில் 100-பெயரையும், சாதிபேதமுள்ள இந்துக்களில் 100-பெயரையும், மகமதியருள் 100-பெயரையும், யூரேஷியருள் 100-பெயரையும் இராஜாங்கத்தோரே கண்டெடுத்து நியமித்து விடுவார்களாயின் சகல காரியாதிகளும் யாதோமோர் இடையூரின்றி நிறைவேறுவதுடன் இராஜாங்கமும் ஆறுதலடையும். அந்தந்த வகுப்பார் நூறுபெயருந் தங்களுக்குள் உள்ள விவேகிகளைத் தெரிந்தெடுத்து ஆலோசினைகளை சங்கத்திற்கும் அநுப்புவார்கள். அதினால் இந்துக்கள் சம்பந்த நியமனத்திற்கு மகமதியர் பிரவேசிக்கமாட்டார்கள். மகமதியர் சம்பந்த நியமனத்திற்கு இந்துக்கள் பிரவேசிக்கமாட்டார்கள். சாதிபேதமில்லா பூர்வ பௌத்தர்கள் நியமனசம்மதத்தில் சாதிபேதமுள்ள இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள். காரியாதிகளும் அந்தந்த வகுப்பார் பிரியசித்தம்போல் நிறைவேறிவரும் சகல ஏழைக்குடிகளும் இடுக்கமில்லா சுகவாழ்க்கைகளை அடைவார்கள் என்பதேயாம்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -


46. இன்னுஞ் சுயராட்சியம் வேண்டுமோ

எண்ணவெண்ணப்பெருகிவரும் சாதிகளமைந்த இத்தேசத்தோருட் சிலர் இன்னுஞ் சுயராட்சியத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது வீணிழிவேயாம்.

அதாவது சுயராட்சியம் என்பதுள் இராட்சியம் பொதுவாயினும் அதன் சுயாதீனமுள்ளவர்கள் இன்னாரென்று யாரைக் குறிப்பிடக்கூடும்.

இவ்விராட்சிய சுயாதனக்காரர் இன்னார்தான் என்று ரூபிக்க பாங்கற்றவர்கள் சுயராட்சிய சங்கதிகளைப் பேசுமொழி அவலமென்பதை புதுவை சுயராட்சியத்தால் உணர்ந்து கொள்ளலாம்.

புதுச்சேரி என்னும் சிற்றூர் பிரன்ச்சு ராஜரீகத்தைச் சேர்ந்தது. அதை அவர்களே சகல அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டு நடத்திவந்திருப்பார்களாயின் யாதொரு கலகமுமின்றி சீராக நடத்திவருவார்கள்.

அவ்வகை அவர்கள் கவனிக்காது புதுச்சேரியிலுள்ள மேல்சாதி என வழங்குஞ் சிலக் குடிகளிடத்தில் தங்களதிகாரங்களில் சிலதைக் கொடுத்து விட்டபடியால் வருஷத்திற்கு ஒருமுறைக் குடிகள் யாவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இவ்வருஷத்திய முநிசபில் எலக்ஷனில் எத்தனைப் பிரேதங்கள் விழுமோ, எத்தனை பெயர் வைத்தியசாலைகளுக் கேகுவார்களோ, எத்தனைவீடுகள் மூடப்பட்டுப் போமோவென்று கலங்குகின்றார்கள்.

இத்தியாதி துக்கங்களுக்குக் காரணம் பெரியசாதி என்போர்கள் வசம் சுயவாட்சிகள் சிலது கொடுத்துள்ளபடியினாலேயாம்.

பிரான்ச்சியர் புதுச்சேரியென்னுஞ் சிற்றூரிலுள்ள சாதிபேத சிலகுடிகளுக்கு சுயவதிகாரங்கொடுத்துவிட்டு வருஷந்தோரும் படுங்கஷ்டம் அவர்கள் சுயதேசத்திலும் பட்டிருக்கமாட்டார்கள்.

சொற்பதேசத்தில் சொற்பசுயராட்சியங்கொடுத்துவிட்டு படும் கஷ்டம் இவ்வளவாயிருக்குமானால் இவ்விந்துதேசம் முழுவதையும் சுயராட்சியம் கொடுத்துவிட்டால் நாளொன்றுக்கு எத்தனைப் பிணங்கள் விழுமோ, எத்தனைப்பெயர் வைத்தியசாலைக்கேகுவார்களோ, எத்தனை வீடுகளடைப்பட்டுப் போமோ என்பதை எங்குமில்லாப் பெரியசாதியோர்களே அறிந்துக் கொள்ளுவதுடன் எங்குமுள்ள பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரும் இவற்றை உணர்ந்து இந்துதேசத்திலுள்ள தங்கள் ஆட்சியை இன்னும் நிலைபெற நிறுத்தி அதிகார உத்தியோகங்கள் யாவையும் தாங்களே நடத்திக் கொண்டுவருவார்களாயின் சகலசாதிகுடிகளும் சுகமடைவார்கள். சுயராட்சியம் சுயராட்சியமென்று சொல்லித் திரிபவர்களுக்குஞ் சுருசுருப்புத் தோன்றி சுயமுயற்சியினின்று சுதேசவித்தையைப் பெருக்கி சூதுவித்தையை சுருக்கி சுகம்பெருவார்கள்.

- 2:37; பிப்ரவரி 24, 1909 -