திருவாசகத்தேன்/அடியரில் கூட்டிய அதிசயம்!
ஆ, அதிசயம்! நினைப்பிற்கு எட்டாததாக நடப்பது அதிசயம்! எதிர்பார்ப்பு இல்லாமல் நடப்பது அதிசயம்! அதிசயம் வியப்பில் ஆழ்த்துவது! அனுபவிப்பவனை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அதிசயம்! புரவலன்போலத் தோற்றமுடையோன் இரவலன் போல நடந்து கொள்ளுதல் இயல்பாக நிக்ழாத ஒன்று. ஆதலால், அதிசயம்! ஏன் பணமும் பதவியும் மனிதனைப் போதைக்கு இரையாக்கித் தலைகீழாகவே நடக்கச் செய்யும் மாறு பட்ட ஒன்று அதிசயம்! இன்றோ மனிதன் மனிதனாக நடந்துகொள்ளுதலே அதிசயக் காட்சியாகி விடுகிறது!
மாணிக்கவாசகர் வரலாற்றில் அதிசயங்கள் பல நடந்தன! நரிகள் பரிகளானது அதிசயம்தானே! தேவர்கோ அறியாத தேவன் கொற்றாளாய் வந்து மண் சுமந்தது அதிசயம்தானே! யாவரும் விரும்பும் அமைச்சுப் பதவியை மாணிக்கவாசகர் நச்சாது அருளாளரானது அதிசயம் தானே! வான்பழித்து இம் மண் புகுந்து இறைவனால் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப் பெற்றதும் அதிசயம் தானே! இனிய தமிழ், இன்பத் தமிழ் தேனூறும் திருவாசகமாக என்புருக்கும் பாடல்களாக அமைந்தமையும் அதிசயம் தானே! இறைவனின் கருணையை இனந்தெரியாத உணர்வில் மாணிக்கவாசகர் அனுபவித்ததின் விளைவு அதிசயப்பத்து. 'நீதி’ என்றால் என்ன?, மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து ஒழுகுதல் நீதி விருப்பு- வெறுப்புக்களைக் கடந்து யார் மாட்டும் ஒத்த நிலையில் பழகுதல் நீதி! அவரவர்க்குரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! கொள்வனவும் கொடுப்பனவும் மிகைபடாமலும் குறைவு படாமலும் நிகழ்வது நீதி அகனமர்ந்த ஒழுகுமுறை நீதி! இன்பம்- துன்பம் இவற்றினால் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்றல்- ஒழுகுதல் நீதி நீதி- குணம் நீதிக் குணம் மேவிச் செயலில் பொதுமை பொதுளல் நீதி சார்ந்த வாழ்க்கை. நீதியே உலகத்தின் நியதிகளை, முறைமைகளைத் தோற்றுவிக்கின்றது. இயற்கையாய் அமைந்த நீதியிலிருந்தே அரச நீதிகள் பிறந்தன. ஆனால் இயற்கையாய் அமைந்துள்ள நீதியை அரச நீதிகள் பிறழ்ந்த வரலாறுகள் உண்டு. இயற்கையாய் அமைந்த நீதி யாண்டும் மாறியதில்லை!
மனித குலம் தொடக்கத்தில் நீதியைச் சார்ந்து வாழ்ந் திருக்க வேண்டும். அப்போது கூட்டு வாழ்க்கையும் கூட்டு உழைப்பும் இருந்தன; ஆக்கிரமிப்புக்கள் இல்லை; சுரண்டல் இல்லை. ஆதலால் ஆதிகாலத்தில் மனித வாழ்க்கையில் நீதி இருந்தது. மனிதனின் உடல் வலிமை வளர, வளர, புத்திக் கூர்மை வள்ர வளர நீதி கெட்டது. பாபக் கழுவாய், முறைகள் தோன்றியதன் விளைவாக பாபங்கள் பெருகிவளர்ந்தன. கடவுளுடன் பேரம் பேசலாம் என்ற நிலை, நீதியை தாழ்த்திவிட்டது. இன்று மனிதன் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தனது வாழ்க்கைக்கு இசைந்தது எதுவோ அதுவே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை நியதிகளுக்கும் நீதிகளுக்கும் சட்டங்கள் மாறுபடுகின்றன. ஏன்? மனிதனின் பலவீனத்திலிருந்தே சட்டங்கள் தோன்றின. அந்தச் சட்டங்களையும் மனிதன் இன்றுமதிக்கத் தவறுகின்றான்.
இன்று எது நீதி அவரவரும் நினைத்துக் கொண்டிருப்பதே 'நீதி' என்று கருதுகின்றனர். இன்று எங்கு நோக்கினாலும் நீதிக்கும் இயற்கை நியதிக்கும் முரண் பட்டவையே நீதியாகக் கருதப்படுகின்றன. பண்டு உலகத்தை இயக்கியது "வல்லாண்மை"யேயாம்!. வல்லாண்மையுடையது வாழும். இது நியதி, நீதி: ஆனால், இயற்கையாய் அமைந்த சமயஞ்சார்ந்த நீதி, வல்லார்க்கு மட்டுமல்ல வாழ்வு, வல்லாண்மை இல்லா தாருக்கும் வாழ்வுண்டு, உரிமையுண்டு என்பதே. நீதிக்கு வேற்றுமை இல்லை; எல்லை இல்லை: காய்தல் இல்லைஉவத்தல் இல்லை! நீதி சார்ந்த வாழ்க்கைமுறை இன்பந்: தரும். இந்த வையகத்திற்கு இன்றையத் தேவை நீதி சார்ந்த வாழ்க்கை முறையே!
சிவநெறி- சைவ நெறி தொன்மையானது. ஆதலால், 'சிவநெறி போற்றும் சிவன், நீதியாய் நிற்பவன்! இன்று பணம் பத்தும் செய்கிறது! இன்று பணத்தினால் விலைக்கு வாங்கமுடியாதது ஒன்றில்லை! பணமும் அறிவுக் கூர்மையும் இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றன. பணமும் அரம்போல் கூர்மையான அறிவும் உடையவர்கள் இன்று நீதியையே விலை பேசுகின்றனர். ஆனால், சிவநெறி இயல்பு இதற்கு முரணானது.
சிவபெருமான் நீதியே வடிவமானவன்! சிவ பெருமானை பணபலமுடைய திருமால் தேடியும் காண முடியவில்லை; நான்கு வேதங்களின் தலைவனாக அறிவின் சின்னமாக விளங்கும் நான்முகனாலும் தேடிக் காண இயலவில்லை! ஆனால், திருவாரூரில் பரவையார் வீட்டு வாயிற்படிகளில் சிவபெருமான் திருவடிகள் தோய்ந்தன. ஆதலால் கடவுள் ஆற்றல்மிக்க அன்புவலையில் படுவோன்; பக்தி வலையில் படுவோன்! இதனைத் திருவாசகம்,
"பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே"
என்பதால் அறியலாம். சிவபெருமானின் திருவுருவம் நீதி, சிவனவன் திருநாமம் நீதி என்று உறுதியாகிறது. சிவனைச் சார்ந்த சமயநெறி சிவநெறி. சைவம்- சைவ சமயம் நீதியேயாம்! சைவ நெறியில் கடவுளும் கூடத் தாம் விரும்பியபடி செய்ய இயலாது. ஆன்மாக்களின் தகுதிப்பாடே சிவனின் அருளிப்பாட்டுக்குக் காரணம். ஆன்மாக்களைப் பக்குவப் படுத்தும் முயற்சியை, கருணையை இறைவன் காட்டலாம். ஆயினும் தகுதியுடையதே வளரும்; வாழும். சிவன் அருளைப் பெறும்! திருவாரூர் இறைவனைத் தோழமை யாக நம்பியாரூரர் பெற்றது உண்மை! ஆயினும் வாய்மை பிறழ்ந்த்பொழுது, சொல் பிறழ்ந்த நிலையில் கண்ணொளியைப் பறித்த வரலாற்றை ஓர்க! உன்னுக!
காரைக்காலம்மையார் தவம் செய்த தவம்! இறைவனாலேயே 'அம்மை' என்று அழைக்கப்பெற்ற புண்ணியவதி ஆயினும் அம்மையின் விருப்பம் பிறப் பறுக்க வேண்டும் என்பது. பிறவி நீக்கத்திற்குரிய தகுதி இல்லையெனில் என்ன செய்வது? இறைவன்தான் என்ன செய்ய இயலும்? ஆதலால்,
"பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்”
என்று அம்மையார் அருளிய குறிப்பினை உணர்தல் அவசியம்! சேக்கிழார்,
"செய்வானும் செய்வினையும்
அதன் பயனும் கொடுப்பானும்
உய்வகையால் கான்காகும்
விதித்த பொருள்"
(சாக்கியர். புரா. 5)
மாணிக்கவாசகர் அமைச்சுப் பதவியில் இருந்தார். அரசாணையை நிறைவேற்றுதலே அமைச்சருக்குரிய பொறுப்பு: கடமை! இதில் நீதி சார்ந்தவைகளும் இருக்கலாம். நீதி சாராதவைகளும் இருந் திருக்கலாம். வரிப் பணத்தில் குதிரைகள் வாங்கப் போனது நீதிக்கு முரண்தான்்ே! பணியாளர்- அமைச்சர் என்ற பொறுப்பின் வழி மன்னன் ஆணையை நிறைவேற்ற வேண்டியது அமைச்சரின் பணி. மாணிக்கவாசகரின் பணி, இந்தப் பணியை விலக்கிக் கொண்ட து அரசியல் ரீதியில் நீதிய்ாகாது; அறநெறி அடிப்படையில் நீதியாகும். குதிரை வரும் என்று சொன்னதும் நீதிக்கு முரனேயாகும். ஏன்? பரிகள் நரிகளாகியதும் நீதிக்கு முரண்தானே! இந்த நிகழ்வினை மாணிக்கவாசகர் சித்தித்துப் பார்க்கிறார். அதனால்,
"நீதி யாவன யாவையும் கினைக்கிலேன்"
என்று கூறுகின்றார். மாந்தரில் சிலர் இயல்பாகவே நன்னெறி நிற்பர், நீதியைச் சார்ந்து ஒழுகும் சான்றோரின் உறவு கிடைத்தால் அவர் தம்முடன் உள்ள கூட்டத்தின் தாக்கமாக நன்னெறி நிற்கும்- நீதியைச் சார்ந்தொழுகும் பெற்றிமையும் கிடைக்கும். மாணிக்கவாசகர் இயல்பாக நீதியை நினைக்கவில்லையாம்! நீதியை நினைப்பவருடன் கூடாமல் அரசு அதிகாரத்தைச் சார்ந்தவருடன் கூட்டு ஏற்பட்டுவிட்டமையைக் குறிப்பிடுகின்றார். நீதி சார்ந்த வாழ்க்கை வாழாத வரையில் பிறவி நீங்காது. பிறந்து இறந்து உழலுதலும் தவிர்க்க முடியாதது என்பது திருவாசக உண்மை. நீதியைச் சார்ந்து நீதிமானாக வாழ்ந்தாலே பிறவி நீங்கும். நீதியொடு தொடர்பிலாத் இரங்கத்தக்க வாழ்க்கை வாழும்பொழுது கடவுளின் கருணை கிடைக்காது. மன்னித்து, மதிப்பளிக்கத் தாயின் கருணை தேவை! எனவே, "பாதி மாதொடுங்கூடிய பரம்பிரன்" ஆட்கொள்கின்றான்.
இறைவன் நிரந்தரம்; நீதி நிரந்தரம். 'நிரந்தரமாய் நின்ற ஆதி' என்ற தொடர் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஆம்! நாளும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பண்டு இருந்த பல நாடுகள் இப்போது இல்லை. ஆறுகள் இல்லை. மலை, கடலாகி இருக்கிறது. கடல், மலையாகி இருக்கிறது. சில உயிரினங்கள் அழிந்து போயின. வல்லாண்மை வாழும் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையிலும் இந்த உலகம் நிலைபெற்று இருக்கிறது என்றால் எப்படி? எதனால்?
சிறுமைகளைக் கடந்த பொருள் பொதிந்த புகழுக் குரியவர்கள் செய்த தியாகங்களின் பயனாக உலக வரலாறு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இப் புவிக் கோளத்தில் மனித குலம் அழிந்துவிடவில்லை. ஏன்? எதனால்? நீதி உணர்வு நிலை பெற்றிருப்பது ஒரு காரணம். அது ம ட் டு ம ல் ல. நீதி என்றும் நிலையானது.
"மனிதனை நேசி!" "மனிதத்தைப் போற்று!" "பிறர் பங்கைத் திருடாதே!" "பிறர்க்கென முயலும் நோன்பினைக் கொள்க!" "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக!" "எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுக!" இன்னோரன்ன நீதி சார்ந்த வாழ்க்கை நெறிகள் என்றும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியன. இவையே நீதி, எந்த யுகத்திற்கும் இந்த நீதி தேவைப்படும். ஆதலால், நீதி நிலையானது. நீதி, கடவுளின் மறு உருவம். நீதியே கடவுள்; கடவுளே நீதி. கடவுள் பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. கடவுள் என்றும் பேராற்றல் உடையவன். வரம்பில் இன்பம் உடையவன். என்றும் அவன் எண்குணத்தான்; இறைவன் தன்வயத்தனானவன். ஆதலால் இறைவனுக்கு மாற்றம் இல்லை. இறைவன் நிரந்தரமாய் நின்றருள்கின்றான்.
இறைவன் காலங் கடந்தவன்; அநாதி. உயிர்கள் கால தத்துவத்திற்குட்பட்டவை. ஆதலால் ஆதி ஆதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஆன்மாக்களுக்கு ஆதியாகவும் நின்றருள் செய்கின்றான் இறைவன்! ஆம், இறைவன் அநாதி ஆதி! அந்தம்! ஆனாலும் எந்த நிலை யிலும் இறைவன் பாதிக்கப்படுவதில்லை! பிறவி தோறும் ஆன்மாக்கள் பந்தங்களுக்கு ஆளாகின்றன; அதனால் பாதிக்கப்படவும் செய்கின்றன! ஆனால், இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் பந்தமற்றவன்; பாதிக்கப் படாதவன். கடையூழிக் காலத்தில் உலகம் இல்லை. ஆயினும் கடவுள்- இறைவன் உள்ளான்! இறைவன் நிரந்தரமாக இருப்பதால்தான் உயிர்க் குலத்திற்கு ஆதியாக விளங்க முடிகிறது. கடையூழிக் காலத்திலும் இறைவன் உலகை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்குப் புத்துயிர்ப்பை வழங்குகின்றான். இறைவன் நிரந்தரமாக இருந்தால்தான் இந்த உலக இயக்கத்தை, உயிர்க்குல இயக்கத்தை நிரந்தரமாக இயக்கமுடியும். இறைவன்கடவுள் அநாதி, காலதத்துவத்தைக் கடந்தவன். இறைவன்- கடவுள் உயிர்களை நோக்க. ஆதி உயிர் களுக்கு வாழ்வளிப்பவன்! இந்த உலகம் இடையீடின்றி இயங்க ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆதலால் இறைவன் நிரந்தரம்; ஆதி!
நிரந்தரமான ஆதியைச் சாரும் உயிரினங்கள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு இரையாகா, நிரந்தரமாக இறைவன் திருவடி நிழலில் இன்ப அன்பில் வற்றாத முற்றாத ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருக்கும். ஆம்! இறைவன் நிரந்தரம்! ஆதி! உயிர் நிரந்தரம்! ஏன்? ஆணவம் கூட, தன் கொட்டமடங்கிக் கிடக்கும். அதற்கும் கூட அழிவில்லை! அழிவில்லாத நிரந்தரமான கடவுள் சந்நிதியில் அழிவு ஏது? மாற்றங்களே நிகழும்! இறைவனயும் நீதியையும் சார்ந்து வாழும் உயிர்களும் நிலையாக இன்ப அன்பில் தங்கி இன்புறும்.
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங் கூடேன்
ஏதமே பிறந்திறங் துழல்வேன் தனை
என்னடி யான் என்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டோமே!
(அதிசயப்பத்து- 2)