உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறையைப்பாடும்



திருப்புகழ்


திரு என்பது ‘கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்' என்பது திருக்கோவையாரின் உரையாசிரியர் கூற்று எனவே திருப்புகழ் என்ற இடத்துத் திரு என்னும் அடைமொழி இறைவனை ஞானக் கண்ணாற் கண்டவர் விரும்பின நோக்கமாய்த் தெய்வத் தன்மையைக் குறிப்பதாகும். இங்ஙனம் தெய்வத் தன்மையைப் பற்றி எழுந்த சொற்களே 'திருக்கோயில் ; திருவாசகம்' முதலியன.இனி, புகழ் என்னும் சொல் கீர்த்தி, கீர்த்தியை எடுத்து ஓதும் துதி எனப் பொருள் படும். திருப்புகழ் என்ற சொல் ‘தெய்வத்தின் புகழ்’ என்று பொருள் படும். இந்தப் பொதுவான பொருளில் திருப்புகழ் என்னும் சொல் நுால்களில் ஆட்சி பெற்றுள்ளது.

உதாரணமாக, சிவபிரானது புகழைக் கூறுமிடத்துச் சுந்தரமூர்த்தி சுவாமிகள், “திருப்புகழ் விருப்பாற் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுபதாபரஞ்சுடரே” எனப் பாடியுள்ளார். சொற்கள் ஆட்சி வழக்கில் தத்தம் பொருளிற் சுருங்குதலும் உண்டு; பெருகுதலும் உண்டு. அங்ஙனமே இங்குத் திருப்புகழ் என்னும் சொல் முருகவேளின் புகழ் என்னும் அடிநிலையைக் கொண்டு, அப்புகழைக் கூறும் நூலுக்குப் பெயராயிற்று.