குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/ஒடிவிளையாடு பாப்பா
குழந்தை அங்கும் இங்கும் ஒடுகிறது. நீர்த் தொட்டியிலே கையை விட்டுத் தண்ணீரைச் சுற்றிலும் இறைக்கிறது ; மேலெல்லாம் நனைத்துக்கொள்கிறது; சொக்காயெல்லாம் ஒரே ஈரம். தண்ணீருக்குள்ளே கையை விட்டுச் சளசள வென்று அரவமுண்டாக்குவதிலும், நீரை நான்கு புறமும் தெறிக்கச் செய்வதிலும் குழந்தைக்கு அத்தனை பிரியம். தாய் ஓடி வந்து கவலையோடு பார்க்கிறாள். தண்ணீரிலே இப்படி அடிக்கடி நனைந்தால் குழந்தைக்குச் சளி பிடித்துக்கொள்ளுமே என்று அவளுக்குக் கவலை.
குழந்தையைக் கோபித்துக் கொள்ளுகிறாள். ஒரு நாளைக்கு எத்தனை தடவை உடையை மாற்றுகிறதென்று அவள் வேதனைப்படுகிறாள். குழந்தை அதற்காகக் கவலைப்படுகிறதில்லை. அடுத்த நிமிஷத்திலே அது மண்ணிலே விளையாடத் தொடங்கிவிடுகிறது. மாற்றி அணிந்த புதுச் சொக்காயில் மட்டுமல்ல, தலையிலும், உடம்பிலும் மண்ணைப் போட்டுக்கொள்ளுகிறது. தாய்க்குக் குழந்தையின் இந்தத் துடுக்குத்தனம் ஓயாத தொல்லையாக இருக்கிறது.
அதனால் குழந்தையை விளையாடுவதிலிருந்து தடுத்து விடலாமா? கூடவே கூடாது. விளையாட்டின் மூலம் குழந்தை எத்தனை அறிவையும், அனுபவத்தையும், அவயவங்களை உபயோகிப்பதில் பயிற்சியையும் பெறுகிறது என்பதை உணர்ந்தால் யாரும் குழந்தையின் விளையாட்டைத் தடுக்க நினேக்க மாட்டார்கள். விளையாட்டின் மூலம் குழந்தையின் மனமும் நன்கு மலர்ச்சியடைகிறது. மற்ற குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது இன்னும் எத்தனையோ அவசியமான அனுபவங்கள் குழந்தைக்குக் கிடைக்கின்றன. சமூகத்திலே மக்களோடு கலந்து பிற் காலத்தில் வாழ வேண்டிய குழந்தைக்கு இவையெல்லாம் தேவை. பிறரோடு சேர்ந்து வாழத் தெரிந்துகொள்ளுவதே ஒரு கலை. அதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொரு வரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
சுயநலத்தையே எண்ணிக் கொண்டிருப்பவர்களே நாம் போற்ற மாட்டோம். பச்சைக் குழந்தையைப் போலச் சுய நலத்திலே யாரும் அவ்வளவு பற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதற்குத் தனது வாழ்க்கையும் சுகமும் தான் பெரிது. அம்மா அதையே கவனிக்க வேண்டும்; அதற்கு வேண்டியதையெல்லாம் உடனுக்குடனே எல்லோரும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குத் திருப்தி கிடையாது. வேறு குழந்தையொன்றை அம்மா கையிலெடுத்து மடியில் வைத்துக் கொண்டால் இதற்கு ஒரே ஆத்திரம் பொங்கிவிடும். விளையாட்டுப் பொம்மையை அம்மா வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது. இப்படியெல்லாம் தனது இன்பத்தையே நாடிக் கொண்டிருக்கும் குழந்தை மற்ற குழந்தைகளோடு சேர்ந்து பழகும்போதும் விளையாடும் போதும்தான் மற்றவர்களுடைய இன்பத்தையும், சௌகரியத்தையும் கவனிக்க வேண்டும் என்பதைச் சிறிது சிறிதாக உணர்கின்றது. மற்றக் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போது சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் தன்மை, முன்னின்று நடத்தும் திறமை, தலைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் தன்மையெல்லாம் இயல்பாக அமைகின்றன.
தண்ணீரும், மண்ணும், மணலும் குழந்தைக்கு இயற்கையிலேயே எளிதாகக் கிடைக்கும் விளையாட்டுப் பொருள்கள். அவைகளைக் கூடாதென்று நாம் தடுப்பது சரியல்ல. தண்ணீரை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றில் ஊற்றுவதென்றால் குழந்தைக்கு ஒரே ஆனந்தம். கொஞ்சம் வயதான குழந்தைகள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதிலும், துணிகளைத் துவைப்பதிலும், வாசலுக்கு நீர் தெளிப்பதிலும், பாத்திரங்களைத் துலக்குவதிலும் அளவிலா மகிழ்ச்சி கொள்ளுகின்றன.
மண்ணைப் பிசைந்து பண்டங்கள் செய்வதும், மணலிலே சிறு வீடு கட்டிக் குடும்ப வாழ்க்கையையே விளையாட்டாக நடத்துவதும் குழந்தைகளுக்குப் பெரியதோர் உற்சாகத்தைத் தருகின்றன. வீட்டிலே கண்ட செயல்களையெல்லாம் அவைகள் தங்கள் விளையாட்டிலே நடிக்கின்றன; வீட்டிலே கேட்கின்ற பேச்சுக்களையும் அப்போது பேசுகின்றன.
இந்த விளையாட்டுக்களுக்கு வசதி செய்வதில் அதிகப் பொருட் செலவு கிடையாது. வீட்டோடு சேர்ந்துள்ள காலியிடத்திலே அதற்கு ஏற்பாடு செய்யலாம். நாம் செய்யாவிட்டாலும் குழந்தைகள் அந்த இடத்தைத் தாமே தேடிக்கொண்டு செல்லும். நகரங்களிலே பல வீடுகள் காலியிடமில்லாமல் தெருவோடு சேர்ந்தாற் போலவே இருக்கும். அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் களிமண் சேகரித்து வேறு வசதிகள் செய்ய முயல வேண்டும். கொஞ்சம் அதை விட்டில் ஒரு பக்கத்திலே ஒரு சிறு தொட்டியில் வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் விட்டுப் பிசைந்து களிமண்ணில் பொம்மைகளும், சிறு சிறு பாத்திரங்களும் செய்வதில் குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. வீட்டில் காலியிடம் இல்லாவிட்டாலும் மாலை வேளைகளில் பொது விளையாட்டு மைதானங்களுக்கும், தோட்டப்புறங்களுக்கும் அழைத்துச் செல்லலாம். கடற்கரையின் அருகிலும்,நதிக்கரையின் அருகிலும் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளை அங்கு அழைத்துச் சென்று மணலிலே விளையாடுவதற்கு அடிக்கடி சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏதாவது ஒரு பொருளை உண்டாக்குவதில் எல்லேயில்லாத இன்பமிருக்கிறது. பெற்றோரையும் மற்றவர்களையும் பல விஷயங்களுக்கு எதிர்பார்த்து நிற்கும் குழந்தை தானாகவே ஒன்றைச் செய்யும்போது தன்னம்பிக்கை பெற்று உற்சாகமடைகிறது. அதற்கு நாம் அன்போடு உதவ வேண்டும். குழந்தையின் கற்பனைத் திறனும் அதில் மலர்ச்சி யடைகின்றது.
அத்திறனை வளர்ப்பதற்கு வர்ணக் கலவைகளும் பெரிதும் உதவியாக இருக்கும் மலிவாகக் கிடைக்கும் சுவர்ப்பூச்சு வர்ணங்களே போதும். அவற்றைத் தண்ணீரில் கரைத்துக் கொடுத்துவிட்டால் குழந்தைக்கு எவ்வளவோ ஆனந்தம். பல்லுக் குச்சிக்குப் பயன்படும் ஏதாவது நாருள்ள ஒரு குச்சியின் ஒரு முனையை நன்றாகத் தட்டிப் புருசு போலச் செய்து கொடுத்தால் குழந்தைக்கு அதுவே திருப்தி. சாதாரணக் காகிதமே போதும். ஒவியர்கள் உபயோகிக்கும் விலையதிகமான காகிதமொன்றும் தேவையில்லை. குழந்தைக்குத் தனது உணர்ச்சிகளையெல்லாம் வார்த்தையிலே சொல்ல இயலாது ; ஆனால் அவற்றைச் சித்திரங்களாக வரைந்து காட்ட முயலும்.
குழந்தைகளுக்கு ஆடுவதிலும், நடிப்பதிலும் மிகுந்த பற்றுதலுண்டு. எளிதாக அபிநயம் செய்து கொண்டு பாடுவதற்கு ஏற்ற பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றைச் சொல்லிக் கொடுக்கலாம். குழந்தைகளின் வயதிற்குப் பொருத்தமான சிறு நாடகங்களையோ காட்சிகளையோ நடிக்கச் செய்யலாம். இவையெல்லாம் விளையாட்டுப் போலவே நடைபெற வேண்டும். தேர்ந்த நடிகர்களின் பாணிகளைப் பின்பற்ற வேண்டுமென்று விரும்பி இவ்விளையாட்டுக்களையே ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது. ஒவியம் வரைதலும், நாடகம் நடிப்பதும் பிற்காலத்திலே குழந்தைகளைப் பெரிய ஓவியர்களாகவோ நடிகர்களாகவோ செய்வதற்கென்று யாரும் நினைக்கககூடாது. அக்கலைகளிலே இயல்பான திறமையிருந்தால் ஒருவேளை அவர்கள் அவ்வாறு சிறப்படையலாம். அதற்குக் குழந்தைப் பருவத்தில் கிடைத்த சந்தர்ப்பம் பெரிதும் துணையாக இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு இக்கலைகளில் உற்சாக மூட்டுவது பொதுவாக அவர்களுடைய உடல் வளர்ச்சிக்கும், மனவளர்ச்சிக்கும் உதவி செய்வதற்காகத்தான். இன்பமும் விளையாட்டும் நிறைந்த சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் தங்களுக்கு இயல்புத்திறன் எந்தத் துறையிலிருந்தாலும் அது மேலோங்குவதற்கு வேண்டிய உண்ர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பெறுகின்றன. அவ்வாறு பெற உதவி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
பொதுவாகக் குழந்தை ஒரே விளையாட்டில் நீண்டநேரம் ஈடுபட்டிருப்பதில்லை. அதேபோல ஒரே பொம்மையோ அல்லது விளையாட்டுக் கருவியோ அதற்கு எப்பொழுதும் இன்பமளிக்காது. புதுமையிலே குழந்தைக்கு ஆர்வம் அதிகம். புது அநுபவங்களை அது ஆவலோடு தேடுகின்றது. அதனால் புதிது புதிதாகப் பல விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுப்பது எல்லோருக்கும் இயலாதென்று கருதலாம். இங்கு நாம் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டுப் பொருள்கள் என்றால் விலை அதிகமானவைகளாகவே இருக்கவேண்டுமென்பதில்லை. குழந்தைகள் விளையாடும் போது அவைகளே சேகரித்து. வைத்துக்கொள்ளும் பொருள்களைச் சற்றுக் கவனித்தால் இந்த உண்மை புலனாகும். ஒரு மூங்கில் கம்பை எடுத்து இரண்டுகால்களுக்கும் இடையே வைத்துக்கொண்டு குழந்தை குதிரை சவாரி செய்ய ஆரம்பித்துவிடும்.
உடைந்துப்போன கொட்டாங்கச்சியை எடுத்துத் தொட்டிலிலே போட்டு அதைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுவதை நான் கண்டிருக்கிறேன். ஆகையால் சிறிது யோசனை செய்து பார்த்தால் நாமே பல பொருள்களை அவர்களுக்கு உண்டாக்கிக் கொடுத்துவிடலாம். கன சதுரமும், கன செவ்வகமுமான மரக்கட்டைகள், கிளிஞ்சல்கள், ஆற்றிலே பல நிறங்களில் கிடைக்கும் வழு வழுப்பான கூழாங்கற்கள் முதலானவைகளெல்லாம் குழந்தைக்கு இன்பமளிக்கும் விளையாட்டுப் பொருள்களாகும். இன்னும் எத்தனையோ கருவிகளைச் சாதாரணமாகக் கிடைக்கும் வஸ்துக்களைக் கொண்டு நாம் உருவாக்கிவிடலாம். நல்ல பளபளப்பான பச்சை, சிவப்பு முதலிய வர்ணங்களைக் கண்டு குழந்தை மகிழ்ச்சியடைகிறது. அவற்றைப் பூசிய விளையாட்டுப் பொருள்கள் பலவற்றை நாமே செய்து கொடுக்க முடியும்.
வீட்டுக் காரியங்கள் பலவற்றிலே பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று குழந்தை விரும்புகிறது. பெருக்குவது, கோலம் போடுவது, காய் நறுக்குவது என்றிப்படிக் காரியங்கள் செய்வதென்றால் அதற்கு ஒரே உற்சாகம். விளையாட்டாகவே குழந்தை அவற்றைச் செய்யும். அவ்வாறு செய்து உதவுவதனால் தானும் பெரியவர்களைப் போலத் தொழில் செய்வதாக உணர்ந்து உள்ளத்திலே, பெருமையடைகிறது. தனக்குப் பல வழிகளிலே பணி செய்யும் தாய்க்குத் தானும் உதவியாகக் காரியம் செய்வதால் இன்பமடைகிறது. கொஞ்சம் பொறுமையோடு குழந்தைக்கு இவ்வித சந்தர்ப்பங்களை அளிக்கவேண்டும்.
"அது சின்னக் குழந்தை அதெற்கென்ன தெரியும்?" என்று சிலர் அடிக்கடி குழந்தையின் முன்னால் பேசுவார்கள். பேசுவதோடு நில்லாமல் குழந்தையைச் சிறு சிறு காரியங்கள் செய்யாமலும் தடுப்பார்கள். இவ்விதம் செய்வது அதன் மன வளர்ச்சின்யத் தடுப்பதாகும். தன்னால் எந்தக் காரியமும் செய்ய முடியாது என்று நாளடைவிலே எண்ணிக் குழந்தை தாழ்மை உணர்ச்சி பெறவும் காரணமாகிவிடும். வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்குத் தடையாகவும் ஏற்பட்டுவிடும்.
பூனைக் குட்டிகள், நாய்க்குட்டிகள் முதலானவைகளைக் கவனித்தால் அவை சதா விளையாடிக் கொண்டிருப்பது தெரியவரும். அவையெல்லாம் தமது அவயவங்களைச் சரிவர உபயோகிப்பதில் பயிற்சி பெறுவதற்கும், வாழ்க்கையில் அத்தியாவசியமாகத் தமக்கு வேண்டிய திறமைகளைப் பெறுவதற்கும் அவ்வாறு செய்கின்றன. மனிதக் குழந்தையும் விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை அவை பூரணமாகப் பெற்று உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும், தன்னம்பிக்கை, உற்சாகம், துணிச்சல் முதலான பண்புகளும் பெறுவதற்கு நாம் உதவவேண்டும். அதன் வயதிற்குத் தக்கவாறு விளையாட்டுக்களும் மாறி அமையவேண்டும். பார்க்கத்தக்க இடங்களுக்கு நடந்து செல்லுதல், சிறு சிறு குன்றுகளிலும், மலைகளிலும் ஏறுதல், தண்ணிரிலே நீந்துதல் முதலியவை சற்று வயது வந்த குழந்தைகளுக்கு உகந்தவையாகும். குழந்தையிடத்திலே அன்பு மிகுந்த பெற்றோர்கள் அதைக் கவனித்து ஏற்பாடு செய்வதால் குழந்தையின் பிற்கால வாழ்க்கையின் வெற்றிக்குப் பெரிதும் உதவுகிறவர்களாவார்கள்.
குழந்தையின் உள்ளத்திலே எழும் பகைமை உணர்ச்சி முதலிய விரும்பத்தகாத உணர்ச்சிகளை விளையாட்டின் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். அவை உள்ளத்திலேயே அழுந்திக் கிடக்காமல் செய்யும் சக்தி விளையாட்டிற்கு உண்டு. சமூகத்திலே கூடி வாழவும், வாழ்வில் ஏற்படும் வெற்றி தோல்விகளை அமைதியாக ஏற்றுக் காரியம் செய்யவும் கற்றுக்கொள்ள விளையாட்டு உதவுகிறது என்று மனத் தத்துவர்கள் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.