உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/தியாகம்-சமத்துவம்-சகோதரத்துவம்

விக்கிமூலம் இலிருந்து

தியாகம் - சமத்துவம் - சகோதரத்துவம்


இஸ்லாத்தின் எழில்மிகு மாளிகை

இறை நம்பிக்கை, தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மீது உயர்ந்தோங்கி விளங்குவதுதான் இஸ்லாம் எனும் எழில்மிகு மாளிகை.

இச்சிறப்புமிகு நான்கு அம்சங்களையும் ஒரு சேர உணர்ந்து தெளிய நடைமுறை நிகழ்வாக அமைந்திருப்பது தான், பக்ரீத் எனும் ‘ஈதுல் அள்கா’ பெருநாள்.

இறைவனால் படைக்கப்பட்டவைகளும்
மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும்
வணங்குதற்குரியவை அல்ல

சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஆச்சார அனுஷ்டானமிக்க வைதீக குருமார் குடும்பத்தில் பிறந்து, ‘இறைவன் ஒருவனே. என் வாழ்வும் மரணமும் யாரிடம் உண்டோ அவனே வணங்கத்தக்க இறைவன். இறைவனால் படைக்கப்பட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியன அல்ல. அவற்றையெல்லாம் படைத்த மூல முதலாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்’ எனப் பிரச்சாரம் செய்ததற்காக குருமார்களும், தங்களையே கடவுளர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட மன்னர்களும் எண்ணற்ற இன்னல்களை விளைவித்தபோதிலும் மனந்தளராது நாடோடியாய் திரிந்து எண்பது வயதுவரை சமய எழுச்சிப் பிரச்சாரம் செய்து வந்தார் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்.

தியாகத்தின் எல்லைக்
கோடான நிகழ்ச்சி

தன் ‘ஓர் இறை’ பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த வாரிசு இல்லையே என ஏங்கி இறைவனிடம் மன்றாட, முதுமையின் எல்லைக் கோட்டில் வாழ்ந்த இபுறாஹீம் (அலை) அவர்கட்குப் புதல்வராகப் பிறந்து பிள்ளைப் பிராயமடைந்தார் இஸ்மாயீல். தன் கையாலேயே தன் புதல்வன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிடுவது போல் தொடர்கனவு கண்ட தந்தை இபுறாஹீம் (அலை) அதை இறைவனிட்ட கட்டளையாகவே கருதினார். இக் கனவைக் கேட்ட தாயும் மைந்தனும் கூட மனங் கலங்காது அதை இறை கட்டளையாகவே ஏற்றனர். இறை நாட்டத்திற்கொப்ப, தந்தை தன்னைப் பலியிடும்போது, தான் பொறுமையாக இருப்பதாக வாக்குறுதி தந்தார் குமாரர் இஸ்மாயீல். கருணை வடிவான இறைவன், தந்தையே மகனைப் பலியிடும்படி ஆணையிட்டதாகக் கருதி செயல்படலானார்.

இவ்வாறு இறைவனுக்காக இன்னுயிரைத் தியாகம் செய்ய முனைந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இறை தியாக உணர்வை நெஞ்சிலிருத்தும் வண்ணம் உலகெங்கும் உள்ள 125 கோடி முஸ்லிம்கள் ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

உலகின் முதல்
இறை வணக்கத் தலம்

இபுராஹீம் நபியும் அவர் குமாரர் இஸ்மாயீல் நபியும் தாங்கள் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கத் தலமான கஃபாவை நோக்கி இறையடியார்கள் ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்புக்கிணங்க ஐயாயிரம் ஆண்டுகளாக இறையடியார்கள் மக்காவிலுள்ள கஃபா இறையில்லத்தை நோக்கி ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லுக்குச் ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கஃபா இறையில்லத்தை சந்திக்கச் செல்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

ஹஜ் செல்லுபவர் இறையுணர்வு ஒன்றை மட்டும் நெஞ்சத்தில் தேக்கியவராக சொத்து, சுகம், சொந்தம், பந்தம் அனைத்தையும் விட்டு நீங்கிச் செல்கிறார். தான் வாழ்ந்த சுக வாழ்வை விட்டுக் கடினமான வாழ்வுக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார். தியாக உணர்வின் எல்லைவரை செல்பவராகிறார்.

எளிமையே உருவாகும் ஹாஜி

கஃபா இறையில்லம் நோக்கிச் செல்லும் ஹாஜி ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் தன் ஆடம்பர ஆடை அணிகளையெல்லாம் களைந்து விடுகிறார். தன் வெற்றுடம்பை தைக்கப்படாத சாதாரண இரு துண்டுத் துணிகளைக் கொண்டு போர்த்திக் கொள்கிறார். இது ‘இஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இதே வகை உடைதான் இறந்த (மையத்) சடலத்தின் மீதும் போர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஹாஜியும் இறை நாட்டத்தோடு, அனைத்தையும் தியாகம் செய்தவராக மரணக் கோலத்தை மேற்கொள்கிறார்.

கஃபாவில் ஹஜ்ஜின்போது குழுமம் 25 இலட்சம் ஹாஜிகளும் ஒரே விதமான இஹ்ராம் உடையில் காட்சி தருகின்றனர். அரசனும் ஆண்டியும், வெள்ளையனும் கறுப்பனும் ஒரே வித உடை, நாடு, மொழி, இனம், நிறம் என்ற வேறுபாடுகளின் சுவடுகூட இல்லாதபடி இறைவன் முன்னிலையில் எல்லோரும் சமம் என்பதை உள்ளத்தாலும் தோற்றத்தாலும் மெய்ப்பிக்கின்றனர். ‘எல்லோரும் ஆதாம் பெற்ற மக்களே’ என்ற சமத்துவ, சகோதரத்துவ உணர்வுகளை ஹாஜிகள் அனைவரும் பெறுகின்றனர். இந்த உணர்வு வழியில் வாழ அனைவரும் உறுதி கொள்கின்றனர்.

வாழ்வின் உட்பொருளை
உணர்த்தும் அரஃபாத்

ஹஜ்ஜின் அடுத்த முக்கிய நிகழ்வாக ஹாஜிகள் அனைவரும் அரஃபாத் பெருவெளியில் ஒரு பகல் மட்டும் தங்குகின்றனர். ஒரே விதமான இஹ்ராம் உடையுடுத்திய ஹாஜிகள் ஒரே வகையான கூடாரத்தில் தங்கி ஒரே வகையான உணர்வோடு தங்குகின்றனர். வேற்றுமையுணர்வுகள் அனைத்தும் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றன. சமத்துவ உணர்வுக்கோர் ஒப்பற்ற எடுத்துக் காட்டாக இச்செயல் அமைகிறது.

மறுநாள் அரஃபாத் பெருவெளியின் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அக்கூடாரங்கள் அகற்றப்படுவதுபோல் தங்கள் உயிரும் இவ்வுடல் எனும் கூட்டிலிருந்து ஒரு நாள் பிரிக்கப்படும் என்ற வாழ்வியல் சூட்சம உண்மையை நிதர்சனமாக உணர்கின்றனர்.

இவ்வாறு ‘ஈதும் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளும் ஹஜ் பெருநாளும் உலக மக்களுக்கு தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயரிய வாழ்வியல் இறை நெறிகளை உணர்த்திக் காட்டும் நிகழ்வுகளாக அமைந்து இறையருள் பெற வழிகாட்டி வருகின்றன.

நன்றி : தமிழ் ஓசை (மலேசியா)