பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

89


தனது இதயத்தை, அந்த மக்களுக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்ற ஆசை அவனைப் பிடித்து உலுப்பியது.

பெருங்களிப்புடனும் தெம்புடனும் அவன் மீண்டும் முழங்கினான்: “தோழர்களே! தேவாலாயங்களையும் தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்; கைவிலங்குகளையும் காசுகளையும் உருவாக்குவதும் நாம்தான். தொட்டில் முதல் சுடுகாடுவரை ஒவ்வொருவரின் உணவுக்கும், களிப்பிற்கும் ஆதார சக்தியாய் திகழ்வது நாம்!”

“ஆமாம், ஆமாம்!” என்று கத்தினான் ரீபின்.

“எங்கு பார்த்தாலும் சரி, எப்போது பார்த்தாலும் சரி, நாம்தான் உழைப்பதில் முன்னணியில் நிற்கிறோம்; வாழ்க்கையிலேயோ நாம்தான் பின்னணியில் நிற்கிறோம். நம்மைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நமது நன்மைக்காக, யாராவது என்றாவது சிறிதளவாவது உதவியிருக்கிறார்களா? யாராவது நம்மை மனிதப் பிறவிகள் என்றாவது மதிக்கிறார்களா? இல்லை, ஒருவருமே இல்லை!”

“ஒருவருமே இல்லை” என்று எங்கோ ஒரு குரல் எதிரொலித்தது.

பாவெல் மீண்டும் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அமைதியுடனும் எளிமையுடனும் பேசத் தொடங்கினான். மக்கள் அனைவரும் ஒரு ஆயிரந்தலை உடல் போல ஒன்று சேர்ந்து, அவனை நோக்கி நகர்ந்தனர். அனைவரும் ஆர்வம் நிறைந்த கண்களோடு அவனது முகத்தையே பார்த்தார்கள்; அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினார்கள்.

“நமது உரிமைகளுக்காகப் போராடும் ஆசையால் ஒன்றுதிரண்டு ஒருவரோடு ஒருவர் பிணைந்து நின்று, நாமெல்லாம் நண்பர்கள் என்ற உண்மையை உணர்ந்தாலன்றி, நமது சுக வாழ்வை நாம் போராடிப் பெற முடியாது!”

“விஷயத்துக்கு வா!” என்று தாய்க்குப் பக்கத்திலிருந்து ஒரு முரட்டுக்குரல் கத்தியது.

“குறுக்கிட்டுப் பேசாதே!” என்று வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு குரல்கள் ஒலித்தன.

தொழிலாளர்களது கறுத்த முகங்கள் நம்பிக்கையற்றுச் சுருங்கிச் சுழித்தன. எனினும் பல தொழிலாளர்கள் பாவெலின் முகத்தையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

“இவன். சோஷலிஸ்ட்! முட்டாள் அல்ல!” என்றது ஒரு குரல்.