கால்டுவெல் ஒப்பிலக்கணம்/010-033

விக்கிமூலம் இலிருந்து

திருந்தா மொழிகள்

(I) துதம் :

துதம் அல்லது தொதம் என்பது நீலகிரி மலையிலுறையும் துதவர் அல்லது தொதவரின் மொழியாம். இவர்கள் தொகை எக்காலத்தும் ஒன்றி ரண் டாயிரத்திற்கு மிகுதியா யிருந்திருக்க முடியாது. அபினிப் பழக்கத்தாலும், பெண்கள் பல கணவர்களைக் கொள்ளும் முறையாலும், பெண் குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடும் வழக்கம் ஒரு காலத்தில் கையாளப்பட் டிருந்தமையாலும் இவர்கள் தொகையில் அருகி, இன்று 700 அளவில் குறைந்திருக்கின்றனர். ஆயினும், இவர்கள் மொழி ஒப்பியல் மொழியிலக் கணத்திற்குப் பயன்படும் சிறப்புக்கள் உடையது.

துத அல்லது தொத என்பது தமிழ்த் தோழன் (கூட்டத்தான்) என்பதுடன் உறவுடையது என்று டாக்டர் போப் கொண்டனர். ஆனால், அஃது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று.

(II) கோதம் :

தொதவர்களே யன்றி, நீலகிரி மலையில் கோதர்கள் என்ற ஒரு சிறுகுடியினரும் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளே யாவர். இவர்களின் தொகை ஏறக்குறைய 1200 ஆகும். பண்டை நாட்களிலிருந்த உயர்குடி மக்களால் துரத்தப்பட்டு இவர்கள் இங்கே வந்து குடியேறியவர்க ளாதல்வேண்டும். இவர்கள் மொழியாகிய கோதம் கன்னடத்தின் கொச்சைக்கிளை என்று ஒருவாறு கூறலாம். 1911-ஆம் ஆண்டு எடுத்த மக்கட்டொகைக் கணக்கின்படி அஸ்ஸாம் நாட்டில் ஒன்பதின்மர் கோதர் இருந்தார்களாம்.

இனி, இத் தொதவமும் கோதமுமேயன்றி, வடகர்கள் பேசும் ஒரு தனிப்பட்ட மொழியும், இருளர்கள் பேசும் தமிழ் மொழிச் சிதைவும், குறும்பர்கள் என்ற முல்லை நில மக்கள் பேசும் தமிழ்மொழிச் சிதைவும் நீலகிரி மலைத் தொடரில் வழங்குகின்றன.

(III) கோண்டு :

கோண்டர்கள் மத்திய இந்தியாவிலுள்ள குன்றுகளிலும் காடுகளிலும் உறையும் பழங்குடிகள் ஆவர். இவர்களது தொகை பதினைந்து நூறாயிரம் (15,00,000) ஆகும்.[1] இவர்கள் வாழும் பகுதியை முன்னைய ஆராய்ச்சியாளர் கோண்டவனம் என்றழைத்தனர். கோண்டர்கள் தாமே தம்மைக் குறிக்க வழங்கிய பெயர் கோயீதோர்[2] அதாவது கோயீக்கள் என்பதாகும். இவரிடையே 12 வகுப்புக்கள் உள்ளன. அவற்றுள் 4 வகுப்பினர் தம்மைச் சிறப்பாகக் கோயீதோர் என்று கூறிக்கொள்ளுகின்றனர். இவருள் ஒரு வகுப்பினர் கோஹிதூர் என்று தம்மைக் குறிக்கும் மாரியார் ஆவர். இவர்களே கோண்டர் அனைவரிலும் வீரமும் முரட்டுத் தனமும் மிக்கவர். கலப்பற்ற பழங்கோண்டர்களும் இவர்களே யாவர் என்று எண்ண இடமுண்டு.

(IV) கந்தம் அல்லது கு :

ஆங்கில அறிஞர் இவர்களைக் கொந்தர் என்று வழங்குகின்றனர். ஆனால் இவர்களை அடுத்துள்ளோர் இவர்களைக் கந்தர் என்றும், இவர்கள் தாமே தம்மைக் கு என்றும் வழங்குகின்றனர். இவர்கள் கோண்டவனத்தின் கிழக்குப் பக்கத்திலும், ஒரிஸ்ஸாவின் குன்றுகளிலும் உறைபவர்கள். கோண்டருடன் உறவுடையவர் இவர் என்று கருதப்படுகிறது. கோண்டர் என்ற பெயரும், கந்தர் என்ற இவர் பெயருங்கூடக் குன்று என்ற தமிழ்ச்சொல் அல்லது அதற்குச் சரியான கொண்ட என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து வந்ததெனச் சிலர் சொல்லுகின்றனர். ஆனால், இதற்கு ஒவ்வாத முறையில் இவர்களை யடுத்து வாழும் தெலுங்கரே இவர்களைக் கொந்தர் என்றும் கோதர் என்றும் அழைக்கின்றனர்.

கழிந்த (1911) கணக்குப்படி இவர்களது தொகை ஐந்து நூறாயிரத்து முப்பதினாயிரம் (5,30,000) ஆகும்.

(V) இராஜ்மஹால் :

மாலர்கள் என்றும், இராஜ்மஹாலர் என்றும் இவர்கள் பெயர்பெறுவர். வங்காளக்கிலுள்ள இராஜ்மஹால் மலைகளில் இவர்கள் பண்டைக்காலத்திலிருந்து வாழ்ந்து வருபவர்கள். இராஜ்ஹால் என்பது பாறையர் அல்லது குன்ற மக்கள் என்று பொருள்படும். இம் மொழியின் அடிப்படை திராவிட இனக்தைச் சேர்ந்ததே என்பது “ஆசிய மொழியாராய்ச்சிகள்"[3] என்ற நூலின் ஐந்தாந் தொகுதியில் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இராஜ்மஹால் மொழிச் சொற்கள் சிலவற்றிலிருந்தும், ஹாட்ஜ்ஸன் என்பார் எழுதிய “வங்காள மக்களின் வரலாறு"[4] என்னும் நூலிற் காணப்படும் சொற்பட்டியிலிருந்தும் நன்கு விளங்கும். சந்தாளர் என் போரின் மொழியோடு இதனைக் கலந்துவிடுதல் கூடாது. இம் மொழியின் இலக்கண அமைப்பைப்பற்றி ஒன்றுந் தெரிவதற்கில்லை. இம் மக்களின் தொகை ஏறக்குறைய 64,000.

  1. கோண்டர்கள் பழங்குடி மக்கள்; ஆகையால் இக்காலத்துத் திருந்திய சமூக வாழ்க்கையில் இடம் பெறக் கூடாதவர் என்று தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த நிலைமையை ரீவாப் பேரரசர் நீக்கி, கோண்டர்கள் இனி க்ஷத்திரியர்களாகவே பாராட்டப்பட்டு, க்ஷத்திரியர்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெறுவர் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்- (அஸோஸி யேட்டெட் பிரஸ்)
    - இந்தியன் எக்ஸ்பிரஸ் (19-2-41)
  2. Koitor
  3. The Asiatic Researches.
  4. Ethnology of Bengal-Col. Dalton.