உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவமும் தமிழும்/இருவகை ஞானங்கள்

விக்கிமூலம் இலிருந்து
11. இருவகை ஞானங்கள்

வேதத்தின் சாரமான திருமந்திரம் எல்லாப் பொருள்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருப்பினும் சேதநன் அறியவேண்டியவை சம்பந்தஞானம், அர்த்தபஞ்சக ஞானம் ஆகிய இரண்டும் மிகமுக்கியமானவை. அவைபற்றி ஈண்டுக் காண்போம்.

1. சம்பந்த ஞானம்

எம்பெருமானாகிய சர்வேசுவரனுக்கும் ஆன்ம கோடிகளாகிய நமக்கும் உள்ள உறவுமுறையை அறிவதைச் ‘சம்பந்த ஞானம் என்று கூறுவர். இந்தச் சம்பந்த ஞானம் உள்ள இடத்தில் எம்பெருமான் விரும்பி அடைவான். ஆதலால் சம்பந்தஞானம் அவன்மீது அந்த எம்பெருமான் மீது-விருப்பம் கொள்வதற்குக் காரணமாகின்றது. இந்தக் கருத்தைத் திருமழிசையாழ்வார் மிக அற்புதமாகப் புலப்படுத்துவார்.

          நின்ற தெந்தை ஊர கத்து
              இருந்த தெந்தை பாடகத்து
          அன்று வெஃக ணைக் கிடந்த(து)
              என்னிலாத முன்னெ லாம்
          அன்று நான் பிறந்தி லேன்
              பிறந்தபின் மறந்தி லேன்
          நின்ற தும்இருந்ததும்
              கிடந்த தும் என் நெஞ்சுளே(திருச்சந்த-64)

இதன் கருத்தைத் தெளிவாக்குவோம். முதலில் உலகியலில் ஒரு நிகழ்ச்சியை நோக்குவோம். ஒருவன் கடன் பட்டிருக்கின்றான்; அக் கடனைத் திரும்பப் பெறுவதற்காகக் கடன் கொடுத்தவன் வீட்டிலே வந்து கேட்கின்றான். அப்படி வருகின்றவன் முதலில் சில நாட்கள் நின்ற வண்ணம் பணம் கேட்டுவிட்டுப் போகின்றான். பலன் இல்லை. அடுத்து வருகின்ற சில நாட்களில் வாங்கினவன் திண்ணை மீது உட்கார்ந்து கடனைத் திரும்பத் தருமாறு நிர்ப்பந்தித்துப் போவான். இவ்வளவிலும் அவன் மிசையாவிடில் கடனைத் தீர்க்காவிடில் நான் போவதில்லை’ என்று படுக்கையாகத் திண்ணையில் படுத்து நிர்ப்பந்திப்பான்.

இப்படியாக எம்பெருமானும் நம்போன்ற ஆன்ம கோடிகள் செலுத்தவேண்டிய கைங்கரியக்[1]கடனைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரிடத்தில் (ஊரகத்தில்)[2] நின்று பார்க்கின்றான். மற்றோரிடத்தில் (பாடகத்தில்)[3] வீற்றிருந்து பார்க்கின்றான். இன்னும் ஓரிடத்தில் (திருவெஃகாவில்)[4] சாய்ந்து பார்க்கின்றான். “இப்படிச் செய்ததெல்லாம் நான் எதிர்நோக்கி இல்லாத காலத்தில் நித்தியவிபூதி லீலாவிபூதிகட்கு நாதனான எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாத காலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான். கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குதல் அவனுக்குச் சாத்தியம் (பலன்); அதற்குச் சாதனம் (வழி முறைகள்) நிற்றல் இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கை புகுந்த மாத்திரத்தில் - என்னிடம் ருசி பிறந்ததும் - அவன் திவ்விய தேசங்களில் நிற்றல் இருத்தல், கிடத்தல்களை எல்லாம் என் நெஞ்சுலே செய்தருளினான்” என்கின்றார். மேலும் “நான் ஞானப்பிறப்பு பெற்றேன் இல்லை; அது பெற்றபிறகு நான் எம் பெருமானை மறக்கவில்லை.” அடுத்த பாசுரத்தில் (65) “எம் பெருமான் திருவேங்கடத்தில் நிற்பதும், திருநாட்டில் (பரமபதத்தில்) இருப்பதும், திருப்பாற்கடலில் கிடப்பதும், தன்னோடு உண்டான முறைமையை அறியாது நான் ஆற்றலற்றிருந்த காலத்தில்தான். நான் முறைமையறிந்து (சம்பந்த ஞானம் பெற்றுப்) பரிமாறின பின்னர் அவ்வெம்பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் என்நெஞ்சில் - என்இதயத்தில் - நடைபெறுகின்றன” என்கின்றார்.

இந்த ஆழ்வார் எம்பெருமான் தன் மனத்தில் தனியாக வந்ததைக் கூறினார். பெரியாழ்வாரோ அவன் தானும் தன் குடியிருப்புமாகத் தன் நெஞ்சில் புகுந்ததைக் கூறுவார்.


அரவத்து அமளியி னோடும்
அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும்
அகம்படி வந்து புகுந்து (பெரியாழ் திரு. 5.2;10)

என்ற பெரியாழ்வாரின் திருமொழிப்பாசுரத்தில் இதனைக் காணலாம்.


மயர்வற மதி நலம் அருளப்பெற்ற நம்மாழ்வாரும்,


அடங்கொழில் சம்பத்து
அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று
அடங்குக உள்ளே (திருவாய் 1.2;7)

       [சம்பத்து-எம்பெருமானின் விபூதி அடங்க-எல்லாம்
       (முற்றிலும்); அடங்க அஃதெல்லாம், ஈசன் அஃது
       எம்பெருமானுடைய எழில்-சம்பத்து (என்று துணிந்து)
       உள்ளே விபூதிக்குள்ளே; அடங்குக-சொருகிப்போவது]

என்று கூறுவர். “நித்தியவிபூதியாகிய பரமபதமும், லீலா விபூதியாகிய இந்த உலகமும் ஆகிய எல்லாம் சம்பத்துகளும் r நம்முடைய சுவாமியின் சொத்துகள் என எண்ண வேண்டும்: அந்தச் சம்பத்துக்குள் நாமும் அடங்கினோம் என்று அநுசந்தித்துக் கொண்டு கைங்கரியம் செய்ய வேண்டும்” என்பது பாசுரத்தின் பொருள்.எம்பெருமானது விபூதிக்குள்ளே தானும் ஒருவனாக அடங்கப் பார்க்க வேண்டும். அதற்கு வெளிப்பட்டு ஆட்டம் போட்டால் விநாசமே உண்டாகும்: அதற்கு உட்பட்டுவிட்டால் கூசவேண்டிய அவசியமே இல்லை என்பது இதில் தெளியும் மாபெரும் உண்மை. அஃதாவது ‘உடைமை உடையவன்’ என்ற சம்பந்தஞானம் அடியாகத் தானும் அவன் விபூதியில் ஒருவனாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவே தேர்ந்த உண்மையாகும்.

(2). நவவிதசம்பந்தம் : எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் ஒன்பது வகைப்படும் என்று சாத்திரங்கள் சாற்றும். இதனைத் திருமந்திரம் குறிப்பிடுவதாக நம் முன்னோர்கள் உரைத்துப் போயினர்.

‘ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். இதில் மூன்று பதங்களும் எட்டெழுத்துகளும் அடங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம்.

பரமான்மா-சீவான்மா உறவுகள் அடியிற் கண்டவாறு அமைந்துள்ளன.

அகாரத்தினால்; (i) தந்தை தனயன் என்ற உறவும்: (ii) இரட்சிப்பவன்.இரட்சிக்கப்படுபவன் என்ற உறவும்; அகாரத்தின் மீது ஏறி மறைந்து கிடக்கும் (தொக்கி நிற்கும்) ஆய’ என்ற நான்காம் வேற்றுமை உருபினால் (லுப்தசதுர்த்தியிலல்), .

(iii) சேஷ-சேஷி (அடிமை-அடிமைகொள்பவன்) என்ற உறவு சொல்லப் பெறுகின்றது.

உகாரத்தினால், (iv) நாயக-நாயகி சம்பந்தம் நவிலப் பெறுகின்றது. மகாரத்தினால் (v)அறிபவன் - அறியப்படும்பொருள் உறவு உரைக்கப் படுகின்றது. நமஸ்ஸாலே: (vi) சொத்து - சொத்துக்குரியவன் (ஸ்வ-ஸ்வாமி) சம்பந்தமும்;

நாரபதத்தாலே;

(vii) சரீர-சரீரி பாவனையும்;

அயன பதத்தாலே;

(viii) தாங்குகின்றவன்- தாங்கப்படும் பொருள் (ஆதாரஆதேய) தொடர்பும்; ‘ஆய பதத்தாலே;

(ix) போகத்தை அநுபவிப்பவன் போக்கியப் பொருள் (போக்தரு- போக்கிய) இவற்றின் சம்பந்தமும் சொல்லப் பெறுகின்றன.

ஆக, திருமந்திரம் இறைவனுக்கும் ஆன்மாவுக்குமுள்ள ஒன்பது வகை உறவுகளைச்சொல்லித் தலைக்கட்டுகின்றது. ஒர் ஆன்மாவுக்கும் பிறிதோர் ஆன்மாவுக்கும் வினைப்பயனால் நேரிடுகின்ற தந்தை-தனயன் முதலிய உறவுகள் அந்த வினைத் தொடர்பு நீங்கும் போதெல்லாம் மாறிவிடுகின்றன. அஃதாவது ஒரு பிறவியில் நேரிடும் தந்தை-தனயன், தாய்-மகன், கணவன்மனைவி போன்ற உறவுகள் அடுத்தப் பிறவியில் (அல்லது வருகின்ற பிறவிகளிலெல்லாம்) தொடர்வதில்லை. TT இறைவனுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம்,

         எற்றைக்கும் ஏழ்ழ்ை
             பிறவிக்கும் உன்தன்னோடு
         உற்றோமே ஆவோம்;
            உனக்கேநாம் ஆட்செய்வோம் (திருப்29)

என்ற ஆண்டாள் திருவாக்கின்படி இங்கு ஒழிக்க ஒழியாது. அழியாதிருக்கும். அஃதாவது அகாரத்தினால் சொல்லப் பெறுகின்ற எம்பெருமான் மகாரத்தினால் சொல்லப்பெறுகின்ற சீவான்மா இவர்களின் உறவு அநாதியாக இருந்து வருவதாகும்.

        எக்காலத்தும் எந்தையாய்
           என்னுள் மன்னி (2.9;8)

என்ற நம்மாழ்வாரின் திருவாய் மொழித்தொடர் இக்கருத்தை அரண் செய்கின்றது. சீவான்மாக்களுக்கு அயந சம்பந்தமான பரமான்மா சம்பந்தம் அநாதியாக இருந்து வருவதுபோல் அசித்து சம்பந்தமான பிரகிருதி சம்பந்தமும் அநாதியாக இருந்து வருவதே. ஆயினும் அசித்து சம்பந்தம் ஒருகாலத்தில் நீக்கப்படும் “அயந’ சம்பந்தமான பரமான்மா உறவு ஒழிக்க ஒழியாதது”. இக்கருத்து ஆசாரிய ஹிருதயத்தின்,

‘ஒன்று கூடினதாய்ப் பற்று அறுக்க மீண்டு ஒழிகையாலே பழவடியேன் என்னுமது ஒன்றுமே ஒழிக்க ஒழியாது' (12)

என்ற சூத்திரத்தில் தெளிவாக்கப்பெறுகின்றது. இந்த உடல் சம்பந்தம் இடையில் வந்தேறியாய் நல்வினை தீவினை காரணமாக வருவது; இது யாதானும் ஒரு காலத்தில் அழியக் கூடியதாக இருக்கும். நாராயண சம்பந்தம் அநாதியாய் ஒருவித காரணமும் இல்லாமல் வந்ததாகையால் என்றும் உளதாய் இருக்கும். இடையில் வந்த சரீர சம்பந்தத்தை அநாதி என்று சொல்லுதல் பொருந்துமோ? என்ற வினா எழுகின்றது. அதற்கு மணவாளமாமுனிகள் “வந்தேறியான காலத்திற்கு அடி தெரியாமையாலும் இவரும் (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) அநாதி’ என்றார். ஒருகால வரையில் அஃது இறைவனுடைய திருவருளால் மறையக் காண்கையால் வந்தேறி என்பது ஒருதலை” என்று விளக்குவர்.

திருமந்திரத்தின் முழுப்பொருளையும் அநுசந்திக்கத்தக்கதாக அமைந்திருக்கும் திருப்பாசுரம் ஒன்று பெரிய திருமொழியில் உண்டு. -

      எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
          எனக்கரசு என்னுடை வாணாள் (1.1:6)

என்பது பாசுரம், “எனக்குப் பல உபகாரம் புரிந்தவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவு முறையுமானவனும், என்னை ஆண்டவனும், என்னுடைய உயிருக்கு உயிரானவனும், அவனே என்கின்றார். இதில் “ஈசுவரனே இவ்வான்மாக்களுக்கு எல்லாவித உறவுமாகின்றான்” என்பது இத்தொடரின் “தேர்ந்த பொருள்” என்பது மணவாளமாமுனிகளின் உரைக்குறிப்பு. (முமுட்சு 102) இதனைப் பிள்ளை உலக ஆசிரியர் அருளிச் செய்த ‘நவவித சம்பந்தம்’ என்ற நூலில் தெளிவாகக்காணலாம்.

இந்த நவவிதசம்பந்தம் குலசேகரப் பெருமாள் அருளிய வித்துவக் கோட்டம்மான் திருமொழியில் (5-ஆம் திருமொழி) அடங்கிக்கிடப்பதாக நம் முன்னோர் குறித்துப் போயினர்.

இந்த நவவிதசம்பந்தம்பற்றிய கருத்துகள்தாம் பாரதி யாருக்கு ‘கண்ணன்பாட்டு' படைப்பதற்கு வழி காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இஷட தெய்வத்தைப் வழிபடுகடவுளைப் பல்வேறு பாவனைகளால் வழிபடலாம் என்று நம் நாட்டுப் பக்திப் பனுவல்கள் பகர் கின்றன. ஆழ்வார் பாசுரங்களிலும் எம்பெருமானைத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று பேசப்பெற்றிருப்பதையும் இவர் கண்டிருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பாரதியார் பல்வேறு உறவுகளில் கண்ணனைக் கண்டுகளிப்பெய்துகின்றார் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை.

இந்த ஒன்பது உறவுகளைக் குறிப்பிடும் ஆழ்வார்கள் பாசுரம் நிறைய உள்ளன. விரிவஞ்சி ஒவ்வோர் உறவுக்கும் ஒரு பாசுரம் வீதம் காட்டுவேன்.

(i) தந்தை-தனயன் உறவு :- இதனை அடியிற்கானும் பாசுரத்தில் காணலாம்.

        எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்கும்
        தம்பி ரனைதண் தாமரைக் கண்ணனை
        கொம்ப ராவுதுண் னேரிடை மார்வனை
(திருவாய் 1-10:3)

என்று கூறுவர் நம்மாழ்வார். எம்பெருமான் தன்னை, “எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை” என்று ஆழ்வார் அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம் பெருமான் “ இப்படி ஏத்துகின்றவன் ஆர்?” என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் ‘தண்தாமரைக் கண்ணனை’ என்று மேலும் சிறப்பிக்கின்றார். குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணம் இல்லையே! என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார் கடாட்சிக்கச் செய்ய வல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்ந்து “கொம்பு அராவு நுண் நேரிடை மார்பனை” என்று மேலும் சிறப்பிக்கின்றார்

“தருதுயரம் தடாயேல்” (5:1) என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் இந்த உறவினைக் குறிப்பிடுகின்றது. (ii) இரட்சக- இரட்சிய சம்பந்தம்: உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம்பெருமான் உய்வித்தமையைக் கூறும் பெரியதிருமொழியிலுள்ள “மைந்நின்ற”(16) என்ற பதிகத்தில் திருமங்கை மன்னனின் திருவாக்குகள் (ஒன்பது பாசுரங்கள்). இந்த உறவினைத் தெளிவாக விளக்குகின்றன. இவற்றுள்,

          மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
              தானவரும் மற்றும் எல்லாம்
          உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
              தான்விழுங்கி உய்யக்கொண்ட கண்ணாளன் (7)

என்ற பாசுரத்தில் இறைவன் (இரட்சகன்) உலகினை (இரட்சித்த) செயலை விளக்கும் போக்கில் இந்த உறவு குறிப்பிடப் பெறுகின்றது “வாளால்அறுத்து” (5:4) என்ற பெருமாள் திருமொழிப் பாசுரம் சீவான்மாக்களுக்குத் துன்பங்களைக் கொடுப்பதும் இரட்சிக்கும் வகையைச் சார்ந்த தாகும் என்பதை விளக்குகின்றது.

(iii)சேஷி-சேஷ உறவு வீற்றிருந்து (45) என்ற திருவாய் மொழியில்,

          உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்
              இடந்தும் கிடந்தும் நின்றும்
          கொண்ட கோலத் தொடுவீற்.
              றிருந்தும் மணங்கூடியும்
          கண்ட வாற்றால் தனதே
              உலகென நின்றான்தன்னை
          வண்டமிழ் நூற்க நோற்றேன்
              அடியார்க்கு இன்ப மாரியே. (10)

என்ற பாசுரத்தில் 'தனதே உலகென நின்றான் தன்னை’ என்பதால் சேஷித்துவமும், ’வண்டமிழ் நூற்க நோற்றேன்’ என்பதால் சேஷத்துவமும் தெளிவாகின்றன. சேஷி-தலைவன் சேஷன்-அடிமை.

குலசேகரப்பெருமாள் அருளிய 'செந்தழலே வந்து' (5; 6) என்ற பாசுரத்தில் 'ஆண்டான்-அடிமை' உறவு காணப்படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி நாயக-நாயகி பாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒருவகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான் அடிமைதானே! (ஆண்-பெண் சமத்துவம் பேசும் இக்கால நிலையில் சில குடும்பங்களுக்குப் பொருந்தலாம்).

(iv) நாயக-நாயகி சம்பந்தம்:9: ‘வெள்ளைச் சுரிசங்கொடு'(7, 3) என்ற திருவாய்மொழியில்,

          கண்டதுவே கொண்டெல் லாருங் கூடிக்
              கார்க்கடல் வண்ணனோ டென்தி றத்துக்
          கொண்டுஅலர் தூற்றிற் றதுமுத லாக
              கொண்டதன் காதல் உரைக்கில் தோழி!
          மண்திணி ஞால மும்ஏழ் கடலும்
              நீள்வி சும்பும் கழியப் பெரிதால்
          தெண்திரை சூழ்ந்துஅவன் விற்றி ருந்த
              தென்திருப் பேரையில் சேர்வன் சென்றே(8)

[என் திறம்-என் விஷயம்; கழிய-ஒப்ப;திரை-அலை]

என்பது மகள் பாசுரம். தென்திருப்பேரையை” அடையவேண்டும் என்ற தன் துணிவைப் பராங்குச நாயகி சொன்னதும் தோழிமாரும் தாயரும் அதனைத் தடுத்து நிறுத்தப்பார்க்கின்றதாகச் செல்லுகின்றது இத்திருவாய்மொழி.“ஊரார் பழிசொல்வதே எருவாக நின்று என்னிடம் வளர்ந்து செல்லுகின்ற காதல் எல்லா உலகங்களையும் விழுங்கிச் செல்லா நின்றது. ஆகவே, அவன் (எம்பெருமான்) இருக்கின்ற தென்திருப் பேரையில் சென்று சேர்வேன்” என்கின்றாள் பராங்குசநாயகி.

குலசேகரப் பெருமாள் திருமொழியில் 'கண்டார் இகழ்வனவே' (52) என்ற திருப்பாசுரத்தில் கணவன் நிலையில் எம்பெருமானையும் மனைவி நிலையில் தம்மையும் வைத்துக் கூறியுள்ளதைக் காணலாம்.

(v) ஞாதா-ளுேயன் உறவு: அஃதாவது இது ‘அறிவன்அறியப்படும் பொருள் உறவாகும்.

          பெயரும் கருங்கடலே
              நோக்கும் ஆறு:ஒண்பூ
          உயரும் கதிரவனே
              நோக்கும்-உயிரும்

          தருமனையே நோக்கும்;
              ஒண்தாமரையாள் கேள்வன்
          ஒருவனையே நோக்கும்
              உணர்வு. (67)

என்பது பொய்கையாழ்வாரின் திருவாக்கு ஞானம் என்பது பலவிதம். பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு துறையிலும் (பொருளியில், அரசியல், மருத்துவயியல், பொறியியல் அறிவியல் போன்றவை) படித்துப் பட்டம் பெற்ற ஒவ்வொரு வனும் தன்னை ஞானி என நினைத்துக் கொள்ளுகின்றான். ஆனால், உண்மையான ஞானம் என்பது எது? எம்பெருமான் என்ற பரம்பொருளை அறிகின்ற அறிவு ஒன்றுதான் ஞானமாகும் என்று சாத்திரங்கள் கூறும் விடைதான் இப்பாசுரத்தில் “ஒண்தாமரையாள் கேள்வன், ஒருவனையே நோக்கும் உணர்வு” என்ற பகுதியில் கூறப்பெற்றுள்ளது. மற்றவை யாவும் எடுத்துக்காட்டுகளாக அருளிச் செய்யப் பெற்றவை.

ஆறுகள் மாக்கடல் நோக்கி ஓடுவதும், தாமரைப்பூ பகலவனை நோக்கி மலர்வதும், உயிர்கள் எமதர்மனையே நோக்கிக் கிட்டுவதும் எப்படி நியதமாக நிகழ்கின்றனவோ அப்படியே ஞானம் என்பதும் திருமாலைப் பற்றியல்லது இதரவிஷயங்களைப் பற்றி உண்டாகும் அறிவு அறிவல்ல; அவை அறிவின்மைக்குச் சமானமானவையே.

இந்த உறவுவினை குலசேகரப்பெருமான் திருமொழியில் “எத்தனையும் வான்மறந்த” (5:7) என்ற பாசுரத்தில் தெளிவாகக்காணலாம் (vi) சுவம்-சுவாமி சம்பந்தம் : இதைச் சொத்து சொத்துக்குரியவன் (சொம்-சுத்து); உடைமை-உடையவன்) உறவு என்று கூறலாம். இந்த உறவு 'விடுமின்முற்றவும்' (12) என்ற திருவாய்மொழியின்,

     நீர்நுமது என்றிவை
         வேர்முதல் மாய்த்து (3)

என்ற மூன்றாம் பாசுரத்தில் அமைந்துள்ளது. விடவேண்டிய பொருள்கள் பலப்பல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெருபாடாகுமாதலால் விடவேண்டியவற்றைச் சுருங்க அருளிச் செய்கின்றார். நீர்நுமது - கேட்டினை விளைவிக்கின்ற யான் எனது என்ற சொற்கள். இப்பாசுரம் பிறர்க்கு உபதேசிக்கும் முன்னிலை இடமாதலின் ‘யான்'எனது என்ற தன்மைப்பெயர்களை நீர், நுமது என்று முன்னிலையாக அருளிச் செய்கின்றார். இனி, செருக்கினைப் புலப்படுத்தும் அச்சொற்களைத் தாம் தம் திருவாயால் கூறுவதற்கு அஞ்சி நீர் நுமது என்கின்றார். இங்கு நீர், துமது என்பது சம்சார வித்து; ‘வேர் முதல் மாய்த்து’ என்பது மருந்து. இங்கே இன்சுவைமிக்க ஈட்டின்சூக்தி."நான்’ 'எனது’ என்று தம் வாக்காலே சொல்ல மாட்டாரே நாக்குவேம் என்று” என்பது.

'நின்னையே தான் வேண்டி' (5:9) என்றபெருமாள் திருமொழிப் பாசுரத்தில் இந்த உறவு புலப்படுவதாகக் கூறுவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணாசாமி11. இதில் செல்வத்துக்கு உரியவனிடத்தில்எம்பெருமானையும், செல்வத்தின் இடத்தில் தம்மையும் வைத்து விளக்குவர் ஆழ்வார்.

(vii) சரீர-சரிபாவனை: இது உடல்-உயிர் உறவு என்று உரைக்கப் பெறும். வைணவதத்துவத்தில் இது உயிராயது. சித்து (சேதநம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று வகை ஆன்மாக்களும்’ அசித்து (அசேதநம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று வகைப் பொருள்களும்13 எம்பெருமான் திருமேனியில் அடங்கியிருக்கும். அதாவது சித்தும், அசித்தும் எம்பெருமானுக்கு உடலாக இருக்கும். இதுதான் ‘சரீர-சரீரி பாவனை' என்று வழங்கப் பெறுகின்றது.

விளக்கம் : உயிர் உடலிலிருந்து அதனை தரிக்கச் செய்கின்றது. உயிரின்றேல் உடல் வீழ்ந்து விடுதல் கண்கூடு. மேலும், உயிர்தான் உடலை இயக்குகின்றது. உயிர் உடலுக்குத் தலைவனாக உள்ளது. அங்ஙனமே இறைவன் எல்லாப் பொருள்களில் இருந்து அவற்றை தன் விருப்பம்போல் நடத்தி அவற்றிற்குத் தலைவனாகவும் உள்ளான்.ஆயினும், உடலினுள் உயிர் இருப்பதற்கும் எல்லாப்பொருள்களினுள் இறைவன் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. உயிர் அணு அளவினதாய் உடம்பினுள் ஒரிடத்திலிருந்து கொண்டு தன் ஞானத்தால் (தர்மபூத ஞானத்தால்) உடல் முழுவதும் பரவி இவ்வுடம்பைப் பற்றிய நிகழ்ச்சிகளை உணர்த்துகின்றது. இறைவன் அங்ஙன மின்றி ஒவ்வொரு பொருளுள்ளும் முழுவதும் தன் சொரூபத்தோடு வியாபித்துள்ளான். அன்றியும், உடலினுள் உயிர் இருப்பதற்கும், உடல் உயிர் ஆகிய இரண்டினுள் இறைவன் இருப்பதற்கும் மற்றொரு வேறுபாடும் உண்டு. உயிர் உடலினுள் இருக்கும்போது அவ்வுடலுக்குரிய வளர்ச்சி தேய்வுகள் (விகாரங்கள்) உயிருக்கு உண்டாவதில்லை. ஆனால் உடலைப் பற்றிய இன்பதுன்ப உணர்ச்சிகள், அறிவின் சுருக்கம், பெருக்கம் ஆகியவை உயிருக்கு உண்டு. உடலின்மீது தண்ணிய காற்று வீசுங்கால் இன்புறுதலும், தீ சுடுங்கால் துன்புறுதலும் உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நேரிடுகின்றன. இனி, குழந்தைப் பருவத்தில் அதனினுள்ளிருக்கும் உயிரின் அறிவு கருங்கிய நிலையிலிருந்து பின்பு வளர்ச்சியுறுதலைக் காண்கின்றோம். மற்றும், மக்கள் உடம்பினுள் உள்ள உயிர் ஐம்பொறி அறிவும் உடையதாக உள்ளது. அவ்வுயிரே மரம், எறும்பு முதலிய உடல்களில் புகுந்தால் ஐம்பொறி அறிவு மின்றிச் சில குறையவும் பெறுகின்றன. இனி உயிர் பரு உடலைப் பெறாத நிலையில் அறிவு சுருங்கி இருத்தலும், அறிவு விரிந்திருத்தலும் உண்டு. இங்ஙனமாக உடலைப்பற்றி நிற்கும் உயிர் அவ்வுடலுக்கேற்ப இன்ப துன்ப உணர்ச்சிகளும் அறிவின் சுருக்கமும் பெருக்கமும் அடைதல் தெளிவாகும். ஆனால், உடல் உயிர் இரண்டினுள்ளும் கலந்து நிற்கும் இறைவனை இவ்வேறுபாடுகள் சிறிதும் அடைவதில்லை. இவற்றிற்குக் காரணம் 'பிரவேச ஹேது விசேடம்' என்பர் மெய்விளக்க அறிஞர்கள். ஆன்மா உடலினுள் கர்மம் அடியாகப் பிரவேசிக்கின்றது. இறைவன் - உடல், உயிர் இரண்டினுள்ளும் திருவருள்காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்தில் சிறையனும் கிடந்தான்அரசகுமாரனும் இருந்தான், சிறையன் கர்மம் அடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு ஏதுவாயிற்று, அரசகுமரன் இச்சையால் பிரவேசித்தமையால் போக ரூபமாக இருந்தது. இந்த எடுத்துக் காட்டால் இக்கூறிய கருத்தைத் தெளியலாம்.

‘சரீர-சரீரி பாவனை ஆழ்வார் பாசுரங்களில் அமைந்துள்ளன.

          திடவிசும்பு எரிவளி
             நீர்நிலம் இவைமிசை
          படர்பொருள் முழுவதும்
             ஆய்அவை அவைதொறும்
          உடல்மிசை உயிரெனக்
             கரந்தெங்கும் பரந்துளன். (திருவாய். 1.1:7)

[வளி-வாயு கரந்து-மறைந்து]

என்ற நம்மாழ்வார் பாசுரத்தில் இக்கொள்கை விளக்கம் அடைகின்றது. உலகிலுள்ள ஒவ்வொரு பொருளிலும் உடலில் உயிர் உறையுமாப்போலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருப்பான் இறைவன். நம்முடைய உடலுக்கு ஆன்மாதான் தாரகமாய், நியாமகனாய், சேவியாய் இருப்பதுபோல், உடல் ஆன்மாக்களுக்கு எம்பெருமான்தான் தாரகமாய், நியாமகனாய்,சேவியாய் இருப்பான். 'கரந்து’ என்பதனால் ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து அந்தர்யாமியாய் இருப்பான் என்பதும், ‘ எங்கும் பரந்து என்பதனால் உள்ளும்புறமும் வியாபித்து இருப்பான் என்பதும் பெறப்படுகின்றன. இப் பாசுரம் இறைவன் அசித்தில்மட்டிலும் பரவியிருப்பதைக் குறிப்பிடுகின்றது.

           திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
               செழு நிலத்து உயிர்களும் மற்றும்
           படர்பொருள் களுமாய் நின்றவன்(பெரி. திரு. 4.3;3)

என்ற திருமங்கை மன்னன் பாசுரத்தில் செழு நிலத்து உயிர்களும் என்பதால் உயிரும் (சித்தும்) ஏனையவற்றால் ‘அசித்தும்' சேர்த்துக் கூறப் பெற்றிருப்பதைக் காணலாம்.

(viii)ஆதார-ஆதேய சம்பந்தம்: ஆதாரம்தாங்குவது: பரமான்மா. ஆதேயம்- தாங்கப்பெறுவது; சீவன்மா. திருவாய் மொழியில் நெடுமாற்கு அடிமை (810) என்ற திருப்பதிகத்தில் உள்ள,

       தனிமாப் புகழே எஞ்ஞான்றும்
           நிற்கும் படியாத் தான்தோன்றி
       முனிமாப் பிரம முதல் வித்தாய்
           உலகம் மூன்றும் முளைப்பித்த
       தனிமாத் தெய்வம் (7)

என்ற பாசுரத்தில் எம்பெருமான்குக்குமசித்து அசித்துகளுடன் கூடியவன் என்று சொல்லப் பெறுகின்றது. இத்தகைய எம்பெருமான் சமஸ்டி சிருஷ்டியையும், வியஷ்டிசிருஷ்டி யையும் செய்விக்கின்றான். சமஷ்டி-தொகுதி. இருபத்துநான்கு தத்துவங்களையும் கலந்து ஈசுவரன் தானாகவும், நான்முகன் மூலமாகவும் இந்த ஒப்பற்ற அண்டத்தைப் படைக்கின்றான். அண்டத்தைப் படைத்து அதற்குள் நான்முகனைப்படைத்தல், சமஷ்டி சிருஷ்டி என்று வழங்கப் பெறும். நான்முகன் மூலமாக இந்த அண்டத்திற்குட்பட்ட பதினான்கு உலகங்களையும் தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் முதலியவற்றைப் படைத்தலும் வியஷ்டி சிருஷ்டி என்று வழங்கப்பெறும். வியஷ்டி வேறுவேறு. இந்தப் பாசுரத்தில் ‘முனிமாப் பிரம்ம முதல் வித்து’ என்பது சங்கல்பிக்கின்ற பரப்பிரம்மம். இதுதான் ஆதாரமாக இருப்பது. இதனால் படைக்கப் பெற்ற அண்டம் முதலானவை ஆதேயமாக இருப்பன. ஆகவே இப்பாசுரம் ஆதார-ஆதேய உறவைத் தெரிவிக்கின்றது. முதலடியிலுள்ள ‘தோன்றி என்பதனால் சமஷ்டி சிருஷ்டியும்,இரண்டாவது அடியிலுள்ள முளைப்பித்த என்பதனால் வியஷ்டி சிருஷ்டியும்தெரிவிக்கப் பெறுகின்றன.

(ix) போக்தா-போக்கிய சம்பந்தம் : போக்கியப் பொருளை எவன் ஒருவன் தன் விருப்பப்படி அநுபவிக் கின்றானோ அவன் போக்தா, ஈண்டு ஈசுவரன் போகத்தை அதுபவிப்பவன். ஆன்மா ஈசுவரனின் போகப்பொருளாய் இருக்கின்றது.ஆகவே, இதுபோக்தாபோக்கிய உறவாகின்றது.

          வாரிக்கொண்டு உன்னை
              விழுங்குவன் காணில் என்று
          ஆர்வுற்ற என்னை
              யொழியஎன் னில்முன்னம்
          பாரித்து, தான் என்னை
             முற்றப் பருகினான்;
          கார்ஒக்கு காட்கரை
             அப்பன் கடியனே (9.6:10)

        [ஆர்வு-ஆசை பாரித்து-எண்ணி; கடியன்-பதற்ற
        முடையவன்]

என்பது திருவாய்மொழிப் பாசுரம் இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கி விடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார். ஆனால் இப்படிச் செய்ய வேண்டுமென்று தனக்கு முன்பே இறைவன் எண்ணித் தன்னை அடியோடு பருகிவிட்டான் குளிர்பானம் பருகுவதைப்போல. ஆழ்வாருக்கு இறைவன் “உண்ணும் சோறு பருகுநீர்” (67:1) எனலாம்படி இருந்தான். அங்ஙனமே இறைவனுக்கு ஆழ்வார்.'உண்ணும் சோறு பருகும் நீர்” என்று ஆகிவிட்டார். சேதநலாபமே ஈசுவரனுக்குக் குறிக்கோள் என்ற வைணவ சித்தாந்தமும் உறுதிப்படுகின்றது. திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம், இங்கு இறைவன் போகத்தை அநுபவிப்பவனாகவும் ஆழ்வார் போகப்பொருளாகவும் ஆகி விடுவதைக் காண்கின்றேர்ம்
2. அர்த்த பஞ்சக ஞானம்

சம்சாரியான சேதநன் தத்துவஞானம் பிறந்து உய்யும் போது தோன்றுவது அர்த்தபஞ்சகஞானம். திருமந்திரத்தில் இன்றியமையாது அறிய வேண்டுவனவற்றைக் குறிப்பிடும் போது 'அஞ்சர்த்தம்' (முமுட்சு 23) என்று கூறும் முமுட்சு படி இஃது (1) ஈசுவரன் இயல்பு, (2) ஆன்மாவின் இயல்பு, (3) ஆன்மா அடையும் பயன், (4) அப்பயனை அடைவதற்குரிய வழிகள், (5) அப்பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் ஆகும். இவற்றில் ஒவ்வொரு பொருளும் ஐந்து வகைப்பட்டிருக்கும்.

(1) ஈசுவரனின் இயல்பு : என்பது பரத்துவம், வியூகம், விபவம் (அவதாரங்கள்) அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் என்று ஐந்து.

(2) ஆன்மாவின் இயல்பு என்பது நித்தியர், முக்தர், பத்தர் (தளைப்பட்டிருப்பவர்), கேவலர், முமுட்சுகள் என்று ஐந்து.

(3) ஆன்மா அடையும் பயன் என்பது புருஷாாத்தம், புருஷனால் (ஆன்மாவால்) அடையப்படும் பொருள் (= அர்த்தம்) அதுதான் அறம்(தர்மம்) பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆன்மாதுபயம், பகவதநுபவம் என்று ஐந்து.

(4) ஆன்மா அப்பயனை அடைவதற்குரிய வழிகள் என்பன: கர்மம், ஞானம், பக்தி, பிரபத்தி, ஆசாரிய அபிமானம் என்று ஐந்து.

(5) அப்பயனை அடைவதற்குத் தடையாய் (விரோதிகளாய்) உள்ளவைகள் என்பன. சொரூப விரோதி, பரத்துவ விரோதி, புருஷார்த்த விரோதி, உபாய விரோதி, பிராப்தி விரோதி என்ற ஐந்து.

         பராசர பட்டர் என்ற ஆசாரியப் பெருமகனார்,

         மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
         தக்க நெறியும் தடையாகித்-தொக்கியலும்
         ஊழ்வினையும் வாழ்வினையும் ஒதும் குருகையர்கோன்
         யாழின்இசை வேதத்து இயல்.
(திருவாய்மொழித் தனியன்)

என்று விளக்குவர். இந்த அர்த்த 'பஞ்சகத்தை'. இதில் (1) 'மிக்க இறை நிலை' என்பது ஈசுவரனின் இயல்பு; (2) மெய்யாம் உயிர் நிலை என்பது ஆன்மாவின் இயல்பு; (3)'தக்க நெறி' என்பது ஆன்மா அடையும் வழி; (4) தடையாகி தொக்கிலும் ஊழ்வினையும் என்பது அப்பயனை அடைய விரோதிகளாய் இருப்பவை: (5) 'வாழ்வினையும்' என்பது வீடுபேற்றின் தன்மை என்ற ஐந்துப் பொருள்களைக் (அர்த்த பஞ்சகத்தைக்கூறுவது. யாழின் இசை வேதத்து இயல் என்பது சாமவேத சாரமான திருவாய்மொழி. -

விளக்கம் : சீமந் நாராயணனே அறப்பெரிய முதல்வன்; ஆன்மாவின் இயல்பு அடியேன் என்பது:சரணாகதி இறைவனை அடைவதற்குரிய வழி; “பொய்ந்நின்ற ஞாலமும் பொல்லா அழுக்குடம்பும்” (திருவிருத்-1) ஆகிய இவையே விரோதிகள்: “ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்வதுவே" பரமபுருஷார்த்தம் என்னும் இவ்வைந்து பொருள்களுமே திருவாய்மொழியில் துவலப் பெறுகின்றன என்று நம்முடைய ஆசாரியப் பெருமக்கள் விளக்கியுள்ளனர்.

(1) இறைவனின் இயல்பு : திருவாய்மொழியிலுள்ள 'உயர்வற’(1.1), 'திண்ணன் வீடு' (22), 'அணைவது' (28) 'ஒன்றும் தேவும்' (4.10) என்ற நான்கு திருப்பதிகங்களும் நுவல்வதாக சுட்டிப் போயினர்.

(2) ஆன்மாவின் இயல்பு : திருவாய் மொழியிலுள்ள ‘பயிலும் சுடர்ஒளி' (3,7) எறாளும் இறையோனும் (48) ‘கண்கள் சிவந்து' (88) கருமாணிக்கம் (89) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் சொல்லப் பெற்றுள்ளதாகக் குறித்துப் போயினர்.

(3) ஆன்மா அடையும் பலன்: திருவாய்மொழியிலுள்ள 'எம்மாவீடு '(29) 'ஒழிவில் காலமெல்லாம்' (33) 'நெடுமாற்கு அடிமை' (810) வேய்மரு (103) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் சொல்லப்பெற்றுள்ளதாக எடுத்துக் காட்டியுள்ளனர்.

(4) பயனை அடைவதற்குத் தடையாக உள்ளவைகள்: திருவாய்மொழியிலுள்ள விடுமின் முற்றவும் 2)சொன்னால் விரோதம்இது (3.9) ஒருநாயகமாய் (41), கொண்ட பெண்டிர் (91) என்ற நான்கு திருப்பதிகங்களிலும் நுவலப்பெற்றுள் ளனவாக மொழிந்து சென்றனர்.

(5) பயனை அடையும் வழிகள் : திருவாய்மொழியி லுள்ள நோற்ற நோன்பும் (5, 7) ஆராவமுதே'(58) மானேய் நோக்கு (59) பிறந்தவாறும் (510) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் கூறப்பெற்றுள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பாவையிலும் அர்த்த பஞ்சகம் இருப்பதாக நம்பூருவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

() இறைவனின் இயல்பு: திரிமூர்த்தி சொரூபமாகிய நாராயணனை நோக்கியே இந்த நோன்பு நோற்கத் தக்கது என்பது ஆண்டாளுடைய உள்ளக்கிடக்கை. ஆதலால் 'மார்கழித் திங்கள்’ (1) என்ற முதற் பாசுரத்தில்

         ‘நாராயணனே
             நமக்கே பறைதருவான்’

என்ற அடியில் பரத்திலுள்ள நாராயணனைப் பாடுகின்றாள் ‘பறை தருவான்’ என்பதால் எதிர்பார்க்கும் பொருளை நல்குவான் என்ற பொருளைத் தரும்,

வையத்து (2) என்ற இரண்டாம் பாசுரத்தில்

‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி’

என்ற அடிகளில் வியூகருபமாகப் பரன் பாற்கடலில் பையத் துயிலும் மூர்த்தியைக் காட்டுகின்றாள். ஆயச்சிறுமிகள் எல்லா வகையாலும் விஞ்சின கண்ணபிரானைப் பாடாது திருப்பாற்கடல்நாதனைப் பாடுவதாகச் சொல்கின்ற கருத்து கிருட்டிணனையும் தம்மையும் நோக்கிப் பண்டே அதிக ஐயம் கொண்டிருக்கின்ற இடையர் தமக்குத் தீங்கு செய்யக்கூடும் என்ற அச்சத்தினால் என்க.

'ஓங்கி உலகளந்த' (3) என்ற மூன்றாம் பாசுரத்தில் வாமனனாகித் திரிவிக்கிரமனான விசுவருபத்தைக் குறிப்பிடும் போக்கில், - ~

       ஓங்கி உலகளந்த
           உத்தமன் பேர் பாடி

என்று குறிப்பிடுகின்றான். ‘உத்தமன்பேர்’ என்பதால் ‘நாராயணன்' என்ற பரத்துவ நினைவும், வியூகத்தில் சொல்லும் உடையவர்களாக விபவத்தைப் பாடி, பகவானை எப்படி மனத்தில் பாவித்துக் கொண்டுள்ளோமோ அந்தப்பாவைக்குச் சாற்றி நீராடல் வேண்டும் என்று மனம்மொழி செயல்களால் இது பகவானுடைய ஆராதனமே என்பதை தெளிவு படுத்துகின்றாள்.

‘ஆழிமழைக்கண்ணா' (4) என்ற நான்காம் பாசுரத்தில் அவன் மேற்கொண்ட செயலை இட்டு அழைக்கின்றனர். 'பகவானுக்கு அடிமைப்பட்ட பாகவதர்கட்கு மற்றைத் தேவர்கள் அடிமை செய்பவர்கள்' என்பது சாத்திர சித்தம். ஆகவே மழைக்கு அதிதெய்வமான வருணன் பரமபாக வதைகளான இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் சொன்னபடி மழை பெய்ய வேண்டும் என்று கையோலை செய்து கொடுக்கின்றார்கள்.

'மாயனை'(5) என்ற ஐந்தாம் பாசுரத்தில் மாயனுடைய பல பெயர்களை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூமலர்தூவித் தொழுதல் போய பிழைகளும் (எம்பெருமானை அடிபணிவதற்கு முன்னர் செய்யப்பட்டவை) புகுதருவான் நின்றனவும் (அடிபணிந்த பின்னர் ப்ரகிருதி வாசனையினால் அபுத்தி பூர்வமாகச் செய்தவை) தீயிலிட்ட து.ாசுபோல் உருமாய்ந்து ஒழியும் என்று கூறப்பட்டது.

(ii)ஆன்மாவின் இயல்பு : 'புள்ளும் சிலம்பின காண்' (6)என்ற பாசுரம் முதல் 'எல்லே! இளங்கிளியே' (5) என்ற பாசுரம்வரை உள்ள பத்துப் பாசுரங்கள் பள்ளி உணர்த்து வதையே பிரதானமாகக் கொண்டவை. இவை ஆன்மாவின் இயல்பான பகவதநுபவத்தையும், உறக்கமாகிய 2 urru a?GETIT) சொருபத்தையும் காட்டுவன. பரத்துவ திருக்குணமாத்திரமே விளங்கும் இடமான பரமபத நாதனை அநுபவிக்கப் பலகோடி நூறாயிரவர் திரளும்போது எல்லாத் திருக்குணங்களும் ஒருங்கே விளங்கும் இடமான கண்ணனை அதுபவிக்கக் கட்டம் அதனிலும் விஞ்சி இருக்க வேண்ட ாவோ? என்பதைக் காட்டுவது. பரமபோக்கியமான ஒரு பொருளை ஒருவனாக அநுபவிக்கலாகாது என்பதும் பத்துப் பேரோடும் அநுபவிக்க வேண்டும் என்பதும் சாத்திரவிதி.

கிருஷ்ணாதுபவத்தில் அனைவர்க்கும் அவா இருக்கும் போது எழுப்பச் சிலர் உறங்குவது அவாவிற்குக் குறை போல் தோன்றுகிறதே எனின் கண்ணபிரானது சேஷ்டி தங்களும் திருக்குணங்களும் இராமசரம்போல் சிலரை மயங்கப் பண்ணும்; சிலரை இருந்த விதத்தில் இருக்கவொட்டாமல் துடிக்கப் பண்ணும்; ஆகையால் அவாவிற்குக் குறை இல்லை உள்ளே இருப்பவர்கள் மயங்கினவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்; வெளியே எழுப்புபவர்கள் துடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, அனைவரும் பகவதது பவத்தில் ஈடுபட்டவார்களே என்று கூறுவதில் தட்டில்லை

“சர்வசேஷியான எம்பெருமான் சேஷயூதர் இருக்கு மிடத்திற்கு வந்து அருள் புரியக் கடமையுடையவன்; அவன் அங்ஙனம் செய்யாதொழியில் நாம் நம் சொருபத்தைக் குலைத்துக் கொண்டாகிலும் அவன் இருப்பிடத்திற்குச் சென்றுசேவித்தால் அவன் ‘ஆ நம் காரியத்தை நாம் செய்யத் தவறின்ோமே' என்று தான் கழிவிரக்கமுற்று நம் காரியத்தைச் செய்து தலைக்கட்டுவன்; எல்லோருமாகத் திரண்டு போகலாம் வாருங்கள்” என்று அழைக்கின்றனர் (8).

இங்ஙனம் பத்துப் பாசுரங்களால் பத்துப் பெண்களை உணர்த்திய படியைக் கூறியது திருவாய்ப்பாடியிலுள்ள பத்து லட்சம் பெண்களையும் உணர்த்தியதற்கு உபலட்சணமாகும். இவற்றால் ஆன்மாவின் இயல்புகள் சொல்லப்பட்டதை நினைந்து மகிழலாம்.

(iii) ஆன்மா அடையும் பயன்கள் : 'மாலே மணி வண்ணா' (2.6) என்ற இருபத்தாறாம். பாசுரத்தில் ஆயச் சிறுமிகள் கேட்பவையே. ஆன்மா அடையும் பயன்களாகும். அவர்கள் கேட்பவை திருப்பள்ளி எழுச்சிக்குச் சங்குகள் வேண்டும் புறப்பாட்டுக்குப் பறைவேண்டும்; பறை கொட்டிக் கொண்டு புறப்படும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; பாடுவார் எங்கள் முகத்திலே விழிக்க நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி கோலவிளக்குகள் வேண்டும்; நெடுந்துரத்தில் எங்கள் திரளைக் கண்டு சிலர் வாழும்படி முன்னே பிடித்துக் கொண்டு செல்வதற்குக் கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும்போது பனி தலைமேல் விழாதபடி காக்க ஒரு மேற்கட்டி வேண்டும்: - சிறிய வயிற்றிலே பெரிய உலகங்கள் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஒர் ஆலந்தளிரிலே கிடந்து செயற்கரிய காரியங்களைச் செய்யவல்ல உனக்கு இவை எங்கட்குக் கிடைக்கச் செய்வது எளிதான செயலேயாகும்.

“கூடாரை வெல்லும்” (27) என்ற இருபத்தேழாம் பாசுரத்தில் மார்கழி நோன்பு தலைக்கட்டின பிறகு இடைப்பெண்கள் கண்ணனிடம பெறவேண்டிய வெகுமானச் சிறப்புகளெனச் சொல்லுகின்றார்கள். “பாடகம் முதலிய ஆபரணங்களையெல்லாம் உன் கையால் எங்களுக்குப் பூட்ட நாங்கள் அணியப்பெற்றவர்களாகவேண்டும். அங்ஙனமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்கட்கு உடுத்தி நாங்கள் உடுக்கப் பெற்றவர்களாக வேண்டும்” என்கின்றனர்.

“கறவைகள் பின்சென்று" (28) என்ற இருபத்தெட்டாம் பாசுரத்தில் தெரிவிப்பவை எவை? முன்னர் 'போற்றியாம் வந்தோம்' (21) “செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?" (22) ‘உன்னை அருத்தித்து வந்தோம்(25) என்பன போன்ற பாசுரங்களில் தங்களுக்குள்ள பிராப்பிய ருசியை வெளியிட்டனர். அந்தப் பிராப்பியத்தைப் பெறுகைக்கு உடலாகத் தங்களுடைய ஆகிஞ்சன்னியத்தையும்14 உபாயத்துவத்தையும்15 வெளியிடுகின்றனர். இப்பாசுரத்தில் ‘நாயகரே! நின்னருளே புரிந்திருக்கும் எங்கள் பக்கலில் எடுத்துக் - கழிக்கலாம்படியும் சில உபாயங்கள் உளவென்றிருந்தாயோ?, ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்' (23) என்றும் இன்று யாம் வந்தோம் இரங்கு (24) என்றும் நாங்கள் வேண்டிய அருளுக்குப் பிரதிபந்தகங்களாகத் தங்கள் திறத்தில் சாதனாம் ஒன்றும் இல்லை என்ற சர்வஜ்யனுக்கு அறிவிக்கின்றனர்.

‘சிற்றஞ்சிறுகாலே' (29) என்ற இருபத்தொன்பதாம் பாசுரத்தில் தங்கள் குறிக்கோள் கைங்கரியம் என்று பிரபந்தத்தின் தற்பர்யத்தைச் சொல்லி முடிக்கின்றனர். முன்னரெல்லாம் ‘பறை பறை’ என்று சொல்லி வந்த ஆயச்சிறுமிகள் அப்பறையின் பொருளைத் தீர்மானித்து விண்ணப்பம் செய்த பாசுரம் இது. “நாட்டார் இசைவு பெறுவதற்காக 'நோன்பு' என்ற ஒன்றைக் காரணமாகக் கொண்டு இங்கு வந்தோமேயன்றி எங்களது குறிக்கோள் உன் திருவடிகளில் நித்திய கைங்கரியம் புரிவதுதான்; இனி ஒரு நொடிப்பொழுதும் உன்னை விட்டு நாங்கள் பிரிந்திருக்க விருப்பம் எமக்குப் பிறவாவண்ணம் நீயே அருள்புரிய வேண்டும்” என்கின்றனர்.

எம்பெருமானுடைய பிறவிதோறும் ஒக்கப்பிறக்கும் பிராட்டியைப்போல தாங்களும் ஒக்கப் பிறந்து ஆட்செய்ய நினைக்கின்றனர். ஆழ்வார்கள் எல்லோரும் “இனிப்பிறவியான் வேண்டேன்” என்றும், “ஆதலால் பிறவிவேண்டேன்’ (திருமாலை-3) என்றும் கூறி பகவானிடம் வேண்டியது பிறப்பறுக்கவே வேண்டும் என்று. ஆண்டாள் அங்கனமே பேசாமல் “எற்றைக்கும். ஏழேழ் பிறவிக்கும்” என்றமையாலே அவனுடைய அவதாரங்கள்தோறும் கூடவே வந்து பிறக்கின்ற நாச்சிமார்களிலே "இவள் ஒருத்தி” என்னும் இடம் தெரிவிக்கப்பட்டதாகின்றது.

“வங்கக் கடல் கடைந்த” (30) என்ற முப்பதாம் பாசுரத்தில் இப்பிரபந்தம் கற்றார் பிராட்டியாராலும், எம்பெருமானாலும் எல்லாக் காலங்களிலும் அங்கீகரிக்கப் பெறுவார்கள் என்கின்றாள்.

‘சங்கத் தமிழ் மாலை’ - பஞ்ச லட்சம் குடிப்பெண்கள் திரள் திரளாக அநுபவித்தது போல், பக்த பாகவதர்கள் திரள் திரளாக அநுபவிக்க வேண்டும் என்பது தாற்பரியம்.

திருவாய்ப்பாடியில் பெண்களுக்குக் கிருட்டிணன் சமகாலத்தவனாகையால் கிருட்டிணனை அவர்கள் நேரில் காண முடிந்தது. அந்த நேர்காட்சியை ஆண்டாள். நாச்சியார் பாவனை செய்து பெற்றார். அவளிலும் பிற்பட்ட நம்போலியர் அப்பேறு பெற வேண்டில் இப்பிரபந்தத்தை ஒதினால் போதும். “கன்றிழந்த தலைநாகு தோற் கன்றை மடுக்க அதுக்கு இரங்குமாப்போலே, ஆய்ச்சியர் சொன்ன இப் பாசுரங்கொண்டு பலிக்கும்” என்பர் பட்டர்

அதிகாலையில் எழுந்து'முப்பது பாட்டையும் தப்பாமல் - ஒரு பாட்டும் நழுவாமல் அநுசந்திக்க வேண்டும். அதனைச் செய்ய முடியாவிட்டால் “சிற்றஞ்சிற்காலே" (29) என்ற பாசுரத்தை அநுசந்தித்தால் போதும். அதையும் செய்ய முடியாமற் போனால் “நாம் இருந்த இருப்பை நினைப்பது" என்பர் பட்டர்."நாம் (பட்டர்) இப்பிரபந்தத்தை அநுசந்தித்து ஈடுபட்டிருந்த இருப்பை” என்றபடி

(iv) பயனை அடையும் வழிகள்:'ஏற்றக்கலங்கள்' (21) என்னும் இருபத்தொன்றாம் பாசுரத்தில் “ஆற்றப் படைத்தான் மகனே!” என்று கண்ணனை விளிக்கின்றனர். ஆய்ச்சியர் பலகாலும் கண்ணனை விளிக்கும்போது ‘நந்தகோபலன் மகனே! என்றுவிளிப்பதைப் பாசுரங்களில் காணலாம்.இதற்கு ஒரு கருத்து உண்டு. அது யாதெனில்: “பரமபதத்தின் இருப்பைத் தவிர்த்தும், பனிக்கடலில் பள்ளிக் கோளைப் பழகவிட்டும்’ (பெரியாழ் திரு. 5.3:9) 'நீ இந்த திருவாய்ப்பாடியில் நந்தகோபர்க்கு மகனாகப் பிறந்தது இங்ஙனம் கிடந்து உறங்கவோ? எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ நீ அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்தில் பிறந்தது? (திருப்28) ஆகவே, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ?' என்பதாகும். 'மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்துன் அடி பணியுமாப்போலே, யாம் வந்தோம்'. 'ஆற்றாது வந்து இராமன் பிராட்டி விஷயத்தில் அபசாரப்பட்டக் காக்காசுரன் மீது நான்முகன் கணையைத் தொடுத்துவிட அது எத்திசையும் உழன்றோடி எங்கும் புகலற்று இளைத்து விழுந்த காகம் போல வந்து' என்றபடி

‘யாம் வந்தோம்’- சத்துருக்கள் உன்னுடைய அம்புக்குத் தோற்று அவ் அம்பு பிடரியைப் பிடித்துத் தள்ள அவர்கள் வருமாறுபோல, நாங்கள் உன்னுடைய சவுந்தரிய செளசீல்யாதி குணங்கள் பிடித்திழுக்க வந்தோம் - உன்திருவடியை நோக்கி வந்தோம். இதில் 'சரணாகதி' குறிப்பிட்டபடி 'அங்கண்மாஞாலத்து' (22) என்ற இருபத்து இரண்டாம் பாசுரத்தில் “பேரரசர்கள் நின்சீரிய சிங்காதனத்தின்கீழ் திரண்டு வந்து கிடப்பதைப்போல் நாங்கள் வந்து தலைப்பெய்தோம் - கிட்டினோம். 'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்.’ “நின் திருக்கண்கள் இரண்டிலும் கடாட்சிக்க வேண்டும். அநந்யார்ஹைகளாக16 வந்து நின்ற எங்களை" என்கின்றனர். இதிலும் பிரபத்திக் - குறிப்பைக் காணலாம்.

‘மாரிமழைமுழைஞ்சில்'(23) என்ற இருபத்து மூன்றாம் பாசுரத்தில் கண்ணபிரான் திருப்பள்ளியிலிருந்து எழுந்து “சீரியசிங்கம் போல் புறப்பட்டு எழுந்தருளி நடையழகு காட்டிச் சிங்காதனத்தின்மீது வீற்றிருந்து தங்களின்.(ஆயச்சிறுமியரின்) வேண்டுகோளை ஆராய்ந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றனர்.

‘அறிவுற்று’ என்பதால் அடியோடு அறிவில்லாததொரு பொருளுக்குஅறிவு குடிபுகுந்தமை தோன்றும். சிங்கம் பேடையைக் கட்டிக்கொண்டு உறங்கும்போது அறிவிழந் திருக்கும். கண்ணபிரானும் 'நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்ப னாதலால் (திருப் 19) அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர் அறிவற்றதொரு பொருளாகவன்றோ தன்னால் எண்ணப் ‘படுவன் போலும்! யாம் வந்த கர்ரியம் : இப்போது இவர்கள் வந்த காரியம் இயம்பவில்லை; காரணம் சொல்லிவிட்டால் சுதந்திரனாகிய இவன் மறுத்தாலும் மறுக்கக் கூடுமென்று அஞ்சி, சற்றுத் தாமதித்து விண்ணப்பம் செய்கின்றனர் ‘சிற்றஞ்சிறுகாலே' (29) என்ற பாசுரத்தில் ‘அன்றிவ்வுலகம்’(24) என்ற இருபத்து நான்காம் பாசுரத்தில் கண்ணன் புறப்பட்டுவர,இவர்களும் தண்டகாரண்ய முனிவர் தாம் இராக்கதர்களால் தமக்கு நேரிடும் துன்பங்களைச் சொல்லிமுறையிட வேண்டும் என்று நினைத் திருந்ததை மறந்து, இராமபிரானைக் கண்டவுடன் மங்களா சாசனம் தொடங்கினாற்போலே, தங்கள் மனோரதங்களை மறந்து, இத்திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது? என்று வருந்தி பண்டு உலகளந்த வரலாற்றையும் நினைந்து வயிறெரிந்து இத்திருவடிகட்கு ஒரு தீங்கு நேராதொழிய வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கின்றனர். ‘அடிபோற்றி’, கழல்போற்றி, குணம் போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, வேல் போற்றி என்று இவர்கள் நாக்கிற்கு அறுசுவை அடிசில் இடுவதுபோல் (ஷட்ரசம்) இட்டு மகிழ்கின்றனர்: “இன்று யாம் வந்தோம்; இரங்கியருள்வாய்” என்கின்றனர். பிரபத்திக்கு அடிகோலுகின்றனர்.

‘ஒருத்தி மகனாய்' (25) என இருப்பத்தைந்தாம் பாசுரத்தில் "உன்னுடைய திருக்குணங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்தமையால் யாதொரு வருத்தமும் படாமல் சுகமாக வந்தோம். ‘பறை’ என்ற வியாஜயத்தையிட்டு உன்னைக் காண்பதற் காகவே வந்தோம். இதனால் நின்னைப் பிரிந்திருக்கும் துன்பம் நீங்கி மகிழ்கின்றோம்” என்கின்றார்கள், தாம் வந்த காரியத்தை,

        எற்றைக்கும் ஏழேழ் .
              பிறவிக்கும் உன்தன்னோடு
        உற்றோமே யாவோம்;
              உனக்கேநாம் ஆட்செய்வோம். (29)

என்று இருபத்தொன்பதாம் பாசுரத்தில் வெளியிடுகின்றனர். இப்பாசுரத்திலும்(29) பிரபத்தியிலே நோக்கு என்பது தெளிவாகின்றது.

(v). பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் : தடைகளை நீக்க வேண்டுமானால் எம்பெருமானையே பற்ற வேண்டும். திருப்பாவையில் 16முதல் 20 பாசுரங்கள் பகவத் சொரூபமாகிய இரட்சகத்துவத்தையே காட்டுவனவாக நம்முன்னோர் குறித்துப் போயினர்.

‘நாயகனாய் நின்ற'(16) என்ற பதினாறாம் பாசுரம் ஆயச்சிறுமிகள் நந்தகோபர் திருமாளிகை வாசலில் சென்று சேர்வதைக் குறிப்பிடுகின்றது. கோபுரவாசல் போன்ற வெளிப்புறத்து வாசலைக் காப்பவன் - கோயில்காப்பான் என்றும், கொடிமரத்து அருகிலுள்ள வாசல் போன்ற உட்புறத்து வாசலைக் காப்பவன் - வாயில் காப்பான் என்றும் இவண் கூறப்பெறுகின்றனராகக் கொள்ளவேண்டும். பெரிய இடத்துக்குப் போகின்றவர்கள் துவாரபாலகர்களின், புருஷகாரம் முதலில் தேவைப்படுவதை அறிவதைப்போல் இவர்களும் அறிகின்றனர். ஆகவே, அவர்களின் தயவை, வேண்டி நிற்கின்றனர். -

திருப்பாவையில் ‘நீராட்டம்’ என்ற குறிப்பு ஐந்து பாசுரங்களில் வருகின்றது.'நீராடப்போதுமினோ' (1) 'நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்'(3) 'நாங்களும் நீராட மகிழ்ந்து'(4) 'இப்போதே எம்மை நீராட்டு'(20) ‘மார்கழி - நீராடுவான்’(26) 677று வந்துள்ளமையைக் காணலாம். ஆக, இவற்றில் ஆயச்சிறுமிகளின் குறிக்கோள் 'நீராடுதல்' என்பது தெரியவந்தாலும் அவர்கள் நீராடும் இடமான பொய்கைக்கோ, யமுனைஆற்றுக்கோ சென்றனராகப் பாசுரங்களில் குறிப்பு இல்லை.

ஆனால் நந்தகோபருடைய திருமாளிகைக்குச் சென்று அங்கு நப்பின்னைக் கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பனை (19) உணர்த்தி, அவர்களை நோக்கித் தோத்திரம் செய்து, சிற்றஞ்சிறுகாலை எழுந்து இங்கு நாம் வந்தது எதற்காக வெனில்: ‘உன்றன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ (29) என்று விண்ணப்பம் செய்வதற்காகவே என்று தலைக்கட்டியதைக் காண்கின்றோம். இங்ஙனம் திவ்விய தம்பதிகளிடம் சென்று சேவிப்பதுதான் இவர்கள் கொண்ட 'மார்கழி நீராட்டம்’ என்பது தெளிவாகின்றது. ஆகவே, பாசுரங்களில் குறிப்பிடப்பெற்ற நீராட்டம் தண்ணிரில் தோய்வது அன்று எனவும், பகவானோடு சேர்தலையும், பாகவதர்களோடு சேர்வதையுமே நீராட்டம் என்றுச் சொல்லப்பெற்றுள்ளது. என்பதை அறுதியிடுவதாக அமைகின்றது. மூவாயிரப்படியில் பெரியவாச்சான் பிள்ளையும், ஆறாயிரப்படியில் அழகிய மணவாளப்பெருமாள் நாயனாரும் இக் கருத்தைத் தெளிவாக்கியுளளனர். .

‘அம்பரமே தண்ணிரே' (17) என்ற பதினேழாம் பாசுரத்தில் நந்தகோபர், யசோதைப்பிராட்டி, கண்ணபிரான், நம்பி மூத்தபிரான்(பலராமன்) ஆக நான்கு பேர் எழுப்பப் பெறுகின்றனர். இங்கு “உம்பியும் நீயும் உறங்கேல்” என்பது பகவத் சேஷத்துவமும்17 பாகவதசேஷத்துவமும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திரா என்கின்ற தத்துவத்தை நினை வூட்டுவதாக அமைகின்றது.

'உந்து மத களிற்றன்' (18) என்ற பதினெட்டாம் பாசுரத்தில் கண்னாபிரானின் திவ்விய மகிஷியான நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகின்றனர். கிருட்டினா வதாரத்தில் நப்பின்னைப் பிராட்டியே பிரதான மகிஷியாகக் குலாவப்படுகின்றது. ஆழ்வார் பாசுரங்களில் உருக்குமினிப் பிராட்டியைப்பற்றி மூன்று நான்கு இடங்களில் மட்டிலுமே உள்ளது; நப்பின்னைப்பற்றிய குறிப்பு பல நூறு இடங்களில் வருகின்றது. நப்பின்னை கும்பர் என்பாரின் மகள், ‘கும்பர் திருமகளாரே’ என்று அழைக்காமல் ‘நந்த கோபாலன் மருமகளே' என்று அழைத்தமைக்குக் காரணம் என்ன? பெண்டிர்க்குப் பிறந்தகத்து சம்பந்தத்தைக் காட்டிலும் புக்ககத்துச் சம்பந்தமே பெருமையு.ை யதாயிருக்கும் என்பதால்,

‘குத்து விளக்கெரிய' (19) என்ற பத்தொன்பதாம் பாசுரத்தில் நப்பின்னை கண்ணன் என்ற திவ்விய தம்பதிகளின் காலிலும் விழுந்து இரக்கின்றனர் ஆயச்சிறுமிகள். கதவுத் துளை வாயிலாக இருவரும் காணப்படுகின்றனர். ஆகவே வெளியிலிருந்து கொண்டே பிரபத்தி நடைபெறுகின்றது. இது பிரபத்தியைத் தெளிவாக்குகின்றது.

இங்கு ‘மெத்தென்ற பஞ்சசயனம்’: மென்மை, குளிர்ச்சி, நறுமணம், வெண்மை, விரிவு என்ற வகைச் சிறப்புகள் பொருந்திய படுக்கைக்குப் பஞ்ச சயனம்’ 577று பெயர். இந்த ஐவகையில் மெத்தென்றிருத்தல் சேர்ந்திருந்தாலும் தனிப்பட ‘மெத்தென்ற' என்று சிறப்பித்தற்குக் காரணம் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும் என்ற பாசுரத்தால் தெரிவிக்கப் பெற்ற 'அர்த்தபஞ்சகமே' இங்குமெத்தென்ற பஞ்சசயனமாகக் கருதப்பெற்றதாகவும் கொள்ளலாம். இந்தப் பஞ்ச சயனம் சாத்திரங்களால் தாங்க பெறுகின்றது என்பதைக் கோட்டுக் கால் கட்டில்’ என்ற தொடர் குறிப்பிடுகின்றது.

‘முப்பத்துமூவர்'(20) என்ற இருபதாம் பாசுரத்திலும் கண்ணபிரான் நப்பின்னைப்பிராட்டி என்ற இருவரையும் எழுப்புகின்றனர். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் கண்ண பிரானுடைய சிருங்கார ரசவிதக்னாயிருக்கும் தன்மையைச் சொல்லி அநுபவித்தார்கள். இப்பாசுரத்தில் அவனது பெரு மிடுக்கைச் சொல்லி அநுபவிக்கிறார்கள். விசிறியையும், கண்ணாடியையும், உன் மணாளனையும் தந்து நீராட்டுவிக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். 'நீராட்டு' என்பதற்குச் சேர்ப்பி என்பது பொருள். பகவத் சந்நிதியில் கைங்காரியமே புருஷார்த்தம் என்பது காட்டப் பெறுகின்றது.

‘செப்பன்ன மென்முலை' என்று தொடங்கி நப்பின்னைப் பிராட்டியின் உறுப்புகளின் அழகு பேசப்பெறுகின்றது. பூர்வச்னபூஷணத்தில் பிராட்டி 'சேதநனை அருளாலே திருத்தும் ஈசுவரனை அழகாலே திருத்தும்” என்று அருளிச் செய்திருப்பதை ஈண்டு நினைவு கூரலாம்18 ரீவசன பூஷணத்தால் சாதித்தது பெரியபிராட்டியைப் பற்றியே அன்று என்று ஐயுற வேண்டாதபடி 'நப்பின்னை நங்காய் ! திருவே!' என்று அருளிச் செய்யப் பெற்றது. இவளையும் திருவின் அம்சபூதையாகக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு.

  1. கிங்கரன்-வேலையாள், கைங்கரியம்-அவன் செய்யும் தொழில்; அஃதாவது அடிமைத் தொழில்.
  2. காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியில் உள்ளது.
  3. காஞ்சி பாண்டவ தூதர் சந்நிதியில் உள்ளது.
  4. காஞ்சி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதியில்