திருவாசகத்தேன்/திருவாசகத் தேன்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

திருவாசகத் தேன்

செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு ஏற்பத் திறம் வேண்டும். பணிகளின் பாங்கிற்கேற்பத் திறமை இருந்தாலே தலைமை, நிலை நிற்கும். மாணிக்கவாசகர் சிவன் எம்பிரானைப் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றார். நீத்தல் விண்ணப்பத்தில் ஒரு பாடலில் தன் குறையை இரண்டு வரிகளிலும் இறைவன் புகழை நான்கு வரிகளிலும் பாடுகின்றார். ஏன்?

பிறவிக் கடலை நீந்த வேண்டுமே! நீந்திக் கரையேற வேண்டுமே! அதுவும் சாதாரணக் கடலா? பெருங்கடல்! அந்தக் கடலில் மலங்கள் ஐந்தின் சுழல்! அதில் சிக்கிக் கொண்டு மத்திடை அகப்பட்ட தயிர்போல் சுழலும் தன்னை இறைவன் கைவிடாமல் எடுத்தாள வேண்டுமே என்ற கவலையில் பாட்டுப் பிறக்கிறது.

சிவன் எம்பிரான், மேரு மலையையே வில்லாகக் கொண்டு போர் செய்தவன். அத்தகு பெரியோனுக்குத் தன்னை ஆளுதல் மிக மிக எளிமையான ஒன்று. அது மட்டுமா? இறைவன் கொன்றை மாலை அணிந்திருக்கின்றான். சிவபெருமான் அணிந்துள்ள கொன்றை மாலை அவனே உலகிற்கு முதல்வன்—— தலைவன் என்பதனை உணர்த்துகின்றது. தலைவனாக விளங்குபவன் தன்னைச் சார்ந்தாரை எடுத்தாளாமல் கைவிடுதல் அழகன்று என்று உணர்த்தும் பாங்கறிக. கொன்றை

மாலை ஓங்கார பிரணவ வடிவமாயுள்ளது. ஓங்காரம் வேதம் முதல் அனைத்துக் கலைகளுக்கும் முதலாகும். ஓங்காரத்தின் பொருள் சொல்லத் தெரியாமல் நான்முகன் வாங்கிய குட்டை, நினைவில் கொள்வது நல்லது. இந்த உலகத்தின் முதல் ஒலி 'ஓம்’! இந்த உலகத்தின் முதல் எழுத்து 'ஓம்'! இறைவனே ஓங்கார வடிவினன். சிவலிங்கத் திருமேனியில் பீடம் (ஆவுடை) விந்து, இலிங்கம் நாதம் என்று சாத்திரம் கூறும். நாம் ஏதாவது எழுதத் தொடங்கினால் பிள்ளையார் சுழி போடுகிறோம். அதுவும் ஓங்காரம்தான். விந்து பக்கத்தில் நாதவடிகை இட்டு எழுதுதல் பிள்ளையார் சுழி. அ+ உ+ ம்= ஓம் ஆயிற்று. இறைவா, சிவனே! ஆன்மாக்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவனே நீதானே! பிள்ளையார் சுழி போட்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்த இறைவன் அந்த பயணத்தை இனிதே முடித்து வைக்க வேண்டாமா? காத்தருள வேண்டாமா? 'ஒம்' என்றால் காப்பவன் என்பது பொருள் அல்லவா? என்றெல்லாம் வினாக்க்ள் எழுகின்றன, இறைவனுடைய கொன்றை மாலையைச் சிந்திக்கும் பொழுது!

இறைவன் தனக்குவமை இல்லாதவன். தமிழ் மறையும் 'தனக்குவமை இல்லாதான்' என்று கடவுளைப் போற்றுகிறது. அப்பரடிகள் "உவமன் இலி" என்றார். நபிகள் நாயகமும் 'கடவுளுக்கு உவமையாக—— ஈடாக எதையும் கூறக்கூடாது" என்றார். ஆம், கடவுளே தனக்குவமை யில்லாதவன். கடவுளுக்குத்தான் பிறப்பில்லை; இறப்பில்லை; வேண்டுதல் இல்லை; வேண்டாமை இல்லை; எல்லைகள் இல்லை. ஆதலால், கடவுள் தனக்குவமை இல்லாதவன். தனக்குவமை இல்லாதவனாக இருப்பதனால் என்னை எடுத்தாளுதல் எளிது. சிவன் எம்பிரான் தனக்குவமையில்லாதவனானாலும் மேருவை வில்லாகக் கொண்டவன். ஆயினும் எனக்கு எளியவன்; தண்ணளியிற் சிறந்தவன். தாமரைக் காடு அனைய திருமேனியுடையவன். இவ்வளவு சிறப்புக்களும் உடைய இறைவன் என்னை எடுத்தாளாமல் விடக்கூடாது!

நான் ஐந்து மலங்களின் சுழலில் கிடந்து உழல்கின்றேன்; கரையேறுவது தெரியாமல் தத்தளிக்கிறேன். ஆணவம் என்னைக் குருடாக்குகிறது; இருட்டறையில் கிடத்தியிருக்கிறது; மூலையில் முடக்கிப் போட்டு விட்டது.

ஆன்மாவுக்கு ஆணவம் ஒர் அழுக்கு. அதனாலேயே ஆணவமலம் என்ற வழக்கு வந்தது போலும்! ஆன்மாவுக்கு ஆணவத்துடன் உள்ள சம்பந்தம் அநாதியானது. ஆணவமலம் ஆன்மாவைச் சிற்றறிவு உடையதாக்குகிறது. சிறு தொழில் உடையதாகச் செய்கிறது. ஆன்மாவைச் சிறுமைத்தனம் பொருந்திய நிலையதாக்குவது ஆணவத்தின் இயல்பு. ஆன்மாக்கள் தோறும் ஆணவத்தின் பந்தம் கூடும்; குறையும். இயல்பாக ஆன்மாவுக்கு அறிவு உண்டு; தொழில் உண்டு. ஆயினும் ஆன்மா ஆணவத்துடன் கலந்திருந்ததாலே ஆணவம் அறிவை மறைத்து விட்டது. தொழிலையும் மறைத்து விட்டது. இருளிடைப்பட்ட கண், ஒன்றையும் காணாது. அதுபோல இருள் மலமாகிய ஆணவத்தின் வயப்பட்ட ஆன்மாவின் நிலையும் ஆனது; அதனால் ஆன்மா தன்னையும் காண இயலவில்லை; தன்னுடைய தலைவனையும் உணர இயலவில்லை. இது ஆணவத்தின் மூல நிலை. ஆன்மா திருவருட் துணையால் பிறவி எடுத்து வினைகள் இயற்றும் போது ஆன்மாவின் ஆணவம் கேடே செய்கிறது. ஆன்மா வினைகள் இயற்றும் போதும் இன்பதுன்பங்களை நுகரும்போதும் "நான் செய் கிறேன்", "நான் நுகர்கிறேன்" என்று எண்ணி செருக்கடையச் செய்கிறது. இதுவே, ஆணவத்தினைச் சார்ந்த ஆன்மாவின் நிலை. ஆணவம், ஆன்மாவை இயல்பாக எப்போதுமே பற்றியிருப்பதால் இதை "மூல நோய்" என்று திருமுறைகள் கூறும். ஆணவம் இருளினும் கொடியது. காரணம் இருள், தன்னைக் காட்டும்; காணக்கூடிய பொருளை மறைக்கும். ஆணவம், தன்னையும் காட்டாது; தன் செயலையும் காட்டாது. ஆணவச் சார்பினால் ஆன்மாவுக்கு அறிவு இல்லாமல் போகிறது; விருப்பமும் இல்லை; செயலும் இல்லை.

ஆன்மா, இனங்கண்டு கொள்ள இயலாமல் ஒடுங்கிக் கிடக்கும்; முடங்கிக் கிடக்கும். ஆன்மாவுக்கு இது கேவலம். அதனால் ஆணவத்துடன் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் நிலைமையை கேவலாவத்தை என்று மெய்கண்ட நூல்கள் கூறும்.

இந்த நிலையில் சிவன் எம்பிரான் கருணையால் ஆன்மா, மாயையிலிருந்து உடலையும் உலகையும் பெற்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆன்மாவை மீட்க சிவன்—— பரம்பொருள் மாயை, கன்மம் என்று இரண்டு கூடுதல் மலங்களைச் சேர்க்கிறான். அதாவது அழுக்குத் துணியை வெளுக்க உவர் மண்ணைச் சேர்ப்பதைப்போல்! மாயை கன்மங்கள் உபசார வழக்காலேயே மலம் என்று கூறப்படுகிறது. மாயை, கன்மம் என்ற மலங்களுடன் சேர்க்கை கிடைத்தவுடன் ஆன்மாவுக்கு விருப்பம், ஞானம், செயல் ஆகிய மூன்றும் அமையும். இந்த நிலைகள் மாறிமாறி வந்து பொருந்தும். இந்த நிலையில் ஆன்மா, அறிவும் தெளிவும் இல்லாமல் நிலையில்லாதவற்றை நிலையாயின போலவும் நிலையானவற்றை நிலையில்லாதன போலவும் எண்ணும். நல்லன தீயனவாகும். தீயன நல்லனவாகும். இது மயக்க நிலை. ஒரு மலமாகிய ஆணவத்துடன் கூட்டுநிலை இருள்மல நிலை. மாயை, கன்யம், ஆணவம் ஆகிய மும்மலத்துடன் கூட்டு நிலை மருள் நிலை. இந்த நிலைமைகளிலிருந்து ஆன்மா பூரண அறிவுப் பொலிவுடன் விடுதலை அடைய வேண்டும். அதாவது இறவாத இன்ப அன்பு நிலையை அடைதல் வேண்டும். இந்த நிலை அருள்நிலை.

கருமம்—— வினைத் தொடர்பு ஆன்மாக்களுக்குக் கிடைத்த பிறகே ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. அவரவர் செயலுக்கு ஏற்ற பயனைத் துய்க்குமாறு செய்தல் நியதி. துய்த்தலினால் ஆன்மாவின் மலங்கள் கரையும்; மலங்கள் செயலிழக்கும். ஆனால் துய்க்கும் பொழுதும் 'நான்', 'எனது' என்ற உணர்வுடன் துய்த்தால் பற்றின் காரணமாக, மலங்களின் பிடி இருக்கும். இதனால் செத்துப் பிறத்தல் தொடரும். செய்யும் வினைகள் மட்டுமே பிறப்பிற்கு வித்தாகா.செய்யும் செயல்களின் நோக்கமே காரணமாக அமையும். இங்ஙனம் மும்மலம் என்று பேசுவது பெரு வழக்கு. மாணிக்கவாசகர் "ஐம்மலங்களிற் கிடந்துழல்வேன்" என்கிறார்.

மாயை, சுத்த மாயை என்றும், அசுத்த மாயை என்றும் இருவகைப்படும். அசுத்த மாயையின் காரியம் மாமேயம் எனப்படும். மாமேயம், கால தத்துவம் முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களும் உலகங்களும் உலகத்துப் பொருள்களும் இவற்றால் வரும் போகமும் ஆகும். திரோதானம் ஐந்தாவது மலம். சிவசக்தியே திரோதான சக்தியாகத் தொழிற்படுகிறது. திரோதான சக்தியே (மறைக்கும் ஆற்றல்) ஆன்மாவுக்கு மலங்களின் செயற்பாட்டை பக்குவப்படுத்தி உய்திச் சாதனைகள் (மலப்ரிபாகம்) ஏற்புடத் துணை செய்கிறது. இதுவும் மலம் என்று உபசாரமாகக் கூறப்பெறும். இவ்வைந்து மலங்களும் உயிர்களை- ஆன்மாக்களைப் பொருந்தி இயக்குகின்றன. இந்த நிலையில் ஆசைகள், விருப்பு வெறுப்புக்கள், இன்பங்கள் துன்பங்கள் ஆகியவற்றில் உழலும் நிலையை "ஐந்து மலங்களில் கிடந்து, உழல்வேன்" என்றார்.

மாணிக்கவாசகரின் அனுபவம் மலங்களின் ஆற்றல் அடங்கிய நிலை; ஒடுங்கிய நிலை; உய்யும் நெறியில் செல்லும் நிலை. ஆன்மாவில் வந்து பொருந்தும் குலம்களையப் பெற்றுவிட்டது; குற்றங்களும் களையப்பட்டு விட்டன. இவையிரண்டும் அற்ற நிலையே நன்னிலை தான்! ஆயினும், நிறைநலம் சார்ந்த பக்குவம் அல்ல. அதனால் மாணிக்கவாசகர் தன்னைக் கைவிடாது அருள்பாலிக்கும்படி வேண்டுகின்றார். என் மலங்களின் ஆற்றல் வலியது. ஒரு சிறு இடுக்கில் கூட நுழைந்துவிடும். பழக்கவாசனை பொல்லாதது. அதனாலேயே பழக்கம் தவிரப் பழகுமின் என்றார்கள்.

இறைவனே! சிவனே! அனைத்துயிர்களுக்கும் மங்கலம் செய்பவனே! ஆணவத்திலிருந்து என்னை மீட்டு எடுப்பாயாக! என்னை ஆணவம் இயல்பாகப் பற்றியது! அதாதியிலேயே பற்றியது! நானும் ஆணவத்துடன் இரண்டறக் கிடந்துழல்கின்றேன்! இறைவா நீ, என்னை ஆணவத்திலிருந்து மீட்க மாயையைக் கொண்டு இயற்றிய உடல் கொடுத்தனை! மாயையை விளக்காகக் கொண்டு அந்த ஒளியில் கரையேறுமாறு பணித்தனை! ஆனால், நானோ மாயையில் கட்டுண்டு அதுவே சொர்க்கம் என்று கிடந்துழல்கின்றேன். சாதனத்தைச் சாத்தியம் என்று எண்ணி மயங்கிக் கிடக்கின்றேன். எந்த ஒரு தீமையும் நன்மையின் வழியிலேயே மறையும்; மறைய வேண்டும். இது நியதி. அதனால் நீ எனக்கு நல்வினைகள் செய்தலுக்குரிய அறியும் கருவிகள்—— செய் கருவிகளைத் தந்தருளினை. ஆனால் நானோ தீவினையே பெருக்கி வாழ்கின்றேன்! இறைவா உன்னுடைய திருவருட் சக்தியே என் பொருட்டுத் திரோதான சக்தியாக உருக்கொண்டு மறத்தல் செய்யினும் நான் நினைவுப் புலனை மேலும் ஆழமாக இயக்கி மறக்க வேண்டியவற்றை மறக்காமல் வன்கண்மை கொண்டு வல்வினை செய்து வாழ்கின்றேன். ஆக, நான் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்,

தி-7 திரோதானம் ஆகிய ஐந்து மலங்களின் சார்பில் சிக்குண்டு உழல்கின்றேன். மத்திடை அகப்பட்ட தயிர்போல உழல்கின்றேன்! தயிர்—— ஆன்மா! மத்து—— ஐம்புலன்கள்! இறைவா, கன்மத்தின் வழி வினைவழி வந்த மிகப் பெரிய பொல்லாங்காகிய குலத்திலிருந்து என்னை மீட்டாய்! குலம், பிறப்பு—— இஃது ஒரு தீச்சுற்று! இதிலிருந்து 'என்னை மீட்ட பெருமானே என்னைக் குற்றங்களிலிருந்தும் மீட்டாய்! என்று பேசுகிறார். குற்றம், ஆன்மாவின் புலன்களால் செய்யப்படுவது. அகக் கருவிகளைச் சார்ந்தது குற்றம், குறைகள் பொறிகள் வயப்பட்டவை. இறைவன் மாணிக்கவாசகரைக் குற்றங்களின்றும் மீட்டெடுத்து விட்டான் குற்றங்கள் இல்லையேல் குறைகள் இரா! குறைகள் இல்லா நிலையில் குற்றங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் உறுதியாகக் கூற முடியாது. அதனால்தான் மாணிக்கவாசகர்,

"களைந்தாய் என்னைக் குற்றம்"

என்று பாடுகின்றார்.

சிவனே! எம்பிரானே! என்னைக் குலத்திலிருந்து விடுபடச் செய்தனை! என் குற்றங்களைக் களைந்தாய்! இந்த நிலையில் என்னை முற்றாக எடுத்தாளுவாய்! மேருவை வில்லாக வளைத்த உனக்கு இது கடுமையான பணியல்லவே! உலகத்திற்குத் தலைவனாக விளங்கும் நீ, என்னை—— அடைக்கலம் புகுந்த என்னைக் கைவிடலாமா? தனக்குவமை இல்லாத தலைவனே! ஐந்து மலங்கிடந்து உழலும் என்னை எடுத்தாண்டு கொள்க! என்று நெக்குருகப் பாடுகின்றார்.

::குலங் களைந் தாய்; களைந் தாய் என்னைக்
குற்றம், கொற் றச் சிலையாம்
விலங்கல் எந் தாய் விட் டிடுதிகண்
டாய்! பொன்னின் மின்னு கொன்றை

அலங்கல் அந் தாமரை மேனியப்
பா! ஒப்பி லாதவனே!
மலங்கள் இந் தாற் சுழல் வன்தயி
ரில்பொரு மத்துறவே!

(நீத்தல் விண்ணப்பம்-29)