ஹாஸ்ய வியாசங்கள்/அதிர்வெடியூர் செவிடர்கள் கதை
அதிர்வெடியூர் செவிடர்கள் கதை
அதிர்வெடியூர் என்று ஒரு ஊர் உண்டு. அதற்கு இப்பெயர் வாய்ந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவ்வூரிலுள்ளவர் களெல்லாரும் பெரும்பாலார் செவிடர்கள் என்பதாம். அதிர் வெடி போட்டால்தான் அவ்வூரிலுள்ள நல்ல வயது வாய்ந்தவர்களுக்கும் காது கேட்குமாம். அங்குள்ள கிழவர்களுக்கோ கேட்க வேண்டியதில்லை. கோயில் உற்சவங்களில் அதிர் வெடி போட்டால் பக்கத்தில் நின்று கொண்டு, அதிர்வெடி போட்ட புகையைப் பார்த்து "இதென்ன புகைகிறதே" என்று கேட்பார்களாம்!
இப்படிப்பட்ட ஊரில் ஒரு பிராம்மணன் ஒரு ஏரிக்கரையோரம் உட்கார்ந்து கொண்டு மாத்யான்னிகம் (மத்தியானத்தில் செய்ய வேண்டிய மந்திர ஜபம்) செய்து கொண்டிருந்தான். அதற்கருகாமையிலுள்ள பள்ளத்தாக்கில் தன் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு செவிட்டு இடையன், மத்யானமாகியும் வழக்கப்படி, தன் தாயார், தனக்குக் கஞ்சி கொண்டு வராதபடியால், பசி அதிகப்பட்டுத் தாளானாகி, வீட்டுக்குப் போய் கஞ்சி குடிக்க விரும்பினவனாய், அது வரையில் தன் மந்தையை யார் பார்த்துக் கொண்டிருப்பது என்று யோசித்தவனாய், சுற்றிப் பார்த்து மாத்தியான்னிகம் செய்து கொண்டிருந்த பிராம்மணனிடம் போய் “ஐயரே, இந்த ஆட்டு மந்தையை நான் வீட்டுக்குப் போய் வரும் வரையில் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் தயவு செய்து” என்று சொன்னான். நமது பிராம்மணன் ஜெபம் செய்யும் சமயம்; அதிலும் முன்னமே குறித்தபடி முழுச் செவிடு; ஆகவே இடையன் சொன்னதைக் கேளாமல் தான் ஜபம் செய்து கொண்டிருந்தான். அப்படி ஜெபம் செய்யும் பொழுது கையால் ஜலத்தை எடுத்துப் புரோட்சணம் செய்ய வேண்டிய கையைச் சுற்ற, இடையன் இதை ‘அப்படியே ஆகட்டும், நீ வீட்டுக்குப் போய் வா’, என்று சொல்கிறார் சைகையினால், என்று நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு, திரும்பி வந்தான். திரும்பி வந்து தன் ஆட்டுக் கூட்டத்தை எண்ணிப் பார்த்து சரியாக இருக்கக் கண்டு சந்தோஷித்தவனாய், அந்த பிராமணனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்து, தன் மந்தையிலிருந்த இடது கால் கொஞ்சம் ஒடிந்த ஒரு ஆட்டுக் குட்டியைத் தூக்கிக் கொண்டு போய் பிராமணன் எதிரில் வைத்து, “சாமி, இத்தனை நேரம் என் மந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்ததற்காக, இக்குட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்; இது பெரியதானால் நன்றாய் பால் கொடுக்கும்; கொஞ்சம் கால் நொண்டுகிறது என்று யோசியாதீர்கள்”: என்று அதன் காலைக் காண்பித்தான். இவன் சொன்ன வார்த்தைகள் சற்றும் செவியிற் புகாத அந்த செவிட்டு பிராமணன், தான் தான் அவ்வாட்டுக் குட்டியின் காலை ஒடித்ததாக இடையன் கூறுகிறான் என்றெண்ணி, “நான் இதன் காலை ஒடிக்கவில்லையப்பா” என்று முதலில் சமாதானமாய்ச் சொல்லிப் பார்த்தான்.
செவிட்டு இடையன், பிராம்மணன் கூறுவதை அறியாதவனாய் “என்ன சாமி, கொஞ்சம் நேரம்தானே என் மந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். இதற்கு இந்தக் குட்டியாடு போதாதா? முழு ஆடு வேண்டுமா? என்னால் துட்டு கொடுக்க முடியாது” என்று கத்த ஆரம்பித்தான், அதன் பேரில் பிராமணன், “நான் காலை ஒடிக்கவில்லையென்று எத்தனை முறை சொல்வது? இதற்கு நான் ஏன் துட்டு கொடுக்க வேணும்” என்று கத்தினான். “இல்லை எப்படியாவது நீங்கள் இந்த ஆட்டுக்குட்டியைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று இடையன் வற்புறுத்த, பிராமணன் “இதென்னடா! கஷ்டமாய் முடிந்தது! என்னையா சாப்பிட சொல்லுகிறாய் இந்த ஆட்டுக் குட்டியை! நான் பிராம்மணனடா! இதைத் தீண்ட மாட்டேனப்பா!” என்று உரக்கக் கூவினான். இவ்வாறு ஒருவன் சொல்லுவது மற்றொருவனுக்கு அர்த்தமாகாது, இருவரும் பெருங் கூச்சலுடன் சச்சரவிட்டுக் கொண்டு அதிர்வெடியூருக்குத் திரும்பி வர, அச்சமயம் அவ்வூர் வைத்தியன் ஒருவன் (அவனும் செவிடு என்று நான் சொல்ல வேண்டியதில்லை) எதிரில் வர, அவனிடம் போய் இருவரும் முறையிட்டார்கள். இடையன், “ஐயா! நீங்கள்தான் மத்யஸ்தமாகச் சொல்லுங்கள்; இவர் என் மந்தையைப் பார்த்து கொண்டிருந்ததெல்லாம் ஒரு நாழிகை கூட இராது. அதற்காக இந்த ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் வேண்டாமென்கிறார். இதற்கென்னவோ கொஞ்சம் கால் ஒடிந்துதானிருக்கிறது. இவர் செய்த உபகாரத்திற்கு இது போதாதோ?” என்றான். பிராம்மணன், “ஐயா வைத்தியரே! நீங்கள்தான் மத்தியஸ்தம் சொல்லுங்கள். இந்த ஆட்டுக் குட்டியின் காலை நான் ஒடிக்கவேயில்லை. நான் பிராம்மணன். ஜீவஹிம்சையே செய்ய மாட்டேன். என் மீது தப்பாக இவன் பிராது செய்கிறான். அன்றியும், இதன் காலை நீங்கள் ஒடித்தபடியால், நீங்கள்தான் இதைச் சாப்பிட வேண்டுமென்கிறான்! இதென்ன பிராப்தமாயிருக்கிறது! நான் பிராம்மணன். ஆட்டு மாம்சத்தைத் தின்பதாவது. பாபம்! பாபம்!” என்றான். மத்யஸ்தராகக் கோரப்பட்ட செவிட்டு வைத்தியர், “பாபம் புண்ணியம் எல்லாம் பார்த்தால் எனக்கு முடியுமா? இந்த ஆட்டுக் குட்டிக்கு வைத்தியம் செய்ய எனக்குத் தெரியாதையா!” என்றார். தன்னை அந்த ஆட்டுக் குட்டியின் காலுக்கு சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் இம்மூவர்களும் தாங்கள் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்து, தங்கள் வியவகாரம் தீராதபடியால், அவ்வூர் தலையாரி வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தனர். அவனிடம் இம்மூவரும் தங்கள் தங்கள் கருத்தின்படி முறையிட்டனர். அத்தலையாரி பத்து நிமிஷம் வரையில் இவர்கள் கூக்குரலை யெல்லாம் கேட்டு விட்டு “ஐயா, நீங்கள் மூவரும் எவ்வளவு சொன்னாலும் சரி, அந்தக் கழுதையின் முகத்தில் நான் இனி விழிக்கவே மாட்டேன்” என்று கூறினார். அவர் முன்னாளிரவு தன் சம்சாரத்துடன் ஏதோ சச்சரவிட அந்த அம்மாள், கோபித்துக் கொண்டு, அவ்வூரின் ஒரு மூலையிலுள்ள தன் தாய் தந்தை வீடு போய்ச் சேர்ந்தாளாம். அங்கிருந்த தன் மாமனார், ஆட்டு இடையனிடம் ஒரு ஆட்டுக் குட்டியைப் பரிசாகக் கொடுத்து, தன் புரோகிதரையும், வைத்தியரையும் மத்யஸ்தமாக அனுப்பினார் என்று தலையாரி எண்ணிக் கொண்டார். அவர்கள் மூவர் என்ன சொல்லியும், இவர் “என் பேச்சைக் கேளாத பெண்சாதி முகத்தில் நான் முழிக்கவே மாட்டேன்” என்று கூச்சலிடத் தொடங்கினார். முன்பு மூவர் கூச்சலாயிருந்தது, இப்பொழுது நால்வர் கூச்சலாச்சுது. இச்சமயம் அவ்வூர் சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து ஏதோ வேலையாய், ஹெட்கான்ஸ்டபில், தலையாரி வீட்டிற்கு வர, மேற்சொன்ன எல்லோரும் அவனிடம் தங்கள் தங்கள் கதையைச் சொல்லி முறையிட்டனர். அந்த செவிட்டு ஹெட்கான்ஸ்டபில் இந்த நால்வரையும் இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனான். போகும் போது, அவ்வூர் ஜனங்கள் இதேதோ வேடிக்கையென்று ஐந்தாறு பேர் கூடக் கும்பலாய்ச் சென்றனர். ஹெட்கான்ஸ்டபில், இன்ஸ்பெக்டரிடம் மேற்சொன்ன நால்வரும் ஒரு வீதியில் துர்பாஷையாய்த் திட்டிக் கொண்டிருந்தனர் என்று பிராது கொடுத்தான். அதன் பேரில் அடியுடன் காது கேளாத இன்ஸ்பெக்டர், வேடிக்கை பார்க்க வந்தவர்களையும் சேர்த்து பத்துப் பெயராகிறது; ஆகவே 10 பேர்களையும், கலகம் செய்து கொண்டிருந்தனர் என்று அவ்வூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் தாவா செய்தார்!
அவ்வூர் மாஜிஸ்டிரேட் ஒரு சாயபு. அவர் கொஞ்சம் அபின் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, அன்றைத் தினம் மேற்படி கேசை விசாரித்து அடியிற் கண்டவாறு தீர்மானித்தார்.
“கேஸ் என்னமோ ருஜுவாகி விட்டது. ஆகவே, முந்திய தினம் வாதி பக்கம் தீர்மானம் செய்தோம்; நேற்று பிரதிவாதி. பக்கம் தீர்மானித்தோம்; இன்று சாட்சியின் பக்கம் தீர்மானம் செயகிறோம்” என்று முடிவு கூறினார்!