உள்ளடக்கத்துக்குச் செல்

நீளமூக்கு நெடுமாறன்/கறுப்புச் சட்டைக்காரன்

விக்கிமூலம் இலிருந்து


கதை : மூன்று


கறுப்புச் சட்டைக்காரன்

நெடுங்காலத்திற்கு முன்னால் கடார தேசத்தில் ஒர் அரசன் இருந்தான். அவன் தன் மேலங்கியின் மீது ஏழு தங்க பசுக்களை அணிந்திருந்ததால் ஏழு தங்கப் பசு மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்தான்.

அவன் பெருஞ் செல்வந்தனாகவும், கடார தேசத்து அரசர்களிலேயே பெருங் கொடை வள்ளலாகவும் விளங்கினான். ஒவ்வொரு நாள் காலையிலும் அவன் தவறாமல் கோயிலுக்குப் போய் வருவான். கோயிலிருந்து வெளிவரும்போது கோயில் வாசற்படியில் அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிச்சைக்காரர் கூட்டத்திற்குத் தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுப்பான். நாள்தோறும் அவன் இவ்வாறு தாராளமாகத் தருமம் செய்து வந்தபடியால் பிச்சைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் அவனுடைய கொடையைப் பாராட்டி ஆண்டவனைச் சாட்சிக்கு அழைத்து இவ்வாறு கூறுவார்கள். "ஏழு தங்கப் பசு மன்னரே! இந்த உலகத்திலேயே உம்மைப் போன்றவர் வேறு யாருமில்லை உமக்காக நாங்கள் நீரிலும் குதிப்போம்; நெருப்பிலும் குதிப்போம்!"

ஒவ்வொரு நாள் மாலையிலும் ஏழு தங்கப் பசு மன்னன் தன் நண்பர்களை அழைத்து வந்து விருந்து வைப்பான். நகரில் உள்ள பிரபுக்களும், பெரிய பெரிய வியாபாரிகளும் பணக்காரர் எல்லோரும் அவன் நட்பைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கு மிகச் சிறந்த சாப்பாடு அளித்து உயர்தரமான பான வகைகளும் குடிக்கக் கொடுத்து கோலாகலமாக விருந்தை நடத்துவான் அரசன். விருந்து முடிந்து வீடு திரும்பும் போது வருகின்ற ஒவ்வொரு விருந்தாளியும் ஒரு சிறந்த வெகுமதிப் பொருளாவது பெறாமல் திரும்புவதில்லை! ஆகவே, அவர்கள் ஒவ்வொருவரும் அவனுடைய தாராள குணத்தைப் பாராட்டி ஆண்டவனைச் சாட்சிக்கு அழைத்து இவ்வாறு கூறுவார்கள்; "ஏழு தங்கப் பசு மன்னரே, இந்த உலகத்திலேயே உம்மைப் போன்றவர் வேறு யாருமில்லை; உமக்காக நாங்கள் நீரிலும் குதிப்போம்: நெருப்பிலும் குதிப்போம்!”

ஒரு நாள் ஒர் இளைஞன் அரண்மனைக்கு வந்து அரசரைக் கண்டு பேச அனுமதி கேட்டான். அவன் ஏழு தங்கப் பசு மன்னனின் முன் வந்தபோது, “அரசே! நான் தங்களுடைய தாராள குணத்தைப் பற்றிக் கேள்வி ப்பட்டுத் தங்களிடம் ஒர் உதவி கேட்பதற்காக வந்திருக்கிறேன். இந்த நகரத்திலேயே என்னைப் போல் துர்ப்பாக்கியசாலி வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். எனக்கு ஏழு வயதாகும்போது என் தாய் தந்தையர் இருவரும் இறந்து போய்விட்டார்கள். அன்று முதல் இன்றுவரை நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடுமையாகப் பாடுபட்டு உழைத்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் ஓர் இளம் பெண்ணை நேசித்தேன். அவள் எவ்வளவு அன்பும் பண்பும் உள்ளவளோ அவ்வளவு அழகும் கவர்ச்சியும் உள்ளவள். இன்னும் சில நாட்களில் எங்களுக்கிடையே திருமணம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஆனால், இன்று காலை அவள், இறந்து போய்விட்டாள். இனிமேல் என் வாழ்வில் நான் இன்பத்தையே காணமுடியாது என்று எண்ணுகிறேன். நான் பாலி மொழி படிக்கத் தெரிந்தவனாக இருந்தாலும் வேத சாஸ்திரங்களைப் படித்துச் சாதுவாக மாறிவிடலாம். ஆனால் எனக்குப் பாலி மொழி தெரியாது. ஏழு தங்கப் பசு மன்னரே, என்மீது இரக்கம் காட்டுங்கள். என் காதலியின் ஈமக் கிரியைகளைச் செய்ய எனக்குப் பதினைந்து பொன் மட்டும் கொடுத்து உதவி செய்யுங்கள்!” என்றான்.

“நண்பனே, உன் நிலையைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். பதினைந்து பொன் மட்டுமல்ல, உனக்கு நூறு பொன் கொடுக்கச் செய்கிறேன். மேலும் உனக்குத் துன்பங்கள் அணுகாதிருக்குமாக!" என்று கூறினான் ஏழு தங்கப் பசு மன்னன்.

நூறு பொன்னையும் வாங்கிக் கொண்டு மன்னனுக்கு நன்றி கூறி வாழ்த்தி வணங்கிவிட்டுச் சென்றான் இளைஞன். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் திரும்பவும் வந்து சேர்ந்தான். அவன் தன் துன்பத்திற்கு அறிகுறியாகக் கறுப்பு சட்டை அணிந்திருந்தான். "ஏழு தங்கப் பசு மன்னரே! நீங்கள் எனக்கு கருணை காட்டினர்கள். எனக்குப் பிழைப்பதற்கு வேறு வழி புலப்படவில்லை. ஆகவே அன்பும் கருணையும் கொண்ட தாங்கள் என்னைத் தங்கள் அரண்மனையில் ஏதாவது ஒரு வேலையில் சேர்த்துக் கொண்டு ஆதரிக்க வேண்டுகிறேன். நான் உங்களுக்கு உண்மையாக உழைப்பேன். என் உழைப்புக்காக நீங்கள் சம்பளம் எதுவும் தரவேண்டியதில்லை" என்று இளைஞன் கேட்டான்.

"நான் எப்போதும் சம்பளமில்லாமல் யாரிடமும் வேலை வாங்குவது கிடையாது. ஆனால், அப்படியிருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறபடியால் அப்படியே இருக்கட்டும்" என்றான் அரசன்.

இம்மாதிரியாக அந்த இளைஞன் ஏழு தங்கப் பசு மன்னனின் அரண்மனையில் வேலைக்குச் சேர்ந்து கொண்டான். அவன் அரச பக்தியோடும்’ உண்மையாகவும் சிறப்பாகவும் தன் வேலைகளைச் செய்து வந்தபடியால், எல்லா வேலைக்காரர்களுக்கும் மேலாளாக அவனை உயர்த்தினான் அரசன். ஆனால், அந்த இளைஞன் எப்போதும் இறந்து போன தன் காதலியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தபடியால், அதற்கு அடையாளமாகக் கறுப்புச் சட்டையையே அணிந்து கொண்டிருந்தான். அதனால் அவனை எல்லோரும் கறுப்புச் சட்டைக்காரன் என்றே அழைத்து வந்தார்கள்.

ஒருநாள் அவன் ஏழு தங்கப் பசு மன்னனிடம் வந்து பேசிக் கொண்டிருந்தான். 'மன்னர் பெருமானே! நீங்கள் விருந்துக்காகவும் தருமத்திற்காகவும் அளவில்லாமல் செலவழிக்கிறீர்கள். இந்த நிலையிலேயே போய்க் கொண்டிருந்தால், ஒர் ஆண்டுக் காலத்திற்குள் உங்கள் நிதிக் கிடங்கில் இருக்கும் பொன்னும் வெள்ளியும் தீர்ந்து போய் விடும். நீங்களும் ஏழையாகி விடுவீர்கள்” என்றான்.

'அதனால் என்ன வந்துவிட்டது? எனக்கு மனைவியுமில்லை. பிள்ளைகளுமில்லை. நான் ஏழையாகும் வரை என் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருப்பேன். என் பணம் எல்லாம் தீர்ந்து போய் விட்டாலும் நான் மறுபடியும் பணக்காரனாகி விடுவேன். ஏனென்றால் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நான் துன்பப்படுவதை ஆற்றமாட்டார்கள். எனக்காக் நீரிலும் நெருப்பிலும் குதிக்கவும் தயாராக இருப்பதாக அவர்கள் அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார்கள்" என்று பதிலளித்தான் அரசன்.

"நீங்கள் அதை நம்பிக் கொண்டிருக்க முடியாது” என்றான் கறுப்புச் சட்டைக்காரன்.

அன்று மாலை விருந்து நடக்கும்போது, அரசன் விருந்தாளிகளை நோக்கி, "நண்பர்களே, எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிப்பதாக நீங்கள் அடிக்கடி கூறி வந்திருக்கிறீர்கள். ஆனால் நான் அதை நம்பிக் கொண்டிருக்க முடியாது என்று கறுப்புச் சட்டைக்காரன் கூறுகிறான். அவனுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.

உடனே அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும் "கறுப்புச் சட்டைக்காரன் அயோக்கியன்!” என்று கூறிக் கூச்சலிட்டார்கள். "அரசே! அவன் உங்களிடமிருந்து கொள்ளையடித்துவிட்டு உங்களையே ஏமாற்றுகிறான். அவனை நம்பாதீர்கள்!” என்று அவர்கள் எல்லோரும் கூறினார்கள்.

உடனே ஏழு தங்கப் பசு மன்னன் கறுப்புச் சட்டைக்காரனை அழைத்து வரச் செய்தான்.

"நீ என்னிடமே கொள்ளையடிக்கும் திருடன் என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லுவது உண்மைதானே?" என்று கேட்டான்.

அதை அந்த கறுப்புச் சட்டைக்காரன் சிறிதுகூட மறுக்கவில்லை. “உண்மைதான் அரசே! நான் உங்களிடம் திருடியது உண்மைதான்!” என்று ஒப்புக் கொண்டான்.

இதைக் கேட்டதும் ஏழு தங்கப் பசு மன்னனுக்குக் கோபம் பொங்கியெழுந்தது. திரும்பத் தன் கண்ணில் விழிக்கக் கூடாது என்று சொல்லி அந்தக் கறுப்புச் சட்டைக்காரனை விரட்டிவிட்டான். உண்மையிலேயே அந்தக் கொள்ளைக்காரன் ஒரு கோட்டை வாங்கக் கூடிய அளவு பணத்தைக் கொள்ளையடித்திருந்தான். அவன் அரண்மனையை விட்டு வெளியேறி வெகு துாரத்தில் உள்ள ஐராவதி நதிக்கரைக்கு வந்தான். அங்கேயிருந்த ஒரு பெரிய கோட்டையையும் அதைச் சேர்ந்த நிலங்களையும் விலைக்கு வாங்கினான். தான் எதிர்பார்க்கிற காரியம் நடக்கும் வரையிலும் அவன் அங்கேயே இருந்து வந்தான்.

ஒராண்டு காலத்திற்குப் பிறகு ஏழு தங்கப் பசு மன்னனுடைய நிதிக் கிடங்கில் இருந்த பொன்னும் வெள்ளியும் முழுக்கத் தீர்ந்து போய்விட்டதைக் கண்டான். அன்று அவன் கடைசித் தடவையாகத் தன் பணக்கார நண்பர்களுக்கு விருந்து வைத்தான். விருந்து முடிந்தவுடனே, "நண்பர்களே! என் நிதிக் கிடங்கு காலியாகி விட்டது. பொன்னும் வெள்ளியும் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிக்கத் தயாராக இருப்பதாக எத்தனையோ முறை நீங்கள் கூறினீர்கள். இப்போது நான் சீர்குலைந்து விட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான் அரசன்.

ஆனால், விருந்தாளிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் முகங்கள் இருண்டன. அவர்கள் கோபத்தோடு "ஏழு தங்கப் பசு மன்னரே! பிச்சை போட்டுப் போட்டு உங்கள் செல்வத்தை வீணாக்கி விட்டீர்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வோம்? நீங்கள் எங்களிடம் உதவி கேட்டுப் பயனில்லை. ஏழைப் பிச்சைக்காரர்களிடமே போய் உதவி கேளுங்கள்!” என்று சொன்னார்கள்.

தான் கேட்பது, தன் காதில் விழுவது உண்மைதானா என்று அரசனால் நம்ப முடியவில்லை. ஆனால், அவர்கள் தான் இருப்பதையே காணாதவர்கள் போலத் தன் பக்கம் முதுகைத் திருப்பிக் கொண்டு தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த போது, தான் கேட்பது பொய்யல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டான்.

அவன் அங்கிருந்து எழுந்து ஏழைகளும் பிச்சைக்காரர்களும் இருக்குமிடத்திற்கு வந்தான். அவர்கள் அவனிடம் பிச்சை கேட்டார்கள். “நண்பர்களே! நான் உங்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஏனென்றால் என் பொன்னும் வெள்ளியும் எல்லாம் தீர்ந்து போய்விட்டன. உங்களுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை. எனக்காக நீரிலும் நெருப்பிலும் குதிக்கத் தயாராக இருப்பதாக நீங்கள் எத்தனையோ முறை கூறியிருக்கிறீர்கள். அதனால் நான் எதிர்காலத்தைக் குறித்து, அஞ்சாமல் வாழ்ந்து வந்தேன். "நண்பர்களே! நீங்கள் ஏழைகள் தான், இருந்தாலும் உங்களிடம் இருப்பதில் ஒரு சிறு பங்கு எனக்குக் கொடுத்து உதவினால் போதும்"

உடனே பிச்சைக்காரர்கள் எல்லோரும் அவனுக்கு எதிராகக் கூச்சல் போட்டார்கள். "பணக்காரர்களோடு விருந்து சாப்பிட்டுக் குடித்துக் கும்மாளமிட்டதால் தான் உங்கள் பணமெல்லாம் கரைந்து போய்விட்டது. நாங்கள் இல்லாதவர்கள் ஏன் உங்களுக்குப் பங்கு தரவேண்டும்? வேண்டுமானால் எங்களைப் போல் தெருத் தெருவாய் பிச்சையெடுத்து உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும்!” என்று எல்லாப் பிச்சைக்காரர்களும் கூறினார்கள்.

தான் கேட்டது, தன் காதில் விழுந்தது உண்மைதானா என்று ஏழு தங்கப்பசு மன்னனால் சிறிதும் நம்பமுடியவில்லை. ஆனால் அந்தப் பிச்சைக்காரர்களுக்குள் நடந்த பேச்சுக்களையும் தான் அவர்களுக்குப் பிச்சை போடாததால் அவர்கள் தன்னைப் பழிப்பதையும் வெறுத்துப் பேசுவதையும் பார்த்த பிறகு தான் கேட்டது பொய்யல்ல என்று நன்றாகப் புரிந்து கொண்டான்.

விருந்தாளிகளின் கடுகடுப்புக்கும் பிச்சைக்காரர்களின் பழித் துாற்றலுக்கும் இடையே மனமிடிந்து துயரத்தோடு மன்னன் தன் அரண்மனை முற்றத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது, வேகமாக வரும் குதிரையின் குளம்படிச் சத்தமும், வேட்டை நாய்கள் குரைக்கும் ஒசையும் வீதிப் புறத்திலே கேட்டது. மறு வினாடி பழைய கறுப்புச் சட்டைக்காரன் அரண்மனை முற்றத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் ஏறி வந்த குதிரையைத் தொடர்ந்து வேட்டை நாய்க் கூட்டமொன்று உள்ளே நுழைந்தது. அந்த கறுப்புச் சட்டைக்காரன், கையில் குறுந்தடியொன்று வைத்திருந்தான்.

“விரட்டுங்கள்! விரட்டுங்கள்!” என்று அவன் ஏவி விட்ட மாத்திரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் கூட்டத்திலும், விருந்தாளிகளிடையிலும் வேட்டை நாய்கள் புகுந்து கடித்தும் உறுமியும் நகத்தால் பிறாண்டியும், அவர்களை ஒட ஒட விரட்டியடித்தன. முற்றத்திலிருந்த கூட்டம் ழுவதும் கலைந்த பிறகு அவன் குதிரையை விட்டு அரசனருகில் வந்தான். "ஏழு தங்கப் பசு மன்னவரே!” நன்றி கெட்ட அவர்களை நான் விரட்டி விட்டேன்!” என்று சொன்னான்.

ஆனால் ஏழு தங்கப் பசு மன்னன், கறுப்புச் சட்டைக்காரனைக் கோபத்தோடு நோக்கினான். "என்னிடம் கொள்ளையடித்தவனிடமிருந்து நான் எவ்விதமான உதவியும் எதிர் பார்க்கவில்லை" என்று கூறினான்.

"அரசே! நான் உங்களிடமிருந்து திருடியது உண்மைதான்!!! ஆனால் எதற்காகத் திருடினேன்? நீங்கள் சீர்குலைகின்ற நேரத்தில் பயன்பட வேண்டும் என்பதற்காகவேதான்! ஐராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அழகான அரண்மனை தங்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது. அது தங்கள் அரண்மனை!” என்றான் கறுப்புச் சட்டைக்காரன்.

ஆகவே, ஏழு தங்கப் பசு மன்னன் ஆரவாரம் நிறைந்த பட்டணத்து அரண்மனையை விட்டு, அமைதி நிலவிய ஐராவதி ஆற்றங்கரையில் இருந்த அந்த அழகிய அரண்மனையில் போய் வாழ்ந்து வந்தான். முன்னைப் போலவே கறுப்புச் சட்டைக்காரன் அவனுக்குச் சம்பளமில்லாமல் வேலை பார்த்து வந்தான். அவ்வாறு எவ்விதமான மாறுபாடுமின்றி ஏழு ஆண்டுகள் அமைதியாகக் கழிந்தன.

ஏழாவது ஆண்டின் கடைசி நாளன்று ஏழு தங்கப் பசு மன்னன் கறுப்புச் சட்டைக்காரனைத் தன்னருகில் அழைத்தான். "என் வாழ்நாளிலேயே ராஜ விசுவாசமுள்ளவன் ஒரே ஒருவனைத்தான் கண்டிருக்கிறேன். அது நீதான்! நான் உனக்கு ஒரு பெரிய இரகசியத்தைக் கூறப் போகிறேன். அது என் காலத்திற்குப் பிறகு உனக்குப் பலனளிக்கும். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், என் நண்பர்களென்று தருதிய நயவஞ்சகர்களுக்கு விருந்தளித்ததாலும் நன்றி கெட்ட பிச்சைக்காரர்களுக்குத் தருமம் செய்ததாலும் என் நிதிக்கிடங்கு காலியாகிப் பொன்னும் வெள்ளியும் எல்லாம் திர்ந்து விட்டன அல்லவா? அப்போது நான் நினைத்திருந்தால், அந்த நிதிப் பெட்டகம் முழுவதையும் திரும்பவும் நிறைய வைத்திருப்பேன். ஆனால் நான் அப்போது இதைச் செய்யவில்லை. அப்படிச் செய்யாததினால் தன், உன்னைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எவ்வளவு நன்றி விசுவாசமற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது எனக்கு முதுமை ஏறிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்திற்குள் நான் இறந்து விடுவேன் என்று தோன்றுகிறது. ஆகையால் என் ஒரே நண்பனான உன்னையே என் சொத்துக்களுக்கு வாரிசாக்கி விட்டுப் போக எண்ணுகிறேன். ஆகவே எங்கள் குடும்பத்தின் அழியாச் செல்வமாகிய இந்த தங்கப் பசுக்கரிைன் இரகசியத்தை நான் உனக்குத் தெரிவித்து விடுகிறேன். முதலில் ஒரு கோடாரியை எடுத்துக் கொண்டு, இரண்டு குதிரைகளுக்குச் சேணம் பூட்டிக் கொண்டு வா. நாம் இருவரும் புறப்படலாம்" என்றான் அரசன்.

அதன்படியே, கறுப்புச் சட்டைக்காரன், சேணம் பூட்டிய இரு குதிரைகளைக் கொண்டு வந்தான். கையில் ஒரு எடுத்து வந்தான். இருவரும் குதிரை மீது ஏறி வெகு தூரத்தில் இருந்த ஒரு நாணற் காட்டுக்கு வந்தார்கள்.

"கோடாரியை எடுத்துக் கொள். மிக உயர்ந்த நாணலை வெட்டு. ஆனால் நீ வெட்ட முயலும் பேர்து அந்த நாணல் தன்னை காத்துக் கொள்வதற்காக மூன்று முறை உருமாறும். ஆனால் அதற்காகப் ப்யப்படாமலும் கவலைப்படாமலும் நீ வெட்ட வேண்டும். மூன்று முறையில் நீ அந்த் நாணல் மரத்தை இரண்டாக வெட்டத் தவறினால் நீ உடனே இறந்து போய் விடுவாய். ஆகவே, சிறிதும் அஞ்சாமல் உன் பலங்கொண்ட மட்டும் அதை வெட்டித் துண்டாக்க வேண்டும்." என்று கறுப்புச் சட்டைக்காரனிடம் ஏழு தங்கப் பசு மன்னன் கூறினான்.

கறுப்புச் சட்டைக்கார்ன் கோடாரியைக் கையில் எடுத்துக் கொண்டான். மிக உயரமாக நீண்டு வளர்ந்திருந்த நாணல் மரத்தின் அருகில் சென்றான். அதை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வெட்டுவதற்காகக் கோடாரியை ஓங்கினான். உடனே அந்த நாண்ல் ஏழுதலை நாகப்பாம்பாக மாறி சிறியது. ஆனால் எவ்வளவு பயங்கரமாயிருந்த போதிலும் கறுப்புச் சட்டைக்காரன் தைரியத்தைக் கைவிடாமல் ஓங்கி ஒரு வெட்டு வெட்டினான். இரண்டாவது முறையாக அவன் கோடாரியை ஓங்கிய போது அந்த, நாணல் மரம் அப்போதுதான் பிறந்த ஒரு பச்சைக குழந்தையின் உருவத்தை வந்தடைந்தது. ஒரு வினாடி நேரம்தான் தயங்கினான் கறுப்புச் சட்டைக்காரன். பிறகு மனத்தைத் தளரவிடாமல் கட்டுப்படுத்திக்கொண்டு முன்னிலும் பலமாக ஒரு வெட்டு வெட்டினான். மூன்றாவது முறையாக அவன் கோடாரியை ஓங்கியபோது, நாணல் மரம் இறந்து போன அவன் காதலியாக உருவெடுத்தது. காதலியின் உடலை கண்டவுடன், இவன் கைகள் நடுங்கின. கோடாரி நழுவி க் கிழே விழுந்து விடும் போலிருந்தது. ஆனால் அதற்குள் ஏழு தங்கப் பசு மன்னனின் எச்சரிக்கை ஞாபகத்துக்கு வந்து விட்டபடியால் அவன் இருந்த தைரியத்தையெல்லாம் ஒன்று சேர்த்து மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பலமாக ஒரு வெட்டு வெட்டினான்.

அந்த உயரமான நாணல் மரத்தின் வெட்டுப்பட்ட பகுதியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் அரசனிடம் திரும்பி வந்தான்.

"உன் வேலையை நல்ல முறையில் செய்து விட்டாய். இப்போது, ஒரு புல்லாங்குழல் செய்ய வேண்டிய அளவுக்கு இந்த நாணலை வெட்டு" என்றான் ஏழு தங்கப் பசு மன்னன். அவ்வாறே செய்தபின் அவர்கள் அரண்மனை திரும்பினார்கள்.

அடுத்த ஐந்து மாதங்களும் , அரணமனை வேலைக்காரர்கள் எல்லோரும் தூங்கிய பிறகு இரவு தோறும் அந்தப் புல்லாங்குழலில் ஒ ரு வ ைகயான இராகத்தைப் பாடுவதற்கு கறுப்புச் சட்டைக்காரனைப் பழக்கினான் ஏமு தங்கப் பசு . மன்னன். வைகாசி மாதம் பெளர்ணமியன்று மாலையில் அவன் கறுப்புச் சட்டைக்காரனை நோக்கி "இன்று நள்ளிரவில், இரண்டு பெரிய அண்டாக்களும், ஆறு தோல் பைகளும் புல்லாங்குழலும் எடுத்துக் கொண்டு, ஆற்றங்கரைச் சமவெளிக்கு நீ என்னோடு வரவேண்டும்” என்றான்.

அதன்படியே, அன்று நள்ளிரவு நேரத்தில் கையில் புல்லாங்குழலும், அண்டாக்களுடனும், பைகளுடனும் ஐராவதியாற்றின் கரையிலிருந்து சமவெளிப் பிரதேசத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். "இப்போது நான் சொல்லிக் கொடுத்த அந்த இராகத்தை புல்லாங் குழலில் வாசி" என்று கட்டளையிட்டான் அரசன்.

கறுப்புச் சட்டைக்காரன், அரசனின் கட்டளைப் படியே குழலை ஊதினான். உடனே அவர்களுக்கு எதிரில் இருந்த தரை இரண்டாகப் பிளந்தது. பூமியின் அடியிலிருந்து ஏழு உயிருள்ள தங்கப் பசுக்கள் வெளியில் வந்தன. அவை, அரசன் முன் தலை வணங்கி நின்றன. “இந்தப் பசுக்களின் அருகில் அண்டாக்களைக் கொண்டு வந்து வைத்துப் பால் கற" என்று கறுப்புச் சட்டைக் காரனுக்கு அரசன் உத்தரவிட்டான். அதன்படி கறுப்புச் சட்டைக்காரன் இரண்டு அண்டாக்களும் நிறையும்வரை பசுக்களின் மடியிலிருந்து பால் கறந்தான். அந்தப் பால் முழுவதும் தங்க நாணயங்களாய் மாறின. "இந்தத் தங்க நாணயங்களைப் பைகளிலே போட்டுக் கட்டு” என்றான் அரசன். அவ்வாறு கட்டி முடித்ததும், ஆற்றில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி அந்த இடத்தில் பைகளை ஆற்றுக்குள் போடும் படி சொன்னான் அரசன். கடைசிப் பையையும் போடப்பட்டவுடன் பொழுது விடிந்துட்டது. அந்த ஏழு தங்கப்பசுக்களும் பூமியின் அடிவாரத்திற்குப் போய் மறைந்து விட்டன. பூமியும் மறுபடி மூடிக் கொண்டது.

ஒரு மாதத்திற்குப் பிறகு, முன் சொன்னபடியே ஏழு தங்கப்பசு மன்னன் இறந்து போனான். அவன் தகுதிக்குத் தகுந்தபடி மிகவும் சிறப்பான முறையில் ஈமச் சடங்குகளைச் செய்து முடித்தான் கறுப்புச் சட்டைக்காரன். பிறகு அவன் பட்டணத்து அரண்மனைக்குப் போனான். “ஏ தங்கப் பசு மன்னர் இறந்து விட்டார். அவர் இறக்கும் போதும் பணக்காரராகவே இறந்தார்!” என்ற விஷயத்தை வீதிதோறும் தமுக்குப் போடச் செய்தான்.

உடனே, பிரபுக்களும், வியாபாரிகளும், பணக்காரர்களும், கோட்டை வாசலிலே வந்து கூடினார்கள். "என்ன துன்பமான செய்தி ஏழு தங்கப் பசு மன்னரைப் போல் இந்த உலகத்தில் யாரும் இருந்ததில்லை. அவருக்கர்க் நாங்கள் நீரிலும் குதிப்போம், நெருப்பிலும் குதிப்போம்! நிச்சயம் அவர் தம் செல்வத்தை அள்ளி வழங்கச் சொல்லி சாசனம் செய்து வைத்திருப்பார்!’ என்று எல்லோரும் சொன்னார்கள்.

அப்போது அரண்மனைக் கதவு திறந்தது. கறுப்புச் சட்டைக்காரன் கையில் குறுந்தடியுடன் குதிரையேறி வந்தான். அவன் பின்னாலேயே வேட்டை நாய்கள் குரைத்துக் கொண்டு வந்தன. "விரட்டுங்கள்! விரட்டுங்கள்!" என்று அவன் வேட்டை நாய்களுக்கு கட்டளையிட்டான். பிரபுக்களையும், வியாபாரிகளையும், பிச்சைக்காரர்களையும் வேட்டை நாய்கள் கடித்தும் உறுமியும் ஓட ஓட விரட்டின. அரண்மனை முற்றத்தில் ஒருவர் கூடப் பாக்கியில்லாமல் ஒடும் வரையிலே கையில் குறுந்தடியுடன் நின்றான் கறுப்புச் சட்டைக்காரன். எல்லோரும், ஒடிப் போன பிறகு, "ஏழு தங்கப்பசு மன்னரின் நீதி இப்படியே இருக்க்ட்டும்" என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பிறகு கறுப்புச் சட்டைக்காரன் அரசனுடைய ஈமக்கிரியை நடந்த ஆற்றங்கரை அரண்மனைக்குத் திரும்பி வந்தான். அங்கேயிருந்து பாலி மொழி படித்துத் தெரிந்தவுடன், அவன் பகவானை நோக்கிப் பிரார்த்தனை செய்தான். அப்படியே ஒரு புத்த சாமியாராக மாறி விட்டான். கறுப்புச் சட்டையை கழற்றிவிட்டுக் காவி யுடையணிந்து கொண்டான். ஐராவதியாற்றின் அடியில் கிடந்த தங்க நாணயங்களை எடுத்து ஒரு புத்த மடம் கட்டினான். அந்த மடத்தில் இருந்து கொண்டு இரவும் பகலும் ஏழு தங்கப் பசு மன்னனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்!