84. கொள்ளைக்காரன்
மாந்தோப்புகளின் அழகை அநுபவிக்க வேண்டுமானால், தமிழ்நாட்டின் செங்கோட்டை, தென்காசி தாலுகாக்களில் உள்ள ஏதாவதொரு சிற்றுாரில் சில நாட்கள் வசித்துப் பார்க்க வேண்டும்.
மாந்தோப்பைப் பற்றி நினைக்கும் போது பல வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த பயங்கர சம்பவங்கள் என் நினைவுக்கு வருகின்றன. நினைத்துப் பார்த்தால், ஏதோ கற்பனைக் கதை மாதிரித்தான் இருக்கிறது.
ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதாம் வருடம், தென்காசியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தேன். அப்போது வைகாசி மாதத்தில் ஒரு நாள், பக்கத்திலுள்ள காசி மேஜர்புரம் என்ற கிராமத்தில் ஒரு கொலைக் கேஸ் விஷயமாக நாள் முழுவதும் சுற்றி அலைந்து விட்டு. மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்பியிருந்தேன்.
உடுப்புக்களைக் கழற்றி விட்டு, ஈஸிசேரில் சாய்ந்தேன். ஆபீஸிலிருந்து ஏட் தலைதெறிக்க ஓடிவந்தான். “என்ன சங்கதி? ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேட்டேன்.
“இலஞ்சி நெல்லையப்பப் பிள்ளை வந்திருக்கிறாருங்க, ஏதோ அவசரமா ரிப்போர்ட் செய்யணுமாம்.”
“நல்ல அவசரம் போ” நான் அலுத்துக் கொண்டே புறப்படத் தயாரானேன். போலீஸ் உத்தியோகத்துக்கு நேரம் காலம் ஏது? அந்தப் பிராந்தியத்திலேயே பெரிய மனிதர் நெல்லையப்பப் பிள்ளை. நிறைய தோட்டம், துரவுகளுக்குச் சொந்தக்காரர். அவர் ‘ரிப்போர்ட்’ செய்ய ஓடி வந்திருக்கும் போது, நான் போகாமலிருந்தால், நன்றாக இருக்குமா? எனவே, உடனே கிளம்பினேன். ஸ்டேஷனுக்குப் போய் நெல்லையப்பப் பிள்ளை கூறிய விஷயத்தைக் கேட்ட போது, எனக்கு ஆச்சரியம் நிலை கொள்ளவில்லை.
குற்றாலத்துக்கும், இலஞ்சிக்கும் நடுவில் நெல்லையப்பப் பிள்ளைக்குச் சொந்தமான பெரிய மாந்தோப்பு ஒன்று இருந்தது. மாமரங்களைத் தவிர, பலா, தென்னை முதலிய வேறு மரங்களும் அந்தத் தோப்பில் உண்டு. இருபது, முப்பது ஏக்கர் விஸ்தீரணமுள்ள பெரிய தோப்பு அது.
மாமரங்களும் பலா மரங்களும் கிளைகள் இற்று விழுந்து விடுமோ என்று எண்ணும்படி காய்த்துக் குலுங்கின. இன்னும் ஓரிரு வாரங்களில் தோப்பைக் குத்தகைக்கு விட்டு விடலாம் என்று தீர்மானித்திருந்தார் நெல்லையப்பப் பிள்ளை.