2
‘பாரொரு பற்ரு யுற்றுப்
பசுமையாய்ப் பரவி யுள்ள
வோரறி வுயிர்க’ ளென்றே
வொதுக்கின ராலே நம்மை!
யாரெவ ராகத் தத்தம்
ஐயறி வைக்கொண் டிங்கே
வோரறி வுயிர்நா மின்றி
யுயிர்வாழ்வோ’ ரெனுமா மப்புல்!
எண்ணில வாயி ருக்கும்
எழில்கிளி, மயில்,கு யில்கள்;
கண்ணினைக் கவரக் கானும்
கருங்குரங் கணில்வெள வால்கள்;
விண்ணினை யிடிக்க நீண்டு
விரிந்துவெண் விழுது வீழ்த்தி
மண்ணினை மகிழப் பண்ணும்
மகத்தான மரமவ் வாலே!
பட்டன்ன வுடல், பட் டாணிப்
பருப்பன்னப் பளிச்சி டுங்கண்,
நட்டன்ன மொச்சைக் கொட்டை
நாசியும், நாலு கால், வால் ,
‘ஒட்டெ’ன்ன வயிற்றைப் பற்றி
யுள்ளதன் குட்டி யோடு-
‘சிட்டெ’ன்னத் தாவிச் செல்லும்
சிங்காரக் குரங்குக் கில்லம் !
மந்தையாய் மாடு கன்று
மனமாறப் பரவி மேய்ந்து,
விந்தையா யுச்சி வேளை
விரும்பிநீர் வேட்கை தீர்த்துப்
பந்தியாய் வந்து தங்கிப்
பகலவன் மேற்கே சாய்ந்தால்,
வந்தியா நிற்கு மாலை
வாயார வாழ்த்திச் செல்லும்!