60
செந்தமிழ் பெட்டகம்
நாடகங்களின் சில துண்டு துணுக்குகளே கிடைக்கின்றன. அந்த அளவுக்கும் மிகத் தொன்மையான கிரேக்க நாடகங்களில் இன்பியல் துணுக்குகள் கிடைக்கவில்லை. சுமார் கி.மு. 470-ல் கிரேக்கத் துன்பியல் நாடகம் தழைத்து வந்த போதிலும், இன்பியல் நாடகம் மங்கிய நிலையிலேயே இருந்தது. பழங்கால இன்பியல் நாடக ஆசிரியர்களிலே சிறந்தவர் ஆரிஸ்டாபனீஸ். இவரால்தான் பண்டைக் கிரேக்க இன்பியல் நாடகம் கலைத் தன்மை பெற்று, உயர்வுற்றது. இவருடைய நாடகங்களைக் கொண்டு கிரேக்க இன்பியலின் அமைப்பை உணரலாம்.
ஆரிஸ்டாபனீஸின் நாடகத்தின் தொடக்கத்தில் பதிகச் செய்யுள் இருக்கும். அதை அடுத்துக் கோரஸ் வரும். கோரஸ் என்பது பண்டைய நாடகங்களில் நாட்டியமாடியும் பாட்டுப் பாடியும் கதையில் வரும் பாத்திரங்களைப் பற்றி விமரிசனம் செய்யும் ஒரு கூட்டத்தாரைக் குறிக்கும். கோரஸ் குழுவினர் நாடகம் காண்போருக்கும் நாடகப் பாத்திரங்களுக்கும் இணைப்பூட்டும் பாலம் போல அமைந்து, நாடகாசிரியரின் பாத்திர குணங்களை விமரிசனம் செய்வோராக அமைவர். கோரஸ் முடிந்த பின் முன்னிணைப்பு வரும். கிரேக்க இன்பியல் நாடகங்களில் இந்த முன்னிணைப்புத் தனித் தன்மையும் சிறப்பும் உடையதாகும். அதன் முற்பகுதியில் நாடகாசிரியரின் திறமை பற்றியும் அவர் நாடகத் துறைக்கும் நாட்டுக்கும் செய்துள்ள தொண்டுகள் பற்றியும் வானளாவும் புகழுரை பரந்து கிடக்கும். முன்னிணைப்பின் பின்பகுதியில் அன்றாடச் செய்திகள் பற்றயி நாடகாசிரியரின் கருத்து, விளக்கம், கண்டனம், நையாண்டி முதலியன காணப்படும்; அல்லது அது அறவுரைகளை அடுக்கிக் கூறும் நீதிநெறி விளக்கமாக இருக்கும்.
இவ்விடத்தில் கிரேக்க நாடகம் பற்றிய ஒர் செய்தியை நினைவில் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். கிரேக்க நாடகங்கள் சமுதாயத்துக்கு நீதி புகட்டும்