பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16]

களிற்றியானை நிரை

௪௩ (முடிபு) மகிழ்ந! கூர் எயிற்றரிவை, புதல்வனைக் கண்டு கொண்டனள் நின்றோட் கண்டு வந்து கவைஇ நீயும் தாயை இவற்கென யான் கரைய நாணி நின்றோள் நிலைகண்டு, நின்மகன் தாயாதல் புரைவது எனவே பேணினேன் அல்லனோ.

அரிவை குறுகினள் பேணி முலை (யிடத்துக்) கொண்டனள் நின்றோள் எனவும், யான் விரைவனென் வந்து கவைஇக் கரைய எனவும் கூட்டுக.

(வி - ரை.) அல்லி என்றது ஈண்டுத் தாதினை உணர்த்திற்று. அவிரிதழ் என்னும் பாடத்திற்கு அல்லியாகிய இதழென இருபெய ரொட்டாகக் கொள்க; அல்லி - அகவிதழ். மணி - பவளம். நகைபடு தீஞ்சொல் என்பதற்கு நகையைத் தோற்றுவிக்கும் திருந்தாத சொல் என்றுமாம்; இஃது இளமை பொருளாகத் தோன்றிய நகையாம். பகைவரும் உட்பட யாவரும் விழையும் என்றாள்; 'செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்' என (66) இந் நூலுட் பின்னர் வருதலுங் காண்க. தலைவனது தேர் செல்லும் தெரு, என்றுமாம்; தலைவன் பரத்தைவயின் தேரூர்ந்து செல்வான் ஆகலின். செத்து - கருதி; ஒப்புமாம். பொலங்கலஞ் சுமந்த பூண் தாங்கு இளமுலை என்றது, தலைவனை வயமாக்கும் அவளது இளமை கருதிக் கூறியது. மாள, அசை. புதல்வனை உயிரென்றது, காதல் பற்றியது. தாயை : 'ஐ' முன்னிலைக்கண் வந்தது. எப்பொழுதும் நின்னையே உள்ளத்துக் கொண்டிருப்பாள் என எள்ளுவாளாய் அருந்ததியன்னாள் என்றாள். இனி, அணங்கு அருங் கடவுள் என்பதற்குப் பிறரை வருத்துகின்ற எய்தற்கு அரிய தெய்வமகள் என்றுமாம்.

(மே - ள்.) 1அவனறிவு ஆற்ற' என்னும் சூத்திரத்து ‘ காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட் டிறுதிக்கண்' தலைவி கூற்று நிகழ்வதற்கு, இச் செய்யுளையும், அச் சூத்திரத்து 'அவன் வயிற் பிரிப்பினும்' என்பதற்கு 'நின்மகன்றாயாதல்' என்னும் இச் செய்யுட் பகுதியையும், 2'கற்பு வழிப்பட்டவள்' என்னும் சூத்திரத்து, தலைவி பரத்தையை ஏத்துதல் வழுவமைதியாம் என்பதற்கு நாணி . . . புரைவதாங் கெனவே' என்னும் இச் செய்யுட் பகுதியையும் உதாரணம் காட்டினர் நச்.

3"எள்ளலிளமை' என்னும் சூத்திரத்து, 'நாவொடு நவிலா நகை' என்பது, பிறர் இளமை பொருளாக நகை பிறந்தது என்றும், 4'பெருமையுஞ் சிறுமையும்' என்னுஞ் சூத்திரத்து, 'களவுடம்படுநரிற் கவிழ்ந்து நிலங் கிளையா' என்பது நகை யென்னும் மெய்ப்பாடு பற்றிய உவமம் என்றும், சிறுமை பற்றி வந்ததென்றும், 5'உவமப் பொருளை' என்னுஞ் சூத்திரத்து, களவுடம்படுநர்க்குள்ள வேறுபாடு உலகத்து அடிப்படவந்த வழக்காதலான் அஃது ஏதுவாக அறிந்துகொள்ளப்படுவதாயிற்று என்றும் கூறுவர் பேரா.




1. தொல். கற். ௬. 2. தொல். பொருளி. ௩௯. 3. தொல். மெய்ப். ௪. 4.தொல். உவம. ௧௯. 5. தொல். உவம. ௩௧.