குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/அடிக்கலாமா ?

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

7. அடிக்கலாமா

'டியாத பிள்ளை படியாது' என்று எப்படியோ ஒரு பழமொழி தமிழிலே தவறாகத் தோன்றிவிட்டது. பலர் இதை வேதவாக்காக மதிக்கிறார்கள். இதை முழு மனத்தோடு பின்பற்றினால்தான் குழந்தைகளே கன்கு வளர்க்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.

"கையில் அடிக்காதே; குழந்தை மந்தியாய்ப் போய் விடும்; ஒரு சின்ன மிளார் வைத்துக்கொண்டு சுருக்கென்று அடி கொடுக்க வேண்டும்" என்று சிலர் போதனை செய்வதை நான் கேட்டிருக்கிறேன்.

ஒரு சமயம் நான் ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஒரு ரசமான சம்பாஷணை என் காதில் விழுந்தது.

வீட்டை விட்டு ஓடிப்போன தன் மகனைத் தேடிக் கொண்டு ஒருவர் புறப்பட்டிருக்கிறார் அவர் அதைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.

"நீங்கள் பையனுக்கு மிகவும் செல்லம் கொடுத்திருப்பீர்கள். அதனால்தான் அவன் யாருக்கும் அடங்காமல் ஓடியிருக்கிறான்” என்றார் ஒரு பிரயாணி.

"அடித்து மிரட்டி வைத்திருந்தால் இப்படி ஓடுவான்” என்று கேள்வி போட்டார் மற்றொருவர்.

"நான் அடிக்காத அடியா? எத்தனை தடவை அடித்திருக்கிறேன்! ஒவ்வொரு நாளைக்குப் பிரம்பை எடுத்தால் உரித்துப் போடுவேன்” என்றார் காணாமற்போன பையனுடைய தகப்பனர்.

"குழந்தையிலிருந்தே அடித்து மிரட்டி வைக்க வேணும். அப்போது செல்லம் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பெரியவனான் பிறகு அடித்தால் இப்படித்தான் ஓடுவான்" என்று காரணங் கண்டுபிடித்தார் வேறோரு பிரயாணி.

"அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று இன்னொருவர் பழமொழியில் பேசினார்.

அவர்கள் பேச்சைக் கேட்கக் கேட்க என்னையறியாது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பலர் இவர்களைப் போலத்தான் பொதுவாக நம்பிக்கை வைத்திருக்கிருர்கள். அடித்து வளர்க்காத பிள்ளையும் பிடித்து வளர்க்காத மீசையும் உருப்படாவாம்.

பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடத்தில் அளவுகடந்த பிரியம் இருக்கிறது. இருந்தாலும் குழந்தைகளை அடிக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் குழந்தைகள் திருந்தி, நல்ல வழியில் நடக்கக் கற்றுக்கொள்ளும் என்பது அவர்களுடைய எண்ணம். இது முற்றிலும் சரியல்ல. நல்ல முறையில் வளர்ப்பதற்குக் குழந்தையை அடிக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்பதனாலும் மிரட்டுவதாலும் குழந்தைக்கு நன்மையை விடத் தீமையே அதிகம் விளைகின்றது என்று குழந்தையின் மனத்தை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் கூறுகிறார்கள்.

"சில சமயங்களிலே குழந்தைகள் பிடிவாதம் செய்கின்றனவே, அப்பொழுது அடிக்காமல் என்ன செய்வது? எவ்வளவு அன்பாகவும் பொறுமையாகவும் பேசினாலும் கேட்பதில்லை. அந்தச் சமயத்திலே என்ன செய்வது?" என்று சில பெற்றோர்கள் கேட்கிறார்கள்.

"வாயில் சொல்லிவிட்டுப் போகிறவர்களுக்கென்ன? குழந்தையை வளர்த்துப் பார்த்தால் கஷ்டம் தெரியும். என் மகன் ராமு இருக்கிறானே, அவன் ஒவ்வொரு நாளைக்கு எதையாவது வேண்டுமென்று ஒரே கத்துக் கத்துவான். கீழே விழுந்து புரளுவான். இரண்டடி கொடுத்தால்தான் அடங்குவான். அவனே அடிக்காமல் என்ன செய்ய முடியும்?" என்று ஒரு தாய் என்னைக் கேட்டாள்.

ஆரம்பத்திலிருந்தே குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தால் இப்படி அடிக்க வேண்டி நேராது. அன்போடு வார்த்தை சொல்லுவதாலும், நம்முடைய நடத்தையின் உதாரணத்தாலுமே குழந்தையைச் சரியான வழியில் நடக்கும்படி செய்துவிடலாம். சில சமயங்களிலே குழந்தைக்கு அதன் நடத்தை சரியில்லே என்பதை நமது முகக் குறிப்பாலேயே உணர்த்திவிடலாம். சாதாரணமாகக் குழந்தை மற்றவர்களுக்கு விருப்பமில்லாததைச் செய்யாது. மற்றவர்கள் தனது செய்கைகளைப் பாராட்டிப் போற்ற வேண்டுமென்று குழந்தைக்கு ஆசை. பெற்றோர்கள் வெறுக்கிறார்கள் என்றால் அம்மாதிரியான காரிய்த்தை விலக்கிவிடக் குழந்தை முயலும். ஆனால், அதற்கு முதலிலிருந்தே பெற்றோர்கள் ஜாக்கிரதையாகக் குழந்தையை நல்ல முறையில் வளர்த்துவர வேண்டும். அடிப்பதனால் குழந்தையின் மறைமனத்திலே பல கோளாறுகள் ஏற்பட்டு அதன் பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று மனத் தத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் குழந்தையை அடிக்கவே கூடாது என்கிறார்கள் அவர்கள். ஒரு சிலர் எப்பொழுதாவது வேறு வழியொன்றும் தோன்றாத காலத்தில் குழந்தையை அடிக்கலாம் என்று ஒரு விதி விலக்கும் கூறுகிறார்கள். ஆனால், வெறும் கோபத்தாலோ வெறுப்பாலோ மட்டும் அடிக்கப்படாது என்றும், குழந்தையைத் திருத்துவதற்காக அதன் குற்றத்தை எடுத்துக்காட்டும் முறையில் அமைதியான மன நிலேயோடு அடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வரம்பு கட்டியிருக்கிறார்கள்.

பொதுவாகக் கோபத்தினுல்தான் குழந்தையை அடிக்கிறோம். அடி படுகின்றபோது, "பெரியவர்களாக இருப்பதால்தான் அவர்கள் என்னை அடிக்கிறார்கள்” என்று குழந்தையின் மனத்தில் எண்ணம் உதயமாகுமாம். அந்த எண்ணம் வெறுப்புணர்ச்சிக்குக் காரணமாகிவிடும்.

சில பெற்றோர்கள் மித மிஞ்சிய அன்பு காட்டுவார்கள்; கோபம் வந்துவிட்டால் அளவுக்கு மிஞ்சிக் கடுமையாக இருப்பார்கள். இரண்டும் தவறு. அன்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் தீங்கில்லை. ஆனால், கண்டிப்பும், மிரட்டலும் அதிகமாக இருக்கக்கூடாது. குழந்தையின் மனத்திலே வெறுப்புணர்ச்சி முதலிய விரும்பத்தகாத உணர்ச்சிகள் தோன்றுவதற்கு அது காரணமாக இருக்கும்.

குழந்தை நமது அன்புக்குப் பாத்திரமானது; புதிதாக மலர்ந்த பூவைப் போன்றது. அதை அடிக்கக் கூடாது. அது அன்பிலேதான் முழு மலர்ச்சி பெறும்.