உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியும் தாசனும்

23


எங்கெங்குக் காணினும் சக்தியடா, - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

***



காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம்பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

பாடலைக் கேட்டு எல்லாரும் வியப்பில் துள்ளினர். பாட்டின் பொருளும் பண்ணும் தம்முடைய கவிதைப் பாணியிலே அமைந்திருந்ததைக் கேட்டு மகிழ்ந்த பாரதியார், அப்பாடலைத் தம் கையாலேயே பெயர்த்து எழுதி, "ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது" என்று ஒரு குறிப்பெழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பி வைத்தார்.

பாரதியின் வாழ்க்கையில் புதுவையில் வாழ்ந்த பத்தாண்டுகளும் பொற்காலம் என்று சொல்லாம். அரவிந்தர், வவே.சு அய்யர் ஆகியோரோடு இலக்கிய, ஆன்மீக உரையாடல்களில் நீண்ட நேரத்தைச் செலவிடுவார். செல்வர் பொன்னு முருகேசம் பிள்ளை வீட்டில் உலகியல் பேசி மகிழ்வார். வேணுநாயக்கர்கொட்டடியில் சிலம்பம், வாள் வீச்சு பார்த்து மகிழ்வார். மாலையில் நண்பர்களோடு கடற்கரையில் பொழுதைக் கழிப்பார். சில நாட்களில் வெல்லச்சு செட்டியாரின் குயில் தோப்பில் மெய்மறந்து கற்பனையில் வீற்றிருப்பார். அவருடைய அரிய படைப்புகளான குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகியவை புதுவையில் இருக்கும்போதுதான் எழுதப்பட்டன.