உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியகம், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியகம்

கலைச்செல்வி


வெள்ளி முளைத்ததடா! - நமது
வேதனை தீர்ந்ததடா!
வள்ள லெனும்படியாய் - ஒளியை
வாரி வழங்குதடா!
கள்ள இருட்பகைவன் - நம்மைக்
கட்டிய கட்டவிழ்த்துத்
துள்ளி எழுந்திடுவோம் - கலைத்
தொண்டு புரிந்திடவே!

தூய மணங்கமழும் - விடியல்
தோன்றத் தொடங்குவதும்
தீயவர் எண்ண மெனப் - பனியும்
தேய்ந்து மறைந்துவிடும்!
நேய இனிமைதனை - நேர்ந்து
நெஞ்சில் நிறைத்திடுவோம்!
மாய உலகினிலே - மாயா
மகிழ்ச்சியுண் டாகிடவே!

காலை அமைதிதனைக் - காகம்
கத்திக் கலைத்திடுமுன்
நீலக் கடலலைபோல் - எழும்
நினைவுக் குவியலினால்
சீலச் சிறப்புடைய - கலைச்
செல்வியின் மாளிகைக்குச்
சாலை அமைத்திடுவோம் - சகம்
சாந்தி அடைந்திடவே!

15