பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

அகநானூறு - மணிமிடை பவளம்


வெருண்ட மானின் ஏறானது, துணையை அஞ்சேலெனக் குரலிட்டு அழையா நிற்கும் அவ்விடங்களிலே;

கரிய முகத்தையுடைய முசுக்கலைகள் நிறைந்த காட்டிலே;

மிகுதியும் வருத்துதலையுடைய கோடை நீட்டித்த மிகவும் உயர்ந்த ஏற்ற வழியிலே;

நாளுக்கு நாள் வறுமைப்பட்டுக் கொண்டிருக்கும் மண்கலந்த நீரையுடைய சிறிய குளத்தகத்தே தோண்டப்பட்ட குழியின் பக்கத்திலேயுள்ள உண்ணத்தகாத கலங்கல் நீரைக் கொண்டு;

கன்றுகளையுடைய மடப்பம் பொருந்திய பிடியின் மெல்லிய தலையைக் கழுவிவிட்டுத், சேற்றைக்கொண்டு தான் நீராடியதனாலே பிடியோடும் கன்றோடும் வேறுபட்ட வலிய களிறு;

சிவந்த காம்பினையுடைய வெள்ளிய கொத்து அசையத் தன் துதிக்கையாற் பற்றிச், சொறிபொருந்திய தன் முதுகினை உராய்ந்து கொண்ட, வழிக்கு அயலதாகவுள்ள மராமரத்தின் தங்குதற்கமைந்த வரிவரியாயுள்ள நிழலிலே, தங்கி;

பருத்த மென்மையான தோளையுடைய தலைவி, நம்மோடு தானும் வருவள் என்னா நின்றாள்;

நெஞ்சே! இது கேட்க நாம் நகையினை உடையேமாய் இரா நின்றேம்!

(இவ்வாறு, தன். நெஞ்சுக்குக் கூறியவனாகத் தலைமகன் தான் செலவழுங்கினான் என்க.)

முசுவின் கானத்தே ஏறு பயிரும் ஆங்கண் வேனில் நீடிய உயர்வழியிலே களிறு புறமுரிஞிய மராஅத்து நிழலில் அசை இத் தோளி நம்மோடு வரும் என்ப; நெஞ்சே! இது கேட்க நாம் நகையுடையேமாய் இராநின்றேம் என்று கூட்டிப் பொருள் காண்க.

சொற்பொருள்: 1. கடுந்தெறல் - மிகுதியாக வருத்துதலை உடைய. 2. வானுயர் வழி - மிகவும் உயர்ந்த ஏற்றவழி. 3. நாள் வறுமை கூரிய நாளுக்கு நாள் வறுமைப்பட்டுப் போகிய, மண்நீர் - மண் கலந்த நீர். 4. தொடு குழி - தோண்டப்பட்ட குழி. துவ்வா - உண்ணத்தகாத, 5 மடப்பிடி - மடப்பம் பொருந்திய பிடி, இளைய பிடியுமாம். கயந்தலை - மெல்லிய தலை. 6 வயம் - வலிமை. 7. செங்கோல் வாலிணர் - சிவந்த காம்புகளையுடை வெள்ளிய பூங்கொத்து. 7. தயங்க - அசைய. 8. உரிஞரிய - உராய்ந்துகொண்ட 9. வரி நிழல் - வரிவரியாயுள்ள நிழல்.