பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/முஹர்ரம் புத்தாண்டுச் சிந்தனை

விக்கிமூலம் இலிருந்து
முஹர்ரம் புத்தாண்டுச்
சிந்தனை


இஸ்லாமிய புத்தாண்டு

உலகிலுள்ள சமயங்கள் பலவும் தத்தமது சமயத்துக்குரிய புத்தாண்டு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடத் தவறுவதில்லை. அதேபோன்று இஸ்லாமியப் புத்தாண்டு மாதமாக முஹர்ரம் மாதம் உலக முஸ்லிம்களுக்கு அமைந்துள்ளது. திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாதங்களுள் முஹர்ரமும் ஒன்று.

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் இறுதி மாதமாக துல்ஹாஜ் மாதம் அமைந்துள்ளது. ஆண்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் உள்ளது.

ஹிஜ்ரி ஆண்டு பிறந்த வரலாறு

இஸ்லாமிய ஆண்டு ‘ஹிஜ்ரி’ என அழைக்கப்படுகிறது. ‘ஹிஜ்ரத்’ எனும் சொல்வழிப் பிறந்தது ‘ஹிஜ்ரி’.

‘ஹிஜ்ரத்’ என்ற சொல்லுக்கு இடம் பெயர்ந்து செல்லுதல் என்பது பொருளாகும். முஹம்மது நபி (சல்) மக்காக் குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கத் தன் தோழரோடு மதினா நகர் நோக்கிப் பெயர்ந்து சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ என்பதாகும்.

நபிகள் நாயகம் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கு முன்பு மூன்று வகையான ஆண்டுகளை அரபிகள் கடைப்பிடித்து வந்தனர் என்பதை முன்பே பார்த்தோம். அவை ‘அனுமதி ஆண்டு’. ‘நில அசைவு ஆண்டு ‘, ‘யானை ஆண்டு’ என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. இவை ஒவ்வொன்றும் அரபி களின் சமுதாய வாழ்வில்-வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தன. சான்றாக, அப்ரஹா, என்பவன் மக்காவிலுள்ள புனிதத் தலமான கஃபா வை இடித்துத் தள்ள பெரும் யானைப் படையுடன் வந்தான். படை கஃபாவை நோக்கி விரைந்து வரும்போது இறையருளால் அபாபீல் எனும் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் சிறு சிறு கற்களைப் பொழிந்து அவனையும் அவன் படைகளையும் தாக்க அனைவரும் மடிந்தனர். கஃபா காப்பாற்றப்பட்டது. இச்சம்பவத்தைக் குறிக்கும் வகையிலேயே ‘யானை ஆண்டு’ அமைந்தது. இம் மூன்று வகை ஆண்டுகள் புழக்கத்தில் நிலவி வந்த போதிலும் எதுவும் அரபிகளின் வாழ்வில் நிலைபெறாமலே இருந்து வந்தன. இதனால் ஆண்டுக் குழப்பமும் இருந்தே வந்தது.

இஸ்லாம் நிலை பெற்ற பிறகு தங்களுக்கென புத்தாண்டு ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டது.

எனவே, ஒரு ஆண்டு முறையை உருவாக்கி உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தன் சகாக் களுடன் ஆலோசனை செய்தார் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள். சிலர் பாரசீக ஆண்டு முறையைப் பின்பற்றலாம் என்றனர். இன்னும் சிலர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முறை வகுக்கலாம் என்றனர். அண்ணல் நபியின் மருகர் அலீ (ரலி) அவர்கள் பெருமானார் மக்காவிலிருந்து மதீனா புறப்பட்டுச் சென்ற நாளை அடித்தளமாகக் கொண்டு ஆண்டு முறை உருவாக்கலாம் என்றார். இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அண்ணலார் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

முஹர்ரம் முதன்மை பெற்றது

அக்காலத்தில் வழக்கிலிருந்த மாதங்களில் முஹர்ரம் ஒன்று.

ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை துல்ஹஜ் மாதத்தில் இனிது நிறைவேற்றிய அரபிகள், அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தில் வணிகத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபடுவர். புதுக்கணக்கும் தொடங்கும். எனவே, ரபியுல் அவ்வல் மாதத்திற்குப் பதிலாக துல்ஹஜ் மாதத்தை அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தை ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக, முதல் நாளாக அமைத்து உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உழைப்பின் உன்னதமும் உணர்த்தப்பட்டது.

சிறப்புமிகு முஹர்ரம்
பத்தாம் நாள்

அமைதி வாழ்வுக்கு வழிகாட்டும் முஹர்ரம் இறைவன் விதித்துள்ள இறுதித் தீர்ப்பு நாளை நினைவுருத்தி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறையச்ச மாதமாகவும் அமைந்துள்ளது. மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு நாள் முஹர்ரம் பத்தாம் நாளிலேயே நிகழ்வுறும் என்பது மறைதரும் இறைவாக்காகும். இவ்வகையில் மறுமை வாழ்வை நினைவூட்டி நேர் வழிப்படுத்தும் வழிகாட்டி நாளாகவும் முஹர்ரம் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிகு மாதம்

முஹர்ரம் பத்தாம் நாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் சிறப்புமிகு நாளாகக் கருதப்படுகிறது.

முன்பொரு சமயம் எகிப்து நாட்டை ஆண்டுவந்த ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னன் தன்னை கடவுள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டான். எல்லோரும் தன்னையே வணங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தினான். மறுத்தவர்களை கொடுமைப்படுத்தினான். ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான்.

‘இறைவனால் படைக்கப்பட்ட எதுவுமே வணங்குவதற்குரியதல்ல; மூலப் படைப்பாளனாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்’ என மக்களிடையே போதனை செய்து வந்த ‘மோசஸ்’ எனும் மூசா நபி கொடுங்கோலனின் கொடுமைகளிலிருந்து விடுபட எகிப்தைவிட்டு வெளியேறியபோது செங்கடல் பிளந்து வழிவிட்டது. அப்பிளவினூடே ஃபிர்அவ்ன் விரட்டிச் சென்றான். மூசா நபியும் அவரைப் பின்பற்றியோரும் கரை சேரவே பிளந்து நின்ற செங்கடல் இணைந்தது. கடலிடையே அகப்பட்ட ஃபிர் அவ்னும் அவன் படையினரும் கடலுள் மூழ்கி அழிந்தனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றது முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

இந்நாளை மூசா நபி வழிவந்த யூதர்களும் முஸ்லிம்களும் ஆஷூரா தினமாகக் கடைப்பிடித்து நோன்பு நோற்று வருகிறார்கள். ரமளான் நோன்புக்கு அடுத்தபடி யாகச் சிறப்புமிகு நோன்பாக ‘ஆஷூரா’ நோன்பு கருதப்படுகிறது. பத்தாம் நாள் எனப் பொருள்படும் வகையில் ‘யவ்முல் ஆஷூரா’ என அழைக்கப்படினும் பத்தாம் நாளன்றே இறைவனின் திருவுளப்படி பத்து நிகழ்வுகள் நடைபெற்றதால் ‘ஆஷூரா’ நாள் என்றே அழைக்கப்படலாயிற்று என்பர்.

‘நோவா’ என அழைக்கப்படும் நூஹ் நபி அவர்கள் ஊழிக்கால மழையிலிருந்து உயிரினங்களைக் காக்க அவற்றைக் கப்பலில் ஏற்றி, பன்னெடுங்காலம் கடலில் சுற்றிச் சுழன்று இறுதியில் கரையிறங்கிய நாள் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

டேவிட் எனப்படும் தாவூது நபிக்கு இறை மன்னிப்புக் கிடைத்ததும், ‘ஒரே இறைவன்’ என்ற ஒப்பற்ற இறைத் தத்துவத்தை உலகுக்குப் போதித்த ‘ஏப்ரஹாம்’ எனும் இபுராஹீம் நபிக்கு ‘கலீல்’ (இறைத்தோழர்) எனும் உன்னதப் பட்டத்தை இறைவன் வழங்கியதும் ‘ஜீசஸ்’ எனும் ஈசா நபி அவர்களை இறைவன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான்.

இவையனைத்தும் நபிகள் நாயகத்திற்கு முன்னதாக நடைபெற்ற இறையருள் நிகழ்வுகளாகும்.

பெருமானாரின் பெருவாழ்வுக்குப் பின்னர், அவர்தம் பேரர் இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தோழர்களும் கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான் கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய சமுதாய நலனைக் காக்கவும் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநிறுத்தவும் இத் தியாகத்தை இமாம் ஹூஸைன் (ரலி) செய்தார்கள். ஆனால், இத் தியாக நிகழ்ச்சியின் காரணமாக முஹர்ரம் பத்தாம் நாளின் சிறப்பு கூடவோ குறையவோ இல்லை. காரணம், இறுதி இறைத்தூதர் அண்ணல் நபிகள் நாயகத்திற்குப் பின்னர் நிகழ்ந்த எந்த நிகழ்ச்சியும் புனிதமானவை எனப் போற்றப்படவோ முக்கியத்துவமுடையவையாகக் கருதப்படவோ இஸ்லாத்தில் இடமில்லை. ஆயினும் உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட இறைவழியில் ஒழுகும்போது எத்தகைய போரிடர் வரினும் உயிரையே இழக்க நேரினும் சிறிதும் பின் வாங்காது தியாகம் புரிய வேண்டும் என்பதை நினைவூட்டும் நிகழ்வாக கர்பலா பெருவெளி நிகழ்ச்சி அமைந்து ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உத்வேகமூட்டி வருகிறது.

முஹர்ரம் நாளன்று நோன்பு நோற்று இரவு முழுவதும் கண்விழித்து இறை வணக்கம் புரிவோரின் பாவம் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்படுகிறது என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

‘ஆஷூரா அன்று நோன்பு நோற்பதோடு அதற்கு முன்பும் பின்பும் உள்ள இரு நாட்களையும் சேர்த்து நோன்பிருப்பது ஓராண்டு நோன்புக்கு இணையாகும்’ எனவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

முஹர்ரம் மாத முதல் நாள் நோன்பு பத்தாம் நாளின் போது கடைப்பிடிக்கப்படும் ஆஷூரா நோன்புகளை நோற்பதோடு ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டும். தரும சிந்தனையாளர்களாக மாற வேண்டும். அநாதைகளை அரவணைத்து வாழ்வு தர வழி செய்ய வேண்டும். அவர்களின் துன்பம் நீக்கி இன்புறு வாழ்வுக்குத் துணைபோதல் வேண்டும். அமைதி மாதமாக அமைந்திருப்பதால் வேற்றுமை உணர்வுகளை முற்றாகக் களைந்திடல் வேண்டும். ஒருங்கிணைவான உணர்வுகளை ஊட்டும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். மார்க்க ஞானம் மிக்க பெரியார்களைத் தேடிச் சென்று காண வேண்டும். தன் குடும்பத்துக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களின் குடும்பத்துக்காகவும் தாராளமாகச் செலவு செய்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இந்நாட்களில் ‘நஃபில்’ எனும் அதிகப்படியான தொழுகைகளை பெருமளவில் மேற்கொள்வது இறையருளை மழையெனப் பொழியச் செய்ய வழி வகுப்பதாயமையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இவ்வாறு அக வாழ்விலும் புற வாழ்விலும் இறையுணர்வும் சமுதாய நுண்ணோக்கும் பொங்கிப் பொழிய வழிகாட்டும் மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது.

நன்றி : தினமணி