இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவியகம்
எழில்மலர்
உலகிலோ ரேவொருநாள் - வாழ்ந்திட
உதித்த எழில்மலரே!
இலகுமெந்தமிழெனநீ - எங்கணும்
இனிமை பரப்புகிறாய்!
கண்ணையும் கவருகிற - காட்சிக்
கவினுடன் கலந்தொளிரும்
வண்ணமும் வாய்த்தனைநீ! - வசிய
வடிவமும வாய்த்தனைநீ!
'தவத்தினி லுற்ற'தென - 'இயல்பாய்த்
தானிது பெற்றதெ'ன
புவித்தலம் புகழ்கிறது - போற்றிப்
புனைந்தகம் மகிழ்கிறது!
வன்மையும் தன்தலையை - வணங்கி
வழுத்திடத் தக்கவொரு
மென்மையைப் பெற்றனைநீ! - நறுமண
மேன்மையை யுற்றனைநீ!
பிறந்திடும் முன்பெனக்குள் - இந்தப்
பெற்றிமை தெரிந்திருந்தால்,
இறந்திடும் மதுகரமாய்ப் - பிறந்துணைச்
சேர்ந்து மகிழ்ந்திருப்பேன்!
131