திருவாசகத்தேன்/போற்றி! அருளுக!

விக்கிமூலம் இலிருந்து




போற்றி! அருளுக!


கடவுளை, தமிழில் ‘போற்றி! போற்றி!’ என்று வாழ்த்துதல் மரபு. போற்றி- என்ற சொல்லிற்கு, ‘போற்று’ என்றும் பொருள் கொள்ள இயலும். போற்றி என்ற சொல்லில் உள்ள இகர ஈற்றை. வியங்கோள் எனக் கொண்டால் ‘போற்று’ என்றாகும். ‘போற்றுக’ என்ற சொல்லுக்குக் ‘காப்பாயாக’ என்பது பொருள். இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும்.

“போற்றி யருளுக நின் ஆதியாம் பாதமலர்” என்ற தொடரில் “போற்றி” வினையெச்சம். இறைவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்குபவன். “வாழ் முதலே!” என்றும் அருள்வது காண்க! இந்த உலகத்தின்- உலகப் பொருள்களின் ஆதியே! நின் திருவடிகளை அருளுக! அதாவது திருவடி ஞானத்தை அருள்க! திருவடி இன்பத்தை அருள்க! எம்மைக் காத்தருள் செய்க! முத்தி, நெறியறியாத மூர்க்கரொடு கூடாமலும் எறும்புகளால் அரிக்கப்படும் புழுக்களைப் போல், புலன்களால் அரித்து அழிக்கப் பெறாமலும் “நான்” “எனது” என்ற. செருக்கால் தலையால் நடக்காமலும் சிந்தையுள் சிவம் வைத்து வாழ்ந்திட அண்ணித்தருள் செய்க! எமக்கு. வாழ்நிலையின் முடிவான பேறாகிய நின் செந்தளிர் போன்ற திருவடிகளைத் தந்தருள்க. செம்மை சேர்ப்ப தால் செந்தளிர்கள்! ‘செம்மலர்’ என்று சிவஞான போதமும் கூறும்! சிவம் ஆதியாக நிற்றல்போல அந்தமாகவும் நிற்கிறது. உலகம் அனைத்தும் ஒடுங்கும் கடையூழிக் காலத்திலும் உள்ளவன் சிவன். அவனே உயிர்கள் களைப்பாறிப் புத்துயிர்ப்புப் பெறுவதற்குக் கடையூழியில் உலகத்தை ஒடுக்கிப் பின் புதுப்பித்தருளு கின்றான். ஆதலால், சிவனே அந்தம், ஆதி, முதலும் நடுவும் ஈறும் அவனே!

எல்லா உயிர்களின் தோற்றத்திற்கும் காரணம் இறைவனே! எல்லா உயிர்களும் இறைவனிட்த்தில் தோற்றம் என்பது படைப்பு என்று பொருள் தராது. தோற்றம் = தோன்றுதல்; புலப்படுதல். “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்ற திருக்குறளுக்குத் “தோன்றின்” என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளும் பாங்கே இங்கேயும் கொள்ள வேண்டும். அதாவது பலரறிய மக்கள் மன்றத்தில் தோன்றும் பொழுது புகழொடு தோன்றுக. அங்ஙணம் புகழ்பட வாழும் தகுதி பெறாவிடின் தோன்றாதே என்பதுதான். அந்தக் குறளுக் குரிய உண்மைப் பொருள் என்றும் உள்ள உயிர் ஆணவத்தால் கட்டுண்டு செயலற்றுக் கிடந்த நிலை, தோன்றா நிலை. இறைவன் கருணையால் செயற் கருவிகளுடன் கூடிய உடலையும் அறிவுக் கருவி கருவிகளாகிய (கரணங்களை) புலன்களையும் கொண்டு அறிவு விளக்கமுறும் நிலையில் தோன்றியதே தோற்றம்.

எல்லா உயிர்களும் பொன்னும் பொருளும் பெற்று வாழும் வாழ்வளிப்பதால் “பொற்பாதம்” என்றார்.

பொன்னும் மெய்ப் பொருளும் கருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானை

என்னும் நம்பியாரூரர் வாக்கும் அறிக. பொன் வேறு; பொருள் வேறு. பொன்- தங்கம். இன்று பணம் முதலியனவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பொருள்-நுகர் பொருள்கள், உடலோடியைந்த உயிர்களுக்கு உயிர் வாழ உணவு தேவை; மருந்து தேவை. உடை தேவை.

தி- 12 களிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியன தேவை. இவையெல்லாம் நுகர்பொருள்கள். திருவள்ளுவரும்

“பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை”

என்றார். இங்குப் பொருள் என்பது உயிர் வாழ்தலுக்குத் தேவையான உணவையே குறிக்கும்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

என்றும் கூறுவர். உணவு, உயிராகாது. உணவால் உயிரைக் கொடுக்கவும். இயலாது. உடலில் உயிரைக் காத்து வைத்து வாழ்வளிப்பது உணவு.

போகம்- இன்பம். மாணிக்கவாசகர் “போகமாம் ஆங்கழல்கள்!” என்று பாடுகின்றார். போகம் என்பது பொருளைத் தரவல்லது. போகம்- இன்பம். உயிர்க்குலத்துக்கு இன்பம் தரும் வாயில்களும் இன்பம் தருபவையும் பலப்பல. ஆன்மாக்கள் வளர்ச்சி அடைய, அடைய இன்பத் துறைகளும் மாறும். குழந்தைப் பருவத்தில் தேவை விளையாட்டுப் பொருள்கள்; இனிப்பு மிட்டாய்கள்! இளமையில் தேவை கல்வி; கற்றோர் வாய்க் கேட்டல். வாலிபப் பருவத்தில் காதலின்பம். வாலிபப் பருவத்தில் இன்பத் துறைகள் ஆற்றலுக்கும் தகுதிக்கும் ஏற்பப் பலப்பலவாகிவிடும். சாதனை செய்தல் ஆகியவற்றிலும் இன்பம் காண்பர். முதிர்ந்த- ஆன்ம முதிர்ச்சி நிலையில் இறைவன் கழ்லேத்தும் இன்பத்தையே இன்பமெனக் கொள்வர். “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே! என்னுடை அன்பே” என்றும் மாணிக்கவாசகர் அருளிச் செய்துள்ளார்.

இறைவனுடைய திருவடி யின்பமே இன்பம். உயிர்கள்- ஆன்மாக்கள் அடையும் முடிவிலா இன்பம் திருவடியின்பமேயாம். திருவடியின்பத்தை ‘ஆனந்த வெள்ளம்’ என்று கோவையார் போற்றும் திருவடியின்ப மாகிய ஆனந்த வெள்ளம் வற்றாது; முற்றாது. அந்த ஆனந்த வெள்ளத்தினை வழங்குவதே ஆடல்வல்லானின் கூத்து!

‘பூங்கழல்கள்’- மலரின் தன்மையுடைய திருவடிகள் என்பது பொருள். மலர், மங்கலப் பொருள்; மண முடையது; தேன்பிலிற்றும் இயல்புடையது; மென்மையானது. ஆணவக் காரிருளினால் கட்டுண்டும் ‘யான்’ ‘எனது’ என்ற செருக்கில் சிக்கிக் கொண்டும் தலையால் நடக்கும் ஆன்மாக்களை, இறைவன் வன்முறையால் அணுகுவதில்லை. இறைவன் ஆன்மாக்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்தாள்பவன். மேலும் பிழையெல்லாம் தவிர்த்தும் காத்து ஆள்பவன். பிழைகளைப் பொறுத்தலினும் பிழைகளைத் தவிர்த்தல் பேரறம் என்றும் நினைந்து நினைந்து போற்றவேண்டிய உதவி. இறைவன் ஆன்மாக்களை ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து மெள்ள யாதொரு சுவடும், களங்கமும், கறையும், நோவும் இன்றி மீட்பதைப் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் இறைவன் சிவன், ஆன்மாக்களை மென்மையாக இன்ப வெள்ளத்தில் அழுத்தி ஆட்கொள்வதால் பூங்கழல்கள் என்றார்.

இங்குத் திருவடிகளைக் ‘கழல்’ என்றார். வெற்றிச் சிலம்படித்த திருவடிகளைக் கழல் என்று கூறுவது மரபு. ஆம்! எம்பெருமான் சிவனின் திருவடிகளை- கழல்கள், உயிர்களை ஆட்கொள்வதில் வெற்றி பெற்றவை. முப்புரம் எரித்து வெற்றி கொண்ட கழல்கள்! சிவன், காலத்தை வென்று விளங்கி ஊழி முதல்வனாக நிற்பவன். ஆதலால், சிவபெருமானின் திருவடிகள்- கழல்கள்!

சமயநெறிக் கோட்பாட்டின் அடிப்படையே பலருக்கு விளங்காதது. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத் தான் என்றே பலரும் கருதுகின்றனர். ஏன் சில சமயங்கள் அப்படியே கூறுகின்றன. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத்தான் என்பது அறிவியல் முறையிலும்கூட இசைந்து வாராது. கடவுள் பரிபூரணன்: குறைவிலா திறைவு; கோதிலா அமுது; குறையிலிருந்து நிறை தோன்றலாம். இது பரிணாம வளர்ச்சி. நிறையிலிருந்து குறை தோன்றாது. ஆன்மாக்களுக்கு உள்ள குறைகளை நோக்கின் கடவுள் படைத்திருப்பான் என்று சராசரி அறிவு கூட ஒத்துக் கொள்ளாது. ஆதலால் உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் என்றும் உள்ளவை (Existence) “எல்லா உயிர்க்கும் தோற்றமாம்” என்பதற்குப் பொருள் கொண்டதுபோல, மறைவாகச் செயலின்றிக் கிடந்தவை, செயலுக்குரிய் அறிவுக் கருவிகளையும் செயற்கருவிகளையும் பெற்று இயக்கத்திற்கு வருவதே தோற்றம்.

 “மூலையிலே கிடந்தேனை”

என்றார் திருமூலரும். உயிர்களுக்கு முடிவும் இல்லை. அப்படியானால் உயிர் வாழ்க்கைக்கு முடிவே இல்லையா? முடிவில்லாமல் இருந்தால், எய்ப்பும் களைப்பும் வந்து விடும். உயிர்களின் வாழ்க்கைக்கு எல்லை இறைவன் திருவடிகளைச் சார்தலேயாம். இந்த நிலையிலும் சமயங்கள் தம்தம் நிலையில் மாறுபடும், உயிர்கள் திருவடி ஞானப் பெறச் சிவத்தினை அடைந்து திருவடி இன்பத்தை அடைதலே உயிர்களின் வாழ்க்கைக்கு முடிவு. அப்படியானால் திருவடிகளில் உயிர்கள் கலப்பதன் மூவம் தன்னை இழந்து விடுகின்றனவா? இல்லை! உயிர்கள்- ஆன்மாக்கள் திருவடியின்பத்தில் தன்னை இழந்துவிட்டால் முன் சொன்ன உண்மைக்கு மாறாகிவிடும். அதாவது உயிர்களுக்கு- ஆன்மாக்களுக்கு அழிவு இல்லை என்பதற்கு மாறாகி விடும். உயிர்கள் தன்னை இழத்தல், சிவத்துடன் சேர்ந்து தன்னை இழத்தல் என்பது பொருளால் இரண்டாகவும் தன்மையால் ஒன்றாகவும் விளங்குவதேயாம். தன்னை இழத்தல் என்பது தற்போத மிழத்தவேயாகும்; பாலொடு நீர் கலந்தது போல! பாலைக் காய்ச்சினால் தண்ணீர் நீராவியாகிவிடும். அது போலப் பாலொடு நீர் கலந்த நிலைதான் சிவத்தொடு ஆன்மா கலந்த நிலை.

இறைவன் சிவனைக் கண்டறிவார் இல்லை என்பது திருவாசகம். இறைவனைக் கண்ட பிறகுதான் நம்புவது என்பது சமயநெறிக்குப் பொருந்தாத விவாதம். காண்டல்- கண்களால் காண்பது. கண்களால் காணக் கூடியவன்தான் கடவுள் என்பதை

“புவனியில் சேவடி தீண்டினன் காண்க”
“கண்ணால் யானும் கண்டேன் காண்க”

என்றருளியுள்ளமையால் அறிக. கண்கள் அறிவுப் புலனுடன் தொடர்பு கொள்ளவில்லையானால் காட்சி நிகழ்ந்தாலும் பொருள் புரியாது. பொருளைப் பற்றிய தாகக் காட்சியமையாமல் போய்விடும். சிந்தனை செய்து தெளிந்து அறிவால் அறிந்து உணர்ந்து அனுபவித்த பிறகுதான் கடவுள், கண் காட்சிக்குப் புலனாகும். இது சமய அனுபவ நெறி!

அறிவு என்பது கல்வி. மட்டுமல்ல, கல்வியின் பயன் அறிவு. கற்றவர்களிலும் மூடர்கள்- அறிவில்லாதவர்கள் உள்ளனர். ஒலி நாடாப்போல ஒப்பிப்பர்; அனுபவமும் இருக்காது செயலும் இருக்காது; ஒழுகலாறும் இருக்காது; நான்முகன் வேதங்களை நன்றாகப் பயின்றவன். வேதங்களுக்கு நாயகன், கலைமகள் நான்முகனின் மனைவி. நான்முகனின் நாவிலேயே இருக்கிறாள். ஆயினும் என்? சமய ஞானம் இல்லையே! பிரணவத்தின் பொருள் தெரியாமல் திருமுருகன் கையால் குட்டுப்பட்டவனாயிற்றே!

நான்முகன் கல்வியின் துணை கொண்டு இறைவன் திருமுடியைக் கண்டு வருவதாகக் கூறினான். சூளுரைத் தான். அன்னத்தின் உருவம் கொண்டு முடியைத் தேடி வானோக்கிப் போனான். திருமால் செல்வத்தின் அதிபதி. திருமகள் கணவன். இறைவன் திருவடியை பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பதமலரைக் கண்டு வருவதாகச் சூளுரைத்தான்; பன்றியின் உருவெடுத்தான்; நிலத்தைத் தோண்டிக் கொண்டு கீழ் நோக்கிப் பயன மானான். அறியாமை ஆரவாரம் செய்யும்; அகங்காரம் காட்டும். எப்போதும் அறியாமை மேல்நோக்கிய நிலையிலேயே இருக்கும் செல்வன் ஒளிவான்; மறைவான்; யாருக்கும் புலப்படாமல் செயல் செய்வான்; செல்வத்தை, நிலத்தில் புதைத்து வைப்பான். வரலாறு பொருத்தமாக இருக்கிறது. இறைவன் திருமுடியைத் தேடிப்போன நான்முகன் முடியைக் காண முடியவில்லை; தோல்வியையும் ஒத்துக் கொள்ளவில்லை. படித்த பேதைகள் புத்திசாலிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் உண்மையை- இயலாமையை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். பொருந்தும்படியாகப் பொய்கள் பல சொல்லி அறியாமையை அறிவு என்று வாதிடுவர். சாட்சியங்களும் வைப்பர். நான்முகன் திருமுடியைக் கண்டுவிட்டதாகக் கூறினான். இது பொய், இதற்குச் சாட்சி தாழம்பூ, திருமாலோ திருவடியைக் காண முடியவில்லை என்று ஒத்துக்கொண்டான். செல்வத்தை விட சமூகத்திற்கு அதிகத் தீமை பொய்யும் சூதும், படித்தவர்களால்தான் இவை வளர்கின்றன. அதனால், தான் பாரதி “படித்தவன் சூது பண்ணினால் ஐயோ என்று போவான்!” என்றான். நான்முகனும் திருமாலும், காண முடியாத திருவடிகள்!

மக்களே! வேதங்கள் ஒதுவதினால் மட்டும் இறைவனைக் காண முடியாது; அறிய முடியாது; அனுபவிக்க முடியாது. இறைவனை- சிவனைக் காண அன்பு தேவை. ஆற்றல் மிக்க அன்பு தேவை. நினைந்து நினைந்து நனைந்து நனைந்து அழும் அன்பு தேவை.

உயிர்கள் உடலொடு கூடி நிலத்தில் தோன்றியது உய்வதற்காக! உயிர்கள் உய்வதற்காக உடுத்துக் கொண்ட உடையனையது உடம்பு. பிறப்பின் நோக்கம் உய்தல். உயிர்- ஆன்மா, தன் முயற்சியால் மட்டுமே உய்தல் இயலாது. இறைவன் சிவனின் கருணையும் தேவை. இறைவன் சிவன் உயிர்களுக்கு உய்வு அருளுகின்றான். ஆன்மாக்களாகிய நாம் உய்யுமாறு அறிந்து அவ்வழியிலேயே ஆட்கொள்கிறான். உயிர்களை - ஆன்மாக்களை உய்யுமாறு செய்தல்- உடன்பாட்டு நெறிகளின் வழி சென்று மீட்டெடுத்தலேயாம். இறைவன் சிவனின் ஆட்கொள்ளும் நெறியில் எதிர்மறை அனுகு முறையே இல்லை. ஆங்காரம் உயிரின் இயற்கை. அது எதிர்மறை அணுகுதலை ஏற்காது. ஆதலால் உயிர்களின் மனமறிந்து மனத்துள் இருக்கும் கருத்தறிந்து அக் கருத்தினை முடித்து வைத்தே ஆட்கொண்டருள்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் புறத்தே போனாலும் உடன் வருவான். துரிசுகள் செய்தாலும் உடந்தையாக இருப்பான். முடிவான நிலை ஆட்கொண்டருளுதல்; ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துதல்; இறவா இன்ப அன்பில் திளைத்திடச் செய்தல். உயிர்களை ஆட்கொண்டருளுதலால் ‘பொன்மலர்’ என்று போற்றுகின்றார்.

தைநீராடல் தமிழ் மரபு. காலப்போக்கில் மார்கழி நீராடல் ஆயிற்று. வைகறையில் மார்கழி நீராடல் பழந்தமிழர் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்ந்து வருவது.

வாழ்க்கைப் பொழுதில் வைகறைப் பொழுது நல்ல பொழுது. வைகறைப் பொழுதில் ஆற்றல்மிக்குடைய ஓசோன் உலாப்போதரும். வைகறைப் பொழுதில் சுவாசிக்கும் ஒரு மூச்சு பத்து மூச்சுக்குச் சமம். மூச்சு சுவாசிக்கும் எண்ணிக்கை அடிப்படையில்தான் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. வைகறையில் எழுந்து நடந்து சுவாசித்தால்- ஒரு தடவை சுவாசித்தால் ஒன்பது மூச்சு மிச்சப்படுத்தலாம். அந்த அளவு வாழ்நாள் வளரும். வைகறைப்பொழுதில் நீர் நிலைகளில் ஓசோன் படிந்து அந்தத் தண்ணீர் மிகுதியும் பயன் தரத்தக்க ஆற்றலுடையதாக விளங்கும். அப்போது நீராடல் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், பத்திமைக்கும் மிகுதியும் பயனளிக்கும். ஆதலால் பயன் ந்ோக்கி மார்கழி நீராடலையும் 'போற்றி' என்றார்.

இந்தப் பாடலில் இறைவனின்- சிவனின் தனித் தன்மை போற்றப்படுகிறது. ஐந்தொழிலுக்கும் சிவனே உரியவன். சிவனே முழு முதல்வன். சிவனை அறிவாலும் செல்வத்தாலும் காண இயலாது. அன்பினாலும் தொண்டினாலுமே காணலாம் என்பது பெறப்படும் உண்மை! சிவன்- இறைவன் நம்மையெல்லாம் உய்ய ஆட்கொண்டருளப் பிரார்த்தனை செய்வோமாக! வாழ்வோமாக!

திருவாசகம் நாள்தோறும் ஒதுதலே பிரார்த்தனை. திருவாசகம் ஒதினால் சிவஞானம் சித்திக்கும். திருவாசகத்தை நாள்தோறும் ஒதுக.

          போற்றி அருளுக கின் ஆதியாம் பாதமலர்
              போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
          போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
              போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
          போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
              போற்றிமால் கான்முகனுங் காணாத புண்டரிகம்
          போற்றியாம் உய்யஆட் கொண்டளும் பொன்மலர்கள்
              போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!


(திருவெம்பாவை-- 20,)