வெள்ளியங்காட்டான்
காதல் கரைகடக்கக் காத்திருந்த காதலிதன்
நாதன் வரவும் நடுநிசியில் தீதில்லா
தில்லக் கதவுதிறந் தேற்க விருப்பதுபோல்
நல்லவனு மானான் நயந்து.
தாழை மடலில் தவிக்குமிள நாரையைநீர்
கோழி யணைத்துக் குறைதீர்த்து - வாழும்
தடம்பொழில் சார்ந்ததன் தாய்நாடு காணல்
கடனென்றான் கால மறிந்து.
முல்லைப் புறங்கமழ மொய்த்த முகிற்குலங்கள்
மெல்லத் தவழ்ந்துதன் மேலார - நல்லோனும்
வண்ணமலர்த் தாளிறையை வாழ்த்தி வணங்கினான்
கண்மெல்ல மூடிக் கசிந்து.
கன்றுடனே காலி கடுகிப்புல் லார்ந்துவக்கும்
குன்றம்நீத் தூரைக் குறுகியவன் - நின்றதுமே
என்றுமே யில்லாத இன்பத்துள் துன்பமுமொன்
றொன்றிப் புகுந்த துளத்து.
எங்கனம் செல்வே னெழில்மிக்க இவ்விடம்விட்
டங்கனம்நா னின்னலுறா தேகுவேன்? - எங்கனமிங்
குள்ளம்புண் ணாகா துருகியுகா தூர்செல்வேன்
கள்ளளெனை யாக்கல் கடிந்து!
மயிலாடும் மாட மதில்புறம் சார்ந்த
கயிலாடு மேரிக் கரைமேல் - வெயிலாடும்
தீங்கரும்பின் சாறாய்ச் செவிமடுக்கத் தேமாவின்
பாங்கிருந்து பாடுங் குயில்!
144