திருவாசகத்தேன்/புண் சுமந்த பொன்மேனி!

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search



புண் சுமந்த பொன்மேனி!

விளையாட்டு, விளையாட்டாக மட்டும் இருத்தலில் பயன் இல்லை. விளையாட்டின் போக்கிலேயே அறிவியல், அருளியல் கருத்துகளைக் கற்றுத் தரவேண்டும். அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு! அம்மானை விளையாடும் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் உள்ள பகுதி திருவம்மானை என்று அழைக்கப் பெற்றது. திருவம்மானையில் இருபது பாடல்கள் உள்ளன. இந்த இருபது பாடல்களும் தத்துவச் செறிவுடைய பாடல்கள்! எளிய மொழி நடையில் அமைந்தவையும் கூட! இதுபோலவே பூவல்லி, பொற்சுண்ணம் என்பவையும் அமைந்துள்ளமையையும் அறிக.

அம்மானைப் பாடல்கள் வரிப்பாட்டு வடிவத்தில் அமைவன. திருவெம்பாவையைப் போலவே இந்த விளையாட்டும் கன்னிப் பெண்களால் நல்ல கணவனை நாடிப் பிரார்த்தனையுடன் விளையாடப் பெறுகிறது. இந்த அம்மானை விளையாட்டு, தமிழகத்தில் தொன்மைக் காலத்திலேயே விளையாடப்பெற்ற விளையாட்டு. திருவம்மானை பற்றிய விளையாட்டுக் குறிப்புக்கள் கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. அதுபோலவே திருமுறைகளிலும் திருவம்மானை விளையாட்டு பற்றிய குறிப்புக்கள் காணக்கிடக்கின்றன.

சிவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ளவன். எல்லா உயிர்களையும் கணக்கின்றி எல்லை கடந்து ஆட்கொண்டருளும் தண்ணளியுடையவன்; பெரியோன்; தனக்குவமை இல்லாதவன்.

திருப்பெருந்துறை சிவனுக்கு விண்னும் மண்ணும் தழுவிய புகழ் உண்டு. புகழ்ப்படுவது புகழ். இறைவன் புகழ்ச்சியைக் கடந்தவன். புகழ்ச்சியைக் கடத்த போகம் என்று போற்றுவார் மாணிக்கவாசகர்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள். பதவிகளுக்கும் பெருமைகளுக்கும் ஆசைப்படுபவர்கள்! ஆனால் புகழ் என்ற சொல் காலத்தினால் பொருளற்றதாக—— விளம்பரமாக மாறிவருகிறது. மனிதர்களிடையில் மட்டும் தானா? தேவர்களிடத்திலும் கூட இந்தப் பதவி, புகழ் ஆசை உண்டு. தேவர்களின் பதவி ஆசைதானே தக்கன் வேள்வி! வேள்வியில் சொரியப் பெறும் அவி, சிவபெருமானுக்கே உரியது. ஆனால் மற்றைத் தேவர்களும் அவிப்பொருளுக்கு ஆசைப்பட்டனர். தக்கனைக் கொண்டு வேள்வி இயற்றினர் தேவர்கள். உயர் பீடத்தில் அமர்ந்தனர்; அவிப் பொருளைப் பெற்றனர்; இல்லை, இல்லை! மாணிக்கவாசகர் வாக்குப்படி 'தின்றனர்'. தகுதியில்லாத ஒன்றினைப் பெருமை கருதியும் சுவை கருதியும் உண்டனர் என்பது 'தின்றனர்' என்று இழிவாகப் பேசப்படுகிறது. இங்ங்னம் பெருமை கருதி வேள்வியில் சொரிந்த அவிப்பொருளைத் தின்ற தேவர்கள்—— கடலில் எழுந்த அமுதையும் உண்டனர். நஞ்சு கடலில் எழுந்தபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஆபத்தில் காப்பதன்றோ தலைமையின் இலக்கணம். ஆபத்தில் காக்கும் தலைமையே புகழுக்குரியது. நஞ்சைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓடினர். சிவபெருமானை நோக்கிக் காப்பாற்றும்படி அழுதனர்; அரற்றினர். சிவபெருமானும் நஞ்சினை உண்டு அமரர்களுக்கு அருள் செய்தனன். இதுவே புகழுதற்குரிய சாதனை.

"விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்த"தால்

சிவன் புகழ் விண்ணையும் மண்ணையும் தழிஇய புகழாயிற்று. நீலகண்டம் பெற்றமையின் எவ்வுயிர்க்கும தலைவன் ஆனான், ஈசன் ஆனான்.

இறைவனுக்கு—— சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அவை முறையே ஞாயிறு, திங்கள், தீ. இந்த மூன்று கண்களில் தீ ஒரோவழி கட்புலனுக்கு வருவது. ஆயினும் பயன்பாடு மிகுதியுடையது. தீ, நெற்றிக்கண் அறிவுக்கண். தீ, தூய்மையற்றனவற்றையெல்லாம் அழிக்கும். ஆனால் தீ ஒருபொழுதும் அழுக்காவது இல்லை. அறிவு அறியாமையை அகற்றும்.

சிவம் —— சக்தி பொருளும் ஆற்றலும் போல, நெருப்பும் சூடும் போலப் பிரிக்க ஒண்ணாதது. உலகுயிர்களுக்கு உள்ள வேட்கை, துய்த்தாலொழிய நீங்காது. வேட்கை நீங்கினாலே விடுதலை, துய்த்தலுக்குரிய விருப்ப உணர்வைத் தருபவள் அன்னை பராசக்திதான். அதனாலேயே அன்னை பராசக்தி தன் கையில் கரும்பை ஏந்தி யிருக்கிறாள். அன்னை பராசக்திக்கு காமாட்சி என்று திருநாமமும் வந்தது. இறைவன் சிவன்——உலகுயிர்கள் எல்லாம் போகம் துய்த்து அவ்வழி நிறைநலம் எய்துதல் வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்பினாலேயே அம்மையப்பனாக—— போகத் திருமேனியுடையவனாக இருக்கின்றான். இப்புவியில் வாழும் மாந்தரும் விலங்கு முதலிய சிற்றுயிர்களும் ஆண்——-பெண் என்று காதலில் கூடி இன்புற்று வாழ்கின்றனர். இவ்வின்ப வாழ்க்கைக்குத், தூண்டுவதே சிவபெருமானின் திருவுள்ளம்! அன்னையாகிய சிவையின்பால் நோக்குதலே மணம்!

உயிர்க்குலம் பரிணாம வளர்ச்சியில் வளரவும் பலருக்குப் பயன்படவும் உய்தி பெறவும் காதலிருவர் கூடி வாழ்தல் திருமணம் என்று கூறப் பெறுகிறது. ஆதலால் சைவத் தமிழ் மரபில் இறைவனை அம்மையப்பனாக வழிபடும் மரபு தோன்றி வளரலாயிற்று. "பெண் சுமந்த பாகத்தன் என்றதால் சிவன் தனக்காகப் பெண்ணைச் சுமக்கவில்லை. உயிர் குலத்தின் நன்மை கருதியே சுமத்தலால் 'சுமந்த' என்றருளியுள்ள நயமும் உணர்க.

எனவே, தமிழ் மக்கள் சிவனை மங்கை பங்கினனாகவே வழிபட்டு வந்துள்ளனர். தமிழகத்தின் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் திருமேனி , மங்கை பங்கினன் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. மாணிக்கவாசகர்,

தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால் வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பீ

என்று பாடுகின்றார். அம்மையப்பர் திருக்கோலம் தொன்மைக் கோலம் என்று பாடுகின்றார். பழைமை வாய்ந்த சாத்திர நூலாகிய திருக்களிற்றுப்படியார்,

"அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர்"

என்று போற்றுகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய ஐங்குறு நாற்றுக் கடவுள் வாழ்த்து, {{left margin|3em|

நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இருதாள் கிழற்கீழ்
மூவகை உலகும் முகிழ்த்தன முறையே!}}

என்று போற்றுகிறது. திருமுறைகள் முழுதும் "பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்த கோலமே" போற்றிப் புகழ்ந்து பேசப்படுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற திருக்குறளில் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் சொல். சக்தியைப் பாகத்தில் உடையது பரம்பொருள் என்று இதற்கு ஒரு சைவ மரபு உரை உண்டு. சிவபெருமானை அம்மையப்பனாகவே சிந்தனை செய்தல் வேண்டும், வழிபடுதல் வேண்டும் என்ற மரபு வழி வழி பின்பற்றப்படுகிறது. சிவபெருமானும் அருளிச் செயல் நிகழும் போதெல்லாம் பெண் சுமந்த பாகத்தனாகவே எழுந்தருளி அருள்பாலித்துள்ளான். 'பெண் சுமந்த பாகத்தன்' என்று போற்றுவது உலகியல்; தமிழ் மரபு.

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே நாட்டின் பொது நலப் பணிகளை அரசன் ஏவும் வழியில் வீட்டுக்கொருவர் வீதம் பொறுப்பேற்றுச் செய்து நிறைவேற்றுவது பழக்கம். மாணிக்கவாசகருக்கு அரசு இழைத்த துன்பங்கள் கண்டு பொறுக்காமையால் வையையாறு சினம் கொண்டு பெருவெள்ளமாகப் பாய்ந்தோடி வந்தது. மதுரை மாநகரில் வையை யாற்றங்கரையில் உடைப்புக்கள். இந்த உடைப்புகளை அடைக்க வீட்டுக்கு ஒரு ஆள் வரும்படி பாண்டியனின் ஆணை பிறந்தது. மதுரையில் பிட்டு விற்றுப் பிழைத்து வ்ந்த வந்திக் கிழவிக்குக் கணவனும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வாள்? ஏழைப் பிட்டு வாணிச்சியின் இதய உணர்வுகளை ஆலவாயண்ணல் அறிந் துகொண்டு அவனே தட்டும் மண் வெட்டியும் தாங்கிக் கொற்றாளாக வந்தான். நாணயமான தொழிலாளியாகவும் நடந்து கொண்டான். கூடுதல் கூலி கேட்கவில்லை. உண்பதற்குப் பிட்டு வாங்கித் தின்றுவிட்டு வேலை செய்யப் போனான். பசிக்கு உணவு உடலுக்கு வேலை. இது தத்துவம்; கொள்கை; கோட்பாடு.

சிவன், பெண் சுமந்த பாகத்தன். அதனால் அருளுதல் இயல்பாக உடையவன். ஏழைப் பிட்டு வாணிச்சியின் துயர் நீக்க உதிர்ந்த பிட்டையே கூலியாகக் கொண்டு மதுரை வைகையாற்று உடைப்பை அடைக்க மண் சுமந்தான். மன்னனின் கோலால் மொத்துண்டான்; திருமேனியில் வடுத்தாங்கினான்; புண்பட்டான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பண் சுமந்த பாடல்களைப் பெற்றுள்ள பெருமை தமிழுக்கு உண்டு. இனிமை பயக்கும் இசையையே தமிழிலக்கியங்கள் பண் என்று பாராட்டுகின்றன. தமிழ் மக்கள் பண்களைக் கண்டதோடன்றி அப்பண்களைப் பாடும் பருவ காலங்களையும் வரையறுத்திருந்தனர். பரிபாடல், சிலப்பதிகாரம் முதலியன மூலம் சங்க காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பண்கள் இருந்தனவாகத் தெரிகிறது. ஆனால் பெரும் பண் நான்கு என்பது மரபு வழி வந்த கருந்து. அவை பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி (நெய்தல்) என்பன. தேவாரத் திருமுறைகள் பண்ணமைவு முறையில் அமைந்தவை. தேவாரத் திருமுறைகளில் இருபத்து மூன்று பண்கள் மட்டுமே அமைந்துள்ளன. திருவாசகம் இயற்றமிழ் போல யாப்பமைவில் தோன்றினாலும் திருவாசகத் திருவம்மானையை சீகாமரத்தில் பாடலாம். சீகாமரப்பண் காலைய் பொழுதில் பாட வேண்டிய பண். அதனாலேயே மாணிக்கவாசகர் 'பண் சுமந்த பாடல்’ என்று பாடுகின்றார்.

சிவன் தமிழோடு இசைப் பாடல்கள் கேட்பதில் இச்சை மிகுதியும் உடையவன். நாள்தோறும் காசுகள் தந்து தமிழோடிசை கேட்டின்புறும் இயல்பினன். மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் பண் சுமந்த பாடல்கள். மாணிக்கவாசகரை இழந்து விட்டால் பண் சுமந்த பாடற் பரிசு கிடைக்காது.

மாணிக்கவாசகரின் பண் சுமந்த் பாடல்களைப் பரிசாகப் பெறுவதற்காக சிவபெருமான் வான்பழித்து இம்மண் புகுந்தனன். புவனியில் சேவடி தீண்டினன். குதிரைச் சேவகன் ஆயினன். மண் சுமக்கும் கூலிக்காரனாகி மண் சுமந்தான்; அடிபட்டான். புண் சுமந்தான், எண்ணரிய திருவிளையாடல்களை, நிகழ்த்தினான். எல்லாம் மாணிக்கவாசகரைக் காப்பதற்கேயாம். மாணிக்கவாசகரிடம் பரிசாகப் பெற்ற பண் சுமந்த பாடல்களைத் தாமே. தம் கைகளினால் படியெடுத்துக் கொண்டான், கடையூழியிலும் திருவாசகத்தை நினைந்து தன் தனிமையைக் கழிப்பதற்காக. இக்கருத்தையெல்லாம் உணர்த்தும் பாடல் இது.

பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சும்ந்த கீர்த்தி வியமன்ட லத்தீசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.


(திருவம்மானை- 8)