குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/எண்ணித்துணியும் பேராற்றல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
6. எண்ணித் துணியும் பேராற்றல்

னிதனுக்குத் தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி இருக்கின்றது. அது என்ன என்று யோசிக்கும்போது அந்த யோசிக்கும் சக்தியேதான் அது என்று ஏற்படுகிறது. ஆம், மனிதனுடைய தனிப் பெருமை அவனுக்குள்ள சிங்தனா சக்திதான். ஆகையால் அதை எவ்வளவுக்கு மனிதன் அபிவிருத்தி செய்து கொள்ளுகிறானோ அவ்வளவுக்கு அவன் மேம்பாடடைகின்றான்.

மனிதனுடைய ஆற்றல்களை நன்கு மலரும்படி செய்ய வேண்டுமானால், ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே மனிதனுடைய பிற்கால வாழ்க்கையின் போக்கு நிர்ணயமாகிவிடுகிறது என்று மனத்தத்துவர்கள் கண்டிருக்கிறார்கள். மறை மனத்தைப் பற்றி முதல் முதலாக ஆராய்ந்த பிராய்டு என்பவர், ‘ஐந்து வயதிற்குள்ளேயே மனிதன் தனது பூரண அமைப்பையும் அநேகமாகப் பெற்றுவிடுகிறான்’ என்கிறார். பலதிறப்பட்ட அபிப்பிராயங்களுடைய மனத் தத்துவர்களும் இந்த விஷயத்திலே பொதுவாக ஒரேமாதிரியான எண்ணங்கொண்டிருக்கிறார்கள். இளம் பிராயத்திலே மனிதனுடைய வாழ்க்கையின் முழு உருவம் பெரும்பான்மையும் அமைந்து விடுகிறது என்பதுதான் அவர்களுடைய முடிவு. ஆகையால் அந்தப் பருவத்திலேயே அடக்கி ஒடுக்கப்படாது நன்கு மலர்வதற்கு வேண்டிய வசதி அளிக்கப்பட்ட ஆற்றல்களே மேலோங்கும். சிறுவர்களுடைய சிந்தனா சக்தி இந்த விதிக்கு மாறுபட்டதல்ல. இளமையிலிருந்தே

தானகவே எண்ணிப் பார்க்கும் திறமையை வளரும்படி செய்யவேண்டும். அப்பொழுதிருந்தே அதை அடக்கி நக்கிவிடாமல் மேலோங்குவதற்கு வேண்டிய சுதந்திரம் அளிக்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் மனிதனுக்கு விசேஷமாக வாய்த்துள்ள சக்தி அதன் இயல்பான முழு மலர்ச்சியடையும்.

வயதிற்கேற்றவாறு சிறு விஷயங்களைப் பற்றிச் சொந்தமாக எண்ணிப் பார்க்கச் சந்தர்ப்பமும், உரிமையும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் பெரியவர்களுடைய எண்ணத்தையும், தீர்மானத்தையுமே சிறுவன் ஏற்றுக் கொள்ள நேரிட்டால் அவனுக்குத் தனது சொந்த சக்தியை விரிவடையச் செய்து கொள்ளச் சமயமேற்படாது. உடல் உறுப்புக்களையும் பிற ஆற்றல்களேயும் பயிற்சியால் திடப் படுத்துவதுபோலச் சிந்தன சக்தியையும் பயிற்சியாலேயே திடப்படுத்த வேண்டும்.

சிறு குழந்தை தான் பார்க்கின்ற பொருள்களைப் பற்றியும் செய்கின்ற காரியங்களைப் பற்றியும்தான் முக்கியமாக் எண்ணிப் பார்க்கமுடியும். கொஞ்சம் வயது வந்த சிறுவர்கள் சிக்கல் அதிகமில்லாத லேசான விஷயங்களைப் பற்றி யோசித்து முடிவு செய்யக்கூடும். ஆனால் சத்தியம், கொல்லாமை என்றிப்படிப்பட்ட கருத்தியலான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது சிரமம். இங்கு நாம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதென்னவென்ருல் குழந்தைப் பருவத்திலும் அதற்கேற்றபடி எண்ணமிடும் திறமை உண்டு; ஆதலால் அதற்கு வேண்டிய சமயமும் சுதந்திரமும் அளிக்க வேண்டுமென்பதே.

சிறுவர்களுக்குச் சுயேச்சையாகச் சிந்தனை செய்யச் சமயமளிப்பதுடன் அவர்கள் வெளியிடும் எண்ணங் களுக்கும் மரியாதை காண்பிக்கவேண்டும். சிறுவன் உற்சாகத்தோடு ஒரு யோசனை சொல்லுகிறான். உடனே ஆகா, நீ மிகவும் பெரிய மனிதன், யோசனை சொல்ல வந்துவிட்டாய் என்று அலட்சியமாகப் பேசினால் அவன் மனம் சுருங்கிப் போய்விடும். பிறகு அவன் தானாக் எண்ணமிடவும் பின் வாங்குவான். அன்போடும், அதுதாபத்தோடும் அவனுடைய யோசனையை ஏற்றுக்கொண்டு ஊக்கமளிக்க வேண்டும். அதிற் குறைபாடிருந்தால் நயமாக அதை மாற்றிக்கொள்ள உதவலாம்.

மேலும் குழந்தைகள் உலகமே வேறு; அவர்களுடைய எண்ணங்களும் தனிப்பட்டவையே; அவற்றைப் பெரியவர்களின் மனப்போக்கோடு வைத்துச் சீர்தூக்கிப் பார்க்கலாகாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் சிறு வயதிற் கொண்டிருந்த மனப்போக்கை மறந்து விடுகின்றோம். அப்படி மறந்து விட்டு, இயல்புக்கு மாறாகப் பெரியவர்களின் மனப்போக்கைச் சிறுவர்களிடம் எதிர்பார்க்கின்றோம்.

திருஷ்டாந்தமாக ஒரு சிறிய சம்பவத்தை இங்கு எடுத்துச் சொல்லுகிறேன். ஒருசமயம் பல குழந்தைகள் சித்திரம் வரைந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் தமதிஷ்டம்போல ஏதாவது படம் போட்டார்கள். ஒரு குழந்தை ஒரு பெரிய எருமையின் படம் வரைந்தது. அது அதோடு நின்றுவிடவில்லை. அந்த எருமைக்குப் பக்கத்திற்கு இரண்டிரண்டாகச் சிறகுகளும் வைத்துவிட்டது. சித்திரம் இயற்கைக்கு மாறுபட்டிருக்கிறதே என்று ஆசிரியருக்குக் கோபம். ஆனால் அந்தக் குழந்தையோ தூங்கி மெதுவாக அசைந்து கடக்கும் எருமை வேகமாக ஆகாயத்தில் பறக்க வேண்டும் என்று எண்ணுகிறது!

மேலும் குழந்தைக்குப் பல பொருள்கள் தோன்றும் விதம் வேறு; பெரியவர்களுக்கு அவை தோன்றும் விதம் வேறு. குழந்தைக்கு மரப்பாச்சி ஒரு குழந்தையாகவே உணர்ச்சிகளை எழுப்புகின்றது. ஒரு குச்சியைக் குதிரை எனப் பாவித்துச் சிறுவன் அதில் சவாரி செய்யும் பொழுது அக்குச்சி அவனுக்குக் குதிரை போன்றே ஆகிவிடுகிறது. இம்மாதிரி சிறுவருடைய உள்ளத்தில் எழும் எண்ணங்கள் வேறானவை என்பதை நாம் நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த எண்ணங்கள் நமது எண்ணங்களுடன் பொருந்தவில்லையே என்பதற்காக அவற்றை அலட்சியம் செய்யலாகாது. குழந்தை எப்பொழுதுமே குச்சியைக் குதிரையாகப் பாவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல; வயசாக ஆகக் குழந்தை அவ்வாறு எண்ணிக்கொண்டு இருக்காது. நான் இங்கு எடுத்துக் காட்ட விரும்புவதென்னவென்றால் சிறுவனின் மனப் போக்கு வேறாக இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடாது என்பதுதான். சிறுவனின் மனப்போக்கு அவனுடைய வயசின் இயல்புக்குத் தக்கவாறு சுயேச்சையாக வளர்ந்து வந்தால்தான் பெரியவனுகின்ற காலத்தில் பூரணமலர்ச்சி அடையமுடியும்.

சாதாரணமாக மனிதன் சமூகத்தையும் சூழ்நிலையையும் அனுசரித்துத் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றான். ஓரளவிற்கு அவற்றைத் தன் இஷ்டப்படி மாற்றி அமைக்கவும் முயல்கின்றான். பெரும்பாலோர் சமூகத்தை அனுசரித்தே கடந்து கொள்வார்கள். ஆனால் உறுதியான எண்ணங்களுடைய சிலர் சமூகத்தைத் தமது எண்ணங்களுக்கேற்ப மாற்றி அமைக்க முயலுகிறார்கள். அவர்களுடைய எண்ணங்கள் உயர்ந்தவையாக இருந்தால், அவை சமூகத்தின் முன்னேற்றத்திற்கே காரணமாய் விடுகின்றன. அப்படிப்பட்ட சிந்தனையாளர்களால் உலகம் நன்மையடைகின்றது. சிங்தனை சக்தியை இளம்பிராயம் முதற்கொண்டே தடை செய்யாது மலரும்படி செய்வதாலேயே இது சாத்தியமாகின்றது.

ஆனால் எல்லோரும் சமூகத்தையே மாற்றியமைக்கக் கூடிய சிந்தனையாளர் ஆகிவிட முடியாது. இருந்தாலும் சொந்த எண்ணங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் மரியாதை கொடுத்துச் சிறுவர்களே வளர்த்தால் அவர்கள் பிற்காலத்திலே கண்மூடித்தனமாக எதையும் கம்பிக்கொண்டு காரியம் செய்யாமலிருப்பார்கள். கவி ரவீந்திரநாத தாகூர் சொல்லுகிறார்-'சிந்தணு சக்தியானது பழைய மூடப் பழக்க வழக்கங்கள் என்னும் பாலேவனத்திலே மறைந்துவிடாது மேலோங்கி நிற்கும் உலகம் வேண்டும்' என்று. பரம்பரைப் பழக்கங்கள் நல்லதானாலும் சரி, கெட்டதானாலும் சரி நம்மை இறுகப் பிடித்துக் கொள்கின்றன. அவற்றையெல்லாம் நமது அறிவைக் கொண்டு அலசிப் பார்த்துப் பயனுள்ளவைகளை வைத்துக் கொண்டு மற்றவைகளைக் களைக்தெறியும் துணிவு நமக்கு உண்டாக வேண்டும். அவ்வாறுண்டாக வேண்டுமானால் சுயேச்சையாக எண்ணிப் பார்க்கும் பயிற்சி சிறு வயது முதற்கொண்டே போற்றி ஆதரிக்கப்படவேண்டும்.

மேலும் வாழ்க்கையிலே மனிதனுக்குப் பல பிரச்னைகள் உண்டாகின்றன; பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன. அப்பொழுதெல்லாம் அவன் தானாகக் காரியம் செய்ய வேண்டும். அவனுடைய ஆலோசனையைப் பொறுத்துத் தான் அவனுக்கு வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ இருக்கின்றது. பெரியவனுனவுடன் திடீரென்று இந்த ஆலோசனைத் திறமையும், தனது ஆலோசனையிலே நம்பிக்கையும் உண்டாகிவிடுமா ? முடியாது. சிறு வயதிலிருந்தே அந்தச் சக்தி தடங்கலில்லாது மலர்ந்து வரவேண்டும் என்பது இதனாலும் விளங்குகிறதல்லவா?

இன்று உலகத்திலே பெரும்பாலான மக்கள் சொந்தமாகத் தாங்களே ஒரு விஷயத்தைப் பற்றி எண்ணமிட்டு முடிவுக்கு வர நினைப்பதில்லை. வேறு யாராவது ஒருவர் அதைப் பற்றிச் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஏனென்றால் சிந்தனை செய்வதற்குச் சிரமம் எடுத்துக் கொண்டாலும் திடீரென்று அந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுவதில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு நம்பிக்கையுள்ள ஒருவன் அதைச் செய்யட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இந்த மனப்பான்மையை உபயோகித்துக் கொண்டுதான் சில புதிய அரசியலமைப்புகள் உலகத்திலேயே ஏற்படலாயின. சர்வாதிகார நாடுகளிலே சுயேச்சையாக எண்ணமிடு வதையே ஆதரிப்பதில்லை. குழந்தைகளும் ஒரு குறுகிய வழியிலேயே எண்ணமிடுமாறு அவர்களுடைய மனப்போக்கைக் கட்டுப்படுத்தி வளர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறுவிதமாக எண்ணிப்பார்க்கும் ஆற்றல் குறைந்து விடுகிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுவதே சரியானது என்றும் படுகிறது.

இம்மாதிரி மனப்பான்மை ஆட்சி புரிபவர்களுக்கு அனுகூலமென்றாலும், நாட்டிற்கோ உலகத்திற்கோ நன்மை பயக்காது என்பதை நாம் இன்று நிதரிசனமாகக் கண்டு கொண்டோம். ஆதலினாலே சிந்தனா சக்தி தாராளமாக வளரும்படி சிறுவர்களே வளர்த்து, அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தமது எண்ணத்தால் சோதித்துப் பார்க்கும் படியான மனப்பான்மை உடையவர்களாக ஆக்க வேண்டும்.

குழந்தையின் மனப்போக்கு செம்மையாக அமைவதற்குப் பெற்றோர்கள் உதவவேண்டும். குழந்தை சுயேச்சையாக எண்ணமிடுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். சிறுவர்களின் சிந்தனு சக்தியை விகசிக்கச் செய்வதில் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தத் திறமையை வளர்க்கும் அளவிற்குத்தான் முக்கியமாகக் கல்வியின் பயன் இருக்கின்றது. ஆனால் இன்று புத்தகங்களிலுள்ள அறிவையும் எண்ணங்களையும் சிறுவர்களுடைய மனத்தில் புகுத்துவதே கல்வியாகக் கருதப்படுகின்றது. சிறுவனுக்குத் தானகவே எண்ணிப் பார்த்து முடிவுக்கு வரும் சக்தர்ப்பம் அளிக்கவேண்டும். எல்லா விஷயங்களையும் ஆசிரியர்களே கூறிவிடுவது சரியான முறையல்ல. மாணவன் தனது ஆலோசனையால் உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றால் அதனால் அவனுடைய மனத்திறமை வளர்வதோடு, தெரிந்து கொண்ட விஷயமும் உள்ளத்தில் ஊன்றிப் பதிந்து விடுகிறது.

பள்ளிகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள், பந்தய விளையாட்டுக்கள், நாடகங்கள் முதலியவற்றிற்கு அவசியமான திட்டங்களைச் சிறுவர்களே வகுத்துக் கொள்ளவும், அவர்கள் எண்ணப்படியே கடத்தவும் விட்டு விடவேண்டும். ஒரு காரியத்தைப் பொறுப்பேற்று நிர்வகிக்க நேரிடும்போதுதான் அதைப் பற்றித் தீவிரமான ஆலோசனையும் பிறக்கின்றது. ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆங்காங்கு உதவி புரிபவர்களாகப் பின்னணியிலேயே இருந்து விடலாம். சிறுவர்கள் தவறு செய்தாலும் அதை அடிக்கடி சுட்டிக் காண்பித்து, அவர்களுக்குத் தங்களிடத்திலேயே நம்பிக்கையில்லாமற் போகும்படி செய்யக்கூடாது. அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் உண்டாகுமாறு தைரியம் சொல்லி உதவவேண்டும்.

வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கின்றபோதும் சிறுவனுடைய சிந்தணா சக்தியை வளர்ப்பதிலேயே ஆசிரியர் நோக்கங் கொண்டிருக்க வேண்டும். பெளதிக சம்பந்தமான ஒரு உண்மையைப் பற்றிப் போதிக்கின்ற காலத்தில் அதை எடுத்தவுடனே கூறிவிடாமல், மாணவனே கண்டு பிடிக்கும்படியாகச் செய்யலாம். ஒரு கணக்குச் செய்கின்ற போது சந்தேகமேற்பட்டால் அதை ஆசிரியரே நிவர்த்தி செய்துவிடாமல், மாணவன் தனது ஆலோசனையாலேயே நிவர்த்தி செய்துகொள்ள உதவலாம். இம்மாதிரி சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அவற்றை நன்கு பயன்படுத்திச் சிறுவனுடைய மனத் திறனை மேலோங்கச் செய்யலாம். பல உண்மைகளை ஆசிரியரோ புத்தகமோ எடுத்துரைப்பதும் அவற்றை ஏற்றுக் கொள்வதுந்தான் கல்வி என்ற எண்ணம் தவறானது. உண்மைக் கல்வியானது வாழ்க்கையில் எதிர்ப்படுகின்ற பிரச்னைகளைச் சமாளித்துக் கொண்டு வெற்றி பெறும்படியாக எண்ணமிடும் திறமையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். சுருக்கமாகக் கூறினால் பரீட்சையில் வெற்றிபெறச் செய்வது மட்டும் உண்மைக் கல்வியல்ல; வாழ்க்கைப் பரீட்சையிலும் வெற்றி பெறச் செய்வதே உண்மைக் கல்வி.

அவ்வாறு வெற்றி பெறுவதற்குச் சிறுவர்களுடைய சிந்தனா சக்தி நன்கு மலரும்படி செய்யவேண்டும். அதற்குச் சிறுவர்களுடைய மனப்போக்கை அன்போடும், அனுதாபத்தோடும் அறிந்துகொண்டு அதைச் சுயேச்சையாக வளரும் படி செய்வதே சிறந்த வழியாகும்.