உள்ளடக்கத்துக்குச் செல்

பறவை தந்த பரிசு-2/புகழ் பெற்ற வள்ளல்

விக்கிமூலம் இலிருந்து
439131பறவை தந்த பரிசு-2 — புகழ் பெற்ற வள்ளல்பாவலர் நாரா. நாச்சியப்பன்
புகழ் பெற்ற வள்ளல்


ஓர் ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவர் பெயர் வெள்ளுடையார். அவர் வெள்ளையான உள்ளத்தையுடையவராக இருந்ததாலும், எப்பொழுதும் தூய உடைகளையே வெள்ளையாகத் துவைத்து உடுத்தி வந்ததாலும் அவருடைய இயற்பெயர் மறைந்து காரணப் பெயராகிய வெள்ளுடையார் என்ற பெயரே நிலைத்து விட்டது.

வெள்ளுடையாருக்கு அந்த ஊரிலே மதிப்பு மிகுதி.

புலவர் வெள்ளுடையாருக்கு என்று வீடோ நிலமோ சொந்தமாகக் கிடையாது. அவரிடம் இருந்ததெல்லாம் அறிவாகிய செல்வம் ஒன்று தான். அவரிடம் படித்த மாணாக்கர்கள் படிப்பு முடிந்த பிறகும் அவரை அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார்கள். அவ்வப்போது அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

மாணாக்கர்கள் தாமாகவே உதவி செய்வார்களே தவிர வெள்ளுடையார் அவர்களை உதவ வேண்டும் என்று கேட்டதேயில்லை.

அவருடன் பழகியவர்கள் அவருடைய உயர்ந்த குணத்தை யறிந்து அவரை மதித்து நடத்தினார்கள் அவர் தம்மிடம் வந்து சேர்ந்தவர்களுக் கெல்லாம் அறிவாகிய செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்தார்.

அவரிடம் கற்றவர்கள் சிறப்படைந்து பல சிறந்த தொழில்களைச் செய்பவர்களாகவும், அரசு பதவிகளில் வேலை செய்பவர்களாகவும் வளர்ச்சியடைந்தார்கள். அவரோ தம்மிடம் வருபவர்களை யெல்லாம் மேலேற்றி விடும் ஏணியைப் போல் இருந்துவந்தார்.

அவருடைய உயர்வையறிந்த அந்நாட்டு அரசனும் ஒருநாள் பக்கத்து ஊர் விழாவுக்கு வந்தபோது அவரை வந்து பார்த்துவிட்டுச் சென்றான். இதனால் அவருடைய மதிப்பு மேலும் உயர்ந்தது.

அரசனிடம் கூட அவர் தமக்கு உதவியென்று எதையும் கேட்கவில்லை. அரசன் தன்ளை வந்து சந்தித்ததை எண்ணி அவர் மகிழ்ச்சியடைந்தார். நாட்டை நலம் படுத்தத்தக்க நல்ல கருத்துக்களை அவனுக்கு எடுத்துரைத்து அனுப்பி வைத்தார்.

இப்படிப்பட்ட குணக்குன்றான புலவர் வெள்ளுடையார் ஒருமுறை உடல்நலம் குன்றிப்போனார்.

வந்த நோய் சடுதியில் நீங்காமல் அவரை நீண்ட நாட்கள் வாட்டிக் கொண்டிருந்தது.

அப்போது அவரிடம் பயின்று வந்த மாணாக்கர்கள் அவருக்குப் பல வகையான உதவிகளைச் செய்தார்கள். ஒரு மாணாக்கர் மருத்துவரைக் கூட்டி வந்தார். மற்றொருவர் மருத்துவர் சொன்ன மருந்துகளை வாங்கி வந்தார். இன்னொரு மாணாக்கர் அவருக்கு வேண்டிய பத்திய உணவுகளைத் தன் இல்லத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்தார். வேறொரு மாணாக்கர் அவருடனேயே தங்கி அவருக்கு உடல்நோவு, தலைநோவு ஏற்பட்டபோது உடம்பைப் பிடித்துவிட்டு நோவு தோன்றாமல் அன்புடன் பணியாற்றி வந்தார். இவ்வாறு மாணாக்கர்கள் காட்டிய அன்பினால் புலவர் வெள்ளுடையார் தம் நோவுத் துன்பமே தோன்றாமல், அவர்கள் அன்பை எண்ணி யெண்ணி மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியிலேயே உடல் தேறி வந்தார்.

அந்த ஊரிலே ஒரு செல்வன் இருந்தான். அவன் பெரிய வள்ளல் என்று பெயர் பெற்றிருந்தான். திருவிழாக் காலங்களில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவான். கோயில் செலவுகளுக்கு அவன் தாராளமாகப் பணத்தை அள்ளிக் கொடுப்பான். சிறப்பான நாட்களில் அவன் பிராமண போஜனம் என்ற பெயரில் உயர்ந்த சாதியாருக்கு விருந்து வைப்பான்.

இப்படிப்பட்ட செயல்களால் அவன் சிறந்த வள்ளல் என்ற பெயரைப் பெற்றிருந்தான்.

அவனுடையபுகழைப் பற்றிக்கேள்விப்பட்ட பலர், தங்கள் ஏழ்மையின் காரணமாக அவனைப் பார்க்கச் செல்வார்கள். ஆனால், யாரும் அவனைப் பார்க்க முடிந்ததில்லை. அவன் மிகப் பெரிய செல்வனாக இருந்ததால், அவனுடைய ஆட்கள், பிறர் அவனை அணுகாதவாறு பார்த்துக் கொண்டார்கள்.

தேடி வருபவர்களிடம், அவர்கள், வள்ளல் இப்பொழுது பூசையில் இருக்கிறார், பார்க்க முடியாது என்றும், தொழில் தொடர்பான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்; தொந்தரவு கொடுக்காதீர்கள் என்றும், பல காரணங்களைக் கூறி விரட்டி விடுவார்கள்.

ஒருமுறை புலவர் வெள்ளுடையார் தன் மாணாக்கன் ஒருவனுடன் அந்த வள்ளலைக் காண வந்தார். அந்த மாணாக்கன் சிறந்த தச்சுத் தொழிலாளி. அவன் தச்சுத் தொழில் நுணுக்கங்களை யெல்லாம் அறிந்திருந்தான். ஒரு தச்சுப் பட்டரை வைத்தால் தான் முன்னுக்கு வர முடியும் என்று நம்பினான். புலவர் வெள்ளுடையாரைக் காண வந்தபோது அவன் தன் கருத்தைக் கூறினான். யாராவது கடன் கொடுத்தால் அதை முதலாக வைத்துத்தான் தொழில் செய்து, கடனைத் திருப்பிக் கொடுத்துவிட முடியும் என்றும், தானும் நல்வாழ்வு வாழ முடியும் என்றும் அந்த மாணாக்கன் கூறினான். புலவர் வெள்ளுடையார் அவனுக்கு எவ்வாறாவது உதவி செய்ய எண்ணினார்.

ஊரில் புகழ் பெற்ற வள்ளலைப் பற்றி அவரும் கேள்விப் பட்டிருந்தார். தானமென்றும் தருமமென்றும் வாரிக்கொடுக்கின்ற வள்ளல், கடன் கொடுக்கவா மறுக்கப் போகிறார் என்று அவருடைய வெள்ளையுள்ளம் எண்ணியது.

ஒருநாள் மாணாக்கனைக் கூட்டிக் கொண்டு வள்ளலைக் காணச் சென்றார். அன்று வள்ளல் “பேசா நோன்பு” கடைப்பிடிப்பதால் யாரும் பார்க்க முடியாது என்று அங்கிருந்த மேலாளர்கள் கூறி விட்டனர்.

மற்றொரு நாள் சென்றபொழுது, அன்று வள்ளல் வெளியூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதால் காண முடியாது என்று அம்மேலாளர்கள் கூறிவிட்டனர்.

இப்படிப் பத்துமுறை முயன்று கடைசியில் அவர்கள் வள்ளலைப் பார்க்க வழிவிட்டார்கள். வள்ளலிடம் தங்கள் கோரிக்கையைக் கூறியபோது, அந்த வள்ளல், தான் பொதுநிறுவனங்களுக்குத்தான் கொடைகொடுப்பது வழக்கம் என்றும், தனிப்பட்டவர்களுக்குக் கொடுப்பதில்லை என்றும் கூறிவிட்டார். தாங்கள் தானம் வாங்க வரவில்லை என்றும், கடனுதவிக்காகவே வந்திருப்பதாகவும் புலவர் எடுத்துக் கூறினார். கடன் கொடுப்பதற்கென்று வணிகர்கள் இருக்கிறார்கள். தனது தொழில் அதுவல்ல என்று கூறி அந்த வள்ளல் மறுத்துவிட்டார். புலவர் வெள்ளுடையாரும், அந்த மாணாக்கரும் தோல்வியுடன் திரும்பிவிட்டனர்.

புலவர் வெள்ளுடையார், தம்மைக் காண வந்தவேறொரு வசதியுள்ள மாணாக்கரிடம், கூறித் தச்சுத் தொழில் மாணாக்கருக்கு உதவி செய்தார்.

இந்நிகழ்ச்சியைப் புலவர் வெள்ளுடையார் மறந்து விட்டார்.

புலவர் வெள்ளுடையார் நோயுற்றிருந்தபோது அதை அந்த ஊர் வள்ளல் கேள்விப்பட்டார். தம்முடைய ஆள் ஒருவரை அனுப்பி அவருக்கு வேண்டிய உதவியைச் செய்துவரப் பணித்தார்.

அந்த ஆள் வந்து, புலவர் வெள்ளுடையாரைப் பார்த்தார். புலவர் தமக்கு எந்த உதவியும் தேவையில்லை என்று கூறினார். 'இல்லை. இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அந்த ஆள் ஆயிரம் ரூபாயை அவருடைய படுக்கையில் வைத்துவிட்டுப் போய்விட்டார். புலவர் வெள்ளுடையார் அந்த ஆயிரம் ரூபாயைத் தொடக் கூட இல்லை. அதை அப்படியே ஒரு மருத்துவ விடுதிக்கு அனுப்பி அந்த வள்ளல் பெயராலேயே வரவு வைத்துப் கொள்ளும்படி சொல்லி விட்டார்.

அந்த வள்ளலின் மற்றோர் ஆள் மருத்துவருடைய வீட்டுக்குச் சென்றார். புலவர் வெள்ளுடையாரின் மருத்துவச் செலவு முழுவதும் வள்ளலே ஏற்றுக் கொள்வதாகச் சொல்லியனுப்பியிருப்பதாகக் கூறினார்.

புலவர் வெள்ளுடையாருக்குத் தாம் காசுக்காக மருத்துவம் பார்க்கவில்லை என்றும், அன்புக்காகவே பார்ப்பதாகவும் கூறி, மருத்துவர் தொகை பெற மறுத்துவிட்டார். ஆனால் அந்த ஆள், மருத்துவரின் மருந்துப் பெட்டியின் மீது ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு, அவர் அதைப் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டுமென்று கூறி அங்கிருந்து அகன்று போய்விட்டார்.

அந்த மருத்துவர் அந்தப் பணம் முதுவதையும் எடுத்துக் கொண்டு போய்க் கோயில் உண்டியலில் போட்டு விட்டுப் புலவர் வெள்ளுடையாரைப் பார்க்கச் சென்றார்.

மருத்துவர் சென்ற பொழுது, புலவர் வெள்ளுடையாரின் மாணவர் ஒருவர் புலவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ஐயா, தங்கள் மருத்துவர் செலவு முழுவதையும் வள்ளலே ஏற்றுக் கொண்டிருப்பதாக ஊரில் பேசிக் கொள்கிறார்களே, அவ்வளவு செலவழித்துப் பார்க்க வேண்டிய கடுமையான நோயா தங்களுக்கு வந்துவிட்டது?” என்று அந்த மாணவர் கவலையோடு கேட்டார்.

அப்போது அங்கு நுழைந்த மருத்துவர் "தம்பீ, புலவருக்கு வந்துள்ள நோய் கடுமையானதோ கொடுமையானதோ அல்ல. வள்ளலுக்குப் பிடித்துள்ள விளம்பர நோய்தான் கடுமையாக இருக்கிறது. பெயர் பரவாத காலத்தில் புலவர் தம் மாணாக்கருக்கு ஓர் உதவியென்று வள்ளலைப் பார்க்கக் சென்றார். அந்த உதவியால் தனக்கு விளம்பரம் இல்லை யென்று உணர்ந்த வள்ளல் அதைச் செய்ய மறுத்துவிட்டார். இப்போது, அரசரே வந்து பாராட்டி விட்டுச் சென்ற புலவருக்கு, வேண்டாம் என்று மறுத்துக் கூறியும் உதவி செய்ய முன்வந்துவிட்டார். புலவரிடம் உள்ள அன்புக்கு அடையாளமே இந்த உதவியில் காணப்பட வில்லை. வள்ளலின் விளம்பர மோகத்துக்கே இது பயன்படுகிறது. இவருடைய உதவியைப் புலவரோ, நானோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஊர் முழுவதும், புலவருக்கு வள்ளல் உதவி செய்துவிட்ட தாகப் பிரசாரம் நடத்திவிட்டார்கள். தன்னுடைய விளம்பரத்துக்கு, வெள்ளையுள்ளம் படைத்த நம் புலவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்ள அந்த வள்ளல் துணிந்ததுதான் எனக்கு வேதனையளிக்கிறது" என்று மருத்துவர் கூறினார்.

“இப்படியும் ஓர் உலகமா!” என்று அந்த மாணாக்கர் வியப்படைந்தார்.

"வெளிப் பகட்டுக்காகச் செய்கின்ற அறங்கள் உண்மையான அறங்கள் ஆகா. மனத்தில் எவ்விதமான மாசும் மருவும் இல்லாமல் அன்போடு செய்கின்ற உதவிகளே அறமாகும்" என்று புலவர் விளக்கம் சொன்னார்.

அந்த மாணாக்கர் தம் ஆசிரியரின் உயர்வையும், அந்த வள்ளலின் கீழ்மையையும் எண்ணிக் கொண்டே தம் வீட்டுக்குச் சென்றார்.

மனத்துக்கண் மாசில னாதல்-திருக்குறள் அனைத்தறன்;
ஆகுல நீர பிற.

—திருக்குறள்