திருவாசகத்தேன்/தொழும்பாய்ப் பணி செய்வோம்!

விக்கிமூலம் இலிருந்து



தொழும்பாய்ப் பணி செய்வோம்!

றைவன் காலங்கடந்தவன்; கால தத்துவங்களைக் கடந்தவன்; காலாதீதன், காலகாலன். அங்ஙணம் இருக்க இறைவனுக்குப் பழைமை ஏது? புதுமை ஏது? ஆம்! உண்மைதான்! ஆயினும் இறைவன், ஆன்மாக்களை ஆட்கொள்ள வினை முதல் காரணப் பொருளாக, அறிமுகம் ஆகும் காலந்தொட்டு இறைவனுக்குக் காலக் கணக்கிடுதல் தவறன்று. கடவுளைப் பழையோன் என்று அழைத்தல் பழைய மரபு. பழைமை—— பழைமையினும் கால எல்லைக் கடந்த பழைமை என்பதை 'முன்னைப் பழம் பொருள்' என்றார் மாணிக்கவாசகர். உலகியலில் காலப் பேரெல்லை ஊழி! பல்லூழிக் காலங் கண்டவனும் ஊழி முதல்வனும் ஊழிப் பெருங்கூத்து ஆடுபவனும் இறைவன்—— கடவுள்! 'இடுகாட்டு எரி ஆடலாய் அமர்ந்தவன்’ என்ற வழக்கும் உண்டு. இடுகாடு என்பது கால தத்துவத்திற்குட்பட்ட மனிதரை எரிக்கும் சுடுகாடு அல்ல; இறைவன் ஆடலமர்ந்தருளும் இடுகாடு ஊழிப் பெருங்காலம்! ஊழியொருவனின் கூத்து! கடையூழிக் காலம் என்றும் கூறுவர்.

கடையூழிக் காலம் என்று கூறினும் மாயா காரய உலகினுக்கும் தேவர்களுக்குமே கடையூழி இறைவன் கடையூழியைக் கடந்தவன். கடையூழியைச் சருவ சங்கார காலம் என்று புராணங்கள் கூறும். கடையூழியில்

எல்லாம் அழிகின்றன. எல்லாம் கடந்த நிலையில் இறைவன் ஆடுதலை 'ஈமத்தாடி' என்றும் கூறுவர். ஈமம், இடுகாடு என்பது இடம் பற்றிய குறிப்பு அல்ல. காலம் பற்றிய சிந்தனை. அந்தக் கடையூழிக் காலத்து இறைவின் இறைவியுடன் ஆடும்பொழுது எழும் தூசியே திருநீறு. திருஞானசம்பந்தர் "சுடலைப் பொடி பூசி" என்றார். இறைவன் கடையூழிக் காலத்தில் ஆடுவது நுண்மை நிலையில் ஐந்தொழில் நிகழ்த்துவதற்காகவேயாம்! கடையூழி ஒடுக்கத்தில் ஆன்மாக்கள் இளைப்பாறிய நிலையில் மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுகின்றன; புதுப் பிறப்பு எடுக்கின்றன. ஆதலால் கடவுள் காலம் கடந்தவன்! ஏன்? ஞாலமும் விசும்பும் இவை வந்து போகும் காலமாகவே இருப்பவன்!

காலம் கடந்தது எல்லாம் பழைமை! காலங்கடந்து நின்றால் மட்டும் போதாது. காலத்தை வென்று விளங்க வேண்டும். ஆம்! காலத்தினால் ஆய நியதிகளைக் கடத்தல் வேண்டும்; பிறப்பை இறப்பைக் கடத்தல் வேண்டும். "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று இறைவனைச் சிலம்பு போற்றும்! "முன்னே முனைந்தான்" என்று தேவாரம் பரவும். "நீலமணி மிடற்றொருவன்" என்று புறநானூறு போற்றும்! "விண்ணோர் அமுதுண்டு சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்பவன்" என்று இளங்கோவடிகள் நெகிழ்ந்து போற்றுவார். பெருமான் அணிந்துள்ள எலும்பு மாலையில் உள்ள மண்டை ஓடுகள் கடையூழிக் கணக்கைக் காட்டுவன. அழிந்தவற்றின் கணக்கும் அதுவே! ஆதலால் கடவுள்—— சிவபெருமான் பழம்பொருள். முன்னைப் பழைமைக்கும் பழைய பொருள். 'முன்னை' என்ற சொல் கால எல்லையைக் கடந்தது என்பதைக் குறிப்பது.

அது சரி! கடவுள்—— சிவபெருமான் பழம்பொருள்! பழையோன்! ஆன்மாக்களோ புதுப்புதுப் பிறவி எடுப்பன! அதனால், ஆன்மாக்களுக்கு—— உயிர்களுக்குப்

பழைமை பிடிக்குமா? ஆன்மாக்கள்——உயிர்கள் புதுமையை விரும்புவன. அது மட்டுமல்ல. ஆன்மாக்கள் புதுமையை விரும்பினாலே உலகம் இயங்கும்; வளரும்; வாழும். ஆதலால் ஆன்மாக்களை—— உயிர்களை ஆட்கொள்ளும் விளையாட்டினைக் கருதி இறைவன் புதுமையாகவும் விளங்குகிறான். காலத்தினால் விளையும் மூப்பு, முதுமை, கிழட்டுத்தனம் இல்லாமல் என்றும் இளையோனாக கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாக விளங்கி அருள்கின்றான்

காலம் மிகமிகக் கொடுமையானது; கண்டிப்பானது. காலத்தொடு பட்டவையெல்லாம் மூப்படையும்; கிழட்டுத் தன்மையடையும்; பயனற்றுப் போகும். காலப்போக்கில் 'அழியும்' காலத்தத்துவம் நிகழ்காலம் எதிர்காலம் என்பதைவிட விரைந்து இறந்த காலமாதல்தான் இயல்பு. திருக்குறள்,

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"

என்று கூறும், ஆனால், இறைவன்—— சிவபெருமான் காலாதிதனாய் இருப்பதால் அவன் புதுமை தாங்கியவனாக புதுமைப் புனைவுடன் விளங்க முடிகிறது. ஆன்மாக்களின்—— உயிர்களின் விருப்பம் புதுமை வேட்டல். ஆன்மாக்கள்—— உயிர்கள் விரும்பும் புதுமை, புத்தொளி கிடைக்காது போனாலும் அவை எய்த்துக் களைத்துப் போகும். ஆதலால் ஆன்மாக்களின்—— உயிர்களின் வளர்ச்சி கருதி, நலம் கருதி, இறைவன்—— சிவன் நாழிகைதோறும் புதுமைப் புனைவாளனாக விளங்கு கிறான். ஊழிதோறும் இறைவனுடைய திருமேனிகள் மாறுகின்றன; பெயர்கள் மாறுகின்றன. ஏன்? அவன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் கூட மாறுபடுகின்றன! எனவே, இறைவன் பழைமைக்குப் பழைமையானவன்! ஆம்! அது உண்மை! ஆயினும் பின்னைப் புதுமைக்கும் பற்றுக்கோடாக விளங்கி அருளுகின்றான்! புதிய புதிய கணக்கிலாத கோலங்காட்டிக் திருவிளையாடல் நிகழ்த்துகின்றான்; ஆட்கொண்டருள் செய்கின்றான். இன்றையப் புதுமை மட்டுமல்ல. இனி எதிர் வருங்காலத்தும் புதுமையாகவும் இறைவன்—— சிவன் விளங்குவான். இது உண்மை எது நாளும் புதுமை நலம் பெறுகிறதோ அது அழிவற்றது; ஆக்கம் தருவது. இறைவன்—— சிவன் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்புதுமையாகவே விளங்குகின்றான்.

கடவுள் நம்பிக்கை மனித குலத்தில் கால்கொண்டு கிடக்கிறது. ஆனால் கடவுள் இல்க்கணங்களில் எண்ணற்ற வேறுபாடுகள்! நாம்—— ஆன்மாக்கள் கடவுளைத் தேடுவது ஏன்? வழிபடுவது ஏன்? காணாதனவற்றைக் காணவேண்டும். கேளாதனவற்றைக் கேட்க வேண்டும். என்றும் மாறாத்துணையாக அடைய வேண்டும். நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாத தலைவனாக இருத்தல் வேண்டும். பிழையெலாம் தவிரப் பணித்து ஆட்கொள்ள வேண்டும். என்றும் இன்பம் பெருகும் இயல்பினை வழங்கியருளுதல் வேண்டும். இத்தகு நலன்களைப் பெறுவதற்கு பரம்பொருளைத் தலைவனாகப் பெறுதல் தகுதி மிகுதியும் உடையது. தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மிக்க சிக்கலான பணி! நாற்காலி ஆசை தேவர்களுக்கும் உண்டு வேள்வியில் சொரியும் அவிப்பொருளை உரிமையில்லாத நிலையிலும் தேடித் தின்பவர்கள் தேவர்கள். இந்தத் தேவர்களுக்கு அம்மம்ம, எத்தனை எத்தனை ஆசாபாசங்கள் தேவர்களுக்கு நெறியும் இல்லை! முறையும் இல்லை! அவரவர் மனம் கொண்டதே மாளிகை. அதனால் திருக்குறள் "தேவரனையர் கயவர்” என்று திட்டித் தீர்த்துவிடுகிறது. கயவர்கள் இலக்கணம் என்ன? அவர் அவர் நலத்திற்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்வர். நிர்வாணமான சுயநலவாதிகள். இவர்கள் கொலையிற் கொடியர்.

இறைவன்—— சிவன் அப்படியல்ல. இறைவன்——'சிவபெருமான் தனக்கென ஒன்றும் வேண்டாதவன். குறியொன்றும் இல்லாத கூத்தன்! இறைவன் திருநீறு பூசி விளங்குவதுகூடத் தம்மை வழிபடும் அடியார்களின் வினை நீங்குவதற்குத்தான்! குழந்தைகளின் நோய்க்குத் தாயே மருந்துண்பாள்; பத்தியம் பிடிப்பாள்! அதுபோல இறைவன்—— சிவபெருமான் 'ஆன்மாக்களின் நலனுக் காகவே ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆன்மாக்களின் கருத்தறிந்து முடிப்பவன்; வேண்ட முழுதும் தருபவன்; உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளிச் செய்பவன்; பொன்னும் மெய்ப்பொருளும் தருபவன்; துய்ப்பனவெல்லாம் தந்தருள்பவன்; உய்யும் நெறியில் உய்ப்பன தந்தருளித் தாயிற் சிறந்த தயாவுடன் தொடர்ந்து நின்று காத்தருள்பவன். அதனால் சிவனே தலைவன்; தனித்துணை! சிவபெருமானைத் தலைவனாகப் பெறுதல் தவத்தின் ஆக்கம்; பயன்! அதனால் அடியார்கள் சிவபிரானை 'உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்' என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். சிவபெருமானைப் பிரானாக—— தலைவனாகப் பெறுவதை விட ஆன்மாக்களுக்கு வேறு பேறு ஏது? அதனாலன்றோ "எங்கெழில் என் ஞாயிறு?" என்றும், "வானம் துளங்கிலென்? மண் கம்பமாகிலென்?" என்றும் பாடுகின்றனர். அப்பரடிகள், "இறுமாந்திருப்பதென்று கொலோ?" என்றே பாடுவார்.

சிவநெறியின் சிறப்பு, சிவபெருமானுக்குப் புகழ் சேர்ப்பது மட்டுமல்ல, சிவனடியார்களுக்குப் புகழ் சேர்ப்பதே இறைவன்—— சிவபெருமானின் திருவுள்ளம்! சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்துணர்ந்து வழிபாடு செய்யுமாறு சாத்திர நூல்கள் அறிமுகப் படுத்துகின்றன. ஆதலால் சிவபிரானைத் தேடுவதற்குப் பதில் சிவனடியாரைத் தேடலாம். இது எளிதும் கூட.

தமிழ்நாட்டுப் பெண்கள் களவுவழிக் கற்புக்குச் செல்பவர்கள். ஆம்! 'களவும் கற்றுமற' என்று ஒரு பழமொழி உண்டு. தலைவியைக் காதலித்த காதலன் களவில் கூடும் காலத்தை நீட்டித்துக் கொண்டே சென்றான். களவுக் காலம் கூடுதல் அலர் தோன்றுவதற்கு வாய்ப்பினை உண்டாக்கும் என்றுணர்ந்த தோழி, தலைமகளை நோக்கிக் களவை மறந்து விடுக! திருமணம் செய்துகொண்டு கற்பியலைத் தொடங்குக என்றுணர்த்திய பழமொழி இது. பழந்தமிழகத்தில் காதல் திருமணமே நடைபெற்றது. சுந்தரர் வரலாறு இதற்குச் சான்று.

இன்று திருமணங்களில் வழக்கத்தில் இருக்கும் கொடுமையாகிய வரதட்சணை ஒழிய வேண்டுமானால் காதல் திருமணங்கள் நடைபெற வேண்டும். பழங்காலத்தில் மனிதப் பண்பாட்டு அடிப்படையிலான சமுதாய அமைப்பு இருந்தது. அதனால் குலம் பார்ப்பார்கள்: குணம் பார்ப்பார்கள்; சீலம் பற்றிச் சிந்தனை செய்வார்கள்! இன்றோ பண மதிப்பீட்டுச் சமுதாயம்! எங்கும் எதிலும் பணத்தின் ஆதிக்கம்! மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களில் வரும் பெண்கள், மரபுவழி வந்தவர்கள். ஆதலால், அவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவராக வருபவர்கள் சிவனடியார்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் சிவனடியாரை கணவராகக் கொண்டு அந்தக் கணவரின் தாள்களைப் பணிவோம் என்கின்றனர். ஆம்!தலைமகளைத் தாங்கும் தாள்கள் தலைமகனுடைய தாளாண்மைமிக்குடைய தாள்கள்தானே! இங்குத் தாள் பணிவோம் என்பது பெண்ணடிமைத் தனத்தின் விளைவல்ல, தாள்—— தலைபோல விரும்பித் தொழுதல்.

அடுத்து, சிவனடியார்களுக்கே பாங்காவோம் என்கின்றனர். பாங்காதல் என்பது அயரா அன்புடன், பரிவுடன் புணிவிடை செய்தல் என்பதாகும். இத்தகு சிவனடியாரையே மணப்போம், கணவராக ஏற்போம் என்று

கூறுகின்றனர். ஆம்! சிவனடியார்கள்—— நாங்கள் மணக்கப்போகும் சிவனடியார்கள் உவப்பப் பணி செய்வோம்! தொண்டு செய்வோம்! தற்சார்பின்றிக் கணவன்மார்களின் நலனையே நலனாகக் கொண்டு வாழ்வோம் என்கின்றனர்.

இறைவா! சிவபெருமானே! இந்தப்படி சிவனடியாரை மணக்க, தொண்டு செய்து வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றுக! சிவனடியார் தாள் பணிவோம்! இங்ஙனம் சிவனடியாருக்குப் பணிசெய்யும் வாய்ப்பை வழங்கியருள்க! இந்தப் பேறு கிடைக்கச் செய்தருள்க! சிவனடியார்களைக் கணவராகப் பெற்றுப் பணி செய்யும் வாய்ப்புக் கிடைப்பின் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை!

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! நாங்கள் ஆரத் துய்த்து மகிழ்வதற்கேற்பப் பின்னைப் புதுமை நலன்களையுடையவனே! சிவனடியார் எம் கணவராதல் பெரும்பேறு! அவர்தம் குறிப்பறிந்து தொழும்பாய்ப் பணி செய்தால் யாதொரு குறையும் இல்லை என்றெல்லாம் போற்றுகின்றனர்.

இந்தப் பாடலின் கருத்து வாழ்வாக மலர்ந்தால் வீடுகள் சிறக்கும்! இல்லறம் வளரும் சிவநெறி மலரும்! மழை பொழியும் மண் வளம் கொழிக்கும்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்!
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை—— 9)