38
செந்தமிழ் பெட்டகம்
தேவர்க்கு உதவியதும் இதில் கூறப் பெறுகின்றன. ஆனால் ஆராய்ச்சியாளர் பலர் இதில் முதல் ஏழு அல்லது எட்டுச் சருக்கங்களையே காளிதாசர் இயற்றினார் என்பர். முதல் சருக்கம் இமயமலையின் வருணனையுடன் தொடங்குகிறது. இமவானுக்குப் பார்வதி பிறக்கிறாள். சிவன் இமயமலையில் தவம் செய்கிறார். இரண்டாம் சருக்கத்தில் தாரகாசுரனுடைய உபத்திரவம் தாங்க மாட்டாமல் தேவர் பிரமனைத் துதித்து நிற்கப் பிரமன் பார்வதிக்கும் சிவனுக்கும் திருமணம் நிகழ்ந்து பிறக்கும் குமாரக் கடவுளால் அவர் விருப்பம் நிறைவேறும் என்று கூறுகிறார். மூன்றில் பார்வதியும் சிவனும் காதலிப்பதற்காக இந்திரன் மன்மதனுடைய உதவியை நாடுவதும், வசந்த இருதுவின் வருணனையும், மன்மதன் சிவனுடைய கண்ணோக்கால் எரிந்து படும் கதையும் வருகின்றன.
நான்கில் இரதியின் ஒப்பாரியும், அவள் ஆற்றப் பெறுவதும் வருகின்றன. ஐந்தில் பார்வதி சிவனைப் பதியாக அடையும் பொருட்டுக் கடுந்தவம் புரிகின்றாள். சிவன் பிரமசாரியின் வேடத்தில் வந்து பரீட்சித்துப் பார்வதியை மணப்பதாக வாக்களிக் கின்றார். ஆறில் ஏழு முனிவரும் பார்வதியைச் சிவனுக்குப் பெண் கேட்கும் கதை வருகின்றது. ஏழில் சிவபார்வதி விவாகமும் பவனியும், எட்டில் இருவர் கூடலும் மிக்க அழகாக வருணிக்கப் பெறுகின்றன. இதன் பின்னர் வரும் சருக்கங்களில் தேவர்களால் ஏவப்பெற்ற அக்கினி பகவான் புறா வுருவத்திலும் பின்னர் சுயவுருவத்திலும் அவர்களது நீண்ட கூடலை நிறுத்த, அவருடைய வீரியம் கங்கை சேர்ந்து, அங்கு குமரன் பிறப்பதும், கிருத்திகை மாதர்களால் வளர்க்கப் பெறுவதும், இந்திரனுடைய வேண்டுகோளுக்கிணங்கிச் சிவனார் குமரனைச் சேனாபதியாக இந்திரனுக்குத் தருவதும், தாரகன் பெருமையும் போர்க் கோலமும், கடைசியில் தாரகன் வதமும் கூறப் பெறுகின்றன.