உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/நோன்பு தரும் மாண்பு

விக்கிமூலம் இலிருந்து

நோன்பு தரும்
மாண்பு


ரமளான் ‘ஈதுல் ஃபித்ர்’ நன்னாளை நோன்புப் பெரு நாளாகவும் ஈகைத் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் உவகையோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீமையைச் சுட்டெரிக்கும் ரமளான்

‘ரமள்’ என்பதினின்றும் உருவான ‘ரமளான்’ என்ற அரபுச் சொல்லுக்கும் ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். ரமளான் மாதம் தீமைகளைச் சுட்டெரித்து மக்களை நன்மையின்பால் கொண்டு சேர்க்கும் மாதமாகவும் அமைகிறது. இறைமறை பிறந்த இம்மாதம் முழுமையும் அதிகமான தொழுகைகள், விரதமாகிய நோன்பு, ஏழை எளியோர் பங்காகிய ஜகாத் போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளை செயல் வடிவில் முஸ்லிம் பெரு மக்கள் முனைப்போடு கடைப்பிடிப்பதால் அகத்தில் முளைவிடும் தீய உணர்வுகளை புறத்தே சூழ்ந்து வரும் தீமைகளை ஒருங்கே எதிர்த்துப் போராடி, அவற்றை முற்றாகச் சுட்டெரித்து வெற்றி கொள்ளும் மாதமாக அமைகிறது. எனவே, இம்மாதம் முடிந்து அடுத்து வரும் முதல் நாளை ஒவ்வொரு முஸ்லிமும் வெற்றிக் களிப்போடு கொண்டாடி மகிழ்கின்றார்.

நடு நாயக நோன்பு

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு நான்காவது கடமையாக அமைந்திருந்த போதிலும் ரமளான் மாதத்தில் இக்கடமை நடுநயாகமாகப் போற்றப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறது. நோன்புப் பெரு நாளாகவே போற்றப்படுகிறது.

ஏன் ரமளானில் நோன்பு?

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் கட்டாயக் கடமையாக நோன்பு நோற்கும் மாதமாக ரமளான் மாதம் மட்டும் அமையக் காரணம் என்ன? இதற்கு இஸ்லாமியத் திருமறையாகிய திருக்குர்ஆனே விடையளிக்கிறது.

“ரமளான் மாதம் எத்தகைய (மகத்துவமுடையதென்றால், அதில் தான், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இவ்வேதம்) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ அவர் இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் (2:185).

இதிலிருந்து ரமளான் மாதம் முழுமையும் நோன்பு நோற்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இஸ்லாம் விதித்துள்ள கட்டாயக் கடமை (பர்ளு) ஆகிறது.

சமயந்தோறும் விரதமெனும் நோன்பு

உலகிலுள்ள அனைத்துப் பெரும் சமயங்களும் விரதமாகிய நோன்பைக் கடமையாக்கியுள்ளன. இந்து சமயம் அடிக்கடி விரதமிருக்கப் பணிக்கிறது. எனினும், இஸ்லாமிய நோன்புக்கும் பிற சமய விரதங்களுக்குமிடையே வேறுபாடு உண்டு. மற்ற சமயங்கள் விதித்துள்ள விரதங்கள் ஒருசில நாட்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றது. அவ்விரதங்களின்போது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் வரை உணவு உண்ணாமலோ அல்லது குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணாது விலக்கியோ விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. நீர் பருகத் தடையேதும் இல்லை.

மாதம் முழுமையும் நோன்பு

ரமளான் மாத நோன்பு அம்மாதம் முழுமையும், முப்பது நாட்கள் பகல் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் பகற் பொழுதில் குறைந்தபட்சம் பதினான்கு மணி நேரம் நோன்பு நோற்கப்படுகிறது.

அதிகாலை வைகறை முதல் மாலையில் கதிரவன் மறையும்வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்கப்படுகிறது. வழக்கமான பகற்பொழுது உணவுப் பழக்கங்கள் முற்றாக விலக்கப்படுகின்றன. புதைத்தல் முதலான செயல்கள் முழுமையாகக் கைவிடப்படுகின்றன. இவற்றை இரவு நேரத்தில் அனுபவிக்கத் தடையில்லை.

நோன்பு விதிவிலக்கும் சலுகையும்

ரமளான் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்றியமையாக் கடமையாயினும் இயலாதவர்கட்கு இதில் விதி விலக்கும் சலுகைகளும் உண்டு.

கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள், மூப்பின் எல்லையைத் தொடும் முதியவர்கள், குழந்தைகட்குப் பாலமுதுட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்பதினின்றும் விலக்குப் பெறுகிறார்கள்.

சாதாரண நிலையில் உடல் நலமில்லாதவர்களும் பயணிகளும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு நாட்கள் நோன்பு நோற்க இயலாதவர்களும் நோன்பு நோற்காதிருக்க அனுமதி உண்டு. இவர்கள் விடுபட்ட நாட்களைப் பின்னர் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். முப்பது நாட்கள் நோன்பு நோற்று முழுமைப் படுத்த வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமையாகும். இதைப் பற்றி திருமறை:

“நோன்புக் காலத்தில் யாராவது நோயாளியாகவோ அல்லது யாத்திரையிலோ இருந்தால் (ரமளான் அல்லாத) மற்ற நாட்களில் (விட்டுப்போன நாட்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று) விடவும்” (2:185) எனக் கூறுகிறது.

இவ்வாறு நோன்பை முழுமையாகக் கடைப்பிடிக்க இஸ்லாம் பணிப்பதையும் முப்பது நாட்கள் தொடர்ச்சியாகப் பகற்பொழுது முழுவதும் உண்ணாமலும் ஒரு சொட்டு நீரையும் பருகாமலும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதை மிகக் கடினமான செயலாகக் கருதி பிற சமயத்தினர் வியக்கின்றனர். அதிலும் மிக இளம் வயதுடைய சின்னஞ் சிறியவர்கட்கு எப்படி இயலுகிறது என ஆச்சரியப்படுகின்றனர். நோன்பு நோற்பது கடுமைமிகு செயலாகப் பிறர்க்குத் தோன்றினும் அதனால் ஆன்மிக அடிப்படையிலும் உளவியல் போக்கிலும் அறிவியல் நோக்கிலும் நோன்பாளிகள் பெறுகின்ற பயன் அளவிறந்ததாகும்.

நோன்பின் அடிப்படை அம்சம்

ஆண்டுதோறும் நோன்பு எனும் சோதனைக் களத்தில் புகுந்து புடம் போட்ட தங்கமாக ஒவ்வொரு முஸ்லிமும் திகழ வழி வகுப்பதே இஸ்லாமிய நோன்பின் அடிப்படை அம்சமாகும்.

யாருக்காக நோன்பு?

நோன்பு வைக்கும் ஒவ்வொரு முஸ்லிம் நோன்பாளியும் இறைவனுக்காக நோன்பு நோற்பதாக உறுதி கொள்கிறான். நாம் நோற்கும் நோன்பால் இறைவனுக்கு எவ் விதப் பயனும் ஏற்படப் போவதில்லை. மனிதர்களின் உதவியை இறைவன் நாட வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் கொடுப்பவனே தவிர பெறுபவன் அல்ல.

அப்படியென்றால், நோன்புக் கடமையை நிறைவேற்றுவதால் நிலையான பயன் பெறுபவர் யார்? நாம் தான். இறைவன் பெயரால் விளையும் நன்மை அனைத்தும் நமக்கே உண்டாகிறது. தீமையினின்றும் முற்றாக விலகவும் நன்மையை நாடவும்; பொறுமை, அன்பு, கருணை ஆகியவற்றின் வடிவாக மாறவும் நமக்கு வாய்ப்பளிக்கின்றது. இத்தகைய நற்பண்புகளால் சூழப்பட்டு மனத்துய்மை பெற்ற நம்மையே இறைவன் நேசிக்கிறான். அல்லாஹ்வின் அன்பை பெறும் தகுதியை ரமளான் மாத நோன்பு நமக்கு எளிதாகத் தேடித் தருகிறது. இவ்வாறு இறைவன் பெயரால் நோற்கும் நோன்புப் பலன் முழுமையும் நம்மையே சேர்கின்றன. இதையே இறைவன் தன் திருமறையில்,

“நீங்கள் நோன்பு நோற்பது உங்களுக்கே நன்மை (என்பதை) நீங்கள் அறிவுடையோர்களாயிருந்தால் (தெரிந்து கொள்வீர்கள்)” (2:184) எனக் கூறித் தெளிவுபடுத்துகிறது.

நோன்பு தரும் இறை நெருக்கம்

இறையருளைத் தேடித் தருவது மட்டுமல்லாது இறைவனோடு நம்மை நெருக்கமடையச் செய்யும் சாதன மாகவும் நோன்பு அமைந்துள்ளது. நமக்கு மட்டுமல்ல, இறை தூதர்களுக்கேகூட நோன்பு இறை நெருக்கத்திற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்பதைத் திருமறை எடுத்துக்காட்டுகிறது.

இறை தூதர்கள் இறைச் செய்தியைப் பெறுமுன் தங்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் ஒப்பற்ற வழிமுறையாக நோன்புக் கடமையை மேற்கொண்டே தங்களைப் பரிபக்குவப்படுத்திக் கொண்டார்கள் என்பது இறைமறை தரும் வரலாறு. ஏசுநாதராகிய ஈசா நபி நாற்பது நாட்கள் நோன்பு நோற்ற பின்பே இறை ஞானம் பெற முடிந்தது. மோசஸ் எனும் மூஸா நபியும் நோன்புக் கடமையை நிறைவேற்றிய பின்னரே இறைவனைக் காணும் பேறு பெற முடிந்தது. இதேபோன்று, 27 நாட்கள் இரவு பகலாக நோன்பு நோற்ற பின்பே ஹிரா மலைக் குகையில் முதன் முதலாக இறைச் செய்தியை நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) வாயிலாகப் பெற முடிந்தது. இவ்வாறு இம்மைக்கும் மறுமைக்கும் பெரும்பேற்றை நல்கவல்ல ஆற்றல்மிகு சாதனமாக அமைந்திருப்பது நோன்பாகும். இதைப்பற்றி திருமறை, விசுவாசிகளே. உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்து பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமுடையவர்களாகலாம் (2:183) எனக் கூறுகிறது.

உலகமே ஜமாத்தாகும் விந்தை

இத்தகு சிறப்புமிகு நோன்பை உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் ரமளான் மாதம் முழுவதும் ஏக காலத்தில் நோற்கிறார்கள். இதனால் இம்மாதம் புனிதமிகு மாதமாகிறது. இம்மாதம் முழுவதும் முஸ்லிம்கள் அதிக அளவில் ஜகாத் போன்ற கடமைகளை முனைப்பாக நிறைவேற்றுவதன் மூலம் ஒருவருக்கொருவர் உதவுகின்றனர். ஆன்மிக உணர்வுடன் பொருள் பரிமாற்றமும் செய்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரிடமிருந்து தீய யுணர்வுகள் நீங்குகின்றன. நல்லுணர்வுகள் மேலோங்குகின்றன. தாங்கள் தேடிய செல்வத்தை ஜகாத் போன்றவை கட்காக இறைவழியில் செலவிட்டு மகிழ்கின்றனர். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்டுகின்றனர். உலகெங்கும் நோன்பு நோற்கும் நோம்பாளிகள் ஒரே ஜமாத் (குழுமம்)தாக விளங்கி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள்.

தனக்குத்தானே தடை

நோன்புக் காலத்தில் நோன்பாளி நோன்பு வைக்கும் போதும் முடிக்கும்போதும் வேண்டுமானால் பலரோடு இருக்கும் வாய்ப்பைப் பெறலாம். பிற சமயங்களில் தனியாக இருக்கும் வாய்ப்பே மிகுதி. அத் தனிமைச் சந்தர்ப் பங்களில் யாருக்கும் தெரியாமல் சிறிதளவு உண்ணவோ சிறிது நீர் பருகவோ முடியும். ஆனால், நோன்பாளி அத்தகைய சிந்தனை அறவே இல்லாதவனாக, கடுமையான மனக்கட்டுப்பாட்டுடன் நோன்பு நோற்கிறான். இதற்குக் காரணம் நோன்பாளி மனிதர் பார்வையிலிருந்து மறைவாக இருந்த போதிலும் இறைவனின் நேரடிப் பார்வை எப்போதும் தன்மீது படிந்திருந்திருப்பதாகக் கருதும் மனநிலையும் நம்பிக்கையும் கடமை உணர்வும் இறையச் சமுமேயாகும். இதனால் ஒவ்வொரு நோன்பாளியும் மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் தனக்குத்தானே தடை விதித்துக் கொண்டு நோன்புக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி மகிழ்கிறார்.

மனக்கட்டுப்பாட்டு
ஊற்றுக்கண் நோன்பு

நோன்பிலா நாட்களில் ஒவ்வொரு நாளும் வகை வகையான சுவை மிகு உணவு வகைகளை வேளைதோறும் உண்டு மகிழ்ந்திருக்கலாம். காபி, டி, போன்ற சுவை நீர்களை வகைவகையாகப் பருகி இன்புற்றிருக்கலாம். பீடி, சிகரெட், புகையிலை, பொடி எனப் பலவற்றைப் புகைத்தும் சுவைத்தும் இன்பம் துய்த்திருக்கலாம். ஆனால், நோன்புக் காலத்தில், இவைகளில் எதையுமே மனம் நினைத்துக் கூடப் பார்க்கத் துணிவதில்லை. அந்த அளவுக்கு மனம் கட்டுப்பாடுடையது. இதினின்றும் நோன்பின் முழு முதற்பயனே மனக் கட்டுப்பாடு என்பது புலனாகிறது.

பொறுமையின் உறைவிடம் நோன்பு

மனக் கட்டுப்பாட்டுடன் அளவுக்கதிகமான பொறுமையைப் பெறும் பயிற்சிக்களமாகவும் நோன்பு அமைகிறது.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு நோற்கும் ஒருவர் பசியை மட்டுமா பொறுக்கிறார். தன் தவறான பழக்க வழக்கங்கள் அத்தனையினின்றும் விடுபட்டவராக, தனக்கேற்படும் வசதிக்குறைவுகளையெல்லாம் பொறுத்து, நல்லுணர்வு, நற்சிந்தனை, நல்லிணக்கம் ஆகிய பண்பு நலன்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் எல்லா வகையிலும் பொறுமையின் உறைவிடமாகிறார்.

நோன்பாளி வழக்கமாக உண்ணும் பருகும் நேரங்கள் முற்றாக மாறுவதால் அவர் எவ்வித மன எரிச்சலுக்கும் ஆளாவதில்லை. தான் இன்பமாக உறங்கி மகிழும் முன்னிரவிலும் பின்னிரவு வைகறையிலும் விழித்திருக்க நேர்வதற்காக அவர் வருந்துவதில்லை. அவற்றையெல்லாம் அவர் அளவுக்கதிகமான பொறுமையோடும் சகிப்புணர்வோடும் மேற்கொள்கிறார். தான் ஒரு பொறுமைமிக்க இறையடியான் என்ற நல்லுணர்வு அவன் நெஞ்சமெல்லாம் பரவி அவரைப் பரவசப்படுத்துகிறது.

புலனடக்கத்திற்கு அடிப்படை

பொறுமையும் மனக்கட்டுப்பாடும் தன் புலனடக்கத்திற்கு அடிப்படை, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த வருக்கு பசி, தாகம் மட்டுமா, எதையுமே கட்டுப்படுத்தும் வலிமை இயல்பாக ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் மன இச்சைகளை, ஆசைகளை, விருப்பு, வெறுப்புகளைத் தம் விருப்பம்போல் கட்டுப்படுத்தும் உணர்வு வலுப்பட்டு விடுகிறது. இதற்கான மனப்பயிற்சியை நோன்பு அழுத்தமாக வழங்குகிறது.

புலனடக்கத் தோற்றுவாய் நோன்பு

மனிதனைத் தவறான போக்கில், தீயவழிகளில் இட்டுச் செல்வதில் ஐம்புலன்கட்கு அதிகப் பங்குண்டு. ஐம்புலன்களை அடக்கி ஆள்வது என்பது அவ்வளவு எளிதான செயலன்று, இதனால்தான் அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி ஆள்பவன் அறிவுக்கு வித்துப் போன்றவன் என மொழிந்தார் வள்ளுவப்பெருந்தகை.

அத்தகைய புலனடக்கத்தைத் தோற்றுவிக்கும் தோற்றுவாயாக நோன்பு அமைந்துள்ளது.

பகல் முழுதும் எதையுமே உண்ணாமலும் பருகாமலும் புகைக்காமலும், வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்ற வற்றை மெல்லாதிருப்பதோடு, பொய்யுரைத்தல், புறம் பேசுதல், தீயன மொழிதலாகிய தீச்செயல்கள் அனைத்தும் முற்றாகத் தவிர்க்கப்படுவதால் வாய்ப்புலன் வெற்றி கொள்ளப்படுகிறது.

நோன்பின்போது எத்தகைய அறுசுவை உணவின் நறுமணமாயினும் அதனை நுகரும் வேட்கை நோன்பாளிக்கு இல்லாதுபோகிறது. மூக்குப் பொடி போன்றவற்றை மூக்கினுள் திணித்து மூக்கு துவாரத்தையே நாசப் படுத்தும் தவறான பழக்கம் நோன்பின்போது முற்றாக விலக்கப்படுவதால் மூக்குப் புலனும் ஆட்கொள்ளப்படுகிறது.

நோன்புக் காலத்தில் தீயன காண்பது கடுமையாகத் தடுக்கப்படுகிறது. தன் பார்வையில் அன்பும் பரிவும் கருணையுமே இருக்குமாறு நோன்பாளி பார்த்துக் கொள்கிறான். ஈத்துவக்கும் மாதமாதலால் அனைவரிடமும் கனிவான பார்வையைச் செலுத்த வேண்டிய இன்றியமைச் சூழ் நிலை அவனைச் சுற்றி உருவாகி விடுகிறது. இதன் மூலம் கட்புலனும் நோன்பாளியின் ஆளுகைக்குட்பட்டதாகிறது.

ரமளான் மாதத்தில் ஐவேளைத் தொழுகையோடு ‘தராவீஹ்’ போன்ற சிறப்புத் தொழுகைகளையும் மேற் கொள்வதால் மிக அதிக அளவில் இறை வணக்கங்களைச் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடப்பாடு நோன் பாளிக்கு ஏற்படுகிறது. இதனால் இறைமறையின் ஒலிகளே இடையறாது நோன்பாளியின் செவிகளை நிறைக்கின்றன. மனத்தை கிலேசப்படுத்தும் எந்தவொரு தவறான வார்த்தையும் தன் காதில்பட்டு விடாமல் நோன்பாளி கவனித்துக் கொள்கிறான். இதனால், செவிப்புலனும் அடக்கத்தோடு செயல்பட வேண்டியதாகிறது.

நோன்புச் சமயத்தில் ஆண்-பெண் உடலுறவு அறவே தடுக்கப்படுகிறது. பாலுணர்வு தலைதூக்கும் பார்வையோ படிப்போ அறவே கூடாது என விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களைத் தழுவுவது முற்றாக விலக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறான தொடுவுணர்வுக்கு வாய்ப்பே இல்லாமற் போவதால் தொடுவுணர்வுப் புலனும் நம் கட்டுப்பாட்டிற்குட்பட்டதாகிறது.

இவ்வாறு வாய், மூக்கு, கண், காது, தொடுவுணர்வு ஆகிய ஐந்து ஐம்புலன்களையும் தீமையின் சுவடுகூடப் படியாவண்ணம் நற்செயல்களின்பால் மட்டும் திருப்பி இறையருள் பெறும் பக்குவத்தை நோன்பாளி பெற வழியேற்படுகிறது. இதன் மூலம் ஐம்புலன்களின் இன்ப வேட்கை அறவே தடுக்கப்படுகிறது.

‘அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்’ வேண்டாதவற்றை என்ற மூதுரைக்கு இலக்கணமாக ஐம்புலன்களை அடக்கியாலும் பேராண்மையை ஒவ் வொரு நோன்பாளிக்கும் வழங்குகிறது நோன்பு.

வாழ்நாள் பயிற்சி

நோன்பின் மூலம் இறையருளைப் பூரணமாகப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் இறைக் கட்டளைக்கேற்ப தன் மன இச்சைகளை ஒடுக்கி, தன் ஐம்புலன்களை அடக்கி வாழ நோன்பாளி முற்படுகிறார். நோன்பின் மூலம் இதற்கான சக்தியும் மனவலிமையும் அவரே வியக்கு மளவுக்கு நோன்பாளியிடம் மேலாதிக்கம் பெறுகிறது. ரமளான் மாத முப்பது நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுப் பெறும் இவ்வலிமை ஆண்டு முழுவதும் அவரிடம் அரசோச்சுகிறது. நாளடைவில் அதன் வலிமை குறையத் தொடங்கும். தருணத்தில் அடுத்த ஆண்டு ரமளான் நோன்பை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் அவ் வலிமையைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் புலனடக்கத்தையும் மனக் கட்டுப்பாட்டையும் பெற்றவராக வாழ்வில் பொலிவோடு விளங்க முடிகிறது.

உடல்நோய் போக்கும்
உன்னத நோன்பு

ஆன்மீக, உளவியல் அடிப்படையில் மட்டுமல்லாது, அறிவியல் அடிப்படையிலும் நோன்பு பெரும் நன்மைகளை விளைவிப்பதாய் அமைந்துள்ளது.

நோன்பு முறையால் உடலில் வாட்டும் பல நோய்களின் வலிமை குறைகின்றன அல்லது குணமாகின்றன என்பது மருத்துவ உலகக் கணிப்பாகும்.

வைகறைக்கு முன்பு உண்ணும் உணவு சில மணிநேரத்துக்குள் நன்கு செரித்து விடுகிறது. இதன் மூலம் பல மணி நேரங்கள் செரிப்பதற்கு ஏதுமில்லா நிலையில் சீரண உறுப்புகளாகிய இறைப்பை, வயிறு, சிறுகுடல், பெருங் குடல் போன்றவை பூரண ஒப்பு பெறுகின்றன. சுத்தமடைகின்றன.

நோய் தோன்றவோ வளரவோ போதிய வாய்ப்பில்லா நிலை உருவாக இதன் மூலம் வழியேற்படுகிறது.

நோன்பின்போது நீரிழிவு போன்ற நோய்கள் கட்டுக்குள் அடங்கியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சாதாரண நாட்களில் அதிக அளவில் உண்பதால் அளவுக்கதிகமாக உடலில் கொழுப்புப் பொருள் சேர உடல் பருத்துவிடுகிறது. இதனால் உடலின் இயற்கையழகு குன்று வதோடு பல்வேறு நோய்களுக்கும் இஃது வழியாயமைகிறது. இதன்மூலம், மாரடைப்பு போன்ற திடீர் மரணங்களும் சம்பவிக்கின்றன. நோன்புக் காலத்தில் குறைவான உணவே உட்கொள்ளப்படுவதால் இக் கொழுப்புப் பொருட்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைகின்றன. இதன் வாயிலாக உடல் எடையும் பருமனும் குறைய உடல் கலகலப் படைகிறது.

மேலும், நோன்பு நோற்கும்போது குறைந்த அளவே உண்பதால் உடலில் ‘ஹார்மோன்’ சுரப்பும் ஒரு அளவுக்குள் அமைகிறது, இதனால் இரத்தக் கொதிப்புப் போன்ற நோய்கள் கட்டுக்குள் அடங்குகின்றன.

பசியின் கொடுமையை
உணர்த்தும் நோன்பு

சமூகவியல் அடிப்படையில் நோக்கும்போது பசித் திருப்போர் எத்தகைய கொடுமை அனுபவிக்கின்றனர் என்பதை செயல் பூர்வமாக நோன்பாளியை உணரச் செய்கிறது. இதை உணரும் செல்வ வளமிக்க நோன்பாளிகள் இல்லாதோரின் பசித் துயர் நீக்க அவாவுகின்றனர். ஜகாத் கடமைகளை இனிது நிறைவேற்றி ஏழை எளியவர்களை மகிழ்விக்க வேட்கை கொள்கின்றனர். ஏழை எளியவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண உண்மையிலே முயல்கின்றனர். இல்லாதோருக்காக தாங்கள் முயன்று தேடி பொருளை தியாகம் செய்ய முனைகின்றனர்.

இவ்வாறு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற அவன் விதித்த வாழ்வியல் நெறிப்படி வாழ முனையும் முஸ்லிம் இறை வழியில் எவ்விதத் தியாகத்திற்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முயல்கிறார். தன் மன இச்சைகளை யெல்லாம் தூக்கி எறிகிறார். தன் பழக்க வழக்கங்களை யெல்லாம் முற்றாக மாற்றிக் கொள்கிறார். ஐம்புலன்களை அடக்கி ஆள்கிறார். பசியையும் தாகத்தையும் மகிழ்வோடு தாங்குகிறார். இம் முறையில் தன்னால் இயன்ற தியாகங் களையெல்லாம் இறைவனுக்காக மகிழ்வோடு நிறை வேற்றுகிறார். இதற்கான ராஜபாட்டையாக அமைந்துள்ளது ரமளான் நோன்பு, மனிதனை மாமனிதனாக, மாண்புடையவனாக, மனிதப் புனிதனாக உருமாற்றும் அருஞ் செயலை ரமளான் நோன்பு வெற்றிகரமாக நிறை வேற்றுகிறதெனில் அஃது மிகையன்று.

நன்றி : தினமணி