திருவாசகத்தேன்/திருவாசகம் ஓதுவோம்!

விக்கிமூலம் இலிருந்து

திருவாசகத் தேன்


திருவாசகம் ஒதுவோம்!


ந்த உலகில் எதுவும் வளரும்; எவரும் வளர்வர். வளர்வன எல்லாம் மாறும்—— இதுவே உலகத்து இயற்கை. ஆன்மா வளர வேண்டும். ஆம்! ஆன்மா வளர்வதற்கும் மாற்றங்கள் பெற்று நிறைநலம் பெறுவதற்குமே எடுத்தது பிறப்பு.

நிலம் உழுதால் நிலத்தின் கெட்டித்தன்மை நெகிழ்ந்து கொடுக்கும்; விதைகளை வாங்கி செடியாக்கி, மரமாக்கி வளர்த்துக் கொடுக்கும். உழுத நிலமே பயன்படும். இரும்பை உருக்க வேண்டும். இரும்பை உருக்கிக் காய்ச்சினால்தான் வலிமை பெறும்; சுமை தாங்கும்.

மாற்றுக்குறையாத தங்கமேயானாலும் உருக்கினால் தான் அணிகள் செய்யலாம். பயன் கருதினால் வளர்ச்சி வேண்டும். வளர்ச்சிக்குரிய செயற்பாடுகளுற்றால்தான் வளர்ச்சி ஏற்படும்.

மனிதப்படைப்பின் குறிக்கோள் என்ன? அன்புற்றமர்ந்து வாழ்தலே வையகத்தியற்கை. இன்று மனித இனம் எங்குச் சென்று கொண்டிருக்கிறது? இன்றைய மனித இனத்திற்குக் குறிக்கோள் இருக்கிறதா? இன்றைய மனிதன் சாதனைகளையே குறிக்கோள்கள்—— இலட்சியங்கள் என்று சொல்கிறான். இன்றைய மனிதனிடம் 'மனிதம்' இல்லை; கடின சித்தம் குடிகொண்டு விட்டது. இந்த மனித குலத்துக்கு முதலில் அழக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐயா, ஐயா இது என்ன புதிய முயற்சி! இன்று மக்கள் அதிகமாக அழுகிறார்கள்! விலைவாசி ஏற்றம், குடும்பப் பொறுப்பு, மகள் திருமணம் எல்லாமே இன்று அழுகைக்குரிய நிகழ்வுகளாகி விட்டன. இந்த அழுகை போதாதா? இன்னும் என்ன அழுகை? எதற்கு அழுகை? என்று நினைக்கலாம். இப்பொழுது மனிதனின் தேவைகள் எளிதாகக் கிடைக்கும். தேவை ஒரு நல்ல அரசு. அதற்கு மேலும் நன்றென ஒன்றுண்டு அதுவும். கிடைக்கும்! இன்பத்துள் இன்பமும் கிடைக்கும்!

மனிதனின் நெஞ்சக்கனகல்லை நெகிழ்ந்து உருகச் செய்ய வேண்டும். உருகும் மனிதனிடத்தில் உணர்வு சிறக்கும்; ஞானம் முகிழ்க்கும். மனிதன் கடவுளை நினைந்து நினைந்து உருகி அழுதானானால் உருப்பட்டு, விடுவான். மனிதன் கடவுளை நினைந்து அழக் கற்றுக் கொள்ளவில்லையே; என்று இடித்துக் கூறுகிறது திருவாசகம்! அழுதால் இறைவனை—— இறைவன் அருளைப் பெறலாம்! இது திண்ணம்! திருவருள் முதல் எண் முதல் எண்ணை வெற்றிகரமாகப் போட்டுவிட்டால் மற்ற எண்கள் தாமே வரும்.

மனித வாழ்வுக்கு உணவு தேவை; மருந்தும் தேவை. உணவாகவும் மருந்தாகவும் ஒருசேரப் பயன்படுவது தேன்! தேன் உணவு! தேன் மருந்து! ஏழைகளுக்குத் தேன் மருந்து. வளமுடையோருக்கு உணவு. தேன், தேனீக்களால் சேகரிக்கப் பெறுவது, தேனிக்கன் சுறுசுறுப் பானவை. கட்டுப்பாடுடையவை; ஒழுங்குகள் உடையவை. ஒரே தொழில் செய்பவை. தேனீக்கள் பலகாத தூரம் சென்றாலும் தேன் உள்ள மலர்களை நோக்கியே செல்லும். தேனைச் சேகரிக்கும். எப்படி வாழ வேண்டும் என்பதற்குத் தேனீ ஒர் உதாரணம்.

மாணிக்கவாசகராகிய தேனீ இறைவன் திருவடி மலர்களில் மட்டும் உட்கார்ந்து எடுத்த தேன், திருவாசகம். 'திருவாசகம் என்ற தேன் ஒரே பூவின் தேன். வேறு எந்த மலர்களிலும் மாணிக்கவாசகராகிய தேனீ உட்கார்ந்ததில்லை. பரமசிவமே கொற்றாளாகி மண் சுமந்து பெற்ற பரிசு, பண் சுமந்த பாடலாகிய திருவாசகம்! சிவபெருமானால் படி எடுக்கப்பெற்ற நூல் இது.

எத்தனை எத்தனை பிறப்புக்கள் பிறந்தாயிற்று! எய்ப்பும் களைப்பும் வந்தாயிற்று! கடினமான பிறப்புக்கள்! சூழ்ந்து வந்த தளைகள் எண்ணற்றவை! இவையெல்லாம் கழல வேண்டுமா? திருவாசகத் தேனமுதப் பாடல்களை ஒதுக!

பிறப்பு என்ன? வாழ்க்கை என்ன? நன்மை, தீமை என்ற சுழற்சி வட்டம் ஒயாது வருகிறது. இந்தச் சுழற்சியில் சிக்கிய ஆன்மா அனுபவிக்கும் அல்லல்கள் ஆயிரம்! ஆயிரம்! இந்த அல்லல்கள் தீர ஒரே வழி திருவாசகம் ஒதுதல்.

அல்லல் நீங்கி ஆனந்தம் அடையத் திருவாசகம் பாடுக! திருவாசகம் ஒதுக!

வாழ்க்கையாகிய நெடிய பயணத்துக்குத் துணை வேண்டுமா? தனிமைத் துன்பம் அழியத் துணை வேண்டுமா? இறைவனே கடையூழித் தனிமையிலிருந்து மீள, திருவாசகத்தைய் படி எடுத்துக் கொண்டுளான். நமது தனிமைக்கும் தனித்துணை மருந்து திருவாசகம் தான்! நமது நெடிய பயணத்துக்குரிய தனித்துணை திருவாசகம்! மாணிக்கவாசகர் பரசிவத்தின் திருவடிகளாகிய மேகத்தில் ஞானத்தை எடுத்து வந்து பெய்த ஞான மழை திருவாசகம்! திருவாசகத்தை, இராமலிங்க அடிகள் கூறியவாறு "நான் கலந்து பாட" முயற்சி செய்வோம்!

திருவாசகம் ஒரு ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை உணர்த்துகிறது. நந்தம் மூதாதையரின் உதட்டில் உலா வந்து உலாவிய பாடல்கள் திருவாசகம். அதனால்தான் போலும் அன்றைய தமிழகத்தில் ஞானம் இருந்தது. இன்றும் நமது உதடுகளில் திருவாசகம் உலா வரட்டும்! திருவாசகச் சிந்தனைகளின் வழி ஆன்மாக்கள் வளரட்டும்! அலைவு உலைவுப் போராட்டங்களிலிருந்து விடுதலை பெறட்டும்; ஆன்ம சுதந்திரம் பெற முதலில் சிந்திக்க வேண்டும். ஆன்ம சுதந்திரமே இறை இன்பத்திற்குப் படி.

சிவப்பிரகாச சுவாமிகள் கூறிய வேளாண்மையைச் செய்க! மாணிக்க வாசகராகிய மாமழை பொழிந்தது; திருவாசகத்தேனமுது, ஒதுபவர் மனக்குளத்தில் திருவாசகம் நிரம்பட்டும். அவர்தம் வாய்வழிப்போந்து கேட்பவர் செவி வழி மணவயலில் பரவட்டும்! அன்பாகிய வித்திலிருந்து சிவம் முளைவிடட்டும்! கருணை மலரட்டும் கருணையால் இந்த உலகம் சிறக்கட்டும்! மட்கலம் நல்லதேயானாலும் தீண்டாமையாயிற்று. தீண்டாமை இல்லாத பொற்காலமாய திருவாசகம் ஒதுவோம்!

நாளும் திருவாசகம் ஒதுவோர் நாள்தோறும் திருவாசகத்தை நினைந்து நினைந்து ஞானமழையில் நனைந்து நனைந்து உணர்வில் சிறந்து அழுவோம். இறைவனை நினைந்து அழுவதற்குரிய ஞானப்பாடல்கள் திருவாசகம். அழுகின்ற கண்களில்தான் கடவுள்தன்மை, பூரணமாகப் பரிணமிக்கிறது. ஏன்?,

தமிழ் பத்திமைக்குரிய மொழி பிரிவு துன்பத்தைத் தருவது. குருந்த மரத்தடியில் திருப்பெருந்துறை ஈசனைக் கண்டு அனுபவித்த மாணிக்கவாசகருக்கு ஈசனின் பிரிவுத் துன்பத்தில் பிறந்த தமிழ் திருவாசகம். ஆதலால், நெஞ்சை உருக்குகிறது. ஆதலாலும் உருக்கும் தன்மைமிக்குடையதாக விளங்குகிறது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஈசனைக் கண்டார். "கண்ணால் யானும் கண்டேன் காண்க" என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்கிறார். அது மட்டுமல்ல. கடவுட் காட்சியின் இயல்பையும் விளக்கிக் கூறும் பாடல்களைப் படித்துணரில் மாணிக்கவாசகர் கடவுட் காட்சியில் திளைத்தவர் என்பது உறுதி.

        வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்(று)அ
            னேகன் ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்(று)அங்(கு)
        எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம்
            எய்துமா(று) அறியாத எந்தாய் உன்றன்
        வண்ணந்தா னது காட்டி வடிவு காட்டி
            மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத்
        திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
            எம்பெருமான் என் சொல்லிச் சிந்திக் கேனே

(திருச்சதகம்- 25)

என்னும் திரு வாசகத்தால் இதனை அறியலாம்.

மனிதக்காட்சிக்கும், கடவுட்காட்சிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மனிதக்காட்சியில் நெடுந் தொலைவில் உருவமும், அண்மைத் துாரத்தில் உறுப்பும், மிகமிக அண்மையில் வண்ணமும் (நிறமும்) காட்சிக்குப் புலனாகும். கடவுட்காட்சியில் தொலைவில் வண்ணமும் அண்மையில் உருவமும் மிகமிக அண்மையில் உறுப்பும் திருவடியும் காட்சிக்குப் புலனாகும். இந்த மரபு இந்த பாடலில் விளக்கப்பெற்றுள்ளது. அதனால் இறைவனை அண்ணித்து- ஒன்றித்து அனுபவித்த அடியார்கள், திருவடிகளையே போற்றுகிறார்கள்.

இங்கனம் குருந்த மரத்தடியில் காட்சி தந்த இறைவன் "இரு" என்று சொல்லி மறைந்து போன நிலையில் அந்தப் பிரிவு மாணிக்கவாசகரை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. தினையின் பாகமும் பிரிவது கூடாது என்பது மாணிக்க வாசகரின் விருப்பம். பிரிவுத்துன்பம் தாளாமல் ம்ாணிக்க வாசகர் அழுது அழுது பாடிய பாடல்கள் திருவாசகம். திருவாசகப் பாடல்களுக்கு உருக்கம் அமைந்ததற்கு இதுவே முதற்காரணம்.

அடுத்து, மாணிக்கவாசகர் இறைவனை முன்னிலைப் படுத்தியே பாடுவார். மாணிக்கவாசகர் தனது ஏழ்மையை- எளிமையை நினைந்து நினைந்து இறைவு னிடத்தில் உருகி வேண்டுதல் காரணமாகவும் உருக்க நிலை அமைந்துள்ளது. -

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அறிவால் சிவனேயாவார் என்று போற்றப்படுபவர். திருவாசகம் முழுதும் ஞானம். திருவாசக பூசை, சிவபூசைக்கு நிகரானது என்று ஒரு வழக்குண்டு.

திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் "நான்" என்பதைக் கெட்டுப் போகச் செய்தவர். "கூடும் அன்பினில் கும்பிடல்” என்பது போல இறைவன் திருவடியைப் போற்றி வணங்குவதைத் தவிர வேறு எதுவும் வேண்டாதவர்.

          வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்
             வேண்டேன் மண்ணும் விண்ணும்
          வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம்
             வேண்டார்கமை நாளும்
          தீண்டேன் சென்று சேர்ந்தேன் மன்னு
             திருப்பெருந்துறை இறைதாள்
          பூண்டேன்புறம் போகேன் இனிப்
             புறம் போகவொட் டேனே !

(உயிருண்ணிப்பத்து-7)

என்று பாடியுள்ளார். மனிதன் விரும்புவது புகழ்! ஆசைப்படுவது புகழ். ஆனால் புகழ் விருப்பம் கூட மனிதனைக் கெடுத்து வீழ்த்தி விடும் என்பதே அறநெறி முடிவு. அதனால் வேண்டேன் புகழ்' என்றார். மேலும் நின்னடியான் என்று ஏசப் பட்டேன்' என்றும் 'சகம் பேய் என்று சிரித்திட’’ என்றும் நாடவர் பழித்துரை பூணதுவாகக்கொண்டும்' திருவாசகத்தில் என்றும் அருளியுள்ள பிற பகுதிகள் நினைவிற்குரியன. புகழுக்கு அடுத்து மனிதனை ஆட்டிப் படைத்துத் துன்புறுத்துவது செல்வம். ஆதலால் வேண்டேன் செல்வம்' என்று அருளிச் செய்துள்ளார். மண்ணக இன்பமும் சரி, விண்ணக இன்பமும் சரி வேண்டாம். இது மாணிக்கவாசகரின் துரய பற்றற்ற வாழ்க்கைக்கு அளவுகோல். திருப்பெருந்துறை இறைவ னுடைய திருவடித்தாமரைகளை சென்னிக்கு அணியாகச் சூட்டிக்கொண்டார். இனி திருப்பெருந்துறை இறைவனுக்கு ஆட்பட்டிருப்பதே கடன்! "புறம் போகனே இனிப்புறம் போகல் ஒட்டேனே!" என்ற உறுதிப்பாடுடைய வரி பலகாலும் படிக்கத்தக்க வரி!

துறவின் முதிர்ச்சியும் அன்பு நிறைந்த ஆர்வமும் பண்சுமந்த தமிழும் ஒன்று சேர்ந்து உருக்கத்தைத் தந்தன. இதனை 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி உணர்த்துகிறது. திருவாசகத்திற்குரிய பிறிதொரு சிறப்பு எண்ணற்ற உவமைகள், உருவகங்கள் உடையதும் ஆகும். கருத்துக் களை விளக்குவதில் உவ்மைக்கு ஈடு ஏது? மாணிக்கவாசகர் தம் அனுபவத்தை எண்ணி தம் உடல் முழுதும் கண்களாக அமைந்து அழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

          தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னை
              சங்கரா ஆர்கொலோ சதுரர்
          அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
              யாது நீ பெற்றதொன்று என்பால்

          சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
              திருப்பெருந்துறையுறை சிவனே
          எந்தையே, ஈசா உடலிடம் கொண்டாய்
              யானிதற் கிலன் ஓர் கைம் மாறே!

என்று பாடுவார். யார் சதுரர்? தமிழால் ஞானம் அடைய முடியும். ஞாலத்தில் உயர்ந்த சிவானுபவத்தைத் தமிழில் பேச முடியும் பாட முடியும்; எழுத முடியும் என்று செய்து காட்டிய சதுரர் சிவபெருமானிடம் அந்தம்ொன்றில்லா ஆனந்தம் பெற்ற மாணிக்கவாசகர் சதுரர் என்றெல்லாம் எண்ண இடமுண்டு. ஆயினும் கோடானு கோடி ஆன்மாக்களை ஆட்கொண்டருள மீண்டும் மீண்டும் மண், சுமக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதில் ஆன்மாக்களை ஆட்கொள்ளத் திருவாசகத்தினைப் பெற்ற சிவபெருமானே சதுரர்!

நாமும் நாளும் திருவாசகம் ஒதி, சதுரப் பாட்டுடன் வாழ முயல்வோம்!