உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

 காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்களில் முதன்மை பெற்றவன் சிம்மவிஷ்ணு. இவனுடைய காலத்தில்தான் காஞ்சியில் பல்லவப் பேரரசு நிலையாக ஏற்பட்டது. திருமாலிடத்திலே ஈடுபாடு உடையவன் இவன். இதனை இவனது பெயரே அறிவிக்கும். சிறந்த சமஸ்கிருத பண்டிதன் இவன். “கிராதார்ச் சுனீயம்” என்ற நூலை இயற்றிய சமஸ்கிருத கவியான பாரவி இவனது அவைப் புலவர். சிம்ம விஷ்ணு சமஸ்கிருத மொழிக்குப் பேராதரவு அளித்தான். மறை வல்ல அந்தணர் பலருக்குக் கிராமங்கள் இனாம் வழங்கினான். அவை சிம்ம விஷ்ணு சதுர்வேதி மங்கலம் எனும் பெயரால் அழைக்கப்பட்டன.

இவனுடைய மகன் மகேந்திர வர்மன். இவனும் சமஸ்கிருதம் நன்கு பயின்றவன், இசை வல்லவன், ‘சங்கீர்ணம்’ என்ற புதிய தாள வகை கண்டு பிடித்தவன், சிற்பத்திலே சிந்தை பற்றியவன்; ஓவியத்திலே உளம் கொண்டவன்; நாட்டியத்திலே நாட்டம் கொண்டவன்; கோவில்கள் பல கட்டுவதிலே ஆசை மிக்கவன். ‘மத்தகஜ விலாசம்’ என்பது இவன் எழுதிய சமஸ்கிருத நூல். காபாலிகர், பாசுபதர், காலாமுகர் ஆகியோரை இவன் இந்நூலில் தாக்கியிருக்கிறான்.

காபாலிகர் என்போர் பைரவரை வழிபடுவோர்; மண்டை ஓடுகளை மாலையாக அணிபவர்; நரபலியிடுவோர், மது அருந்துவோர், உடல் முழுவதும் சாம்பல் பூசித்திரிவோர், கையிலே மண்டை ஓடு ஏந்தித் திரிவோர். கையிலே மண்டையோடு (கபாலம்) இருந்தமையின் காபாலிகர் எனப்பட்டனர்.

மகேந்திரப் பல்லவன் சமண மதத்துக்கு ஆதரவு அளித்தான். தானும் சமண மதத்தைப் பின்பற்றினான்.